அகலிகைப் படலம் - 562
562.
‘அஞ்சன வண்ணத்தான்தன்
அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை
வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை
நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன
முனிவனும். கருத்துள் கொண்டான்.*
அஞ்சன வண்ணத்தான் தன் - மைபோல் கரியதிரு
மேனியுடைய இராமனது; அடித்துகள் - திருவடிப்பொடி;
கதுவாமுன்னம் - தன்மேல் படுவதற்கு முன்பே (பட்டதும்);
வஞ்சிபோல் இடையாள் - வஞ்சிக்கொடிபோலும் இடையுடைய
அகலிகை; முன்னை வண்ணத்தள் - பழைய வடிவத்தை; ஆகி
நின்றாள் - உடையவளாக எழுந்து நின்றாள்; நெஞ்சினால்
பிழைப்பு இலாளை - நெஞ்சாரக் குற்றம் செய்யாத இவளை; நீ
அழைத்திடுக என்ன - நீ அழைத்துச் சேர்த்துக் கொள்க என்று
விசுவாமித்திரன் கூற; கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும்
- தாமரை மலரில் தோன்றிய பிரமனைப் போன்ற கௌதம
முனிவனும்; கருத்துள் கொண்டான் - (அச் சொற்களை)
மனத்திலே ஏற்றுக்கொண்டான்.
நெஞ்சறியக் குற்றம் செய்யாத அகலிகையை ஏற்க வேண்டுமென்று
விசுவாமித்திரன் சொல்ல. அதை உணர்ந்த கௌதமனும் ஏற்கலானான்.
நெஞ்சில் பிழைப்பிலாள்: நெஞ்சினால் சிறிதும் குற்றம் செய்ய
எண்ணாதவள். 27
