ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்

bookmark

கேரளத்தில், காலடி என்ற இடத்தில், கி.பி.788 ஆம் ஆண்டு,ஒரு அந்தணர் குலத்தில்,சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் சங்கரர். இளம்வயதில் இருந்தே கூர்ந்த மதியும், அசாதாரண நினைவுத் திறனும் கொண்டிருந்தார். எட்டு வயதிற்குள்ளாகவே அனைத்து வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு மஹா பண்டிதர் ஆனார். அவருடைய இளம் வயதிலேயே தந்தை காலமானார். மகன் சங்கரன் தான் வாழ்க்கை என்று அவரது தாய் உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் சங்கரரின் உள்ளமோ துறவறத்தையே நாடியது. இறைவனின் அருளால் அதற்கும் ஒரு விந்தையான வழி கிடைத்தது.

ஒரு நாள் அருகில் இருந்த பூரணா நதியில் நீராடிக் கொண்டு இருந்த பாலகன் சங்கரரின் காலை ஒரு முதலை கவ்விக் கொண்டது, இதைக் கண்ட அவரது தாய் துடித்துப் போனாள். முதலையின் வாயில் இருந்த மகனை காப்பாற்ற அந்தத் தாயால் இயலவில்லை. கரையில் அழுது கொண்டு இருந்த தாயை பார்த்து சங்கரர் "என்னை துறவறம் மேற்கொள்ள நீ அனுமதித்தால்,முதலையிடம் இருந்து என்னைக் காப்பாற்றலாம்" என்று அமைதியாகக் கூறினார்.

மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று தாய் ஆர்யாம்பாள் சம்மதம் தெரிவித்தாள். சந்நியாச தர்மங்களை போதிக்கும் மந்திரங்களை உச்சரித்தார், சங்கரர். முதலை உடனே அவரை விட்டு விட்டது. பின்னர் எல்லாவற்றையும் துறந்து குருவை தேடி வடக்கு நோக்கி பயணித்தார் சங்கரர்.

கடைசியாக, நர்மதை நதிக் கரையில் "கோவிந்த பகவத் பாதர்" என்ற ஞானியை சென்றடைந்தார். அவரிடம் சீடனாக வேண்டினார். அவரும் சங்கரனை சீடனாக ஏற்றுக் கொண்டார். குருவிடம் ஹட யோகம்,ராஜ யோகம், ஞான யோகம், ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பரம்பொருளாகிய பிரம்மத்தை அறியும் உபதேசத்தையும் பெற்றார். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதும் பணியை குருவின் ஆணைப் படி மேற்கொண்டார். அதற்காக காசி நகரை சென்று அடைந்தார். அங்கு அவருக்கு சனந்தனர் போன்றோர் சீடர்கள் ஆகினர்.

ஒரு நாள் சங்கரரும் அவரது சீடர்களும் கங்கையில் நீராடி விட்டு, விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது நான்கு நாய்களுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த தீண்டத் தகாதவன் ஒருவன், அவர்களை நெருங்கினான். அவன் எங்கே தங்களை தொட்டு, தங்களது ஆசாரத்தை கெடுத்து விடுவானோ என்று பயந்த சீடர்கள் அவனை "விலகிப் போ" என்றனர். இதைக் கேட்ட அவன், விலகிப் போகிறேன் ஆனால் நீங்கள் விலகிப் போக சொன்னது என்னுள் வியாபித்து இருக்கும் எனது ஆத்மாவையா?அல்லது ரத்தத்தாலும்,சதையாலும் ஆன இந்த உடலையா என்று மட்டும் சொல்லி விடுங்கள்!" என்றான் அமைதியாக.

இதை கேட்ட சங்கரரின் உடல் சிலிர்த்தது. நான்கு வேதங்களையும் நாய் உருவில் மாற்றி, சிவபெருமானே தாழ்ந்த குலத்தவனாக வந்து இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். சிவ பெருமானின் பாதங்களில் விழுந்து,"மணிஷ பஞ்சகம்" என்ற ஐந்து ஸ்லோகங்களால் அவரை அர்ச்சனை செய்தார். அத்துடன் அவரிடம் குடி கொண்டு இருந்த பேத பாவங்கள் அனைத்தும் அவரை விட்டு விலகின. அன்று முதல் சங்கரராக இருந்தவர் மக்களை நல்வழி படுத்தும் அவதார புருஷனான "ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்" ஆக உதயம் ஆனார்.

"இவ்வுலகில் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொரு ஜீவனிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறான். பல்வேறு வடிவங்களிலும்,வித விதமான பெயர்களில் உலகில் உறையும் உயிர்கள் அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே! சம்சார சக்கரத்தில் கிடந்து உழலும் ஜீவாத்மாக்களும்,அவற்றை இயக்கும் பரமாத்மாவும் இருவேறு மாறுபட்ட பொருட்கள் அல்ல. இரண்டும் ஒரே பரம்பொருளின் பிம்பங்களே!" என்ற இரண்டற்ற நிலை எனப்படும், அத்வைத சித்தாந்தத்தை நிறுவி, அதை மக்களிடையே பரப்பி, அவர்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளை போக்கினார். அனைவரையும் இறை நிலையை அடையச் செய்யும் முயற்சியில் நாடெங்கும் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேஷம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் என பல ஊர்களுக்கு விஜயம் செய்தார்,ஆதி சங்கரர். அறிஞர்கள்,புத்த,ஜைன மதத்தவர்கள் எனப் பலரையும் வாதத்தில் வென்றார். அவர்களை தமது சீடர்கள் ஆக்கி,அத்வைத சித்தாந்தத்தை எங்கும் நிலை நிறுத்தினார். பெரும் ஞானிகளாக விளங்கிய தனது முக்கிய சீடர்களை தலைவர்களாகக் கொண்டு,தென்னகத்தில் சிருங்கேரியில் சாரதா பீடத்தையும்,மேற்கே துவாரகையில் துவாரகா பீடத்தையும்,வடக்கே ஜ்யோதிர்மட் என்ற இடத்தில் ஜ்யோதிர் பீடத்தையும், கிழக்கே பூரியில் கோவர்தன பீடத்தையும் நிறுவினார். பின்னர் அன்னை ஆர்யாம்பாளின் அந்திமக் காலம் நெருங்குவதை உணர்ந்து, ஓடோடி வந்து அன்னைக்கு பணிவிடைகள் செய்தார். அன்னை காலமானதும், தனது சந்நியாச தர்மத்தை மீறி, உறவினர்கள் பலர் தடுத்தும், தாய்க்கு கொடுத்த வாக்கின் படி அம்மாவின் அந்திமக் கிரியைகளை செய்து, முக்தி பெறச் செய்தார்.

பின்னர், மீண்டும் தமது யாத்திரையை தொடர்ந்து நடத்தினார். காம்போஜம், நேபாளம், கஷ்மீரம், போன்ற பல இடங்களுக்கு சென்று மக்களை நல்வழிப் படுத்தினார். சாதாரண மக்களும் முக்தி பெரும் வகையில் "பஜகோவிந்தம்" என்னும் பக்திப் பதிகங்களை பாடி அருளினார்.

இவ்வாறு பல ஊர்களுக்கு செல்லும் போது ஒரு நாள் காலை வேளையில்,வறுமை தாண்டவம் ஆடிய அந்தச் சிறிய வீட்டு வாசலில்,"பவதி பிக்ஷாம் தேஹி" என்று பிக்ஷை கேட்டார் ஆதி சங்கரர். ஆனால்,அவர்களோ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். வறுமையின் காரணமாக அவர்களுக்கே உண்ண எதுவும் இல்லை என்கிற நிலை. என்றாலும், வந்த சன்யாசியை எவ்வாறு வெறும் கையுடன் அனுப்புவது என்ற கவலையில், வீடு முழுக்க அந்த குடும்பத் தலைவி, உண்ண, உணவு ஏதேனும் அவருக்கு தர இயலுமா? என்று தேட. தெய்வாதினமாக,ஒரு சிறு நெல்லிக் கனி அகப்பட்டது. அதனை மிகுந்த தயக்கத்துடன் வந்திருந்த சன்யாசியின் கைகளில் கொடுத்தாள், அந்த ஏழை குடும்பத் தலைவி. வந்து இருப்பது ஆதி சங்கரர் என்று அவர்களுக்கு தெரியாது.

அந்த சிறு கனியை முகம் சுழிக்காமல் ஏற்ற ஆதி சங்கரர் மனதில் கருணை பெருக் கெடுத்து ஓடியது. தாங்கள் உண்பதற்கு எதுவும் அற்ற நிலையிலும், தங்களிடம் கடைசியாக இருந்த ஓரே ஒரு உணவுப் பொருளையும் தானமாக வழங்கிய அந்தப் பெண்ணின் தரித்திரம் போக, திருமாலின் மார்பில் உறையும் திருமகளை துதிக்கத் தொடங்கினார். தாய் மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள், அவளின் அருளால் அந்த ஏழையின் இல்லத்தில் தங்க நெல்லிக் கனிகள் மழை போல பொழிந்தன. ஆதி சங்கரர் பாடிய அந்த இருபத்தொரு கவிதைகள் கொண்ட தொகுப்பு தான் "கனகதாரா ஸ்லோகம்" அது இன்னும் கூட பல வீடுகளில் பாராயணம் செய்யப் பட்டு வருகின்றது. இவ்வாறு பல அற்புதங்களை போகும் இடமெல்லாம் செய்து வந்த ஆதிசங்கரர். இமயமலைத் தொடரில் அமைந்து இருக்கும் பத்ரிநாத், கேதாரநாத் தலங்களுக்கு விஜயம் செய்த போது. கி.பி.820 ஆம் ஆண்டு கேதாரநாத்தில் தமது உடலைத் துறந்து. பரம் பொருளுடன் இரண்டறக் கலந்தார். முப்பத்தி இரண்டே ஆண்டுகள் வாழ்ந்த தமது உலக வாழ்க்கையில், இறைத் தொண்டு பல புரிந்து, மக்களுக்கு நல்லதை மட்டுமே போதித்த ஆதி சங்கரர் ஆத்ம ரூபமாக இன்றும் கூட தன்னை வேண்டுபவர்களுக்கு அருள் பாலிக்கிறார்.