அழற்படு காதை
தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான 'மதுரபதி' என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள்.
