அகலிகைப் படலம் - 557
அகலிகை வேண்டக் கௌதமன் சாபம்
நீங்கும் வகை கூறுதல்
557.
‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.
(அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி)
அழல் தரும் - (தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும்.
புன் சிரிப்பிலிருந்தும்) நெருப்பைச் சிதறறும்; கடவுள்
அன்னாய் - உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே!; பிழைத்தது
பொறுத்தல் - சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது; என்றும்
பெரியவர் கடனே - எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே
ஆகும்; என்பர் - என்று கூறுவர் (முன்னோர்); இதற்கு முடிவு -
(ஆதலால்) இச் சாபத்திற்கு ஒரு முடிவை; அருளுக என்ன -
அருள்வீராக என்று வேண்டி நிற்க; தழைத்து வண்டு - (அதற்கு
இரங்கிய அம் முனிவன்) செழிப்புடையதாய் வண்டுகள்; இமிரும்
தண்தார் - ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த; தசரத
ராமன் என்பான் - தசரத ராமன் என்பவனது; கழல் துகள்
கதுவ - திருவடித் தூள் உன்மேல் படியும் போது; இந்தக் கல்
உரு - இந்தக் கருங்கல் வடிவம்; தவிர்தி என்றான் - நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.
சிறியர் பெரியர்: சிறியவர் செய்த பிழை பெருங்கேடு தருவதாக
இருப்பினும் பெரியவர் அதனைப் பொறுக்க வேண்டும்; அதுவே
அவர்களது உயர்வான கடமையாகும். அழல் தரும் கடவுள்:
நெருப்புப் போன்ற செந்நிறம் பொருந்திய சிவன்: அக்கினி
தேவனைப் போன்ற தூய்மையுடையவன் - என்று சொல்லலாம். 23
