அகலிகைப் படலம் - 548
அகலிகை முன்னைய வடிவம் பெறுதல்
இராமனது திருவடி பட அகலிகை முன்னை வடிவம் பெறல்.
548.
கண்ட கல்மிசைக் காகுத்தன்
கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற
வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன்
கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
மா முனி பணிப்பான்;
கண்ட கல்மிசை - (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே; காகுத்தன்
கழல் துகள் - இராமனது திருவடித் துகள்; கதுவ - பட்டதால்; உண்ட
பேதைமை - (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய; மயக்கு
அற - இருள் மயக்கம் நீங்குமாறு; மெய் உணர்பவன் - உண்மையான
தத்துவ ஞானம் பெற்றவன்; வேறுபட்டு - தனது அஞ்ஞானமாகிய
அறியாமை நிலை மாறி; உருவம் கொண்டு - உண்மை வடிவம் (புது
ஞானஸ்வரூபி) அடைந்து; கழல் கூடியது ஒப்ப - பரமனது
திருவடிகளை அடைவதைப் போல; பண்டை வண்ணமாய் - (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு; நி்ன்றனள் - எழுந்து நின்றனள்;
மா முனி பணிப்பான் - (அதனைக் கண்ட) விசுவாமித்திரன்
இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.
அகலிகை நல்லுருவம் பெறல்: திருமாலின்திருவடி சேர்பவர் தம்
கருமம் ஒழிந்து இப் புன்மையான உடம்பை ஒழித்து ஒளிமிக்க
உருவத்தை அடைவதுபோல. இராமனது திருவடிப்பொடி சேர்ந்த
அளவில் இவளது சாபம் நீங்கியது. தனது கல்லுருவம் மாறி
முன்னைய நல்லுருவத்தைப் பெற்றாள். பேதைமை மயக்கு: அவிச்சை
(அஞ்ஞான) யின் தொடர்ச்சி. மெய்யுணர்தல்: பிறப்பு. இறப்பு.
வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்கள் நீங்கி
உண்மையாக அறிதல். முக்தி பெறுவார்நிலை: நிலம் முதலான
ஐம்பூதங்களாலான இந்தக் கரும வினையுடலை நீக்கி. ஒளிமிக்க
தெய்வீக உடம்பைப் பெறுதல் வான்மீகம் - மிதிலைக்கு அருகில்
செல்லும் போது ஆச்சிரமம் ஒன்று பாழடைந்து கிடப்பது குறித்து
இராமன் விசுவாமித்திரனைக் கேட்டான். அப்பொழுது அம் முனிவன்
அகலிகையின் வரலாறு கூறி. அந்த ஆச்சிரமம் செல்லுமாறு
வேண்டுகிறான். இராமனும் சாப விமோசனம் உண்டாகுமென்று கருதி
அங்கே சென்றான். 14
