அவையடக்கம் - 4
4.
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
ஒரு பூசை-ஒரு பூனை; ஓசை பெற்று உயர் பாற்கடல்புக்கு- ஒலி
மிகுந்ததும் உயர்ந்ததுமான பாற்கடலை அடைந்து; முற்றவும் நக்குபு
புக்கென - (அந்தப் பாற்கடல்) முழுவதையும் நக்கப் புகுந்தாற் போல;
இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை - குற்றமில்லாத வெற்றி
கொண்ட இராமபிரானது இக்கதையை; ஆசை பற்றி அறையலுற்றேன்-
ஆசை கொண்டமையால் சொல்லத் தொடங்கினேன்.
ஓயாத ஒலி கடலுக்கு இயல்பு; ஆதலின் ‘ஓசை பெற்று உயர்
பாற்கடல்’ என்றார். தேவருக்கு அமுது ஈந்த சிறப்பைப் பற்றி உயர்
பாற்கடல் என்றார் போலும். எளிய பூனை ஆழ்ந்து பரந்த பாற்கடல்
முழுவதையும் நக்கிக் குடித்துத்தீர்த்துவிட முடியாது என்பது தெளிவு.
ஆயினும், அந்த முயற்சி குறித்து ஒரு பூனை பாற்கடலை
அடைந்திருக்கிறது; இம்முயற்சிக்கு ஆற்றலை விடப் பேராசையே
காரணமாக இருக்கமுடியும். அதுபோலத் தன் ஒப்பார் இல்லா
அப்பனாகிய நடையில் நின்றுயர் நாயகனின் புகழ்க் கடலை
அளந்துரைக்க முடியாது என்பது தெளிவு. ஆயினும், ஆற்றல் கருதாத
பேராசை காரணமாக மட்டுமே இச்செயலில் துணிந்து
இறங்கியிருப்பதாகக் கவிச்சக்கரவர்த்தி கூறுகிறார். உவமையணி.
(பூனையை உவமையாகக் கொள்ளாமல் ஆசை பற்றிய அதன்
முயற்சியையே உவமையாகக் கொள்ளல் வேண்டும்)
நக்குபு: செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைச் செய
என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகத் திரித்துப் பொருள் கொள்ள
வேண்டும். (எச்சத் திரிபு)
இராமபிரானது வெற்றி குற்றமற்ற வெற்றி என்பார் ‘காசு இல்
கொற்றம்’ என்றார். பின்னர் வாலிவதை போன்ற செய்தி வரும்போது
இத்தொடரை நினைந்து கணிக்க வேண்டும். 4
