வாலி வதைப் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
வாலி வதைப் படலம்
இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற வானர வீரர்களோடு கிஷ்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய வழியை ஆராய்ந்தனர். போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு, வாலியை வலியப் போருக்கழைத்தான். வாலியும் போருக்குப் புறப்பட அவனது மனைவி தாரை இராமன் துணையொடு சுக்கிரீவன் போரிட வந்துள்ளமையைச் சுட்டிப் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். வாலி, இராமனது அறப் பண்புகளைத் தாரைக்கு உணர்த்திவிட்டுப் போரை விரும்பிக் குன்றின் புறத்தே வந்தான்.
பேராற்றல் படைத்த வாலி சுக்கிரீவர்களை இராமன் வியந்து பேச, இலக்குவன் சுக்கிரீவனை ஐயுற்றுப் பேசினான். நட்புக் கொள்வாரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென இராமன் இலக்குவனுக்கு மறுமொழி உரைத்தான். வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது. வாலி, சுக்கிரீவனை யானையைச் சிங்கம் அழிப்பது போல அவன் வலிமை தளர்ந்து விழும்படிச் செய்ய, சுக்கிரீவன் இராமனை அடைந்து உதவி வேண்டினான். இராமன் சுக்கிரீவனைக் கொடிப் பூ அணிந்து, போர் புரியச் சொல்ல, அவ்வாறே சென்று சுக்கிரீவன் வாலியோடு மோதினான். வாலி சுக்கிரீவனை மேலே தூக்கிக் கீழே எறிந்து கொல்ல முயன்றபோது, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த வாலி மண்ணில் சாய்ந்தான். தன்மீது அம்பு செலுத்தியவன் யார் என அறிய,
வாலி அம்பைப் பறிக்க, அதனால் குருதி வெள்ளம் பெருக, அதைக் கண்டு உடன்பிறந்த பாசத்தால் சுக்கிரீவன் கண்களில் நீர்மல்க நிலமிசை வீழ்ந்தான்.
வாலி தன் மார்பில் தைத்த அம்பில் 'இராமன்' என்னும் நாமத்தைக் கண்டான். இராமன் அறமற்ற செயலைச் செய்துவிட்டதாக இராமனைப் பலவாறு இகழ்ந்தான். இராமன் தான் செய்தது முறையான செயலே எனத் தெளிவுபடுத்தினான்; வாலி தன்னை விளங்கெனக் கூறிக்கொள்ள, உருவத்தால் விலங்காயினும் தேவராஜன் இந்திரனுக்கே மகனாகப் பிறந்ததால் வாலி நல்லறிவு படைத்தவன் என விளக்கி. வாலி செய்த செயல் குற்றமுடைத்து என இராமன் தீர்ப்பு அளிக்கிறான்.
'சிறியன சிந்தியாதா' னாகிய வாலி மனம் மாறி இராமனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டி, அவன் பெருமை கூறித் துதித்தான். தன் தம்பி சுக்கிரீவன் தவறு செய்யின் அவன்மீது அம்பு தொடுக்க வேண்டாம் என ஒரு வரம் வேண்டினான் வாலி. அனுமனின் ஆற்றலை இராமனுக்கு வாலி எடுத்துரைத்தான். சுக்கிரீவனுக்குப் பல அறிவுரைகள் கூறி, அவனை இராமனிடத்தில் அடைக்கலப்படுத்தினான்.
போர்க்களம் வந்த அங்கதன், குருதி வெள்ளத்தில் தந்தையைக் கண்டு அழுது துடிக்க, வாலி அவனைத் தேற்றி, இராமன் பெருமைகளை அறிவுறுத்தினான்.அவனை இராமனிடம் கையடைப்படுத்த, இராமன் அங்கதனுக்கு உடைவாள் அளித்து ஏற்க, வாலி வீடு பேறு அடைந்தான். வாலி மார்பில் தைத்த அம்பு இராமனிடம் மீண்டது. வாலிக்கு ஏற்பட்ட துயர் கேட்டுத் தாரை போர்க்களம் உற்று, வாலியின் மேல் வீழ்ந்து புலம்பினாள். அவளை அந்தப்புரம் செலுத்தி, அனுமன் வாலிக்குரிய இறுதிக் கடன்களை அங்கதனைக் கொண்டு செய்வித்தான்.
அந்நிலையில் கதிரவன் மறைய இருள் சூழ்ந்தது. இராமன் சீதையின் நினைவோடு இரவுக்கடலை அரிதில் நீந்தினான். இவை அனைத்தும் இந்தப் படலத்தில் உள்ள செய்திகள்)
கிஷ்கிந்தையை அடைந்ததும் வாலியைக் கொல்வது பற்றி ஸ்ரீ ராமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்ரீ ராமர் ஒரு திட்டத்தை தீட்டினார், பிறகு இது நான் நன்று என்று சுக்கிரீவனிடம்," சுக்கிரீவா, இதைத் தவிர வேறு வழி இல்லை, நீ சென்று வாலியை வலியப் போருக்குக் கூப்பிடு, வாலியும் உன்னைக் கொல்லும் ஆசையில் போருக்கு உடனே வருவான். அப்படி வரும் போது வாலி மீது நான் மறைந்து இருந்து அம்பு எய்து கொன்று விடுகிறேன்" என்றார்.
அது கேட்ட சுக்கிரீவன், வாலி இன்னும் சில கணங்களில் இராமனின் கையால் இறக்கப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். உடனே வாலி குடி கொண்டு இருக்கும் அரண்மனை வாயிலுக்கு அருகில் சென்றான். அதிக ஆரவாரம் செய்து வாலியை பெயர் சொல்லி அழைத்து " வாலி! வா! என்னுடம் போர் செய்ய வா! இன்று உன்னை கொன்று விடுகிறேன்" என்று கூறி அவனை வம்புக்கு இழுத்தான். ஸ்ரீ ராமர் உடன் இருக்கும் தைரியத்தில் வாலி கோபப்படும் படியாக மேலும்,மேலும் இவ்வாறு கர்ஜித்துக் கொண்டே இருந்தான்.
அவன் செய்த அந்த கர்ஜனை கிஷ்கிந்தாபுரியின் அரண்மனையில் உறங்கிக் கொண்டு இருந்த வாலியின் காதுகளில் போய் விழுந்தது. மதயானையின் முழக்கத்தை சிங்கம் கேட்டு கோபம் கொண்டது போல, வாலி சுக்கிரீவன் தன்னை போருக்கு அழைத்ததால் மிகுந்த கோபம் கொண்டான். உடனே, சுக்கிரீவனுடன் யுத்தம் செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டு தனது படுக்கையை விட்டு விரைவில் எழுந்தான் வாலி. அவன் கோபத்துடன் தனது கால்களை பூமியில் பதித்தான். அந்த அதிர்வின் காரணமாக கிஷ்கிந்தையில் உள்ள பல மரங்கள் வேருடன் சாய்ந்தது. மலைகள் பல வற்றில் நிலச் சரிவு ஏற்பட்டது. அவனது கண்கள் கோபத்தால் தீப் பொறியைக் கக்கின. பெரிய மூச்சுக் காற்றை கோபத்தால் விடுத்தான்.
அக்கோபத்துடன் வாலி, சுக்கிரீவன் அரை கூவல் விடுத்த திசையை நோக்கி," இதோ வந்து விட்டேன்!...வந்து விட்டேன்!" என்று சினந்து கத்தினான். அவன் கூறிய அந்த சொற்கள் எட்டுத் திசைகளிலும் ஒலித்தன. அவன் கோபத்துடன் பற்களைக் கடித்துக் கொண்டான். அதுவே ஒரு இடி ஓசை போலத்தான் இருந்தது. ஊழித் தீ போலவும், திருப்பாற் கடலில் தோன்றிய ஹாலஹால விஷம் போலவும், கோபத்துடன் சுக்கிரீவனோடு போர் செய்யப் புறப்பட்டான்!
அப்பொழுது அவனது மனைவி தாரை அவன் எதிரே வந்து நின்றாள். கணவனின் போர்க் கோலத்தைக் கண்டாள். அவள் வாலியிடம்," மணாளரே! சற்று நில்லுங்கள். சுக்கிரீவன் இத்தனை நாட்கள் தங்கள் பெயரைக் கேட்டாலே நடுங்குவான். ஆனால், இப்போதோ அவன் தானாக வந்து உங்களை போருக்கு அழைப்பதில் ஏதோ சதித் திட்டம் உள்ளது போல எனக்குத் தெரிகிறது. அது மட்டும் அல்ல, நமது ஒற்றர்கள் மூலமாக நான் இன்னொரு செய்தியையும் கேள்விப்பட்டேன். அவன் அயோத்தியை சேர்ந்த ஸ்ரீ ராமனுடன் உள்ளான். அவர் இப்போது தந்தையின் கட்டளைப் படி வன வாசம் வந்துள்ளார். இருவரும் தங்களை அழிக்கக் கூட்டணி வைத்து உள்ளார்கள். ஒரு வேளை, உங்களை ஸ்ரீ ராமர் ஏதேனும் வழியில் தந்திரமாகக் கொன்று விடுவாரோ! என்று எனக்குப் படுகிறது. அதனால் தாங்கள் இப்போது யுத்தத்துக்கு செல்ல வேண்டாம். என் பொருட்டு இதைத் தாங்கள் செய்யக் கூடாதா?" என்று அவனை தடுத்து நிறுத்தினாள்.
மனைவி தாரையின் சொற்களைக் கேட்ட வாலி உடனே தாரையைப் பார்த்து," மூன்று உலகங்களில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றாக சேர்ந்து இந்த வாலியை அழிக்கத் திட்டம்மிட்டுப் புறப்பட்டு வந்தாலும். அவர்களால் என்னை என்ன செய்ய முடியும்? என்னை அழிக்க வந்த மாயாவி, துந்துபி உட்பட எத்தனையோ அசுரர்களை நான் அழித்த வரலாறை நீயும் அறிவாயே தாரை! அப்படி இருக்கும் போது யார் என்னை என்ன செய்ய முடியும்? குயில் போன்ற குரலைக் கொண்டவளே, எனது பெயரைக் கேட்டவுடன் கூற்றுவனும் நிலை தடுமாறுவான். இராவணன் போன்ற கொடிய அரக்கர்கள் கூட நான் இருக்கும் திசையின் பக்கம் தலை வைத்துப் படுக்க யோசிக்கின்றனர். இத்தனையும் கேள்விப்பட்டு சுக்கிரீவனுக்கு ஒருவன் துணை நிற்க வருவானாகில் அவன் அறிவில்லாதவன் என்றும் தற்கொலை செய்ய தைரியம் இல்லாமல் எனது கைகள் கொண்டு சாக ஆசைப்பட்டு வந்துள்ளான் என்றும் தான் அர்த்தம்.
மேலும், தாரை ராமபிரானைப் பற்றிச் சொன்னாயே அந்த ஸ்ரீ ராமனைப் பற்றி நான் அறிவேன், உலக உயிர்களுக்கு தரும வழியைக் காட்டுபவர் அவர். வணங்கத் தகுந்த தர்மவான். பல நற்குணங்களை இருப்பிடமாகக் கொண்டவர். நீ, அவரைப் போய் அற்பனான சுக்கிரீவனுடன் கூட்டணி வைத்து உள்ளாதாக சொல்லலாமா? இது அடுக்குமா? விஷ்ணுவின் அவதாரமான அவர் போயும்,போயும் இரு வானர சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் தலையிடுவாரா? நீ வாலியின் மனைவியாக இருந்தும் கூட மற்ற பெண்களைப் போல பேதைமை கொண்டவள் என்பதை கணத்தில் நிரூபித்து விட்டாயே! ஒருவேளை நானும், சுக்கிரீவனும் செய்யும் துவந்த யுத்தத்தில் ஸ்ரீ ராமர் தலையிட்டு என் மீது அம்பு எய்துவார் என்று நினைக்கிறாயா? அடிப் பயித்தியக்காரி, அது போன்ற காரியங்களை மனதிலும் நினைக்காதவர் அந்த சூரிய குலத்தில் பிறந்த ரகு ராமன். அதனால், இப்போது நீ எனது வழியை விட்டு விலகு. முடிந்தால், என்னை வெற்றித் திலகம் இட்டு வழி அனுப்பிவை. இல்லை விலகிக் கொள். இன்று சுக்கிரீவன் வாலியை அல்ல, அவன் மரணத்தை வாயிலில் நின்று அழைத்துக் கொண்டு இருக்கிறான்" என்றான்.
தனது கணவனின் வார்த்தைகளைக் கேட்ட தாரை மேலும் அவனைத் தடுக்க முடியாதவளாக வாலியின் பாதையை விட்டு பயத்துடன் விலகினாள். வாலி உடனே அரண்மனை வாயிலுக்கு விரைந்தான், சுக்கிரீவனைக் கண்ட அவன் வெறி கொண்டு சுக்கிரீவன் மீது பாய்ந்தான். சுக்கிரீவனை தனது பலம் கொண்டு அடிக்க முற்பட்டான். மறுபுறம் சுக்கிரீவனும் திருப்பித் தாக்கத் தொடங்கினான்.
அப்போது கோபத்துடன் சண்டை போடும் வாலியை உற்று நோக்கினார் ஸ்ரீ ராமர். அக்கணம் அவரது கண்கள் வியப்பில் ஆழ்ந்தது. அந்த வியப்புடம் தம்பி லக்ஷ்மணனைப் பார்த்தார்." தம்பி! கண்களை நன்றாகத் திறந்து அங்கே பார்! அசுரர்களும், தேவர்களும், உலகத்தில் உள்ள கடல்களும், மேகங்களும், பலத்த காற்றும், கொடிய ஊழித் தீயும் ஆகிய இவை அனைத்தும் கூட, இந்த வாலியின் வலிமைக்கு முன்னாள் தோற்று ஓடி விடும்" என்று வாலியைச் சுட்டிக் காட்டிக் கூறினார்.
இராமபிரான் கூறியதைக் கேட்டான் லக்ஷ்மணன். அவன் அவரைப் பார்த்து," சுக்கிரீவன் தனது தமையனைக் கொள்வதற்குக் கூற்றுவனை அழைத்து வந்தான். சாதாரணமாய் வானரர் பலித்துக் கூற முடியாத போரைச் செய்யக் கூடியவர்கள். ஆனால், இந்தச் சுக்கிரீவனோ அத்தகைய போரைச் செய்யக் கூடியவன் அல்லன்! இதை இப்போது நினைத்துப் பார்த்தேன். அதனால் எனது உள்ளத்தில் தரும முறைக்கு மாறான செயல் நடப்பதால் துன்பம் ஏற்பட்டது. அந்தத் துன்பம் இப்போது மிகுதியாகக் காணப்படுகிறது. நம்பத் தகாத செயலை செய்கிறானே இந்த சுக்கிரீவன். தனது சொந்த சகோதரனையே கொல்லக் கூடிய செயலைச் செய்யும் இவன் நமது நம்பிக்கைக்கு உரியவன் தானா?" என்றான்.
அப்போது ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம்," தம்பி நான் சொல்வதைக் கேள்! இது நியாயம், இது அநியாயம் என்று மனிதரின் ஒழுக்கத்தைக் குறித்துப் பேசுதல் போல, விவேகமற்ற மிருகங்களின் ஒழுக்கத்தினைக் குறித்து பேசுதல் முறையோ? சுக்கிரீவனை விடு, மனித இனத்திலேயே தம்பி பரதனைப் போல், உன்னைப் போல் அண்ணனை மதிக்கும் தம்பிகள் இந்த உலகத்தில் எத்தனை பேர்? அது போல உலகத்தில் தர்மப்படி நடப்பவர்கள் எத்தனை பேர்? ஆனால், தவறான ஒழுக்கம் கொண்டவர்களோ பலர் உள்ளனர். நீயே சுக்கிரீவனுடைய நிலையை யோசித்துப் பார். அவன் என்ன செய்வான்? அவன் பக்கம் தருமம் உள்ளது. சுக்கிரீவனின் மனைவியைக் கவர்ந்த வாலி, தன்னுடன் போர் புரிய வருபவர்களின் பலம் பாதியாகக் குறைந்து தன்னிடம் வந்து விட வேண்டும் என்று இந்திரனிடம் வரம் பெற்று உள்ளான். இது மட்டும் எந்தப் போர் விதியின் படி தர்மம். சமமான பலம் கொண்ட பகைவர்கள் தான் சரிசமமாக யுத்தம் செய்வது முறை. ஆனால், வாலி பெற்ற வரத்தின் காரணமாக பாதி பலத்தை இழந்த எதிரி,வாலியின் கையால் ஒழிவது மட்டும் தர்மமோ?. தவிர சுக்கிரீவன் நமது நண்பனாகி விட்டான், ஒரு நல்ல நண்பன், இன்னொரு நண்பனிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டும் தான் பார்க்க வேண்டும். அப்படியே தீய குணங்கள் காணப்பட்டால் அந்தத் தீய குணங்களை பொறுமையுடன் நண்பனுக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லி அவனை திருத்த வேண்டும். ஆனால், நான் கண்ட மாத்திரத்தில் சுக்கிரீவன் குற்றமற்றவன்" என்று லக்ஷ்மணனுக்கு பதில் அளித்தார் இராமபிரான். அதனால் லக்ஷ்மணனும் சுக்கிரீவனைப் புரிந்து கொண்டான்.
அப்போது வாலியும், சுக்கிரீவனும் போர் புரிய ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தார்கள். எதிர் எதிரே குன்றோடு குன்று நின்றது போல எதிர்த்து நின்றார்கள். இருவரும் வலது சாரியாகவும், இடது சாரியாகவும் தொடர்ச்சியாக மாறி, மாறிச் சுழன்றார்கள். அவர்கள் சுழன்ற வேகத்தால் பூமியே, இன்னும் வேகமாக குயவன் சக்கரம் போலச் சுழலத் தொடங்கியது. அவர்கள் தோளோடு தோள் உரசிக் கொண்டு நெருப்புப் பொறி பறக்க ஒருவர் காலோடு, ஒருவர் காலைத் தேய்த்தார்கள். இரு கடல்களும், இரு மலைகளும் ஒன்றோடு, ஒன்று போர் புரிவது போல அவர்கள் இருவரும் போர் புரிந்தார்கள். கோபம் மிகுந்து அவர்கள் சண்டையிடும் போது, அந்த இரு சகோதரர்களின் கண்களில் இருந்து புறப்பட்ட தீ மேகத்தையும் கருக்கியது. அந்தப் போரைக் காண தேவர்களும் ஒன்று கூடி ஆகாயத்தில் நின்றனர். அவர்கள் இருவரும் நின்ற இடத்திலே மட்டும் சண்டை செய்யவில்லை, பல இடங்களில் தங்கள் போரைத் தொடர்ந்து நடத்தினார்கள். சண்டை செய்து கொண்டே அவர்கள் திடீரென்று வானில் எழுந்தார்கள்; மலைச் சிகரத்தில் குதித்தார்கள்; தரையில் வந்தார்கள்; இன்னும் சொல்லப் போனால் அவர்கள் எத்திசையிலும் காணப்பட்டார்கள்.
அவ்வாறாக ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டும், ரத்தம் பெருகக் கடித்துக் கொண்டும் வெகு நேரம் போர் புரிந்தார்கள். கடைசியில் வாலி சுக்கிரீவனை கதறக், கதற அடித்து துவம்சம் செய்தான். சுக்கிரீவனோ, அடி தாங்காமல் இராமனிடம் ஓடி சென்று அவரை வணங்கி பரிதாபத்துடன் நின்றான்.
அவனைக் கண்ட இராமபிரான் " சுக்கிரீவா உனக்கும், உனது அண்ணனுக்கும் இடையே உருவ ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது. என்னால் யார் வாலி, யார் சுக்கிரீவன் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், நான் ஒரு வேளை ஆளை மாற்றி உன் மீதே அம்பு எய்தி விட்டால் என்ன செய்ய? என்று தான் அமைதியாக இருந்தேன். நீ ஒன்று செய் உனக்கும், வாலிக்கும் இடையே நான் எளிதில் வேறுபாடு கண்டு அறிய, காட்டுக் கொடி மாலையை சூடிக் கொள். பிறகு வாலியுடன் யுத்தம் செய். நான், இந்த முறை அவனை எனது பாணம் கொண்டு அழித்து ஒழித்து விடுகிறேன்" என்றார்.
அதன் படி சுக்கிரீவனும், தனது கழுத்தில் காட்டுக் கொடி மாலையை சூடிக் கொண்டான். மீண்டும் வாலியிடம் சென்றான். முன்னை விட அதிக வேகத்துடன் வாலியைத் தாக்கினான். வாலியே," இந்த சுக்கிரீவனுக்கு என்ன வந்து விட்டது? இவன் அதிக ஆத்ம பலம் கொண்டு நம்மை இப்படித் தாக்குகின்றானே!" என்று ஆச்சர்யப் பாட்டான்.
ஆனால், மீண்டும் சுதாரித்துக் கொண்ட வாலி இன்னும் அதிக பலத்துடன் சுக்கிரீவனை தாக்கினான். அதனால் சுக்கிரீவன் நிலை குலைந்து போனான். இதனால், மேலும் கர்வம் கொண்ட வாலி சூரிய குமாரனான சுக்கிரீவனை இன்னும் அதிக வலிமையுடன் தாக்கினான்.
இறுதியில் வாலி, சுக்குரீவனைத் தரையில் மோதுவதற்காக அவனுடைய இடையிலும் கழுத்திலும் தன்னிரு கரங்களையும் கொடுத்து மேலே தூக்கினான்.
அந்த வேலையில்...
இராமபிரான் வில்லில் அம்பைப் பூட்டி வாலியின் மேல் இராம பாணத்தைத் தொடுத்தார்!
இமைப்பொழுதில் வில்லில் இருந்து புறப்பட்ட இராமபாணம், வாலியின் மார்பில் வலியப் பாய்ந்தது. ஏழு மரா மரங்களையும் ஒரே நேரத்தில் துளைத்த வல்லமை கொண்ட அந்த இராமபாணத்தை வாலி தனது உடம்பின் மறுபக்கம் ஊடுருவாமல் தனது வல்லமை கொண்டு தடுத்து நிறுத்தினான். அது கண்டு தேவர்களும் வியந்தனர். தேவர்கள் மட்டுமா? ஸ்ரீ ராமனே அதைக் கண்டு வியந்தார். வாலியின் உடலில் இருந்து கடல் என ரத்தம் வெளியேறியது. அது கண்ட சுக்கிரீவன் சகோதர பாசத்தால் துடித்துப் போனான். வெகு காலம் கழித்து வாலியை நோக்கி " அண்ணா... " என்று கதறி அழுதான்.
பிறகு இராமபாணத்தை தடுத்து நிறுத்திய வாலி அடங்காத கோபம் கொண்டான். அந்தக் கோபத்துடனேயே," அதிக வலிமையான என் மார்பில் பாய்ந்து செல்கின்ற இந்த அம்பைத் தொடுத்தவன் யார்?" என்று சந்தேகம் கொண்டான். மேலும், அவன் தனது கைகளைத் தரையோடு மோதினான். மார்பில் பாய்ந்த அந்தக் கொடிய அம்பை தனது இரண்டு கைகளாலும் எடுக்க முயற்ச்சி செய்தான். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் அந்த இராமபாணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்தான். வலி தாங்காமல் வாலி மண்ணில் புரண்டான்.
" இந்த அம்பை யார் எய்தது? ஒரு வேளை தேவர்களோ? ஆனால் தேவர்களுக்கும் இந்த வாலி மீது அம்பு எய்யும் துணிவு இல்லையே! இவ்வளவு பலமான கொடிய அம்பை ஒருவன் எய்து இருக்கிறான் என்றால், அவன் நிச்சயம் மும்மூர்த்திகளுள் ஒருவனாகத் தான் இருப்பான். யார் அவன்? அவன் எய்தது அம்பா அல்லது சிவனின் சூலாயுதமா?" என்றெல்லாம் கத்தினான் வாலி.
பிறகு மீண்டும் பலம் கொண்ட மட்டில் அந்த அம்பை தனது மார்பில் இருந்து எடுக்க முயற்சி செய்தான். பற்களையும் வலிமையுடன் பயன் படுத்தினான். ஒருவாறு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, உடலில் இருந்து இதயத்தை பிரித்து எடுப்பது போல அந்த அம்பை உடலில் இருந்து எடுத்தான். அப்போது மீண்டும் வாலியின் உடலில் இருந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு நிலத்தில் ஆறு போலப் பாய்ந்தது. அது கண்ட தேவர்களும் வாலியின் துணிச்சலைப் போற்றினார்கள்.
பிறகு தன்னுடைய மார்பில் இருந்து பிடுங்கிய அம்பைப் பார்த்தான் வாலி. அந்த அம்பில் " இராம" என்னும் பெயர் எழுதப் பட்டு இருப்பதைக் கண்டான். இராம நாமத்தை அந்த அம்பிலே கண்ட வாலி," இராமன் தோன்ற தர்மம் பூமியில் நிலை பெற்று விட்டது என்று மார்தட்டும் சூரியவம்சத்தில் பிறந்த இராமனா இந்த இழிச் செயலை செய்தான்! எதிரியை நேருக்கு நேர் தாக்கும் யுத்தத்தை இராமன் கைவிட்டு, கோழை போல மறைந்து இருந்து தாக்கும் கலையை எப்போதில் இருந்து கற்றுக் கொண்டான். சூரிய குலம் இப்படிப் பட்ட வீர வில்லாளியை பெற்று எடுக்க தவம் தான் செய்து இருக்கவேண்டும்" என்று கூறி வாலி கேலிப் புன்னகை செய்தான்.
பின்பு மீண்டும் அவன்," இராமனே நீதி தவறினால், அவன் ஆளும் உலகத்தில் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?" என்றான். அத்துடன் நிற்காது மேலும் பலப் பழிச் சொற்களை இராமன் மீது கூறிக் கொண்டே இருந்தான். அப்பொழுது அவ்விடம் வந்து வாலியின் முன்பாக நின்றான் இராமன். இராமனைக் கண்ட மாத்திரத்தில் வாலி கடும் கோபம் கொண்டான்.
" என்ன நினைத்தீர்? ஏது செய்தீர்?" என்று பழித்துக் கூறினான். பிறகு மீண்டும் இராமனைப் பார்த்து," பிறரை குற்றம் செய்யாமல் தடுக்கும் இராமன் குற்றம் செய்வது சரியோ? சிறந்த குலத்தில் பிறந்து, சிறந்த கல்வியைப் பெற்றவரே அரச நீதி உமது குலத்தில் பிறந்த எல்லோருக்கும் பொது தானே? அப்படியிருக்க ஏன் என்னை மறைந்து இருந்து கொன்றீர். உமது மனைவி ஜானகி பிராட்டியைப் பிரிந்த பின்பு நீர் செய்யும் செயலில் தடுமாற்றம் அடைந்தீர் போலும்! அரக்கர் உமக்கு ஒரு தீங்கு செய்தார்கள் என்றால் அதற்காக அந்த இனத்துக்கு வேறான குரங்கு கூட்டத்திற்கு அரசனான ஒருவனைக் கொள்ளும்படி மனு செய்த தரும சாஸ்த்திரத்தில் சொல்லி இருக்கிறதோ? என்னிடத்தில் அப்படி நீர் என்ன குற்றத்தைக் கண்டீர்?
நீர் செய்த இந்தப் பழிப்பிற்குரிய செயலால் பெரும்பாலும் அறமே நிகழக் கூடிய திரேதாயுகத்தில் கலியுகம் வந்தது போல நான் உணர்கிறேன். வலிமை உள்ளோர் மெலியவரை நலியச் செய்யும் செயலைச் செய்தால், அவர்களுக்குப் பழிப்பைத் தவிர புகழ் உண்டாகுமோ? போரில் வெல்வதற்குத் துணையாக ஒருவரையும் கொள்ளாமலேயே வெற்றியைப் பெறக் கூடியவரே! உமது தந்தை உமக்கு அளித்த அரசை உமது தம்பி ஒருவருக்குக் கொடுத்தீர்! இப்போது என்னை வென்று எனது அரசை அபகரித்து எனது தம்பிக்கு அதனைக் கொடுக்கப் போகின்றீர்! இவ்வாறு நாட்டிலே ஒருவகை புதுமையான செயலைச் செய்தீர்! காட்டில் அதற்கு மாறாக வேறு ஒரு வகைப் புதிய செயலைச் செய்தீர்! இவற்றை விட மேலான செயல் நீர் செய்வதற்கு உமக்கு இல்லை போலும்!
நீரே என்னிடம் இப்படி ஒரு தகாத செயலை செய்து விட்டு, இலங்கை வேந்தன் இராவணனை மட்டும் தகாத செயல் செய்தவன் என்று குற்றப் படுத்துவதும், கோவிப்பதும் சரியோ? அவன் சீதையை கவர்ந்து சென்றான், நீயோ மறைந்து இருந்து என் மேல் அம்பு எய்தீர். இருவரின் செயல்கள் மாறுபட்டாலும். நீங்கள் இருவருமே அதர்மம் தானே செய்து உள்ளீர்கள்! இராமா இதில் நீ மட்டும் உயர்ந்தவானா என்ன? மேலும், இருவர் சண்டை இடும் போது, ஓரவஞ்சனையாக ஒருவரை கொல்லும் இந்த அற்புதமான தனுர் வித்தையை (வில் வித்தையை) உனக்கு சொல்லிக் கொடுத்த அந்த மகானுபாவர் யாரோ?
இராமா, நீ இராவணனை ஒழிக்க இந்த சுக்கிரீவனுடன் கூட்டுச் சேர்ந்தது எப்படித் தெரியுமா இருக்கிறது. கொடுமையான மதயானை ஒன்றைக் கொல்ல சிறு முயலை துணைக்கு அழைத்தது போல உள்ளது. உம்முடைய இந்த முயற்சி என்ன முயற்சியோ? சந்திரனுக்கு ஒரு களங்கம் உள்ளது. ஆனால், இப்போதோ சூரிய வம்சத்துக்கு நீ அதற்கு நிகரான ஒரு களங்கத்தை உண்டு பண்ணி விட்டாய். வாழ்க நீ!. மேலும், சுக்கிரீவன் என்னை வழிய வந்து போருக்கு அழைத்தான். அவன் அழைத்ததால் நான் போருக்கு வந்தேன். அவனுக்கும், எனக்கும் போர் நடந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் வந்து புகுந்து என்னை வஞ்சகமாக அம்பு எய்து கொன்ற நீயும் ஒரு வீரனா? இந்த இழிச் செயலை செய்து விட்டு எந்த முகத்துடன் என் முன் நெஞ்சை நிமிர்த்து பெரிய வில் வீரன் போல நின்று கொண்டு இருக்கிறாய்? நீ செய்த இந்தக் காரியம் ஒன்று போதும், உனது வம்சத்தில் தோன்றி மறைந்த உனது மூதாதையர்களான ஹரிச்சந்திரன், மான்தாதா, பகீரதன், மனு போன்றோர் சுவர்கத்தில் உன்னைக் கண்டு பூரித்துப் போக" என்று இராமனை இவ்வாறெல்லாம் பழித்துக் கூறினான் வாலி.
அவற்றைக் கேட்ட இராமபிரான் வாலிக்கு உண்மையை உணர்த்த எண்ணினார். எனவே அவனை நோக்கி," வாலி, மூத்தவனாகப் பிறந்த நீ, உனது தம்பி சுக்கிரீவனுக்கு பாதுகாப்பு அளித்துக் காக்க வேண்டியவன். ஆனால், நீயோ அவன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றாலும், அவனிடம் விரோதம் கொண்டாய். அவனைக் கொன்று விட வேண்டும் என்றே எண்ணினாய். மேலும், உனது தம்பியின் மனைவி, உனக்கு சகோதரி போன்றவள். ஆனால், நீ என்ன செய்தாய்? அவளை அடைய சிறை எடுத்துத் துன்புறுத்தினாய். எளியவனான சுக்கிரீவனை தாக்கினாய். அது மட்டுமா? பார்க்கும் பெண்களை எல்லாம் காமக் கண் கொண்டு நோக்கினாய். நீ, எப்போது தர்மத்தை பாதுகாத்தாய் வாலி? நீ தர்மத்தைப் பற்றிப் பேசுவதற்கு. இராவணன் உன்னை தாக்கினான், பிறகு உனது பலத்தைக் கண்டு பயந்து உன்னுடன் சிநேகம் கொண்டான். நீயும் அவனுடன் கூடா நட்பு கொண்டாய். அவனைப் போலவே பிறர் மனைவியை காமுற்றாய். தவிர, போர் செய்யும் போது கூட நீ தர்மத்தை பின்பற்ற வில்லையே வாலி. உன்னுடன் போருக்கு வருபவரின் பாதி பலத்தை நீ வரத்தால் பெற்றுக் கொள்ளுதல் தருமமோ? உண்மையில் நீ தருமத்தைக் காக்கத் தவறினாய், அதனால் தர்மமும் உன்னை காக்கத் தவறியது. மொத்தத்தில் நீ ஒரு துர்மார்கன், ஆக இது போன்ற பல காரணங்களுக்காகத் தான் நான் உனக்கு தண்டனை அளித்தேன்" என்று அவனுக்கு பதில் அளித்தார் இராமபிரான்.
இதனால் இன்னும் கோபம் கொண்ட வாலி," எனக்கு தண்டனை அளிக்க நீ யார்? பொதுவாக தண்டனை அளிக்கும் அதிகாரம் அரசனுக்கே உரியது ஆகும். நானே கிஷ்கிந்தையின் அரசன் அப்படி இருக்க நீ எந்த தர்ம விதியின் படி என்னை தண்டித்தாய்? மேலும் நாங்கள் வானரர்கள், மனிதர்களைப் போல எங்களுக்குள் திருமண பந்தம் எல்லாம் கிடையாது. சக்தி உள்ள பிராணிகள், சக்தி அற்ற பிராணிகளின் பொருட்களை அபகரித்தல் என்பது எங்களுக்குள் சகஜம். அப்படித் தான் நான் சுக்கிரீவனின் மனைவியை அபகரித்தேன். இதில் நீ என்ன தவறு கண்டாய் இராமா" என்றான் வாலி.
அதற்கு ஸ்ரீ ராமார்," வாலி நான் வைவஷ்த மனு வழியில் சூரிய குலத்தில் தோன்றியவன். எனது மூதாதையரான வைவஷ்த மனு அவர்கள் தான் மலைகளும், கடல்களும், நதிகளும், நிலங்களும், காடுகளும், பாலைவனங்களும், சோலைகளும் இந்த பூமியில் எழக் காரணமானவர். ஒரு காலத்தில் பிரமனின் ஆணைப் படி இந்த உலகத்தையே உருவாக்க உதவி செய்தவர். உருவாக்கியவரும் கூட. மேலும், அவரே இந்த உலகம் அனைத்துக்கும் அப்போது அரசனாக இருந்தவர். அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தண்டனை தரும் அதிகாரத்தை பிரமனிடம் இருந்து பெற்றவர். அதனால் அவரது வழியில் நான் தோன்றியதால், எனக்கும் பிற உயிர்கள் எல்லையை தாண்டும் போது அவற்றை தண்டிக்கும் அதிகாரம் உண்டு. மேலும் வானர வீரா வாலி, இன்னொன்றையும் கேள் சாதாரண குரங்குகள் போல நீ அல்ல, சாதாரண குரங்குகள் தான் பிற குரங்குகளின் துணையை அபகரித்துச் செல்லும். ஆனால், நீயோ இந்திரனின் மகன், சிறந்த புத்திமான் அதன் படிப் பார்த்தால் நீ தேவர்களுக்குச் சமமான தெய்வீக வானரன். அப்படிப்பட்ட நீ உனது தம்பியின் மனைவியை அபகரிப்பது உனக்கே அபத்தமாகத் தெரியவில்லையா? இல்லை இந்த அபசாரத்தை அறிந்தும் உனது இச்சையின் தூண்டுதலால் செய்தாயோ?" என்றார்.
அது கேட்ட வாலி," நீ என்னை மறைந்து இருந்து பாணத்தை எய்தது மட்டும் சரியோ? இது தான் ரகு வம்சத்தின் வீரமோ?" என்றான்.
ஸ்ரீ ராமர் உடனே," மனிதர்கள் வேட்டை ஆடச் செல்லும் போது மிருகங்களை மறைந்து இருந்து தான் தாக்குவார்கள். நீ பாதி நரன், பாதி வானரன். ஆனால், எப்போது சுக்கிரீவனின் மனைவியை பெண்ணாட நினைத்தாயோ, அப்போதே நீ முழு வானரன். நீ மட்டும் அல்ல வாலி, மனைவியைத் தவிர வேறு பெண்களை நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கூட மிருகத்துக்குத் தான் சமானம், அதுபோல இந்த உவமை மனிதர்களில் பெண் இனத்திற்கும் பொருந்தும். அதனால், தான் முழு மிருகமான உன்னை நான் மறைந்து இருந்து கொன்றேன். இதிலும் நான் தர்மத்தை மீற வில்லை" என்று வாலியின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கம் அளித்தார்.
இராமர் கூறிய அனைத்தையும் தனது மனதில் பதியும் படிக் கேட்டான் வாலி. பிறகு தனது தவறை நன்கு உணர்ந்தான். உடனே இராமபிரானை நோக்கி," எல்லா உயிர்களையும் ஆளும் நற்குணச் செம்மலே! நீர் கூறிய படி நான் தவறு செய்தவன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்! தயை கூர்ந்து எனது தீய செயல்களைப் பொறுத்து அருள வேண்டுகிறேன். மேலும், நாய் போன்ற நான் எனது தவறுகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் உம்மை அநியாயமாகப் பழித்துக் கூறி விட்டேன். அதற்கும் சேர்த்து நான் மன்னிப்பு வேண்டுகிறேன். ராமா உயிர் போகும் சமயத்தில் எனக்குத் தத்துவ ஞானத்தைப் புகட்டிய செம்மலே! அந்த ஈசனும் கைலையில் உனது நாமத்தை சொல்லியே தவத்தில் ஆழ்ந்து இருக்கிறான். அப்படிப் பட்ட நீயே என்னை வதம் செய்ததால் நான் பாக்கியம் பெற்றேன். மேலும் ராமா, எனது இன்னுயிரை உனது பாதங்களில் சமர்பிக்கும் முன் இந்த அடியவனுக்கு சில வரங்களைத் தர வேண்டுகிறேன்" என்றான். உடனே
இராமபிரான் அவ்வரங்களை அளிப்பாதாக வாக்கு அளித்தார்.
உடனே வாலி,இராமனிடம் ," அனைத்திற்கும் பொதுவாய் இருப்பவரே! நீர் யாரென்றும், உமது தன்மை எது என்றும் எனக்கு அறிவு தந்து தெரிவித்தீர். அதுபோலவே, எனது பாவத்தையும் அருள் கூர்ந்து மன்னித்து பரமபதம் என்னும் மோக்ஷம் எனக்குக் கிட்ட அருள் செய்யுங்கள் பிரபு. அத்துடன், நான் இன்னும் இரு வரங்களை உம்மிடம் முன் வைக்க விரும்புகிறேன், அது யாதெனில் தெரிந்தோ,தெரியாமலோ எனது தம்பி சுக்கிரீவன் எனது மரணத்துக்குக் காரணமாகி விட்டான். அதனால், நாளை உனது தம்பிகளோ அல்லது உனது சுற்றத்தாரோ யாரும் எனது தம்பியை 'உடன் பிறந்த அண்ணனைக் கொன்றவன் தான் இவன் ' என்ற பழித்துக் கூறி விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். அத்துடன் இராமா, ஒரு வேளை சுக்கிரீவன் ஏதேனும் தவறு செய்து விட்டால் அல்லது உனக்குக் கோபம் வரும் படி நடந்து கொண்டால் என் பொருட்டு நீ அவனை மன்னித்து அருள வேண்டும். ஆனால், அதை விடுத்து எந்தக் காரணத்தாலும் என் மீது நீ எய்த இது போன்ற ஒரு ராம பாணத்தை அவன் மீதும் தொடுத்து விடாதே. என் தம்பி என்னைப் போல பலசாலி அல்ல, அவன் துடித்துப் போய் விடுவான்" என்றான்,
இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் சுக்கிரீவன் தாங்க முடியாமல் அண்ணன் வாலியின் கால்களில் விழுந்து கதறி அழுதான்," அண்ணா! இந்த அன்பு முன்னமே உன்னிடம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்குமா? நானும் உனது திருப்பாதங்களில் பாத ரட்சையாக அல்லவா கிடந்தது இருப்பேன்" என்று கூறினான்.
அது கேட்ட வாலி, மீண்டும் தனது தவறை எண்ணி வருந்தியவனாக, சுக்கிரீவனின் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு," அருமைத் தம்பியே, அழாதே. நான் சொல்வதைக் கேட்பாயாக. நேரம் எனக்குக் குறைவாக உள்ளது. உடனே எனது மகன் அங்கதனை அழைத்து வா. நான் அவனிடமும் விடை பெற எண்ணுகிறேன்" என்றான்.
உடனே சுக்கிரீவன் சென்று அங்கதனை அழைத்து வந்தான், தனது வாழ்க்கையில் எந்த வடிவத்திலும் துக்கத்தை சந்திக்காத, இன்னும் சொல்லப் போனால் துக்கம் என்ற வார்த்தையே அறியாத அங்கதன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தந்தையாகிய வாலியின் நிலையைக் கண்டு கதறித் துடித்தான். புலம்பித் தவித்தான். வாலி அங்கதனின் கைகளைப் பிடித்த படி சுக்கிரீவனிடம்," சுக்கிரீவா, எனது புத்திரன் அங்கதன் இனி உனது புத்திரன்" என்றான். பிறகு ஸ்ரீ ராமரிடமும் வாலி," புனிதரே!எனது மகன் என்னைப் போலவே பலம் கொண்டவன். அரக்கர்கள் என்னும் பஞ்சு மூட்டைகளுக்கு ஊழிக் காலத்து நெருப்பாக விளங்குபவன். இவனும், இன்று முதல் உனது அடைக்கலமே. இவனை ஏற்றுக் கொள்வீரா!" என்றான்.
அது கேட்ட ஸ்ரீ ராமர், தனது உடைவாளை அங்கதனுக்கு அளித்து, அவனது வீரத்தை வாலி முன் அங்கீகரித்தார். அது கண்ட வாலி பெருமிதம் கொண்டு சந்தோஷத்தில் திளைத்தான். உடனே தனது இரு கரங்களையும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமனை வணங்கினான். வலியாலும், வேதனையாலும், வருத்தத்தாலும் அவன் கண்களில் வழிந்த கண்ணீர் இப்போது ஆனந்தக் கண்ணீராக மாறியது.
பக்தியுடன் இராமபிரானை நோக்கியபடி அவனது உயிரும் வைகுண்டத்தை அடைந்தது. அப்பொழுது வாலியின் மார்பை துளைத்த இராமபாணம் வான்வழி எழுந்து, கடலின் புனித நீரில் குளித்து, பின் திரும்பி தேவர்கள் மலர்தூவ ஸ்ரீ இராமரிடமே வந்து சேர்ந்தது.