அகலிகைப் படலம் - 549

bookmark

அகலிகையை முனிவன் இராமனுக்கு அறிவித்தல்

அகலிகை வரலாற்றை இராமன் முனிவனிடம் கேட்டல்
 
அறுசீர் ஆசிரிய விருத்தம்
 
549.

‘மாஇரு விசும்பின் கங்கை
   மண்மிசைக் கொணர்ந்தோன் மைந்த!
மேயின உவகையோடு
   மின் என ஒதுங்கி நின்றாள்.
தீவினை நயந்து செய்த
   தேவர்கோன்தனக்குச் செங் கண்
ஆயிரம் அளித்தோன். பன்னி;
   அகலிகை ஆகும்’ என்றான்.
 
மா  இரு விசும்பின்  -  மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து; கங்கை
மண்மிசை -  கங்கா  நதியை இப்பூமிக்கு; கொணர்ந்தோன் மைந்த -
கொண்டு   வந்த   பகீரதன்  என்னும்  பேரரசன்  (குலத்தில்  பிறந்த)
மைந்தனே!;  மேயின  உவகையோடு  -  பொருந்தின மகிழ்ச்சியோடு;
மின்னென  - மின்னல்கொடிபோல; ஒதுங்கி நின்றாள் - ஒருபக்கத்தே
(நாணத்தால்)    ஒதுங்கி  நின்ற  இவள்;  தீவினை  -  (மற்றொருவன்
மனைவியைச்   சேர்தலாகிய)  கொடுந்தொழிலை;  நயந்து  செய்த  -
விரும்பிச்  செய்த;  தேவர்கோன்  தனக்கு - தேவர்கள் தலைவனான
இந்திரனுக்கு;  செங்கண்  ஆயிரம்  -  சிவந்த  ஆயிரம்  கண்களை;
அளித்தோன்   பன்னி   -   கொடுத்த   கௌதம   முனிவனுடைய
பத்தினியான; அகலிகை ஆகும் - அகலிகை ஆவாள் என்றான்.  

அகலிகை:   தன்   சிலை  வடிவம்  நீங்கி  பெண்வடிவு   பெற்று
மகிழ்ச்சியோடு  நாணத்தால் ஒதுங்கி நிற்பவளே. கௌதம  முனிவனின்
மனைவியான    அகலிகையாவாள்   இந்திரன்   ஆயிரம்    கண்கள்
பெற்றமை:    இந்திரன்    மாற்றான்   மனைவியைச்    சேர்தலாகிய
கொடுஞ்செயலை  விரும்பிச்  செய்ய  அதன்  பொருட்டுக்   கௌதம
முனிவர்   அவனுக்குச்  சாபம்  தந்தார்.   பின்னர்  அம்  முனிவரை
வேண்டக் குறிகள் ஆயிரம் கண்களாகுமாறு அருள் பெற்றான்.      15