ஆறாம் அத்யாயம்

ஆறாம் அத்யாயம்

bookmark


(ஒரு அரசனின்  துர்க்குணங்கள் மற்றும் அதனால் அவனுக்கு ஏற்படும்  கேடுகள் ,அரசிகளைக் கையாளும் முறைகள், மக்களிடத்தில் அன்பின்மை ஏற்படக் காரணங்களும் அதன் விளைவுகளும், கழகங்களின் வகைகள்,  கழகம், எதிர்ப்பு மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களை சமாளிக்கும் உத்திகள்) . ஒரு அரசனின்  துர்க்குணங்கள் மற்றும் அதனால் அவனுக்கு ஏற்படும்  கேடுகள்

துர்க்குணங்களே சுய துன்பங்களுக்குக் காரணமாகும். துர்குணங்கள் அறியாமை மற்றும் ஒழுக்கமின்மையால் ஏற்படுவதாகும். ஒரு படிப்பரிவற்ற மனிதனின்  துற்குணங்களால் அவனுக்கு   ஏற்படும் விளைவுகளை உணர இயலாது. இது கர்வத்தால் அறிவிழந்த அரசனுக்கும் பொருந்தும். இந்த துர்குணங்களால் ஒரு அரசன் தனது புலன்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறான்.  புலன்களின் மீதான கட்டுப்பாட்டை  இழக்கும் அரசன் அறிவையே இழக்கிறான். ஏனெனில் , அறிவு சம்மந்தமான அனைத்துத் துறைகளின் ஒரே குறிக்கோள் புலன்களின் மீதான கட்டுப்பாட்டை மனதில் பதிய வைத்தலே ஆகும். 
                      
பெண்ணாசை, கோபம், அகந்தை, வெறி, அசட்டு தைரியம் இவற்றைக் கைவிடுவதின் மூலம் சுயக்கட்டுப்பாடு கிடைக்கும் . அதுவே அறிவு மற்றும் ஒழுக்கத்துக்கான காரணம். சாஸ்திர நெறிப்படி வாழ்வதென்பது புலனின் பங்கான கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தலைத் தவிர்த்தலேயாகும். ஓர் அரசன் சுயக்கட்டுப் பாடின்றி புலங்களில் மூழ்கித் திளைப்பானெனில் அவன் இவ்வுலகின் நான்கு மூலைகளையும்  ஆளும் திறன் பெற்று இருப்பினும் அழிந்து போவான். பெண்ணாசை, கோபம், பேராசை, அகந்தை, வெறி (மதுவால்,  மற்றும்  அனைத்து வகை ஆசைகளால்  ஏற்படுவது  வெறி. அதாவது அடைய வேண்டும், அல்லது ஏதேனும் ஒன்றை  அனுபவிக்க வேண்டும்  என்ற  ஒரு ஆசை, பேராசையாகி உச்சநிலையை அடையும் பொழுது ஏற்படுவது வெறி  ) , அசட்டுத் தைரியம் இவை யாரும் ஒருவனுக்கு எதிரிகளாகும். சுயக்கட்டுப்பாடு அற்ற அரசர்கள் இவற்றுக்கு இரையாகி தமது சாம்ராஜ்யத்தையே இழந்திருக்கிறார்கள். ஆனால், ஜமதக்னி, அம்பரீசன் போன்ற புலனடக்கம் கொண்ட அரசர்கள் இவ்வுலகில்  நீண்ட  காலம் தமது  ஆட்சியை நிலை நாட்டினார்கள். 

கோபம் மற்றும் ஆசை :  கோபம் கொண்ட பேரரசர்கள் வெறியினாலும், பேராசை மிக்க அரசர்கள் ஏழ்மை அல்லது எதிரிகளாலும் அழிக்கப்பட்டது நன்கறிந்த ஒன்றே.  கௌடில்யர் கூறுகிறார் " கோபம் ஒரு மனிதனை வெறுப்புக்குரியவராய் மாற்றி,  எதிரிகளை உருவாக்கித் துன்பத்தை  விளைவிக்கும். பேராசை மற்றும் சிற்றின்ப இச்சை அவமானத்தை  உண்டாக்கி  , செல்வத்தை  இழக்கச்  செய்து விரும்பத்தகாதவர்களான  திருடர்கள், சூதாடிகள், வேடர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் “என்று. 
                    
கௌடில்யர் கோபம் குறித்த தனது வாதத்தை இவ்வாறு மேலும் தொடர்கிறார்." ஒருவர் செல்வத்தை இல்லப்பதைக் கட்டிலும் எதிரிகளைச் சம்பாதிப்பது மிகவும் மோசமான செயல் ஆகும். ஏனெனில், முதல்  நிலை (செல்வ இழப்பு) பொருளாதார ரீதியில் மட்டுமே துன்பம் தரும். இரண்டாம் நிலை ( எதிரிகள்) உயிருக்கே கூட ஆபத்தை தரும்.  விரும்பத் தகாத தொடர்பைக் கட்டிலும் துற்குணங்களால்  துன்புறுவது கெடுதல் மிக்கதாகும். விரும்பத்தகாதவர்களை நினைத்த மாத்திரத்தில் கைவிட்டு விடலாம். ஆனால், துர்குணங்கள் நீண்ட காலத்துக்குத் துன்பம் தரக் கூடியவை. எனவே, கோபம் என்பது பேராபத்தாகும்.

தவிர, சொல்லினால் காயம் ஏற்படுத்துதல், மற்றவரது உடைமைகளை சேதப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துதல்  ஆகிய மூன்று துற்குணங்களும்  கோபத்தில் இருந்து உதிப்பவை ஆகும். மற்றவருக்கு அளிக்க வேண்டியவற்றை அளிக்காமை, அவரது உடைமைகளை அபகரித்தல் , அதனை அழித்தல் போன்றவையே உடைமைகளுக்குச் சேதம் ஏற்படுத்தும் முறைகளாகும்.  

உடைமைகளை அழிப்பதைக் காட்டிலும்  கடுமையான சொற்களைப் பேசுவதே  மிகுந்த  கேடு விளைவிக்கும்  என்று விஷாலாக்ஷா என்னும் ராஜ தந்திரி கூறுகிறார் . ஆனால் கௌடில்யரோ  இக்ககருத்தை மறுக்கிறார். அவரது கருத்துப்படி சொல்லால்பட்ட வலியை பரிசளித்து ஆற்றிவிடலாம். ஆனால், உடைமைகளைச் சேதப்படுத்துதல் வாழ்க்கையே அழித்துவிடும் என்று கூறுகிறார்.

பராசரரின் கொள்கைப்படி உடல் ரீதியான காயத்தைக் காட்டிலும் உடைமைகளுக்குச் சேதம் உண்டாக்குவதே பெரும் தீங்காகும். மேலும், தர்மம் மற்றும் காமம் இவையிரண்டும் உலகத்தை ஒன்றிணைக்கக் கூடிய அர்த்தத்தைச் ( உலகப் பொருளையே)  சார்ந்தவையே என்று கூறுகிறார். பாரசரரின் இந்தக் கருத்தையும் கௌடில்யர் மறுக்கிறார். பராசரரின் வாதத்தை எதிர்க்கும் விதமாக கௌடில்யர் தனது கருத்தை இவ்வாறு  எடுத்துரைக்கிறார். அவர் கூறுவது யாதெனில், அதிக அளவிலான பணத்துக்காக எவருமே தம் வாழ்வை இழக்க விரும்பவில்லை என்றும், மேலும் ,  மற்றவருக்கு உடல் ரீதியான துன்பத்தை அளிக்கும் ஒருவர் அதே துன்பத்தை தானும்  அனுபவிப்பார். ஏனெனில் , இது தான் உலகத்தின் நியதி   என்று அவர் மேலும்  விளக்குகிறார்.

அளவு  கடந்த ஆசையால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் கருத்துக்கள் வருமாறு                      

 வேட்டை, சூதாட்டம், மது மற்றும் மாது (பெண்) ஆகிய நான்கிற்கும் அடிமையாகும் துர்க்குணங்கள் அளவு கடந்த ஆசையால்  ஏற்படுவதாகக் கௌடில்யர் கூறுகிறார். பிசுனா என்னும் ராஜதந்திரி , வேட்டை , சூதாட்டம் இவை இரண்டிலும் வேட்டை தான் ஒரு அரசனுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறார். இதற்கு அவர் வைக்கும் வாதம் யாதெனில் , வேட்டையின் பொது ஒரு அரசனுக்கு என்ன நேரும் என்பது அவனுக்கே தெரியாது என்றும். அது சில சமயங்களில்  அந்த அரசனின் உயிருக்கே உலை வைத்து விடும் (எ. கா. வேட்டைக்கு செல்லும் அரசன் காட்டு விலங்குகளிடம்  சிக்கிக் கொள்ள நேரிடலாம், அல்லது வேட்டைக்கு போகும் இடத்தில் அந்த அரசனது எதிரிகாலே அவனுக்கு வலை விதிக்கலாம் அல்லது அவன் (அந்த அரசன்) தான் திரும்பி வந்த வழியை தவறவிட்டு , விபத்தில் கூட சிக்கிக் கொள்ள நேரிடும் ) என்று தனது வாதத்தை பிசுனா மேலும் தொடர்கிறார். 

ஆனால், கௌடில்யரோ  பிசுனாவின் இக்கருத்தை மறுக்குமாறு "வேட்டை ,சூதாட்டம் இவை இரண்டில் சூதாட்டம் தான் கெடுதல் தரும் பழக்கம் என்று கூறி . இதற்கு ஆதாரமாக நலனின் வாழ்க்கையையும், மகாபாரத்தில் வரும் யுதிஷ்டிரனின் கதைகளையும் எடுத்துக் கூறுகிறார். இவர்கள் இருவரும் சூதாட்டத்தால் தான் தங்கள் வாழ்க்கையே  இழந்து பிறகு பல வேதனைகளை சந்தித்து மீண்டும் பெற்றனர் என்று கூறும் கௌடில்யர் ஒரு சூதாடி தன்னிடம் இல்லாதவற்றைப் பெரும் முயற்ச்சியில் இருப்பவற்றை கூட இழப்பான் .
                 
ஆனால் இதற்கு மாறாக  வேட்டை, என்பது ஒரு சிறந்த உடற்ப்பயிர்ச்சி  என்றும். இதன் காரணமாக வேண்டாத நோய்களில் இருந்து விடுபடலாம்  என்றும் வேட்டை ஆடுதலின் விளைவாக உடலில் உள்ள கொழுப்புகளும் வெளியேற்றப்படும் என்றும் அவர்  கூறுகிறார். இந்த வேட்டை ஆடுதல் என்னும் இப்பழக்கம், ஒரு அரசனுக்கு நிலையான குறிக்கோளை கற்றுத் தரும் என்றும் எடுத்துரைக்கிறார். இது தவிர, வேட்டைக்கு செல்லும் பழக்கத்தை கொண்ட அரசனுக்கு சிறப்பான உடற்ப்பயிர்ச்சி என்பது தேவைப் படுவதில்லை என்றும். வேட்டையே, அவனுக்குப் பயிற்சியாய்  அமையப் பெரும் என்றும்  தனது வாதத்தை கௌடில்யர் இவ்வாறு வேட்டையாடுதலுக்கு  ஆதரவாக  எடுத்து இயம்புகிறார்.

கௌன பதாந்தா என்னும் அரசியல் அறிஞர் பெண்ணின் மேல் கொண்ட காம இச்சையைக் காட்டிலும் சூதாட்டம் கெடுதல் மிக்கதாகும் என்றும் . சூதாடும் ஒருவன் இரவு நேரமாயிருப்பினும் , தனது தாய் மரணப்படுக்கையில் இருக்கும் நிலையிலும் ஆட்டத்தைத் தொடருவான் என்றும் . அது மட்டும் இல்லமால் , இடையில் ஏதேனும் கேட்போர் மீதும் கோபம் கொள்வான் என்றும் . ஆனால் பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்ட ஒருவன் குளிக்கும் பொழுதோ சாப்பிடும் பொழுதோ மற்ற விஷயங்களைப் பற்றி அவனிடம் பேசலாம் என்று கூறி , தனது கருத்தாக பெண்களின்  மீது கொண்ட காமத்தைக்  காட்டிலும்   சூதாட்டாமே மிகப்  பெரிய  துர்குணம் என்று   சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், இதனையும் மறுத்துப் பேசும் கௌடில்யர் சூதாடியை திருத்த இயலும் என்றும். ஆனால், பெண்ணாசை கொண்ட ஒருவனை மாற்ற  இயலாது என்றும்  எடுத்துரைக்கிறார். உண்மையை உணராமை, உடைமையைப் புறக்கணித்தல் , செய்ய வேண்டியனவற்றை சரியான  நேரத்தில் செய்யாமல் தர்மம் மற்றும் செல்வத்தை இழத்தல், மதுவிற்கு அடிமை ஆதல் , அரசியலில் புத்தி கூர்மையை இழத்தல் போன்றவை காம வெறியனால் ஏற்படும் தீமைகள் என கௌடில்யர் வகைப்படுத்திக்  கூறுகிறார். மேலும் , கௌடில்யர் தனது வாதத்தில் பெண்ணின் முட்டாள் தனத்தினால் பல கேடுகள் விளைந்து உள்ளதாகக் கூறுகிறார்.

மேலும் மற்ற பெண்களுடன் ஒரு அரசன் வைக்கும் தொடர்பு சில சமயங்களில் அவனுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும். அதே சமயத்தில், அந்த அரசன் ( அல்லது பிரஜை ) தன் மனைவியுடன்  இன்பம் கொள்ளும் பொழுது. குழந்தைச் செல்வத்துடன் , சுய பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என்றும் கௌடில்யர் கூறுகிறார்.  அதே  போல குடிப்பழக்கம் அரசர்களைப் பொருத்தவரை ஒரு தீய பழக்கம் இல்லை என்று கூறும் " வதாரியதி " என்னும் அரசியல் தத்துவ ஞானியின் கருத்தையும் கௌடிலயர் எதிர்க்கிறார். மது அருந்துவது பல தீய பழக்கத்திற்கு வழிவகை செய்து விடும் என்று கௌடில்யர் கூறுகிறார். உணர்வு நிலையை இழந்து  பைத்தியம் போல் பிதற்றுவதும் , சவம் போன்ற தோற்றத்தைப்  பெறுவதுடன்  நாணமற்ற தன்மையையும், நல்லவர்களின் தொடர்பில் இருந்து பிரிவினையையும், தீயவர்களின் தொடர்பையும், தன்னையும் மறந்து பணத்தை அனாவசியமாக, தகுதி அற்றவர்களுக்கு  வாரி இளைக்கும் தன்மையையும் இக்குடிப் பழக்கம் என்னும் தீய பழக்கம் , தந்து விடும் என்று  கௌடில்யர் கூறுகிறார்.

சூதாட்டம் , மேற்கண்ட இந்தக் குடிப் பழக்கத்தைக் காட்டிலும் மோசமானது என்று கூறும் கௌடில்யர். ஒருவரின் சொத்தைக் கொண்டு சூதாடுவது , மிருகங்களின் பெயரில் பணத்தைக் கட்டுவது போன்றவற்றால் ஒருவருக்கு  வெற்றியும் மற்றவருக்குத் தோல்வியும் ஏற்படும். இதனால் , சண்டை ஏற்பட்டு பிளவு உண்டாகும் .குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் சங்கங்களைச் சார்ந்த அரசர்களிடத்தில்  சூதாட்டத்தினால்  பிளவு ஏற்பட்டு ஒரு சாம்ராஜ்யமே அழிந்து படும். ஆட்சியாளரின் ஆளுமைத் திறனைக் குறித்து அவர்களை அழிக்கும் சூதாட்டமே துர்குணங்களில் மிகவும் அபாயகரமானது என்று கௌடில்யர் மேலும்  கூறுகிறார்.

அளவுக்கதிகமான ஆசை தீய குணங்களுக்கு வித்திடும் . அதே போல கோபம் நற்குணங்களைக் கைவிடச் செய்யும் . இவை இரண்டுமே , பல்வேறு தீமைகளை விளைவிப்பதால் அபாயகரமானவற்றால் வகைப் படுத்தப்படுகின்றன . ஓர் அரசன் பெரியோர்களது தொடர்பில் புலன்களை அடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள், சுயக்கட்டுப்பாட்டை பயில்வதின் மூலம் மரபு வழி ஆட்சியை வேரறுக்கும் அபாயங்களின் மூலங்களான பேராசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட இயலும் எனவும் கௌடில்யர் மேலும்  உரைக்கிறார் .

அரசிகளைக் கையாளும் முறைகள்

ஒரு அரசனுக்கு சில சமயங்களில் அரசிகளால் கூட ஆபத்துக்கள் வந்துள்ளதாக கௌடில்யர் கூறுகிறார். எனவே ,   ஒரு அரசன் என்பவன், அரசிகளிடத்தில் கூட கவனமாக இருத்தல்  நலம். இதற்கு எடுத்துக்காட்டாக சில சம்பவங்களை சாணக்யர் விவரிக்கிறார், பத்ரசேனன் என்கிற மன்னன் அரசியின் அறையில் மறைந்திருந்த  தனது சொந்த சகோதரனால் கொல்லப்பட்டான். அதே போல க்ருஷா என்பவன் அரசியின் படுக்கைக்கடியில் மறைந்து இருந்த தனது மகனால் கொல்லப்பட்டான். சில அரசிகள் விஷம் கலந்த உணவுகள் அல்லது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களால் கொல்வார்கள். எனவே, அரசன் எப்பொழுதும் கவனமாயிருந்து இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதான பணிப்பெண்  மூலம் அரசியின் அறையில் எவ்வித அபயாமும் இல்லை என்று அறிந்த பிறகே அரசன் அங்கு செல்லலாம். தலையை மழித்த துறவிகள் , கண்கட்டி வித்தைக் காரர்கள், மந்திரவாதிகள், அல்லது வெளியில் இருந்து வரும் பெண்களை அரசி சந்திப்பதை ஒரு அரசன் தடுப்பது நல்லது. அரசின் சேவகர்களாக தனக்கு நம்பிக்கையான பேடிகளை ( அரவாணிகளை) வைப்பது நல்லது. அந்த அரசியின் சேவகர்களை கூட  , அவர்களே அறியாதபடி , அவர்களை  கண்காணிக்க , தன் நம்பிக்கைக்கு பாத்திரமான  80 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண் அல்லது  50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ஒரு அரசன் நியமித்து அரசியாரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளுதல் நலம்.  பொதுவாக ஓர் அரசன் என்பவன் பெரும்பாலும் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுதல் கூடாது.

மக்களிடத்தில் அன்பின்மை ஏற்படக் காரணங்களும் அதன் விளைவுகளும்

பொதுவாக ஒரு நாட்டில் கலகம் ஏற்பட  , அந்நாட்டு மக்களிடத்தில்  அந்நாட்டு  அரசன் தனது அபிமானத்தை ( நம்பிக்கையை)    இழப்பது , அல்லது  அரசனின் மீது மக்களுக்கு அன்பின்மை போன்றவை   தான்  காரணம்  என்கிறார் சாணக்யர். இதற்கு எடுத்துக் காட்டாக மக்கள் வறுமை நிலையை  அடையும் பொழுது பேராசை கொண்டு விடுவார்கள் என்றும். இது பிற்பாடு  அன்பற்ற நிலைக்கு வித்திடும் என்றும்  . இந்த அன்பற்ற நிலை தான் பிறகு மீண்டும் வளர்ந்து அம்மக்கள் தன் சொந்த நாட்டிற்கு எதிராகவே எதிரியின் கைக்கு தாங்களாகவே  துணை போவார்கள் அல்லது அவர்களாகவே சந்தர்ப்பம்  பார்த்து தன் சொந்த அரசனையே கொன்று விடுவார்கள் என்று கௌடில்யர் மக்களிடத்தில் அந்த ராஜ்யத்தின் மீது அன்பின்மையால் ஏற்படும் கெடுதல்களை  இந்த அத்யாயம் முழுவதும் விவரிக்கிறார் . மக்களுக்கு  தன் சொந்த நாட்டின் மீதே வெறுப்பு ஏற்பட,  அந்நாட்டு அரசன் தான் பெரும்பாலும் முழுமுதற்க் காரணமாக இருக்கிறான் என கௌடில்யர் கூறுகிறார். அரசன் கீழ்கண்ட செயல்களில் ஈடு படும் பொழுது மக்கள் அவன் மீது கொண்ட அன்பையும், விசுவாசத்தையும் இழக்கிறார்கள். என்று கூறி அந்த செயல்களைப் பட்டியல் இடுகிறார். அவைகள் பின்வருமாறு

1.ஒரு அரசன் நன்மையை மறுத்துத் தீமை விளைவிக்கும் பொழுதும்.
2.நெரியற்ற விதத்தில் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொழுதும்.
3.முறையான நெறிகளின் கண்காணிப்பைப் புறக்கணிப்பதாலும். 
4.தர்மத்தை அடக்கி அதர்மத்தை நிலைநாட்டும் பொழுதும். 
5.செய்ய வேண்டியவற்றை செய்யாது , செய்யத் தகாதவற்றை  செய்யும் பொழுதும். 
6.அளிக்க வேண்டியவற்றை அளிக்காமல் உரிமை யற்றவற்றைப்  பறிக்கும் பொழுதும். 
7.தண்டிக்க வேண்டியவர்களை விடுத்து குற்றமற்றவர்களை தண்டிக்கும் பொழுதும்.
8.குற்றவாளிகளை  விடுத்து நிரபராதிகளை கைது செய்யும் பொழுதும் . 
9.ஆடம்பரச்  செலவில் ஈடுபட்டு நன்மை பயப்பனவற்றை அழிக்கும் பொழுதும். 
10.திருடர்களிடமிருந்து மக்களைக் காக்காமல் தானே அவர்களை சூறையாடும்  பொழுதும். 
11.தான் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் பிறரது செயல்களைப் பழிக்கும் பொழுதும்.
12.பொய் முதலிய குறும்புகளால் பெரியவர்களை இழிவு செய்கிற பொழுதும். 
13.சேவகர்க்கான அல்லது சேவகத்திர்க்கான  ஊதியத்தை அளிக்காத பொழுதும். 
14.வாக்களித்த செயலை நிறைவேற்றத்  தவறவிடும் நிலையிலும். 
15.பொருப்பற்ற தன்மை, புறக்கணிப்பால் மக்கள் நலனைச் சீரழிக்கிற பொழுதும்.

ஆக,  மேற்கண்ட இந்நிலைகளால்  தரித்திரம், பேராசை , அன்பின்மை போன்ற இழிவுகள் மக்களிடத்தில் தலைவிரித்து ஆடி அதனால் அந்நாடே எதிரிகளின்  வசம் ஆகிவிடும் . எனவே , இத்தகைய நிலை ஏற்படாதவாறு ஒரு மன்னன் செயல்பட வேண்டும். மீறி இந்நிலை ஏற்படுமாயின் உடனடித் தீர்வு காண வழிவகுக்க வேண்டும் . பஞ்சத்தால்  பாதிக்கப்பட்ட மக்கள் உடைமைகளைக் கொள்ளை அடிக்கும் அல்லது அவற்றை  அழிக்கும் செயல்களில் ஈடுபடுவர். அவர்கள் உடனடியாக அமைதி போர் அல்லது இடமாற்றத்தை விரும்புவர். பணம் மற்றும் உணவுப் பற்றாக்குறையினால்  ஏற்படும்  பஞ்சம் அனைத்திற்கும் சேதம் விளைவிக்கும் , அபாயத்தை தந்து விடும். எனவே ,  அது தான் மிகவும் மோசமானது. தவிர, பேராசை மிக்கவர்கள் எப்பொழுதும் திருப்தி அற்றவர்களாய், எதிரிகளின் வார்த்தைக்கு இறையாகக் கூடியவர்களாய் திகழ்வர். இப்பிரச்சனை மிக எளிதில் தீர்க்கக் கூடியதாகும். ஒரு சில அதிகாரிகள் பேராசை உடையவர்காய் இருப்பின் எதிரிகளின் செல்வத்தில் பங்கு தருவதாய் கூறி அவர்களைத் திருப்தி படுத்தலாம். எதிரிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுது அன்பற்ற மக்களால் புரட்சி வெடிக்கும்  . தலைவனை வீழ்த்துவதன் மூலம் அன்பின்மை வெளிப்படும். தலைவனற்ற நிலையில் மக்கள் எளிதில் எதிரிகளின் துண்டுதளுக்கு  ஆளாகி தாக்குதலைச் சமாளிக்கும் திறனற்றவர்கள்  ஆவார்கள் . தலைவர்கள் சிறைபடுத்தப்பட்ட நிலையில் மக்கள் பிரிக்கப்பட்டு எளிதில் அடக்கப்படுவர்.
 
கலகம் மற்றும் எதிர்ப்பு : ஒரு அரசன் தனது படையெடுப்பைத் துவக்கும் பொழுது உள்நாட்டிலோ அல்லது நாட்டுக்கு வெளியில் தொலைதூரப்  பிரதேசத்தில் இருந்தோ அபாயம் உண்டாகலாம். உள்நாட்டுக்  கலகம் என்பது பட்டத்து இளவரசன், புரோகிதர், படைத் தலைவர், அல்லது மந்திரி இவர்கள் தலைமையில் ஏற்படலாம். வெளிநாட்டுக் கலகங்கள் அப்பகுதியின் தலைவன், எல்லையின் தளபதி, ஆதிவாசிகளின் தலைவன், தலைமறைவான முன்னாள் அரசன் இவர்களது தலைமையில் ஏற்படலாம். வெளிநாட்டுக் கலகத்தைக் காட்டிலும் உள்நாட்டுக் கலகம் நல்ல பாம்பைப் போஷிப்பது போன்று அபாயகரமானதாகும். பரிந்துரையாளர்கள் மற்றும் மந்திரிகளுக்கிடையில் கலகம் மற்ற அனைத்தையும் விட தீமை விளைவிக்கக் கூடியதாகும். எனவே, அரசன் பொக்கிஷம், படைகள் இவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அது போல , இராணுவத்தளபதி எவ்வளவு நல்லவனாக  இருந்தாலும், அவனை கண்காணிப்பது தெரியாமல் கண்காணிக்க வேண்டும். 

கலகத்திற்கெதிரான பாதுகாப்பு:  அரசன் படையெடுப்பிற்க்குச் செல்லும் பொழுது உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தக் கூடியவர்கள்  என சந்தேக்கிக்கக் கூடியவர்களையும், எல்லையில்  குழப்பத்தை உண்டாக்கக் கூடியவர்களின் மனைவி, குழந்தைகளையும் பிணைக்  கைதிகளாகத் தன்னோடு கொண்டு செல்ல வேண்டும்.

உள்நாட்டுக் குழப்பங்களைத்  தோற்கடிக்கும் முறைகள்

புதிய தலைவர்களை நியமித்தோ, தலைநகரைப் பலருடைய அதிகாரத்தின் கீழ் அமர்த்தியோ உள்நாட்டுக் குழப்பத்தை தீர்க்கும் வரை அரசன் படையெடுத்து   செல்லக் கூடாது. குழப்பம் அரசனது தவற்றால் ஏற்பட்டு இருப்பின் , அதனை அவன் திருத்திக் கொள்ளலாம். குழப்பத்தில் அவனுடைய தவறு ஏதும் இல்லை எனில் , குழப்பத்தின் அளவு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தண்டனை அளிக்கலாம். உதாரணமாய், அரசன் இரண்டு மகன்களைக் கொண்டு இருந்தால் குழப்பத்துக்கு காரணமான ஒரு மகனுக்கு தண்டனை விதிக்கலாம். ஒரே ஒரு மகனைப் பெற்று இருப்பானெனில் அவனைச் சிறையில் தள்ளலாம். குழப்பம் புரோகிதரால் ஏற்பட்டதெனில் அவரை நாடு கடத்தியோ சிறையில் தள்ளியோ தண்டிக்கலாம் இவ்வாறு உள்நாட்டுக்  குழப்பத்தை தோற்கடிக்கலாம் என்று அர்த்தசாஸ்திரம் எடுத்துரைக்கிறது.

உறவினர்களால் ஏற்படும் குழப்பங்களும் அதனை தோற்கடிக்கும் முறைகளும்

குழப்பம் இளவரசனாலோ அரசனது சகோதரன் அல்லது நெருங்கிய உறவினராலோ ஏற்படுமெனில் அதனைத் துடிப்புடன் தீர்க்க வேண்டும். அதனைத் தீர்க்க முற்படாத நிலையில் அரசன் தன்னால் தடை செய்யப்பட வேண்டிய குழப்பத்துக்குத் தானே அனுமதி அளித்ததாகிவிடும். அண்டை நாட்டு அரசன் , காட்டுவாசிகள் தலைவன் ஆகியோர் துணையுடன் கலகக் காரர்களை எதிர்க்கலாம். கடைசியாய் எதிரியின் கோட்டையில் புகுந்து அங்கேயே குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

அமைச்சர்களால் ஏற்படும் குழப்பம்     

அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரால் ஏற்படும் உள்நாட்டுக் குழப்பம் மேற்கூறிய முறையிலேயே தீர்க்கப்பட வேண்டும். இராஜத் துரோகம் செய்ய நினைக்கும்  அமைச்சர்களுடன் முதலில் சமாதானப் பேச்சு நடத்தலாம் . அது வெற்றி பெறுமெனில் மற்ற வழிமுறைகள் தேவை அற்றதாகி விடும். அதே போன்று சதிக்கு உதவுவதாகத் தெரியவரும்  அமைச்சர்களிடத்தில் பரிசு தருவதாய்  கூறி  ஆசை காட்டி உண்மையைக் கண்டறிவதால் மற்ற முறைகள் அவசிய மற்றதாகி விடும்.

வெளியில் இருந்து  ஏற்படும் குழப்பம்  

எல்லைப்புறப் படைத் தலைவர், காட்டை ஆளும் அரசர்கள் மற்றும் நிலக் குத்தகைதாரர்கள் அரசனிடம் இருந்து விடுபட விரும்புவதால் மாறுபட்ட குணமுடையவர்களாய் விளங்குவார்கள். அவர்களை வெற்றிகொள்ளப் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு  எதிராய் மற்றொருவரைத் தூண்டி  குழப்பத்தைச் சமாளிக்கலாம். கலகக் காரன் கோட்டையினுள் அரண் அமைத்து அமருவானெனில்  அவனுக்கு வேண்டப்படாத சில அண்டை நாட்டு அரசர்கள் , காட்டரசர்கள் , உறவினர் போன்றோரால் அடையாளம் காணப்படலாம். இது இயலவில்லை எனில் கலகக்காரன் எதிரியுடன் சேர்ந்து விடதாவாறு அவனோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், அரசன் கலகக் காரனை எதிரிகளுக்கேதிறாய் தூண்டி தனக்குக் கீழ் அடக்கி வைக்க வேண்டும். எதிரிகள் எவ்வாறு குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்பதை அறிந்து அதே தந்திரங்களைக் கையாண்டு எதிரிகளை எதிர் கொள்ள வேண்டும்.

கலகங்களின் வகைகள்:
கழகங்கள் உள்நாட்டிலோ , நாட்டிற்கு வெளியிலோ உருவாகலாம்.

பல்வேறு கழகங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒரு புத்திசாலி அரசன் (1) வெளிப்புறத்தில் இருக்கும் கலகக் காரர்கள் மற்ற கலகக் காரர்களுடன் கைகோர்த்தல் (2) உள்நாட்டுக் கலகக் காரர்கள்  உள்நாட்டிலேயே இருக்கும் மற்றவர்களுடன் இணைதல் (3) உள்நாட்டு வெளிநாட்டு கலகக்காரர்களின் கூட்டணி போன்றவற்றிக்கு  எதிராய்  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலும். இருவேறு பிரதேசங்களுக்கிடைப்பட்டவை ( முதல் மற்றும் இரண்டாம் வகை) இருவரில் ஒருவரைச் சமாளிப்பதன் மூலம் இவ்விருவகைக்கலகங்களை வெற்றி கொள்ளலாம். கலகங்களைத் தூண்டுபவர்களைக் காட்டிலும் அதற்கு உடந்தையாயிருப்பவர்களே  கலகத்தை வெற்றி பெறச் செய்வர். உடந்தயாயிருப்பவர்கள் வெல்லப்படுவார்கள் எனில்  தூண்டியவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. ஒரு பகுதியில் குழப்பத்தை விளைவிப்பதென்பது  மிகுந்த முயற்சியுடன் செய்யப்பட வேண்டிய காரியமாகும்.

முதல் வகை : கலகத்திற்கு ஆட்படுபவர்கள் உள் நாட்டில் இருப்பவர் . அவர்களைச் சமாதானம் அல்லது பரிசுகள் மூலம் அந்த  அரசனால்  அடக்கி வைக்க இயலும்.

இரண்டாம் வகை : அரசன் தனது படைகளின் மூலமோ அல்லது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியோ சமாளிக்கலாம் . கருத்து வேற்றுமையை விதைக்க இருவழிகள் உள்ளன. அவைகள்

(1)  இரகசிய உளவாளிகள் நாட்டுக்கு வெளியே கலகத்தைத் தூண்டுபவர்களுக்கு உதவுகிற மாதிரி நடித்து , அவர்களை  விரட்டவே உள்நாட்டுக்காரர்கள்  அரசனின் அடியாட்களாய் செயல்படுகின்றனர் என்ற சந்தேகத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். 

(2)  உளவாளிகள் தாமே நாட்டிற்க்கெதிரானவர்கள்  போல் செயல்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு கலகக் காரர்களுக்கிடையில்  அபிப்ராய பேதத்தை உண்டாக்கலாம்.

அது  போல படைகளை  உபயோகிக்கும்  இரு வழிகள் பின் வருமாறு

இரகசிய கொலைகாரர்களை கலகத்திற்கு உடந்தை யானவர்களின் நண்பர்களாய் நடிக்கச் செய்து ஆயுதம் அல்லது விஷம் கொண்டு அவர்களை  கொல்லச் செய்யலாம்.

கலகக்காரர்களை தலைநகரத்துக்கு வரவேற்றுக் கொள்ளலாம்.

மூன்று மற்றும் நான்காம் வகைக் கலகத்தைக் கையாளும் முறைகள்

கலகத்தைத்  தூண்டுபவர்களைச் சமாளிப்பதே இவ்விரு வகையை வெல்லும் வழியாகும். இராஜத்துரோகத்துக்கான  ஆணிவேர் களையப்படுமெனில்  இராஜத் துரோகிகள் உருவாக இயலாது. உடந்தையானவர்களை  அழிப்பதன் மூலம் தூண்டுபவர்களின் வலையில் சிக்கி வேறு சிலர் கலகத்துக்கு உடந்தையாகலாம் . எனவே  இதில் உடந்தையானவர்களை அழிப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனலாம்.

மூன்றாம் வகை : தூண்டுபவர்கள்  மற்றும்  அதற்கு உடந்தை யானவர்கள் இருவருமே வெளிப்புறத்தைச் சார்ந்தவர்கள் என்றால் கருத்து வேறுபாட்டை விதைத்தல் மற்றும் படைகளைப் பிரயோகித்தல் போன்ற வழிமுறைகள் பலனளிக்கும்.

கருத்து  வேறுபாடு : உடந்தையானவர்கள்  உண்மையில் தூண்டியவர்களை அழிக்க வந்த அரசனின் ஏவலர்கள் என்ற சந்தேககத்தை ஏற்படுத்துவதாகும்.

படைகளை உபயோகித்தல் : கலகத்திற்கு உடந்தையானவர்களை ஆயுதம், விஷம் , போன்றவற்றைப் பயன்படுத்தி இரகசிய கொலைகாரர்களால் அழிக்கலாம்.

நான்காம் வகை : கழகம் முழுவதுமாய் உள் நாட்டைச் சார்ந்ததெனில் பொருத்தமான நான்கு வழிகளில் ஏதேனும்  ஒன்றை அரசன்  கையாள வேண்டும். கலகத்தைத் தூண்டுபவர்களுக்கு மகிழ்ச்சிகரமான ,அல்லது  சோகமான தருணங்களில் பரிசளித்தல் மூலம் மகிழ்விக்கலாம். ஓர் ஒற்றன் கலகக் காரனின் நண்பனைப் போல் செயல்பட்டு மன்னர் அவனது நேர்மையைச் சோதிக்கவிருப்பதாயும், உண்மையையே  கூற வேண்டும் என்றும் எச்சரிக்கலாம். குழப்பவாதிகள் ஒவ்வொருவரும் அரசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று கூறி ஒருவரிடமிருந்து மற்றொருவரைப் பிரிக்கலாம்.  இறுதியாய் இரகசியத் தண்டனை வழங்கும் முறைகளைப்  பயன்படுத்தலாம்.

துரோகிகளும் சதியாலோசனையும்            

கலகம் மற்றும் குழப்பங்கள், அதுவும்  குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கிடையேயான சதியாலோசனையை முறியடிப்பதற்கு முதலில் கலகத்தைத் தூண்டுபவரின் குறிக்கோளைத் தெரிந்து கொள்ள வேண்டும்  மன்னனை  ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமென்ற கலகக்காரனின் எண்ணம் தர்காலிகமானதே .  அப்புரட்சிக்காரன் நேர்மையானவன் எனில் அவனுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி அதில் விருப்பம் இல்லை எனில் , அவன் விருப்பத்துக்கு  ஏற்ப ஒரு ஒப்பந்தத்தை போடுவதாகக் கூறி அவனைச் சமாளிக்கலாம். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அவனை ஒரு கை பார்த்து விடுவது நல்லது . ஆனால், கொடுமைகளை தனது சொந்த குணமாகவே  கொண்ட புரட்சியாலனை படைகளைக் கொண்டே சமாளிக்க வேண்டும். மாறாக அவனை விட்டுப் பிடிப்பது நல்லது அல்ல.

புரட்சியைத்  துவக்கி எவரையும் அழிக்கக்கூடிய ஒருவனை வெற்றி கொள்ள அரசன் இரகசியமாய் முயல வேண்டும்.  அரசன் தனது வார்த்தைக்கு உண்மையுடன் விளங்குகிற , தனது குறிக்கோளை அடையவோ அல்லது தன்னைத் துன்பத்தில் இருந்து காக்கத் தயாராயிருக்கும் ஒருவனை அணுக வேண்டும். முதலில் அம்மனிதன் நேர்மயானவா கொடுமைக்காரனா என்பதை எடை போட வேண்டும். நேர்மையானவன் என்ற வகையில்  ஒரு புரட்சி யாலன்  மக்களால் அங்கீகரிக்கப் பட்டால், அரசனாக இருப்பவன் அவனுடன்   ஒரு தகுந்த ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளலாம் . அதே சமயத்தில், கொடிய புரட்சிக்காரனுடன்   செய்யவேண்டிய ஒப்பந்தம் அவனை வெற்றி கொள்ளும் நோக்கில் அமைய வேண்டும். நாட்டுக்கு வெளியில் இருந்து கலகத்தைத் தூண்டும் ஒருவன் பின்வரும் குறிக்கோள்களுடனேயே உள்  நாட்டில்   குழப்பத்தை ஏற்படுத்துவான். புரட்சி வெற்றி பெறுமெனில் உள்நாட்டுப் புரட்சியாளன் தன்னை அரசனாய் ஏற்றுக் கொள்வான். இதனால் தனக்கு இரட்டை இலாபம் உண்டாகும். அதாவது அரசனின் இறப்பு மற்றும் அரசாட்சி கிட்டுதல் ஆகும். மாறாக புரட்சி தோல்வி அடையும் எனில் உள்நாட்டுப் புரட்சியாளனையே  அரசன்  கொல்வான். அவ்விளைவாக அப்புரட்சியாளன் குடும்பம் மற்றும் ஆதரவாளர்கள் தன்னை வந்தடைவர். இறந்தவனைப்  போன்ற  மற்ற  உள்நாட்டுப் புரட்சியாளர்களும் மன்னனால்  தண்டிக்கப்படும் அச்சத்தில்  பெரிய அளவில் சதியாலோசனை செய்வர். ஒரு வேளை அவர்கள் புரட்சியை ஏற்படுத்தவில்லை எனில்  அவர்கள் மீதான தவறான அபிப்ராயத்தால் ஒவ்வொருவராய் அங்கிருந்து மன்னனால் நீக்கபடுவர்  என்பவையே அக்குறிக்கோள்களாகும் . உள்நாட்டுப் புரட்சியாளன் நாட்டின் வெளியில் இருக்கும் ஒருவனைப் பல குறிக்கோள்களுடன் தூண்டுவான். உள்நாட்டு கொடுமைக்காரன் மன்னனின் கருவூலத்தைக் கொள்ளை இட்டு , படைகளை அழிக்கும் வேளையில் மற்ற சதிகாரர்களை மன்னனைக் கொள்ளும் வகையில் தூண்டுவான். அக்கொடுமைக்காரன் வெளிநாட்டுச் சதிகாரர்கள்  அல்லது ஆதிவாசிகள் போன்றோரை  தூண்டி  அவர்களைச் சிக்கலில் அகப்படுத்தித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவான். பிறகு, அவர்களைக் காட்டிக் கொடுத்து மன்னனின் நம்பிக்கையைப் பெறுவான். எதிரிகளைத் தன் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்த  பின் , அவர்களது நிலங்களை மட்டும் இன்றி அரசனது நிலங்களையும் கைபற்றிக் கொள்வான்.

இராஜத்துரோகம்

மூன்று வகையான இராஜத்துரோகம் பின்வருமாறு கூறப்படுகிறது: 
1.முழுமையாய் சொந்த மக்களால் தோன்றும் வஞ்சகம். 
2.எதிரிகளால் தூண்டப்பட்டுச் செய்யப்படுவது . 
3.எதிரிகளால் தூண்டப்பட்டு உள்நாட்டு இராஜத்துரோகியால் நடைமுறைப்படுத்தப்படுவது.

முதல் இரண்டும் எளிய  வகை என்றும், மூன்றாவது கலப்பு வகை என்றும் அழைக்கப்படும். இரு எளிய வகை துரோகங்கள் - உள்நாட்டு இராஜத்துரோகம் , எதிரிகளால் ஏற்படும் வஞ்சகம். அரசன் தனது நட்டு மக்கள் இராஜத் துரோகத்தின் வகையில் சிக்காமல் காக்க படைகளைத் தவிர வேறு எந்த ( பரிசுகள், கருத்து வேறுபாடு) ஆயுதத்தையும் பயன்படுத்தலாம். ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராய் படைகளை உபயோகிப்பதால் விரும்பிய விளைவு ஏற்படாமல் எதிரிடையாய் மாறலாம். எனவே, அம்மக்களை ஆட்டி வைக்கும் எதிரிகளுக்கு இரகசியமாய்  தண்டனை அளிக்கலாம். இராஜத்துரோகிகள்  இராஜவிசுவாசிகளுடன் கை கோப்பார்கள் எனில்  சதியாலோசனை  மிகப் பெரும் அளவில் உருவெடுக்கும். இந்த அபாயத்தில் இருந்து விடுபட இராஜவிசுவாசிகளை வெற்றிக்கு உறுதுணையாய் வைக்க வேண்டும். மக்களின் ஆதரவின்றி இராஜத்தூரோகிகள் நிலை கொள்வது இயலாத காரியம்.  

அபாயங்களை எதிர்கொள்ளும்  நான்கு வகைகளை ( பரிசளித்தல், புகழாரம்  சூட்டுதல் , கருத்து வேற்றுமை உண்டாக்குதல், படைகளின் உபயோகம்) வரிசையாய் உபயோகிக்கலாம். மகன், சகோதரன் அல்லது ஓர் உறவினர் வஞ்சகம் செய்ய முற்படுவாரெனில் அவர்களைப் புகழ்ந்து பரிசளிப்பதால் அபாயத்தைத் தடுக்கலாம். நகர மக்கள் கிராம மக்கள் அல்லது படைகள் துரோகம் செய்வார்களெனில் பரிசுகளால் அத்தலைவர்களை மகிழ்வித்தல் அல்லது அவர்களுக்கிடையே  கருத்து வேற்றுமையை ஏற்படுத்துவதே சிறந்தது. துரோகிகள் அண்டை நாட்டு இளவரசர்களாகவோ அல்லது காட்டு அரசர்களாகவோ இருப்பின் கருத்து வேற்றுமையை உண்டாக்குவது மற்றும் படைகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழி.இச்செயல் முறை இயல்பானதும், ஏற்றுக்  கொள்ளக்கூடியதும்   ஆகும். மாறாக, இம்முறைகள் தலைகீழாய் உபயோகப்படுமெனில்  ( அதாவது சாமத்திற்கு முன் தானமும், பேதத்திற்கு முன் தண்டமும்  ) அது இயல்புக்கு மாறானதாகும்.

இரகசிய முறை

அரசனுக்குக் கீழ் சேவகம் செய்து பயனடையும் உயர் அதிகாரிகள் சுயமாகவோ, எதிரிகளின் கூட்டணியினாலோ  அரசனுக்குத்   தீங்கு விளைவிப்பவர்களாய் மாறலாம். அவர்களை இரகசிய உளவாளிகள் மூலமோ அல்லது அவர்களால் கடத்தப்படும் ஆபாயத்துக்குட்பட்டவர்களாலோ கையாளலாம். ஓர் எதிரியன் நகரத்தைக் கைபற்றப் பயன்படும் எந்த முறைகளையும் கையாளலாம். சில வேளைகளில் மன்னனுக்குத்  தீங்கு செய்யும் இராஜத் துரோகிகள் ஒன்றிணைந்து ஆற்றலுடன் செயல் படுவதால் அவர்களை நேரடியாய் எதிர்க்க இயலாது. எனவே, அவர்களை இரகசிய வழிகள்  மூலம் அடக்குவது மன்னனின் கடமையாகும். உறவினர்களைப் பயன்படுத்தல், பொறியில்  சிக்க வைத்தல் மற்றும் ஒருவருக்கு எதிராய்  மற்றவரைத் தூண்டுதல் என மூன்று இரகசிய வழிமுறைகள் உள்ளன.

இராஜத் துரோகி தனது படைகளுடன் பட்டத்து இளவரசியிடமோ அல்லது படைத் தளபதியிடமோ சரணடையலாம்.இந்நிலையில்,  முதலில் அவனுக்குச்  சில நன்மைகளைச்  செய்து  பின்னரே எதிராகச் செயல்பட வேண்டும். பிறகு அவனை பலவீனமான படை மற்றும் இரகசிய கொலைகாரன் ஆகியோருடன் கொலைக்களத்துக்கு அனுப்பலாம். இராஜத்துரோகியின் மகன்களுள் அரசிற்கு எதிராய் செயல்படாதவனுக்கு அவனது மரபு வழிச் சொத்துக்கள் அளிக்கப்படலாம். இவ்வாறாக இராஜத் துரோகிகளின் அபாயமின்றி அரசனின் வாரிசுகள் - மகன்கள், பேரன்கள், அரசாட்சியைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
தண்டனை

இராஜத் துரோகத்தைப் பரப்புதல் - கண்களை குருடாக்குவதுடன் 800 பண அபராதம் விதித்தல்  வேண்டும்.

மனநிறைவற்ற மகன்கள்
     
ஓர் அரசனின் மகன் புரட்சிக் காரணாகவோ கலகத்தைத் தூண்டுபவனாகவோ மாறுவானெனில் அதை இரகசிய உளவாளிகள் அரசனுக்குத் தெரிவிக்கலாம். அம்மகன் ஒரே மகனாய், அரசனின் அன்புக்குரியவனாயிருப்பின் சிறைப்படுத்தப்படலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால் கலகம் செய்பவனை தொல்லை உண்டாக்க இயலாது , அவனை ஏற்றுக் கொள்ளும் மக்களில்லாத, அவனது ஆற்றலை அதிகரித்துக் கொள்ளும் சாத்தியமில்லாத எல்லைபகுதிக்கு அனுப்ப வேண்டும். கலகக் காரனான அம்மகன் நன்னடத்தைகள்  கொண்டவனாயின் அவனை  சேனாதிபதியாக்கி விடலாம்.

நியாயமற்ற முறையில் நடத்தப்படும் மகன் சில சமயங்களில் நற்குணங்கள் கொண்ட, வாரிசுரிமை பெறத் தகுதியான இளவரசன் ஒருவன் தனது தந்தையினால்  நியாயமற்ற  முறையில் நடத்தப்படலாம். கொடுமைபடுத்தப்பட்டு , பயனற்ற பணிகள் அளிக்கப்படும் ஓர் இளவரசன் அப்பணி  (1) அவனுடைய உயிருக்கு ஆபத்தை உண்டு பண்ணாது என்றாலோ ,(2) மக்களை அவனுக்கெதிராய்  தூண்டாது என்றாலோ ,(3) கொடிய பாவங்களைச் செய்யாத வகையில் அமையும் என்றாலோ. அவன் தனது தந்தைக்குக்  கீழ்ப்படியலாம் . பயனுள்ள பணிகள் அளிக்கப்படுமெனில்  அதனை உற்சாகத்துடன் , திறன் மிக்க அதிகாரிகள் துணையோடு செய்து முடிக்க வேண்டும். அப்பணியில் இருந்து பெரும் இயல்பான இலாபம் மற்றும் தனது சுயமுயற்ச்சியில் பெற்ற கூடுதல் இலாபம் என இரண்டையும் தன் தந்தைக்கு அனுப்பி வைக்கலாம். அதன் மூலம் தனது தந்தையின் அன்பை சம்பாதிக்க முயற்சிக்கலாம். தனது  தந்தையால் (அரசன்) சிறைபிடிக்கப்படலாம் அல்லது கொள்ளப்படலாம் என்கிற அச்சத்தில் உள்ள இளவரசன் நியாயமான, ஆற்றல் மிக்க , நேசக்கரம் நீட்டுகிற அண்டை நாட்டு அரசனிடம் தஞ்சம் புகலாம். அவ்வரசனின் பாதுகாப்பில் படைகளைத் திரட்டி , அரச குடும்பத்தில் திருமணம் செய்து அல்லது காட்டு வாசிகளுடன் கூட்டு வைத்து தனது தந்தையின் ஆட்சியிலுள்ள மக்களின் ஆதரவுடன் ஆட்சியுரிமையைக் கைப்பற்றலாம். சரியான அடைக்கலம்  கிடைக்காத நிலையில் அவன் தன் தாய்வழி உறவினரின் உதவியோடு தந்தையை வெல்லலாம். இளவரசன் கபடமாகவும்  செயல்படலாம். அவன் கலைஞர்கள் , கைவினைஞர்கள் , மருத்துவர் போன்று பாசாங்கு செய்து அரண்மனையில் படுகொலை பாதக ரோடு நுழைந்து ஆயுதங்கள்  அல்லது விஷம் மூலமாய் அரசனைக் கொள்ளலாம். பிறகு, தன்னையே பட்டத்துக்குரியவனாய் அறிவித்து , அவனோடு பணியாற்ற ஒப்புக் கொண்டவர்களுக்கு இருமடங்கு உணவு, கூலி போன்றவை வழங்கலாம்.   

அரசனின் பாதுகாப்பு நடவடிக்கைகள்

கலகத்தை உண்டு பண்ணும் இராஜத்துரோகியான மகனை அரசன் தனது உயர் அதிகாரியின் மகன்கள் மற்றும் இளவரசனின் தாய் ஆகியோர் மூலம்  ஆசை வார்த்தைகள் கூறி அரசவைக்கு வரச் செய்ய வேண்டும். அவ்வாறு வரமறுக்கும் இளவரசனை ஆயுதங்கள்  அல்லது விஷம் மூலம் படுகொலை செய்யச் சொல்லலாம். அவ்வாறு அவனைக் கொல்ல விரும்பாத நிலையில் அவனுக்கு மது அளித்தோ அல்லது வேட்டையாடும்  போது இரகசிய உளவாளிகள் மூலம் கைது செய்தோ அரசவைக்கு கொண்டு வரலாம். கைது செய்யப்பட்டவன் அரசனுடைய ஒரே மகனெனில் அரசனது மறைவிற்குப்   பின் ஆட்சியுரிமை  அவனுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்து, நிபந்தனையோடு அவனை விடுவிக்கலாம் . பிற மகன்கள் இருப்பின் கைது செய்யப்பட்டவன் கொல்லப்படுவான்.

அரசனின் மறைவிக்குப் பின் வாரிசு நியமனம், அரசன் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டோ , இறக்கும் தருவாயிலோ  இருப்பின் முடியாட்சியை  எவ்வித குழப்பமும் இன்றி தொடரும் வகையில் அமைச்சர்கள் பின்வரும் செயல்களைச் செய்ய வேண்டும். அரசனின் இறப்பு எதிர்நோக்கப்படும் நிலையில் அமைச்சர்கள் வேறு சில அதிகாரிகளின் உதவியோடு மாதத்தில் ஓரிரு முறை அரசனைக்  காண பார்வையாளர்களை  அனுமதிக்கலாம் (அரசனின் மோசமான உடல் நிலையை மறைக்கும் பொருட்டு பார்வையாளர்களின் வருகை தவிர்க்கப்படலாம்). அந்நிலையில் அரசன் நாட்டின் அபாய நிலை, சுபிட்சம் , எதிரிகளின் அழிவு , நீண்ட  நாள் வாழ்வு போன்றவற்றுக்காய் சிறப்பு  வழிபாட்டில்    ஈடுபட்டுயிருப்பதாய்   கூறி விடலாம். மேலும் அமைச்சர்கள் மக்களிடம் அரசன் தனது தினசரிக் கடமைகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதாய் மதிப்பைத் தோற்றுவிக்க வேண்டும். மக்களுக்குத் தீங்கு செய்பவர்களைத் தண்டித்தும் , நன்மை செய்பவர்களைத் கௌரவித்தும் மக்களுக்கு மகிழ்ச்சியூட்ட   வேண்டும். 

அமைச்சர் கருவூலம்  , இராணுவம் இரண்டையும் ஒன்று திரட்டி  கோட்டைக்கு உள்ளேயோ  , எல்லைப்புறத்திலோ  பாதுகாப்பான இடத்தில் நம்பிக்கையானவரின்  பொறுப்பில் வைக்க வேண்டும். இளவரசன் அரசனின் நெருங்கிய உறவினர்கள், முக்கியமான உயர் அதிகாரிகள் ஆகியோரும் பாதுக்காப்பின்  கீழ் வைக்கப்பட வேண்டும் .கோட்டை அல்லது காட்டுப்பகுதியின் தலைவர் பகைமை உணர்வு பாராட்டுவாரெனில் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். அல்லது, அபாயகரமான படையெடுப்பு , அல்லது  எதிரிகளின் மீதான படை எடுப்பிற்கு அவரை அனுப்ப வேண்டும். அமைதியான முறையில் ஆட்சி கைமாறுவது உறுதி செய்யப்பட்ட  பின், அமைச்சர்- அரச குடும்பத்தின்  பிற அங்கத்தினர்கள், இளவரசர்கள் முக்கியமான உயர் அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவைப்  பெற்று அரசன் இறக்கும் முன்பே இளவரசனை ஆட்சியில் அமர்த்தலாம். பட்டத்து இளவரசனிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு அரசனின் உடல் நிலை சீர்கேடு அடைந்ததை அறிவிக்கலாம்.

போரில் வீரமரணம் : அரசன் போரின் போது எதிரி நாட்டில் சென்று இறக்க நேரிடுமெனில் அமைச்சர் – எதிரியுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைச் சீரமைக்கலாம். அண்டை நாட்டு அரசனைத் தலைநகரில் வைத்து விட்டு போரில் இருந்து பின் வாங்கலாம். வாரிசை அரியணையில் அமர்த்தி , போரைத் தொடரலாம்.

மறைமுக செயல்பாடுகள்

ஓர் அரசன் தனது எதிரி, கூட்டணி மற்றும் நடுநிலையான அரசர்களின்  அரசவையில் ஒற்றர்களை அமர்த்தி அவ்வரசர்கள் மற்றும் பதினெட்டு வகை உயர் அதிகாரிகளின் செயல்பாடுகளை உளவு பார்க்கலாம். அழிவூட்டும் செயல்கள் மூலம் வியக்கத்தக்க விளைவுகளைப் பெற இயலும் . ஆயுதங்கள் , தீ அல்லது விஷம் போன்றவற்றை உபயோகித்து இரகசியமாய் கொலை செய்யும் ஒருவன் மிகப்பெரும் படையைக் காட்டிலும் அதிகம் சாதிக்க இயலும்.

இரகசிய சேவையை உருவாக்குதல்

உயர் அதிகாரிகளின் நேர்மையைச்  சோதித்த பிறகு பின்வரும் வகைகளில் அரசன் இரகசிய சேவைகளை உருவாக்கலாம். 
(i)  ஓரிடத்தில் நிலை கொள்ளும் இரகசிய உளவாளிகள் : இரகசிய உளவுத்துறை அதிகாரிகள் , ஒற்றர்கள் ஆகியோர் துறவிகளை , வியாபாரிகளைப்  போல் அல்லது குடிமக்களைப் போல் வேடமிட்டு ஓரிடத்தில் தங்குவர்.  அவர்கள் மூலம் , அரசனுக்கு நாட்டில் நடக்கும் அனைத்து விவகாரங்களும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும். அதே சமயத்தில் சந்தேகத்துக்கு உரியவராய் திகழும் எந்த உளவாளியும் உடனே நீக்கப்  பட வேண்டும். 
(ii) சுற்றித் திரியும் உளவாளிகள்: பெண் உளவாளிகள் பிச்சைக்கார வேஷத்திலும், குறி சொல்பவர்கள் போலவும் சுற்றித் திரிந்து உடனுக்குடன் மக்களின் மனநிலையை அரசனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.