ஆறு செல் படலம் - 2390
பரதன் ஊர்திகளை விடுத்துக் காலால் நடத்தல்
2390.
‘ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி’ என, தானும் ஏகினான் -
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர, காலினே,.
‘ஆண்டு நின்று - அங்கிருந்து; ஆண்தகை - ஆடவர் திலகனாய
இராமன்; ஈண்டிய நெறி - நெருங்கிய வழியிலே; அடியின் ஏகினான் -
காலால் நடந்துசென்றான்; என - என்று (அறிந்து); தானும் - பரதனும்;
தூண்டிடு தேர்களும்- செலுத்தப்படும் தேர்களும்; துரகராசியும் -
குதிரைத் தொகுதிகளும்; காண்தகுகரிகளும் - காட்சிக்குப் பொருந்திய
யானைகளும்; தொடர - (தன்னைப்)பின்பற்றிவர; காலின் ஏகினான் -
காலால் நடந்து சென்றான்.
இராமன் நடந்து சென்றபாதையில் தானும் நடந்தே செல்லவேண்டும்
என நினைத்தது அவன்அன்பு மிகுதியைப் புலப்படுத்தும். “காண்தகு
கரிகள்” என்பதனை, “யானையுடைய படை காண்டல் மிகஇனிதே”
என்பதனுடன் (இனியவை. 4) ஒப்பிடுக. “படை தனக்கு யானை வனப்பாகும்”
என்பதும்(சிறுபஞ்ச. 5) இக்கருத்தை வலியுறுத்தும். ‘ஏ’ காரம்ஈற்றசை. 59
