அகலிகைப் படலம் - 550

bookmark

அகலிகையின் சாப வரலாற்றை இராமன் உசாவுதல்

550.

பொன்னை ஏர் சடையான் கூறக்
   கேட்டலும். பூமி கேள்வன்.
‘என்னையே! என்னையே! இவ்
   உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ!
   நடு ஒன்று முடிந்தது உண்டோ?
அன்னையே அனையாட்கு இவ்வாறு
   அடுத்தவாறு அருளுக!’ என்றான்.
 
பொன்னை   ஏர் சடையான்  -   பொன்னைப்  போன்ற   சடை
முடியுடைய   கோசிக   முனிவன்;   கூறக்  கேட்டலும்  -  இவ்வாறு
சொல்லியதைக்   கேட்டவுடனே;  பூமி  கேள்வன்  -  பூமி  தேவிக்கு
நாயகனான  இராமன்;   இவ்  உலகு  இயல்  -  (வியப்போடு  அம்
முனிவனை  நோக்கி)   இந்த உலகத்தின் இயல்பு; இருந்த வண்ணம் -
இருந்த   விதம்;   என்னையே   என்னையே   -   எத்தன்மையது!
எத்தன்மையது!   முடிந்தது   -   இவ்வாறு   நிகழ்ந்தது;   முன்னை
ஊழ்வினையினாலோ  - முற்பிறப்பில் செய்த வினையின் பயனாலோ?;
நடு  ஒன்று  உண்டோ  - (அல்லது இதற்குக் காரணமாக) இடையிலே
நேர்ந்த  ஒரு  செயல் உண்டோ?;  அன்னையே அனையாட்கு - தாய்
போன்ற  அகலிகைக்கு;  இவ்வாறு  அடுத்தவாறு  - இப்படி ஏற்பட்ட
காரணத்தை;  அருளுக  - கூறி அருளுக; என்றான் . என்று இராமன்
வேண்டினான்.  

உலகத்தாயும்  ஊழும்:  அகலிகை தாய்போலக் குற்றம் அற்றவளாக
விளங்குகின்றாள். இத்தகைய  தன்மையுடையவளுக்கும் கல்லாக மாறும்
நிலை  ஏற்படுமா?  அத்தகைய   பரிதாபநிலை ஏற்படுமென்றால் இந்த
உலக  இயல்பை  என்னவென்று  சொல்வது? இவ்வாறு இவள் உருவம்
மாறுபட்டதற்குக்  காரணம்   என்னவாக  இருக்க  முடியும்?  முந்தின
பிறப்பில்  அமைந்த விதியா?  அதுவல்லாமல் இப் பிறப்பில் ஏதேனும்
நேர்ந்தது    உண்டோ?    இக்    காரணத்தை   அறியுமாறு   கூற
வேண்டுமென்று விசுவாமித்திரனை  இராமன் கேட்கிறான். என்னையே!
என்னையே! வியப்பைக் குறிக்கும் அடுக்கு.                     16