அகலிகைப் படலம் - 553
இந்திரன் அகலிகையை அணைந்திருத்தலும்
கௌதம முனிவர் வருதலும்
553.
‘புக்கு அவளோடும். காமப்
புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்லோடும்.
உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்.
‘தக்கது அன்று’ என்ன ஓராள்;
தாழ்ந்தனள் இருப்ப. தாழா
முக்கணான் அனைய ஆற்றல்
முனிவனும். முடுகி வந்தான்.
புக்கு - (இவ்வாறு இந்திரன் முனிவனது உருவம் (கொண்டு)
சென்று; அவளோடும் காமம் - அந்த அகலிகையோடு புதுக் கலப்பில்
அமைந்த காமமாகிய; புதுமணம் மதுவில் தேறல் - மணமுள்ள
மதுவின் தெளிவை; ஒக்க உண்டு இருத்தலோடும் - (இருவரும்)
சமமாக அனுபவித்து கொண்டிருக்கும்போது; உணர்ந்தனள் -
(தன்னோடு மகிழ்பவன் இந்திரனே என்ற) தவற்றை அறிந்தாள்;
உணர்ந்த பின்னும் - (அவ்வாறு) அறிந்த பின்பும்; தக்கது அன்று
என்ன - (இத்தீய செயல் தனக்குத்) தகுதியானதாக இல்லை என்று;
ஓராள் - சிந்தனை செயலுக்குத் தானும் மனம் பொருந்தியவளாக
இருக்க (அச் சமயத்தில்); தாழா முக்கணான் அனைய - (எந்த
வகையிலும்) குறைவு இல்லாத முக்கண்ணனாகிய சிவனை ஒத்துள்ள;
ஆற்றல் முனிவனும் - வல்லமை நிரம்பிய அம்முனிவனும்; முடுகி
வந்தான் - (தாழாமல்) விரைவாக மீண்டு தன் ஆச்சிரமம் வந்தான்.
அகலிகையும் இந்திரனும்: கௌதமன் உருவில் வந்த இந்திரனைத்
தன் கணவன் என்றே நினைந்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்
கையில் இது புது மண மது என்பதை உணர்ந்தாள்; அவ்வாறு
உணர்ந்தும் அவள் இது தகுதியன்று என ஆராய்ந்து விலக்கக் கூடிய
அறிவுத் திறனைப் பெறாமல் இழிந்த அச்செயலுக்கு உடந்தையாக
இருந்தாள். அவ்வேளையில் முனிவன் விரைந்து வந்தான். ஏனெனில்.
தான் எழுந்து புறப்பட்டுப் போனது நள்ளிரவு என்றும். அவ்வாறு
தான் செல்வதற்கு இந்திரன் வஞ்சனை செய்தான் என்றும். முனிவன்
தன் ஞான உணர்வால் அறிந்ததே ஆகும். காமப் புதுமண மதுவின்
தேறல்: பிறன் மனைவியை விரும்புதலும். கள்ளும். ஒழுக்கத்தையும்
நல்லுணர்வையும் அழிப்பதில் ஒன்றோடு ஒன்று ஒத்துள்ளன.
அதனால் இவ்வாறு கம்பர் உருவகப்படுத்தினார். முக்கணான் அனைய
ஆற்றல் முனிவன்: அழிக்கும் தொழிலை நிறைவேற்ற நெற்றிக்
கண்ணைத் திறந்துள்ள உருத்திர மூர்த்தியைப் போலச்
சினம்கொண்டவனானான் கௌதமன். 19
