வானரர் களங்காண் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
வானரர் களங்காண் படலம்
(இராமன் கொன்று குவித்த அரக்கர்களின் மூலப்படையை வானரங்கள் கண்டதைக் கூறும் படலம். இது 'வானரர் களங்காட்சிப் படலம்', 'வானரச் சேனை களங்காண் படலம், 'வானரத் தலைவர்கள் களங்காட்சிப்படலம்', 'வானர வீரர்கள் களங்காண்படலம்' எனவும் அழைக்கப்படுகிறது. வேறுசில சுவடிகளில் இப்படலத்தை இராவணன் களங்காண் படலத்துடன் சேர்த்துக் 'களங்காண் படலம்' எனக் குறிப்பர்)
குன்றத்தில் சென்று தங்கி இளைப்பாறிக் கொண்டு இருந்த இராமபிரானிடம் சுக்கிரீவன் தனது சேனையோடு சென்று வணங்கினான். அப்போது இராமபிரானால் அழிந்த அரக்கரின் பெரும் வலிமையையும் பெருமையையும் அறிந்து நடுக்கமும் திகைப்பும் கொண்டு, வானரர்கள் ஒன்றும் உணர முடியாமல் நாணம் அடைந்தார்கள்.
சூரிய குமாரனான சுக்கிரீவன் இராமபிரானிடம்," ஐயனே! உம்மோடு மூவுலகிலும் நீண்ட பெருஞ்சேனை போரிட்டதே! அச்சேனையை நீர் வென்றது எப்படி?" என்று கேட்டான்.
அதற்கு இராமர் இதழ்களிலே குறுநகை தோன்ற," விபீஷணனுடன் சென்று நீ களத்தைக் காண்பாய்!" என்றார்.
சுக்கிரீவனுக்கு உடனே களத்தைக் காண வேண்டும் என்ற பெரும் விருப்பம் எழுந்தது. அவன் இராமபிரானை வணங்கி விடை பெற்று, விபீஷணனை அழைத்துக் கொண்டு தனது சேனையோடு, இராமர் போர் புரிந்த களத்துக்குச் சென்றான். அந்தப் போர்களத்தைக் கண்களால் பார்த்த வானரர்கள் பெரும் அச்சம் கொண்டார்கள். மேலும், அவர்கள் ஏக்கம் கொண்டார்கள்; நடுக்கம் அடைந்தார்கள்;அச்சத்துடன் அதிகமாக ஆராவாரம் செய்தார்கள்; வாய் பிதற்றத் தொடங்கினார்கள்; உள்ளம் வெதும்ப வருந்தினார்கள்; மெல்ல மெல்ல உயிர் நிலைக்கப் பெற்று மகிழ்ச்சி கொப்பளிக்க சிறப்புற்றார்கள்; அப்போது அவர்களுக்கு உண்டான நிலையை யார் அறிந்து சொல்லக் கூடியவர்கள்?
பின்பு வானரர்கள்," ஐயனே! இக்களம் முழுவதையும் சரியாகப் பார்த்து அறிய வேண்டுமானால், ஆயிரம் ஆண்டுகளும் போதாது. ஆகவே, நீர் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வீர்!" என்று விபீஷணனிடம் கேட்டார்கள்.
விபீஷணன் அவர்களின் விருப்பப்படியே அவர்களுக்கு அப்போதைய போர்களத்தின் நிலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். "நம்மவர்களே! இராமபாணங்களால் மாண்டு போன யானைகள் மலை போலக் குவிந்து கிடப்பதைப் பாருங்கள்! கோடிக் கணக்கான அரக்கர்கள் இராமசரங்கலால் சிதைந்து யானைப் பிணங்களின் மேல் கிடப்பதைப் பாருங்கள்! குதிரைகள் மாண்டு கிடப்பதையும்! கொடிச் சீலைகள் இரத்த வெள்ளத்திலே அடித்துச் செல்லப் படுவதையும் பாருங்கள்! கூத்துப் பயிலும் மாணவர்களுக்கு அக்கூத்தைக் கற்ப்பிக்கும் பொருட்டுத் தாளமிட்டுக் கூத்தாடிக் காட்டுகின்ற பரதாசாரியர் போல, கவந்தங்கள் கூத்தாட அதற்க்கு ஏற்ப தாம் கைத்தாளமிட்டுக் கூத்தாடும் பேய்களைப் பாருங்கள்! இறந்த அரக்கர்களின் உடம்பில் இருந்து வெளிப்பட்டுத் தம்மைக் கட்டும்படி நிற்கும் நரம்பு வலைகளில் இருந்து தப்பிச் செல்லும் பேய்களைப் பாருங்கள்! இராமபாணங்களால் வீழ்ந்த யானைகளின் தலைகள் ஒன்றாக இணைந்து புதியதொரு மிருகம் போல் தோன்றுவதைப் பாருங்கள்! இறந்து கிடக்கின்ற அரக்கர்களின் வாய் கோபத் தோற்றம் மாறாமல் நிற்பதுடன், புகை கனல்களுடனே ஒளிவிடுகின்ற ஓமகுண்டன் போல விளங்குவதைப் பாருங்கள்! செந்நிற வானத்தில் தோன்றும் இளம்பிறையைப் போல, இரத்த வெள்ளத்திலே காட்சி தரும் யானைகளின் தந்தங்களைப் பாருங்கள்! இரதத்தின் தாரை தன் மேல் முட்டுவதால் நடுப்பகல் சூரியன், உதய ஞாயிறு போலச் செந்நிறத்தோடு காணப்படுவதைப் பாருங்கள்!" என்றெல்லாம் போர்க்களத்தை நன்குத் தெளிய வானரர்களுக்கு விபீஷணன் காட்டிக் கொண்டே சென்றான்.
அவ்வாறு விபீஷணன் சொல்லிக் கொண்டே போகும் போது, வானரர்கள் அவனை வணங்கி ," ஐயனே! நாங்களே கண்டாலும், நீர் காட்டிக் கண்டாலும், இமயத்தின் உச்சியைக் காணமுடிந்தாலும் முடியுமே தவிர, இறந்த இந்த அரக்கர் சேனையை முழுவதும் காண முடியாது! ஆகையால், இதனைச் சிலகாலம் பொறுத்துப் பார்த்துக் கொள்வோம்! இப்போது சென்று திருமாலின் அமிசமான ஸ்ரீ இராமபிரானைக் காண்போம்!" என்று சொன்னார்கள்.
"சரி, அப்படியே செய்வோம்!" என்றான் விபீஷணன்
எல்லோரும் போர்களத்தை விட்டு நீங்கி, இராமர் முன்னே சென்று தொழுது நின்றாகள். அவருடைய போர் வன்மையை எண்ணி வியப்புற்றார்கள். மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்!