அதிசய விளக்கால் அலாவுதீன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்
அலாவுதீனின் தாயார் தனது மகனின் விருப்பப் படி அந்த விளக்கை எடுத்துக் கொண்டு அதனை சுத்தப்படுத்தக் கிளம்பினாள். அந்த அழுக்கடைந்த விளக்கை நன்றாகத் தேய்த்துக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணிக் கொண்டவளாய் கொஞ்சம் சாம்பலை எடுத்துத் துணியில் வைத்துத் தேய்க்க ஆரம்பிக்கவும் அதில் இருந்து ஒரு பெரிய பூதம் ஒன்று கிளம்பியது. அந்த பூதத்தைக் கண்ட அலாவுதீனின் தாய் பயந்து அலறினாள். அவளது அலறலைக் கேட்ட அலாவுதீன் அவ்விடத்திற்கு ஓடி வந்தான். அந்த சமயத்தில் அலாவுதீனும் அந்த பூதத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.
அப்போது அந்தப் பூதம் பேசத் தொடங்கியது, "என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்? எது வேண்டும் என்றாலும் கேள், உடனே நான் கொண்டு வந்து தருகிறேன். இந்த விளக்கு யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்லும் வேலையைச் செய்வது தான் எனது கடமை. அதன் படி எதை வேண்டுமானாலும் கேளுங்கள், உடனே கொண்டு வந்து தருகிறேன்" என்றது அந்தப் பூதம்.
அப்போது தான் அலாவுதீனுக்கு அந்த விளக்கின் மகத்துவம் புரியத் தொடங்கியது. உடனே அலாவுதீன் தனது தாயாரிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்றுக் கொண்டான். ஏற்கனவே ஒரு பூதத்தை பார்த்த அனுபவம் அவனுக்கு இருந்ததால் வந்திருந்த அந்த பூதத்திடம் தைரியமாக, "எங்கள் இருவருக்கும் உண்பதற்கு ஏதாவது கொண்டு வா. வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். கொஞ்சம் புதுமையானதாகவும் இருக்க வேண்டும்" என்று கூறவும் இரண்டு பெரிய வட்டிளுடன் சிறிது நேரத்திற்குள் வந்தது அந்தப் பூதம். அந்த இரண்டு வட்டில்களிலும் விதவிதமான உணவுப் பொருட்கள் இருந்தன. அத்துடன் பன்னிரண்டு பொற் கிண்ணங்களை வேறு அந்தப் பூதம் கொண்டு வந்திருந்தது. அதிலும் கூட விதவிதமான தின்பண்டங்களும் இறைச்சி வறுவல், இறைச்சிக் குழம்பு வகைகள் என அனைத்தும் காணப்பட்டன. இரண்டு கூஜாக்களில் தூய்மையான முறையில் வடித்தெடுக்கப்பட்ட மதுவும் இரண்டு வெள்ளிக் கோப்பைகளும் இருந்தன. இவை அனைத்தையும் கண்ட அலாவுதீன் பேர் ஆனந்தம் கொண்டான். பிறகு பூதத்திற்கும் விடை கொடுத்து அனுப்பினான்.
பூதம் விதவிதமாகக் கொண்டு வந்த உணவு வகைகளைப் பார்த்த அலாவுதீனின் தாயார் உண்மையில் பிரமித்துப் போனார். அலாவுதீனும் அவனது தாயாரும் அது வரையிலும் சாப்பிடாத வகையில் தின்பண்டங்கள் அங்கு இருந்தன. தாயும் மகனும், பூதத்தால் கொண்டு வரப்பட்ட அந்த உணவுப் பொருட்களை நன்றாக விரும்பி உண்டனர். இவை அனைத்தும் இறைவனின் கருணை தான் என்று மீண்டும், மீண்டும் இறைவனுக்கு நன்றி கூறினார்கள் அவ்விருவரும்.
எனினும் என்ன தான் அந்தப் பூதத்தால் நன்மை ஏற்பட்டாலும் அலாவுதீனுடைய தாயாருக்கு அந்த பூதத்தின் மீது ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. எனினும் அலாவுதீன் அவளுக்குத் தைரியம் அளித்ததால் அவள் மேற்கொண்டு எதையும் பேசவில்லை. அத்துடன் அந்தப் பூதம் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன உணவு வகைகளை உண்ட பின்னரும் உணவுப் பொருட்கள் மீதம் இருந்தன. அப்படியாக மீதமுள்ள உணவுப் பொருட்களை அலாவுதீனின் தாயார் இரண்டு தினங்கள் வைத்துக் கொண்டாள். அலாவுதீனும் அவனது தாயாரும் வறுமையில் துன்பப்பட்டவர்கள் அல்லவா? அதனால் அவர்கள் பூதம் கொண்டு வந்த உணவு வகைகள் எதையுமே வீணாக்க விரும்பவில்லை.
பின்னர் மூன்று தினங்கள் கடந்த பிறகு அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின. என்ன செய்வது என்று தவித்தனர் தாயும், மகனும். அலாவுதீன் சொகுசுப் பேர்வழி. அவன் உழைக்கத் தயாராக இல்லை. விளக்கை உரசி பூதத்தை அழைத்தால் அது வேண்டியதைக் கொண்டு வந்து தரும் தான். ஆனால், ஏனோ இது அலாவுதீனுக்குத் தோன்றவில்லை. ஏன்? அவனது தாய்க்கும் கூடத் தான். இந்த நிலையில் அலாவுதீனுக்கு ஒரு யோசனை தோன்றியது அதன் படி உணவுப் பொருட்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொற் கிண்ணங்களை சந்தையில் விற்று வர நினைத்தான் அலாவுதீன். அதன் படி ஒரு நாளைக்கு ஒரு பொற் கிண்ணத்தை எடுத்து விற்பது என்ற முடிவுக்கு வந்தான் அவன். அதன் படியாக முதல் பொற் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்றான். சந்தையில் ஒரு அடகுக் கடை இருந்தது. அந்த வியாபாரியிடம் கொண்டு போய் அந்தப் பொற் கிண்ணத்தைக் கொடுத்தான். அதற்குத் தகுந்த விலையைத் தருமாறு கூறினான்.
அலாவுதீன் பேசுவதில் இருந்தே அவனுக்கு உலக அறிவு என்பது சிறிதும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான் அந்த அடக்குக் கடை வியாபாரி. அத்துடன் அந்த வியாபாரி பேராசை குணம் கொண்டு இருந்ததால், அவன் அடிமாட்டு விலைக்கு அந்தப் பொற் கிண்ணத்தை எடுத்துக் கொண்டான். ஐந்நூறு தினார்களுக்கு மேல் கொடுக்க வேண்டிய அந்தப் பொற் கிண்ணத்திற்கு வெறும் ஒரு தினார் மட்டுமே கொடுத்து அனுப்பினான். அலாவுதீனும் அந்த ஒரு தினாரை சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினான். உழைத்து வாங்கி இருந்தால் தானே அவனுக்கு அருமை தெரியும்? என்ன செய்ய பூதத்தின் உதவியால் இலவசமாகக் கிடைத்த பொற் கிண்ணம் தானே. அதற்கு எவ்வளவு விலை கொடுத்தால் தான் அலாவுதீனுக்கு என்ன? அவனைப் பொருத்தவரையில் அன்றைய பொழுதை அவன் கழித்தால் அதுவே போதும் என்று அந்த ஒரு தினார்களைக் கொண்டு அவனுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு சென்று தனது தாயிடம் கொடுத்தான். இப்படியே தினம் ஒரு பொற் கிண்ணத்தை அதே அடகுக் கடைக் காரனிடம் கொண்டு போய் கொடுத்து தினம் ஒவ்வொரு தினார்களைப் பெற்றுக் காலத்தை ஒட்டி வந்தான் அலாவுதீன். இறுதியில் அனைத்துப் பொற்க் கிண்ணங்களும் அலாவுதீனால் விற்கப்பட்டு விட்டது. எஞ்சி இருந்தது பரந்த பெரிய வெள்ளித் தட்டு தான்; அதையும் எடுத்துக் கொண்டு அந்தக் கொல்லைக்கார அடகு வியாபாரியிடம் தான் கொண்டு போய் கொடுத்தான் அலாவுதீன். அந்தப் பெரிய மிகக் கனமான வெள்ளித் தட்டுக்கள் இரண்டும் சுமார் இரண்டாயிரம் தினார்கள் போகும். ஆனால் அதற்கு அந்த பேராசை கொண்ட அடகு வியாபாரி வெறும் பத்து தினார்கள் மட்டுமே அலாவுதீனிடம் கொடுத்தான். அவனும் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் அதனை பெற்றுக் கொண்டு மறு பேச்சு பேசாமல் தனது தாயிடம் அந்தப் பத்து தினார்களைக் கொடுத்தான்.
அலாவுதீனின் தாயாருக்குக் கூட அந்த வெள்ளித் தட்டின் மகத்துவம் தெரியவில்லை. இப்படியாக அந்தப் பத்து தினார்களைக் கொண்டு கொஞ்ச நாள் குடும்பத்தை ஒட்டினர் அலாவுதீனும் அவனது தாயும்.
ஒரு கட்டத்தில் எதுவுமே மிச்சம் இல்லை என்கிற நிலையில், மீண்டும் அந்த அபூர்வ விளக்கின் நியாபகம் அலாவுதீனுக்கு வந்தது. அலாவுதீன் விளக்கை தேய்த்து உடனே பூதத்தை வர வழைத்தான். பூதமும் உடனுக்குடன் அலாவுதீனுக்கு முன்னாள் வந்து நின்றது. வழக்கம் போல," பிரபுவே! நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும், உத்தரவிடுங்கள்" என்று கேட்டுப் பணிந்து நின்றது.
"எனக்கு வேறு என்ன வேண்டும் வழக்கம் போல விதவிதமான உணவுப் பொருள்கள் தான். முன்னைப் போலவே கிண்ணங்களை வட்டிலில் வைத்து எடுத்து வர வேண்டும்; அத்துடன் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் மிகச் சுவையாக இருக்க வேண்டும்" என்று அலாவுதீன் பூதத்திற்கு ஆணை பிறப்பித்தான்.
"அப்படியே செய்கிறேன்" என்று கூறியபடி அந்தப் பூதம் நொடியில் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தது. அலாவுதீன் பூதத்திற்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தான். பிறகு வெளியில் சென்ற தனது தாய் வீடு திரும்பிய மாத்திரத்தில் அனைத்து உணவுப் பொருட்களையும் தனது தாயிடம் காட்டினான். அவனது தாயும் அதனைக் கண்டு இறைவனை வணங்கி பசி ஆறினாள்.
எனினும் அலாவுதீனின் தாய்க்கு மகன் இவ்வாறு சோம்பேறியாக சொந்த முயற்ச்சிகள் எதுவும் செய்யாமல் இருக்கிறானே என்ற கவலையும் மனதிற்குள் இருந்து வந்தது. அலாவுதீனுக்கு பல விதங்களில் அறிவுரை சொல்லிப் பார்த்தாள். ஆனால், அலாவுதீனோ உழைக்கத் தயாராக இல்லை.
இந்நிலையில் பூதம் மீண்டும் கொண்டு வந்து கொடுத்த அந்த உணவுப் பொருட்களை கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வைத்து உண்டனர் தாயும், மகனும். மூன்றாவது நாளில் இருந்து மீண்டும் அதே பஞ்சப் பாட்டு தான். வழக்கம் போல பொற் கிண்ணங்களை கொண்டு போய் விற்க முடிவு செய்தான் அலாவுதீன். அதன் படி மீண்டும் அந்த பேராசை கொண்ட அடகுக் கடை வியாபாரியிடம் செல்ல ஒரு பொற் கிண்ணத்தை மட்டும் அன்றைய தினம் பத்திரமாக எடுத்துத் தனது பையில் வைத்துக் கொண்டு மெல்ல நடையைக் கட்டினான் அவன். எனினும், இந்த முறை அவன் கொஞ்சம் தயங்கித் தயங்கி தான் சென்றான். காரணம்,' இப்படியே பொற் கிண்ணங்களைக் கொண்டு போய் கொடுத்தால், இது எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்து விடுவோமோ?' என்று அவன் நினைத்தான். அதனால் தான் அலாவுதீன் பயந்து, பயந்து அந்தக் கிண்ணத்தைப் பையில் வைத்து மறைத்தபடி சென்று கொண்டு இருந்தான்.
அலாவுதீன் இவ்விதம் அடிக்கடி சென்று வருவதைப் பார்த்த ஒரு வயதான நகைக் கடைக்காரர் அலாவுதீனைப் பார்த்துக் கை தட்டிக் கூப்பிட்டார். அவனும் தனது துணிப் பையில் வைக்கப்பட்டு இருந்த பொற் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதனை மறைத்தபடி அந்தப் பெரியவரிடம் சென்றான்.
அந்தப் பெரியவர் மிகவும் நல்லவர். அவர் நியாயமாக தனது தொழிலை இறைவனுக்கு பயந்து நடத்திக் கொண்டு இருப்பவர். அவர் அலாவுதீனின் மறைந்த அவனது தந்தையின் நண்பரும் கூட. ஒரு காலத்தில் அலாவுதீனின் குடும்பம் நன்றாக வாழ்ந்த சமயத்தில் வீட்டுக்குக் கூட வந்து இருந்தார் என்பதை எல்லாம் அலாவுதீன் நினைவு கூர்ந்த படி அவரது அருகில் சென்றான்.
அலாவுதீனைக் கண்ட அந்தப் பெரியவர் அவனிடம் மிகவும் அன்பாகப் பேசினார். பிறகு அவனிடம்," மகனே, நான் உனது அப்பாவின் நண்பர். இந்தப் பக்கமாக எதையோ பையில் போட்டு எடுத்துக் கொண்டு செல்வதும், வருவதுமாக இருக்கிறாயே. அப்படி எதைத் தான் நீ எடுத்துக் கொண்டு செல்கிறாய்? நான் அதனைத் தெரிந்து கொள்ளலாமா? ஒருவேளை நீ எதையாவது விற்கவோ வாங்கவோ வேண்டும் என்றால் என்னிடம் சொல். நான் உனக்கு உதவுகிறேன். காரணம் நீ சிறுவன், உலக அனுபவம் இல்லாதவன். உன்னைப் பிறர் ஏமாற்றக் கூடும் என்பதால் தான் நான் சொல்கிறேன். அத்துடன் என்னை நம்பு நான் உனது தந்தையின் நல்ல நண்பனும் கூட. நீ எனது மகனைப் போன்றவன். நான் உன்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன்" என்று அந்தப் பெரியவர் இவ்வளவு சொன்ன பிறகு தான் அலாவுதீன் அந்தப் பசும் பொன்னில் செய்யப்பட அந்தப் பொற்க கிண்ணத்தை எடுத்து அந்தப் பெரியவரிடம் காட்டினான்.
அதனை வாங்கிப் பார்த்த அந்தப் பெரியவர் உண்மையில் அதிர்ந்து போனார். மேலும் அலாவுதீனிடம் அவன் அதனை எடுத்துச் செல்லும் நோக்கத்தையும் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது தான் அந்தப் பெரியவருக்கு, அலாவுதீனை அந்த அடகுக் கடைக்காரன் ஏமாற்றிய விஷயம் புரிந்தது. இருந்தும் அதனைச் சொல்லி அலாவுதீனை அவர் சங்கடப் படுத்த விரும்பவில்லை. அவர் அலாவுதீனிடம்," மகனே இந்தப் பொற் கிண்ணத்தின் மதிப்பு என்ன தெரியுமா? இது குறைந்தது ஐநூறு தினார்கள் மதிப்பு கொண்டது. நான் அறநூறு தினார்களுக்கு உன்னிடம் இருந்து இதனை வாங்கிக் கொள்ளட்டுமா? உனக்குத் தரச் சம்மதம் தானே!" என்று கேட்டார்.
அலாவுதீனுக்கு பெரியவர் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் ஒரே மகிழ்ச்சி அந்தப் பொற் கிண்ணத்தை பெரியவரிடமே விற்று விட்டான். அத்துடன் அறநூறுதினார்களையும் அவன் பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று தனது அன்னையிடம் அதனைக் காட்டி மகிழ்ந்தான்.
அலாவுதீனின் வாழ்க்கையில் அப்போது தான் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. மேலும், முன்பு அவனது தாய் அவனுக்குக் கூறிய அறிவுரைகளின் பயனாக அலாவுதீன் நல்ல வகையில் சிந்திக்கத் தொடங்கினான். பொறுப்புடன் செயல்பட முடிவு செய்தான். அந்த அறநூறு தினார்களை வைத்துக் கொண்டு தைய்யல் கடையை ஆரம்பித்தான். குலத் தொழில் கற்காமலே வரும் என்பதைப் போல அலாவுதீன் குறுகிய நாட்களிலேயே அழகழகான வேலைப்பாட்டுடன் கூடிய ஆடைகளை மிகவும் எளிதாக செய்யக் கற்றுக் கொண்டான். அத்துடன் நல்லது நடக்கும் போது தொடர்ந்து நல்லவைகளே நடக்கும் என்பதற்கு ஏற்ப நல்ல நண்பர்கள் அவனுக்குக் கிடைத்தார்கள்.
அத்துடன் அவனுடைய பொற் கிண்ணத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்து அறுநூறு தினார்களைக் கொடுத்த அந்தப் பெரியவரைப் போல இன்னும் சில பெரியவர்களின் அன்பு அலாவுதீனுக்குக் கிடைத்தது. இதனால் அவனது நட்பு வட்டாரம் பெரிய மனிதர்களைக் கொண்டதாக அமைந்தது. அலாவுதீன் வாழ்க்கையில் அதன் பிறகு எல்லாமே நல்லதாகத் தான் நடந்து வந்தது.
