விராதன் வதைப் படலம்

bookmark

ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
 

விராதன் வதைப் படலம்

(விராதன் எனும் அரக்கனை இராமபிரான் வதைத்தருளியதைக் கூறும் படலம். இவன் தும்புரு எனும் கந்தருவன். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் காட்டில் திரிந்தவன். விராதன் மிகுதியும் அபராதம் செய்பவன். சீதையைத் தூக்கிச் சென்ற இவன் தன்னை எதிர்த்த இராமலக்குவரைக் கண்டு சீதையை விட்டு விட்டு அவர்களைத் தூக்கிச் சென்றான். அவர்கள் அவன் தோள்களை வெட்டிப்பள்ளத்தில் புதைத்தருளினர். பிறகு விராதன் இராமபிரானால் கொல்லப்பட்டு சாபவிமோசனம் பெறுகிறான்.)

சித்திரக் கூட மலையை விட்டுத் தம்பியுடனும், மனைவியுடனும் புறப்பட்டுச் சென்ற இராமபிரான், அத்திரிமுனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அந்தப் பெரும் முனிவரைக் கண்ட அம்மூவரும் அவரை வணங்கி நின்றார்கள். அவர்களது வணக்கத்தை ஏற்ற அந்த முனிவர். அவர்களின் வருகைக்கு மகிழ்ந்தார். பின்னர், அம்முனிவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அம்மூவரும் அன்று இரவு அங்குப் பொழுதைக் கழித்தனர். அப்போது அத்திரி முனிவரின் மனைவி சீதையின் கற்பின் பெருமையை உணர்ந்து அவளுக்குச் சிறந்த ஆடை, ஆபரணங்களைத் தந்தாள். அதனை களிப்புடன் சீதை பெற்றுக் கொண்டாள். மறுநாள், அவர்கள் மூவரும் அத்திரி முனிவரிடமும், அவர் மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு தண்டகாரணியம் வந்து சேர்ந்தார்கள்.

அப்போது...

பதினாறு மதயானைகளையும், முப்பத்திரண்டு சிங்கங்களையும் , பதினாறு யாளிகளையும் தான் உண்பதற்காக தனது பெரிய இரும்புச் சூலத்தில் கோத்துக் கையில் பிடித்துக் கொண்டு விராதன் என்ற கொடிய அரக்கன் வந்து கொண்டு இருந்தான். அவனுடைய தலை முடிகள் செம்மட்டை நிறத்தில் சுருள் சுருளாக இருந்தது. விஷமலையே வானத்தில் நடந்து வருவது போல, மலைகள் பொடிபட வேகமாக அவன் வந்து கொண்டிருந்தான். அவனது தோள்களில் மலைப் பாம்புகளால் புலிகளைக் கட்டித் தொடுக்கப்பட்ட பல மாலைகள் கிடந்தன. தனது கை விரல்களின் சந்துகளுக்கு இடை, இடையே யானைகளை வைத்துக் கொண்டு , அந்த யானைகளை மற்றொரு கைவிரலால் எடுத்து வாயிலிட்டு மென்று கொண்டே, அப்பொழுதும் பசியடங்காமல் தவித்தபடி விராதன் விரைவாக வந்து கொண்டிருந்தான்.

அவன், தான் கொன்று தின்ற புலிகளின் தோலை மேலாடையாக உடுத்தி இருந்தான். அதேபோல தான் கொன்ற யானைகளின் தோலை இடுப்பில் அணிந்து இருந்தான். மலைப்பாம்புகளைக் கச்சையாகக் கட்டி இருந்தான். அவன் கால்கள் கைலாய மலைகளையும், மேரு மலைகளையும் போலக் காணப்பட்டது. அவனது வேலை யாதெனில் அந்தக் காட்டிலேயே அலைந்து திரிவதும், கண்ணில் பட்ட அனைத்து உயிரினங்களையும் உண்டு களிப்பதுமே ஆகும். விராதன் பிரம்ம தேவனை தனது தவத்தினால் மகிழ்வித்தக் காரணத்தால், அவர் அவனுக்கு லட்சத்திருபத்தையாயிரம் யானைகளின் பலத்தை வரமாகக் கொடுத்து இருந்தார்.

அப்படி பட்ட விராதன் வேகமாக வந்து கொண்டு இருந்தவன் திடீர் என்று, ராமர் தனது மனைவி மற்றும் தம்பியுடன் சென்று கொண்டு இருந்த வழியில் குறுக்கிட்டான். அவனைக் கண்ட அவர்கள், அவனைப் பற்றி ஒன்றும் எண்ணாமல் தங்கள் வழியில் செல்லத் தொடங்கினார்கள். தன்னை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டு செல்வதைக் கண்ட விராதன் மிகவும் கோபம் கொண்டான். உடனே அவர்களை நோக்கி, விரைந்து வந்தவன், சீதையை அபகரித்துக் கொண்டு வான் வழியாக செல்லத் தொடங்கினான்.

இதனால் ஆத்திரம் அடைந்த இராம லக்ஷ்மணர்கள் போருக்குத் தங்களைத் தயார் படுத்தியவர்களாக, விராதனுக்கு அறைகூவல் விடுத்தபடி அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அது கண்ட விராதன், மனிதர்கள் தன்னை என்ன செய்து விட முடியும் என்று சிரித்தான். அந்த சிரிப்பு இடி இடித்ததைப் போல இருந்தது. பின்னர்,தன்னை தொடர்ந்து வந்த ராமனையும், லக்ஷ்மணனையும் கண்ட விராதன்," அடே மூடர்களே, நீங்கள் ஏன் என்னைப் பின்தொடர்ந்து வருகின்றீர்கள்? சாகவேண்டும் என்று ஆசை ஏதேனும் உங்களுக்கு உள்ளதா? என்னை யாரும் அவ்வளவு சுலபமாகக் கொன்று விட முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?மூன்று உலகங்களைச் சேர்ந்த அனைவரும், பலதரப்பட்ட ஆயுதங்களுடன் வந்து என்னுடன் சண்டையிட்டால் கூட நான் அவர்களை எந்தவித ஆயுதங்களும் இல்லாமலே கணப் பொழுதில் வென்று விடுவேன். போகட்டும் துறவிகள் போலக் காட்சி தரும் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்தேன். இனி, இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாக விட்டு விட்டு, தாபசவேடத்தைப் பூண்ட நீங்கள் இனிது செல்லுங்கள்!" என்று அவர்களைப் பார்த்துக் கூறினான்.

இது கேட்ட இராமபிரான், " இந்த அரக்கன் நமது போர்த் திறமையை அறியாமல் பேசுகிறான்" என்று அவனது அறியாமையை நினைத்து மெல்ல சிரித்துக் கொண்டார். பிறகு, அவனுக்குத் தனது போர் திறமையைக் காட்ட தனது வில்லில் நாணொலியை உண்டாக்கினார். ஸ்ரீ ராமர் எழுப்பிய அந்த நாணொலியானது மூவுலகத்திலும் இடியை உண்டாக்கியது போல இருந்தது. பிரளயம் தான் வந்து விட்டது போல என்று நினைத்து அந்த வனத்தில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் தப்பித்துக் கொள்ள இங்கும், அங்குமாக சிதறி ஓடியது. அந்தப் பேரொலியைக் கேட்ட விராதன்," சரியான எதிரியைத் தான் சந்தித்து உள்ளோம்" என்று நினைத்து சீதையைக் கீழே விட்டு விட்டு.ஸ்ரீ ராமபிரானுடன் போர் செய்யத் தொடங்கினான்.

கையில் இருந்த மலை போன்ற சூலாயுதத்தை முதலில் வீசி எறிந்தான். ராமன் பிரயோகித்த அம்பு அந்த சூலாயுதத்தை பொடிப் பொடியாக ஆக்கி, நக்ஷத்திரங்களைப் போல பூமியில் சிதறச் செய்தது. அது கண்டு இன்னும் ஆத்திரம் அடைந்த விராதன், மலைகளை பெயர்த்து எறிந்தான், ஸ்ரீ ராமனின் கணைகள் பட்டு அவைகளும் பொடிப் பொடியாக ஆனது. பிறகு மரங்களைப் பெயர்த்து ஏறிய, எல்லாவற்றையும் இராமபிரானின் ஆற்றல் மிக்க அம்புகள் அழித்தன. பிறகு, ராமபிரானின் அம்புகள் அனைத்தும் விராதனின் உடலை காயப்படுத்தி பூமியில் அவனுடைய ரத்தத்தை ஆறு போலப் பெருக்கெடுத்து ஓடும் படிச் செய்தது.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விராதன் ராம, லக்ஷ்மணர்களை தூக்கிய படி வானத்தில் பறந்தான். தரையில் நின்று இருந்த சீதை, தன் கணவரை ஆகாயமார்க்கமாக அரக்கன் தூக்கிச் செல்வதைக் கண்டாள். அது கண்ட அவளுடைய பெண் மனம் மிகவும் கலங்கிற்று, அவள் அந்த அரக்கன் பின்னால் முயன்ற வரை துரத்திக் கொண்டு போனாள்," ஏ, அரக்கனே, தர்மத்தின் ஸ்வரூபமான ஸ்ரீ ராமரை விட்டு விடு, வேண்டும் என்றால் என்னை உன் பசிக்கு உணவாக்கிக் கொள்" என்று கதறியபடி அந்த அரக்கனை தொடர்ந்து சென்றவள், ஒரு கட்டத்தில் மயங்கிக் கீழே விழுந்து விட்டாள்.

விராதனின் கைகளுக்குள் அடங்கி இருந்த லக்ஷ்மணன் சீதா தேவியின் இந்த நிலையைக் கண்டான். அது கண்டு வருந்தியவன், ஸ்ரீ ராமரிடம்," அண்ணா ! இது உங்களுக்கே நியாயமா, சீதா தேவியை இப்படித் துன்புறுத்தலாமா? போதும் அண்ணா உங்கள் விளையாட்டு. விரதானை வதம் செய்து விடலாம் வாருங்கள் " என்றான்.

அது கேட்ட இராமபிரான்," லக்ஷ்மணனிடம், நாம் போக வேண்டிய வழியாகவே இந்த விராதன் சென்று கொண்டிருக்கின்றான். அதனால் நடந்து செல்லும் வருத்தம் இன்றி விரைவாக இவன் மேல் ஏறிச் செல்லுதல் நல்லதென்று எண்ணி இருந்தேன். இவனைக் கொன்று வீழ்த்துவது நமக்குப் பெரிய காரியமில்லை !" என்று பதிலுக்கு கேலிச் சிரிப்புடன் சொன்னார். அப்படிச் சொன்னவர் தனது கால் கொண்டு விராதனை துணிச்சலுடன் எட்டி உதைக்க, அவன் தரையில் விழுந்தான்.

விராதன் கீழே விழுந்த மாத்திரத்தில் ராம, லக்ஷ்மணர்கள் அவனது இரு கைகளையும் வெட்டி எறிந்தனர். சினம் கொண்ட விரதான் கால்களைக் கொண்டு அவர்களை மிதித்துக் கொல்ல எண்ணினான். மீண்டும், இராம,லக்ஷ்மணர்கள் திவ்ய அஸ்த்திரங்களை அரக்கன் விராதன் மீது பிரயோகித்தனர். ஆனால், அந்த அஸ்த்திரங்கள் அனைத்தும் விராதனை படுகாயம் அடையச் செய்ததே தவிர, அவனை வதம் செய்ய வில்லை. ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம் , " இனி இந்த விராதனை அவன் பெற்ற வரங்களின் காரணமாக அஸ்திரங்கள் கொண்டு கொல்ல இயலாது, அதனால் இவனைப் பூமியில் புதைத்துக் கொல்ல வேண்டியது தான்" என்றார்.

அக்கணமே லக்ஷ்மணன் அண்ணனின் ஆணைப்படி நொடிப் பொழுதில் தனது திவ்யாஸ்த்திரங்களைக் கொண்டே பெரிய பள்ளம் ஒன்றை பூமியில் தோண்டி முடித்தான். ஸ்ரீ ராமர் விராதனை தனது காலால் எட்டி உதைத்து அந்தப் பள்ளத்தில் தள்ளிப் புதைத்தார். இதனால் விராதன் பூமியிலேயே புதைந்து மாண்டான்.

அந்தக் கணத்தில்...

விராதன், முன்னே குபேரனால் கொடுக்கப்பட்ட சாபத்தால் வந்த வலிய அரக்கச் சரீரம் நீங்கி, முற்பிறவி உணர்ச்சியோடு முன்னைய யக்ஷ உருவத்துடன் பிரமதேவன் போல் மண்ணுக்கடியில் இருந்து வெளியே வந்தான். பழைய மன அடக்கமும் அவனிடம் வந்து சேர்ந்தது. அதனால் தத்துவ ஞானம் பெற்று, ஸ்ரீ ராமபிரானை உண்மையாக அறிந்து கொண்டான். அப்பொழுது அவன் நெஞ்சம் பக்திப் பரவசம் கொண்டது. இரு கைகளையும் குவித்து இராமபிரானை வணங்கினான்.

" எம்பெருமானே! ஆதி முதல்வனே ! ஊழ்வினைகளை அழிப்பவனே! எல்லா வேதங்களாலும் வணங்கப்படுபவனே! மாதவா! மதுசூதனா ! ஜனார்த்தனா. பிதாவான பிரம்மதேவனுக்கே நீர் பிதாவானவர். அப்படியிருக்க, நீர் ஏன் வீணாக வஞ்சகர்களைப் போல உம்முடைய பழைய திருமேனியை ஒளிக்கின்றீர்? அப்படி ஒளிக்காமல் உமது பழைய சொரூபம் வெளிப்பட்டு நீர் நிற்பீரானால் உமக்குத் தீமை உண்டோ? ஐயனே இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் நீர் தாய் போன்றவன். தாயாகிய உம்மால் எல்லா உயிர்களையும் அடையாலாம் காண இயலும், ஆனால் கன்றும் தாயை அறிய வேண்டும் அல்லவா? ஆனால் நீயோ உமது பிள்ளைகள் உம்மை அறியாத படி இந்தக் கோலத்தில் மறைந்து இருக்கிறாயே. இது நியாயமோ? மேலும் இறைவா, உமது வரவால் நான் இப்பிறவிப் பெருங்கடலைத் தாண்டினேன். இனி நான் பிறக்க மாட்டேன். இப்பிறவிக்குக் காரணமான எனது வினைகளை நீர் போக்கியருளினீர்" என்று போற்றினான்.

பிறகு ராமபிரான் தேவ சரீரங் கொண்ட விராதனைப் புன்னகையுடன் நோக்கி அவனது சாப வரலாற்றைக் கேட்டார்.

உடனே, தேவ சரீரம் கொண்ட விராதன் தனது கதையைக் கூறத் தொடங்கினான்.," ஐயனே! என் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள்!... அப்போது எனது பெயர் தும்புரு. நான் தேவலோகத்தில் வசித்துக் கொண்டு இருந்த போது அரம்பையினிடம் காதல் கொண்டு அவளைக் கூடி இருந்தேன், மேலும் அவள் மீது கொண்ட காதலால், நான் யக்ஷ ராஜன் குபேரனை அலட்சியம் செய்தேன். குபேரன், பல முறைப் பொறுத்துப் பார்த்தார். ஆனால், அரம்பையினிடத்தில் நான் கொண்ட இச்சை, என்னை மதி மயங்கச் செய்து இருந்தது. அக்கொடிய காமத்தினால், எந்நேரமும் பீடிக்கப்பட்டு மதி மயங்கி நின்ற என்னை, குபேரன் ஒரு நாள் அரக்கனாகும் படிச் சபித்தார்.

பிறகு, குபேரனிடம் நான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினேன், பிறகு இந்த சாபத்தில் இருந்து விடுபடும் வழியையும் அவரிடம் கேட்டேன். அப்போது குபேரர்," ஸ்ரீ மந் நாராயணர் பூமியில் ஸ்ரீ ராம அவதாரம் மேற்கொள்ளும் போது, அவரது திருப்பாதம் பட, நீ இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவாய்" என்று கூறி விட்டுச் சென்றார்.

நானும் குபேரன் கொடுத்த சாபத்தின் படியே பூமியில், கிலிஞ்சன் என்னும் அரக்கனின் மகனாக ராக்ஷஸ குலத்தில் பிறந்தேன். இப்போது ஆதிமுதல்வா, உமது திருப்பாதம் பெற்று சாப விமோசனமும் அடைந்தேன்" என்று தனது கதையைக் கூறி முடித்து, ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதா தேவியை வணங்கிய தும்புரு என்னும் அந்த யக்ஷன் தனது உலகத்துக்குச் சென்றான்.

பிறகு ராமபிரான் , இளைய பெருமாளுடனும், சீத பிராட்டியுடனும் அவ்விடம் விட்டு நீங்கி ஒரு தபோவனத்தை அடைந்தார். அங்கே பகல் முழுவதும் அம்மூவரும் தங்கினார்கள்.