அகலிகைப் படலம் - 480

bookmark

மூவரும் ஒரு சோலையில் தங்குதல்

480.

கறங்கு தண் புனல். கடி நெடுந்
   தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள்
   இதழ்க் கதவு அடைப்ப.
பிறங்கு தாமரைவனம் விட்டு.
   பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச்
   சோலை புக்கு. உறைந்தார்.
 
கறங்கு  தண்புனல்- ஒலிக்கின்ற குளிர்ந்த நீர்நிலைகளிலுள்ள;  கடி
நெடுந்தாள்  உடை  -  மணத்தையும்  நீண்ட தண்டினையும்  உடைய;
நாள் கமலத்து மலர் - அன்று பூத்த தாமரையின் மலர்களாகிய; அறம்
கொள்  கோயில்கள்  -  (விருந்தாக  வருகிற வண்டுகளின் தாகம் தீர
அவற்றிற்குத்    தேனைத்   தருதலாகிய)  தருமத்தைக்  கொண்டுள்ள;
சிறந்த   மாளிகைகள்;  இதழ்க்   கதவு   அடைப்ப  -  தம்முடைய
இதழ்களாகிய   வாயில்   கதவுகளை மூடிவிட்டதனால் (அங்கே  சென்று
மதுவைக் குடித்து மயங்கித் தூங்க முடியாமல்); பிறங்கு தாமரை வனம்
விட்டு  -   கண்களுக்குக்  கவர்ச்சியாக  விளங்குகின்ற  அத்தாமரைக்
காட்டை   நீங்கி;   களிவண்டு  -  மதுவால்  களிப்படையும்   ஆண்
வண்டுகள்; பெடையொடும்  உறங்குகின்றது  - பெண் வண்டுகளுடன்
சென்று உறங்குவதற்கு  இடமான;  ஓர்  நறுமலர்ச் சோலை - மணம்
பரப்பும்  பூக்களையுடைய ஒரு  சோலைக்குள்ளே;  புக்கு உறைந்தார்-
புகுந்து (அன்றிரவு அம் மூவரும்) தங்கினார்கள்.  

வண்டும்   சோலையும்:  குவிந்த  தாமரைப்  பூக்களின்  தேனைப்
பெறாமையால். வண்டுகள் அம் மலர்களை விட்டுச்   சோலைகளிலுள்ள
பல  வகையான  மலர்களின்  தேனைக்  குடித்து   மயங்கின.  இரக்க
வருகின்றவர்கள்  ஒன்றும் கொடுக்காமல்  கொடையாளிகளின் வீட்டின்
கதவம் அடைத்திருப்பதனால் வேறு இடம் சென்று அவர்களிடம்  தாம் 
விரும்பியதைப்  பெற்று  மகிழ்வார்கள். இந்த  உலக இயல்பை அறிந்து
இவ்வாறு கம்பர் வருணித்தார்.  

வான்மிகம்:  முனிவர்  முதலோர் சோணை நதியைக் கடந்தபின் பல
வனங்களையும்    பார்த்தவாறு    கங்கையை    அடைந்தனர்.   அக்
கங்கையின்  வரலாற்றைக்   கேட்டபின்   அதன் வடகரையைக் கடந்து
அங்குள்ள  விசாலை என்னும்  நகரத்தைச்  சேர்ந்தனர். நயம்: தாமரை
மலரில்    தேனைப்    பெறாத     வண்டுகள்   அவற்றை   விட்டுச்
சோலையிலுள்ள  பலவகை  மலர்களை   நாடும்.   தன்  மனைவியிடம்
இன்பம்  பெறாமல்  அவளைவிட்டு  அகலிகையைத்  தேடிச் சென்றான்
இந்திரன் என்பது இங்கு அறியத் தக்கது.                        3