அமெரிக்க நடிகையின் துயர் போக்கிய சுவாமிஜி

அமெரிக்க நடிகையின் துயர் போக்கிய சுவாமிஜி

bookmark

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகருக்கு சுவாமிஜி வந்திருந்த அதே வேளையில் புகழ் பெற்ற நடிகை 'எம்மா கால்வி' யும் அங்கு வந்திருந்தாள். புகழும் பணமும் குவிந்திருந்த அளவு அவள் வாழ்வில் இன்பம் இல்லை. பெரும்பாலும் எம்மா கால்வி துன்பக் கடலில் தான் மூழ்கி இருந்தாள். அவளுக்குப் பிறந்த அருமை மகள் மரணம் அடைந்த சம்பவம் அவளை மிகவும் பாதித்து இருந்தது. அவளது தனிப்பட்ட வாழ்வும் இரண்டாம் தரமாகத் தான் இருந்தது. எத்தனையோ ஆண்கள் அவள் வாழ்வில் வந்து சென்றார்கள். ஆனால், அவர்களால் அவளுக்கு ஒரு வித உதவியும் இல்லை. உடன் பழகியவர்களே துரோகம் செய்தார்கள் இதனால் காலப்போக்கில் அவளால் சரியாக நடிப்புத் துறையில் ஈடுபட முடியவில்லை. இந்த அழுத்தத்தின் விளைவாக மன நோய்க்கு அவள் ஆளாகி இருந்தாள்.

இந்த நிலையில் ஒரு நாள் எம்மா கால்வி அவர்களின் நெருங்கிய தோழி அவளிடம்," கால்வி! இந்தியாவில் இருந்து ஒரு பெருமை வாய்ந்த மகான் வந்து உள்ளார். அவர் பெயர் விவேகானந்தர். அவரை நீ அவசியம் சந்திக்க வேண்டும். அவரால் மட்டும் தான் உனக்கு அமைதியை தர முடியும்" என்று அறிவுரை கூறினாள்.

ஆனால் எம்மா கால்விக்கு மகானாகிய அவரை தான் சென்று பார்ப்பதா என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் மறுபுறம் நாளுக்கு நாள் எம்மா கால்வி அமைதி இழந்து கொண்டு இருந்தாள். அதன் காரணமாக அதிக மன அழுத்தத்தால் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். ஆனால் இறுதியில் மூன்று முறையும் மரணம் வரையில் சென்று காப்பாற்றப் பெற்றாள். அதனால் சாகக் கூட தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று கதறி அழுதாள்.

மீண்டும் நான்காவது முறியாக வீட்டை விட்டுக் கிளம்பிய எம்மா, தற்கொலை செய்து கொள்ள ஏரியை நோக்கி நடக்க எண்ணினாள். ஆனால் அவளை அறியாமலே ஏதோ ஒரு சக்தி அவளை அவளின் தோழியின் வீட்டிற்கு அழைத்து வந்தது. தனது தோழியின் வீட்டிற்குத் தான் எப்படி கொண்டு வரப்பட்டோம் என்று பிரமித்து நின்றாள் எம்மா கால்வி. அவளது வியப்பு நீங்குவதற்குள் ஒரு அருமையான பாடல் அவள் காதுகளில் ஒலித்தது. அந்தப் பாட்டை பாடியது யார் என்று அறிய பாட்டின் திசை வந்த இடம் நோக்கிச் சென்றாள்.

அங்கு ஞானசூரியனாக ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கண்டாள். அவளை விடவும் வயதில் சிறியவர். ஆயினும் 'மகளே' என்று பாசத்துடன் அழைத்ததும் அவள் அவர் முன்னே சென்றாள்.

சுவாமிஜி (விவேகானந்தர்) யாருக்கும் தெரியாத அவளது துயர சரித்திரத்தைக் கூறியதும் அவள் திகைத்துப் போனாள். அக்கணமே கண்ணீர் விட்டு அழுதாள். பிறகு "எவருமே அறிந்திராத செய்தி எல்லாம் இவர் எவ்வாறு அறிந்தார்?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

அப்போது சுவாமிஜி அவளுடைய துயரம் நீங்குவதற்கான வழிகளை எல்லாம் தமது தீங்குரலில் மென்மையாக எடுத்துக் கூறினார்.

எம்மா கால்விவின் உள்ளத்தில் தேங்கியிருந்த துன்பக் கசடுகளை எல்லாம் நீக்கிவிட்டு அமைதியை அங்கே குடி புகுத்தினார் சுவாமிஜி. அக்கணமே எம்மா கால்வி அவர்களின் மனதில் அதுவரையில் குடி கொண்டு இருந்த இருள் விலகியது.

தனக்குப் புது வாழ்வு தந்த சுவாமிஜியின் பக்தையானாள் எம்மா கால்வி.