அலிபாபா செல்வங்களை கள்வர் குகையில் இருந்து கவர்தல்
கள்வர் குகையின் வாயிலை அடைந்த அலிபாபா அங்கு நின்றபடி "திறவாய் சிம் சிம்" என்று கூறியதும் உடனே அந்தக் குகையின் வாயில் திறந்து கொண்டது. அந்தக் குகையினுள் சென்றான் அலிபாபா. அந்தக் குகை ஒரு பெரிய கூடத்தைப் போலக் காட்சி அளித்தது. அங்கு பொற் கட்டிகளும், மணியும், நகையும் போதும் போதும் என்ற அளவுக்குக் கொட்டிக் கிடந்தது. அலிபாபா காலத்தை வீணாக்க விரும்பாமல் அங்கு காணப்பட்ட பொற்காசுகளை எடுத்து சிந்தாமல் சிதறாமல் இரண்டு மூட்டைகளைக் கட்டினான். வேறு எந்தப் பொருளையும் அலிபாபா தொடவும் இல்லை கலைக்கவும் இல்லை. கொள்ளையர்கள் வைத்து விட்டுப் போனது போன்றே மற்ற அனைத்தும் காணப்பட்டது. பிறகு பேராசை குணம் இல்லாத அலிபாபா அந்த இரண்டு மூட்டை பொற் காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்று குகையின் வாயிலை அடைந்தான். பின்னர் "மூடுக சிம் சிம்" என்று அந்த மந்திரத்தை சொல்ல அந்தக் குகையின் வாசல் மூடிக் கொண்டது தான் வந்த சுவடே தெரியாமல் அலிபாபா பொற்காசுகளைக் கொண்ட மூட்டையை கழுதையின் மீது ஏற்றியபடி தனது வீட்டை அடைந்தான்.
இப்படியாகத் தனது வீட்டை அடைந்த அலிபாபா, தொழுவத்திற்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதைகள் இரண்டையும் ஒட்டிக் கொண்டு சென்றான். பின்னர் பொன் மூட்டைகளை மெல்ல எடுத்து வந்து வீட்டின் ஒரு அறையில் பத்திரமாக வைத்தான். அப்படி அலிபாபா பொன் மூட்டைகளை வைத்த மாத்திரத்தில் அதில் இருந்து எழும்பிய சத்தம் அவனது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அடுப்படியில் இருந்து விரைந்து வந்தவள் அலிபாபா கொண்டு வந்த மூட்டைகளைப் பார்த்தாள்.
"உள்ளே இருப்பவை பொற் காசுகள் தானே?" என்று அலிபாபாவிடம் கேட்டாள்
"ஆம் நூர்ஜஹான்! ஆனால் உனக்கு எப்படி இது தெரிந்தது?" என்று கேட்டான் அலிபாபா.
"மூட்டைக்குள் நாணயங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து குலுங்கும் சத்தத்தைக் கேட்டேன் அதன் மூலமாக அறிந்து கொண்டேன்" என்று கூறினாள் அலிபாபாவின் ஆருயிர் மனைவியான நூர்ஜஹான். தனது மனைவியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான் அலிபாபா.
நூர்ஜஹானோ அலிபாபாவை சந்தேகம் வரும் படியாகப் பார்த்தாள். அதனை அவளது பார்வையிலேயே உணர்ந்து கொண்டான் அலிபாபா. அத்துடன் நூர்ஜஹானிடம் நடந்த அனைத்து உண்மைகளையும் கூறினாள். அதைக் கேட்ட நூர்ஜஹான் "கொள்ளையர்கள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்" என்று தனது ஆருயிர் கணவரான அலிபாபாவை எச்சரிக்கை செய்தாள். தனது மனைவி கூறிய வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்த அலிபாபா, "இதற்கு மேல் நான் அந்தக் குகையின் பக்கம் செல்ல மாட்டேன். நமக்கு கிடைத்த இந்த செல்வத்தை வைத்தே நாம் சந்தோஷமாக வாழ்வோம்" என்றான். அதைக் கேட்டு அவனது மனைவியும் மகிழ்ந்தாள்.
பிறகு அலிபாபாவும், நூர்ஜஹானும் ஒன்றாக உணவு அருந்தினார்கள். அப்போது நன்றாகவே இருட்டியும் விட்டது. இந்த சமயத்திற்காகத் தான் அலிபாபாவும் காத்துக் கொண்டு இருந்தான். தனது மனைவியிடம் தான் அந்தப் பொற் காசுகளை பத்திரமாக நமது சின்னஞ் சிறய தோட்டத்தில் இரவோடு இரவாக புதைத்து பத்திரப் படுத்தி வைப்போம். அத்துடன் இப்போதைக்குப் புழக்கத்திற்கு சில நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்வோம் என்றான்.
அதைக் கேட்ட அலிபாபாவின் மனைவியான நூர்ஜஹான், "அவசரப் படாதீர்கள். நம்மிடம் உள்ள தங்க நாணயத்தின் இருப்பு நமக்குத் தெரிய வேண்டாமா? அப்போது தானே நாம் அதனை எப்படிப் பயனுள்ளதாக செலவழிக்கலாம் என்பதைத் திட்டம் இட முடியும். அதனால் நான் ஓடிச் சென்று தங்கள் அண்ணியாரிடம் இருந்து "படியை" அளப்பதற்கு வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்றாள்.
"அண்ணியாரும், அண்ணனும் பேராசை கொண்டவர்கள் அதனால் அவர்களிடம் எதுவும் சொல்லிவிடாதே" என்று எச்சரிக்கை செய்தான் அலிபாபா.
"கவலைப் படாதீர்கள். நான் எதையும் சொல்ல மாட்டேன்" என்று கூறியபடி நூர்ஜஹான் காசிமின் வீட்டை அடைந்தாள். காசிமின் மனைவியான ரசியா பேகம், நூர்ஜஹான் வந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டறிந்தாள். பிறகு இந்த இரவு நேரத்தில் எதை அளப்பதற்குப் படி கேட்கிறாள் என்பதை அறிவதற்காக வீட்டின் உள்ளே சென்று கொஞ்சம் சக்கைப் பிசினை (பலாப்பழத்தின் பிசினை) படியின் அடியில் தடவிக் கொடுத்தாள். எதை அளந்தாலும் படியில் ஒட்டிக் கொள்ளும் நாம் அதன் மூலமாக விஷயத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் ரசியா இவ்வாறு செய்தாள். இதனை அறியாத நூர்ஜஹானும் நன்றியுடன் அளக்கும் அந்தப் படியைப் பெற்றுக் கொண்டு தனது வீட்டிற்கு ஓடினாள்.
பிறகு கள்வர் குகையில் இருந்து கொண்டு வந்த பொற் காசுகளை அந்தப் "படி" யின் உதவியால் அளந்து, அளந்து ஒரு மூட்டையில் கட்டி பத்திரமாக அதனைத் தோட்டத்தில் புதைத்தனர் அலிபாபாவும் அவனது மனைவியும். அதில் மட்டுமே கவனம் செலுத்தியதால் அலிபாபாவும் அவனது மனைவியும் "படி" யில் தடவப் பட்டு இருந்த அந்தப் பிசினைப் பற்றி அறியத் தவறிவிட்டனர். தவிர அவர்கள் வழக்கப்படி இரவில் இன்னொருவர் படியை வைத்து இருக்கக் கூடாது என்பதால் அவசர அவசரமாக அலிபாபாவின் மனைவியான நூர்ஜஹான் காசிமின் மனைவியான ரசியா பேகத்திடம் ஓடிச் சென்று ஒரே இரவில் அவள் கொடுத்த "படி" யை ஒப்படைத்தாள். பிறகு மீண்டும் விரைந்து வந்து தனது வீட்டை அடைந்தாள்.
