அகலிகைப் படலம் - 545
நீரோடைகளின் சிறப்பு
545.
இழைக்கும் நுண் இடை இடைதர.
முகடு உயர் கொங்கை.
மழைக் கண். மங்கையர் அரங்கினில்.
வயிரியர் முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய
மோட்டு இள மூரி
உழக்க. வாளைகள் பாளையில்
குதிப்பன - ஓடை.
ஓடை - (அந்த நாட்டிலுள்ள) நீரோடைகள்; இழைக்கும் நுண்
இடை - (பஞ்சின்) நூலைக் காட்டிலும் நுட்பமான இடையானது;
இடைதர - (சுமையைப் பொறுக்கமாட்டாமல் மெலிந்து)
பின்வாங்குமாறு; முகடு உயர் கொங்கை - மலைச்சிகரம்போல்
ஓங்கியுள்ள தனங்களையும்; மழைக்கண் - மழைத்துளிபோல் குளிர்ந்த
கண்பார்வையையும் உடைய; மங்கையர் - இளம் பெண்கள்;
அரங்கினில் - (நடனம் ஆடுகின்ற) நாடக சாலையிலே; வயிரியர்
முழவம் முழக்கும் - தம்மோடு இருக்கும் பாடகர்கள் மத்தளத்தை
முழக்குவதனால் உண்டாகிய; இன் இசை வெருவிய - இனிமையான
ஓசையைக் கேட்டு அஞ்சி ஓடுகிற; மோடு இள மூரி - பெரிய
இளமையான எருமைகள்; உழக்க - (படிந்து) கலக்குவதால்; வாளைகள்
பாளையில் குதிப்பன - (அதற்கு அஞ்சி) வாளை மீன்கள்
பக்கங்களிலுள்ள (தென்னை. கமுகுகளின்) பாளைகளில் மேல் தாவிப்
பாயப் பெறுவன.
நடன அரங்கில் மங்கையர் ஆடும்போது வயிரியர் மத்தளம்
கொட்டு்கிறார்கள்; அதைக் கேட்டு அஞ்சிய எருமைகள் ஓடிச்சென்று
ஓடைகளில் பாய்ந்து நீரைக் கலக்குகின்றன. அதனால் அங்குள்ள
வாளைகள் பாளைகளில் பாய்கின்றன. வயிரியர்: மத்தளம்
கொட்டுபவர். 11
