அலெக்சாண்டர்
மாவீரன் அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு.
அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.
அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.
அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.
மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.
மாவீரன் அலெக்சாண்டர் தன்னபிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்தார்.மிகச் சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி, அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதியை தனது வீரத்தால் வென்றார் அவர்.ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை ஆர்வத்துடன் படித்தார் அவர். ஒரு முறை அரிஸ்டாட்டில் தனது கையில் சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட சில வாசனைப் பொருள்களைக் காட்டி, "இவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தது. இந்தியா என்ற தேசத்தில் இருந்து வருகிறது" என்றார். அப்போது இளைஞராக இருந்த அலெக்சாண்டருக்கு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அச்சமயத்தில், இவரது அப்பா பிலிப் ஒரு போரில் கொல்லப்பட, மனதில் பலவித கனவுகளுடன் தனது இருபதாவது வயதில் மன்னர் பொறுப்பை ஏற்றார் (அலெக்சாண்டர்). அவர் உலகமே தன்னுடைய நாட்டின் எல்லை தான் என்று நினைக்க ஆரம்பித்தார். அண்டை நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளைக் கைப்பற்ற தொடங்கினார். அப்போதும் அவரது நாடு பிடிக்கும் ஆசை திருப்தி அடையவில்லை.
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும். அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.
கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தார். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார் மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.
இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது. கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.
இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார். இந்த அனைத்து வெற்றிகளிலும் திருப்தி அடையாத அலெக்சாண்டர் தனது கவனத்தை இந்தியா மீது திருப்பினார்.
இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.
கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், ஸ்வாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது. பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.
கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார் என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.
இதன் பிறகு அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.
மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.
ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி ஆகும்.
போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த மகத நாட்டின் நந்தர் அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன. அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.
இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொன்ற பிரமாண்டம் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.
ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம் நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும் விவாதித்தார். ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் சிந்து நதி கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார்.
அலெக்ஸாண்டர் தனது படையின் பெரும்பகுதியை தனது தளபதி கிராடேராஸ் தலைமையில் கார்மேனியாவிற்கு (தற்போதைய தெற்கு ஈரான்) அனுப்பிவைத்தார். மற்றும் தனது கடற்படை தொகுதியை பாரசீக குடா பகுதிகளுக்கு தனது கடற்ப்படை அதிகாரி நியர்சுஸ் தலைமையில் அனுப்பினர். மீதமுள்ள படையினரை தானே தலைமை ஏற்று தெற்கு நோக்கி கடுமையான கேட்ரோசியன் பாலை நிலம் வழியாக வழிநடத்தி பாரசீகம் சென்றார். வழியில் அவர் கி.மு.324'ல் சூசா-வை அடைந்த பொழுது இதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தனது படையின் பெரும்பகுதியை அந்த பாலை நிலத்தின் கொடுமைக்கு பலியாக இழந்திருந்தார்.
இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார்.
மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கலகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கலகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மாசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.
இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார்.
எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார். மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன.
