ஆறு செல் படலம் - 2385

bookmark

சத்துருக்கன் கூனியைக் கொல்ல முயலுதல்

சத்துருக்கனன் கூனியைத் துன்புறுத்தப் பற்றவே, பரதன் விலக்கல்  

2385.    

மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;

     இளவல் - நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்;  வழிச்
செல்வாரொடும் -(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு - மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி - விரைந்து சென்று; ஆர்த்து - பேரொலிசெய்து;
அழன்று - கோபித்து;  அந்தரத்து எற்றுவான் - ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி - (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் - (தம்பிக்குச்) சொல்லலானான்.

     தயரதன் உயிர் போதற்கு மூலகாரணம் மந்தரை ஆதலின், ‘மந்தரைக்
கூற்றம்’ என்றார். நம்செயல் தடைபட்டுவிடுமோ; இனி நடப்பன காண்போம்
என்னும் ஆசையால் மந்தரை உடன் செல்லவிரைந்தாள் என்க. கண்டு,
ஓடி, ஆர்த்து, எற்றுவான் பற்றலும் எனமுடிக்க.                     54