அவையடக்கம் - 7
7.
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ.
துறை அடுத்த- பல்வேறு வகைப்பட்ட; விருத்தத் தொகைக்
கவிக்கு-செய்யுள் தொகுதியாலாகிய கவிதைக்கு; உறை அடுத்த
செவிகளுக்கு-இடமாக உள்ள செவிகளுக்கு; என்பா ஓதில்-என்
கவிதைகளை ஓதினால்; யாழ் நறை அடுத்த-யாழிசை யாகிய தேனைப்
பருகுகின்ற; அசுண நன் மாச்செவிக்கு-அசுணமாகிய நல்ல விலங்கின்
செவிகளிலே; பறை அடுத்தது போலும்-(கடுமையான) பறையோசை
வீழ்ந்ததைப் போன்றது.
இசையில் மகிழ்ந்து திளைக்கும் அசுணம், பறையின் வல்லோசை
கேட்டால் உயிர் விட்டுவிடும் என்பர். அதுபோல ‘நற்கவிதைகள்
கேட்டுத் திளைத்த செவிகளில் என் புல்லிய பாவின் ஓசை
வீழ்ந்ததால் கேட்டோர் துன்புறுவர்’ என்கிறார் கம்பர்.
துறை: பல பிரிவுகள்; அகத்துறை புறத்துறைகளைக் குறித்ததாகக்
கொள்ளலாம். விருத்தம் என்பது ஒருவகை யாப்பு; அச்சொல் இங்கே
பொதுமை நிலையில் எல்லா வகைச் செய்யுள்களையும் குறித்து
வந்தது. உறை: இடம். ‘யாழ்’ - இங்கு யாழில் பிறக்கும் இசைக்கு
ஆகுபெயர். யாழ் நறை-யாழிசையாகிய தேன்; உருவகம்.
விலங்காயினும் இன்னிசையில் திளைப்பதால் ‘நன்மா’ என்றார். பறை
- ஆகுபெயராய் பறையோசையைக் குறித்தது. அரோ-அசை. 7
