அகலிகைப் படலம் - 552
இந்திரன் கௌதமன் உருவொடு புகுதல்
552.
‘தையலான் நயன வேலும்.
மன்மதன் சரமும். பாய.
உய்யலாம் உறுதி நாடி
உழல்பவன். ஒரு நாள் உற்ற
மையலாம் அறிவு நீங்கி.
மா முனிக்கு அற்றம் செய்து.
பொய் இலா உள்ளத்தான்தன்
உருவமே கொண்டு புக்கான்.
தையலான் நயன வேலும் - அகலிகையின் கண்களாகிய
வேல்களும்; மன்மதன் சரமும் பாய - மன்மதனுடைய மலர்
அம்புகளும் தன்மேல் பாய்வதனால்; உய்யல் ஆம் - (மிக வருந்தி)
(அவளைச் சேர்ந்து அக்காம நோயிலிருந்து நீங்கிப்) பிழைக்கக் கூடிய;
உறுதி நாடி-ஓர் உபாயத்தைத்தேடி; உழல்பவன்-அலைபவனான அந்த
இந்திரன்; ஒருநாள் உற்ற மையலால் - ஒரு தினத்தில் அளவற்ற காம
மயக்கத்தால்; அறிவு நீங்கி - நல்லறிவுகெட்டு; மாமுனிக்கு -
பெருமையுள்ள அக்கௌதம முனிவனுக்கு; அற்றம் செய்து -
பிரியுமாறு உண்டாக்கி; பொய்யிலா உள்ளத்தான்தன் - பொய்யில்லாத
மனத்தையுடைய அம்முனிவனது; உருவமே கொண்டு - உருவத்தையே
தான் எடுத்துக் கொண்டு; புக்கான் - அவனது ஆச்சிரமத்துள்ளே
புகுந்தான்.
இந்திரன் நிலை: அகலிகையின் கண்களாகிய வேலும். மன்மதனின்
காம பாணங்களும் ஒரே சமயத்தில் தாக்க. அக் காம மயக்கத்தால்
அறிவை இழந்தான் இந்திரன். காமத்தால் வருந்திய அவன்
அதிலிருந்து பிழைக்க. ஒரே வழி ‘கௌதம முனிவன் உருவத்திலே
சென்று அகலிகையைச் சேர்வதே’ என உறுதி கொண்டான். அதன்
பொருட்டு அம்முனிவனை அப்பால் போகுமாறு தந்திரம் செய்கிறான்.
அம் முனிவனது வடிவிலே ஆச்சிரமத்திற்குள் நுழைகிறான். முனிக்கு
அற்றம் செய்தல்: பொழுது புலர்வதன் முன்னே கோழி கூவுமாறு
இந்திரன் செய்தான். கௌதம முனிவனும் காலைக் கடன் கழித்தற்
பொருட்டு வெளிப்புறம் சென்றான். 18
