மருத்துமலைப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
மருத்துமலைப் படலம்
(பிரமாத்திரத்தினால் வீ்ழ்ந்துபட்டவர்களைச் ஜாம்பவான் மொழிந்தபடி, அநுமன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்துகளை உடைய மலையைக் கொண்டுவந்து உயிர்ப்பித்த பின்னர், மீண்டும் அதனைக் கொண்டு சென்று வைத்த நிகழ்ச்சியைக் கூறுகின்ற பகுதியாதலின் இது மருத்துமலைப் படலம் எனப்படுகிறது)
வானர சேனைக்கு உணவு கொண்டு வரச் சென்ற விபீஷணன், உணவுடன் திரும்பி வந்து, அவற்றைப் பாசறையில் வைத்து விட்டுப் போர்களத்தை அடைந்தான். அக்கணம், போர்க்களத்தில் லக்ஷ்மணன் உட்பட அனைத்து வானர வீரர்களும் பிரம்மாஸ்த்திரத்தால் மூர்ச்சை அற்று கிடப்பதைக் கண்டு துடித்துப் போனான். நஞ்சினை உண்டவன் போல செய்வதறியாது திகைத்தான். அக்கணமே மயக்கம் அடைந்து கீழே விழுந்தான்.
சிறிது நேரம் அப்படியே இருந்த விபீஷணன் கண்கள் விழித்தான். அக்கணமே, ஏக்கம் கொண்டு மனம் வெதும்பினான். பிறகு வருந்திப் பெருமூச்சு விடுத்தான். இனியும் தாமதித்தல் தகாது என்று சிந்தித்தவாறு ஸ்ரீ இராமபிரானை போர்க்களம் முழுக்கத் தேடித் திரிந்தான்.
ஸ்ரீ இராமபிரானை தேடித் திரிந்த விபீஷணன் இறுதியில் ஸ்ரீ இராமர் இருக்கும் இடம் சேர்ந்தான். அவ்வாறு ஸ்ரீ இராமரைக் கண்டடைந்த விபீஷணன் அவரது திருமேனியை முழுவதுமாக நோக்கினான். அதில் அம்பினால் பட்டக் காயங்கள் எதுவும் இல்லாததால், அவன் நடுக்கம் நீங்கினான். அவன் மற்ற வானர வீரர்களையும் நோக்கினான். பெரும் பாலும் அனைத்து வானர வீரர்களும் உடம்பில் எந்தவிதக் காயங்களும் இல்லாத நிலையிலேயே விழுந்து மூர்ச்சை அடைந்து இருப்பதைக் கண்டான். மேலும், அந்த இரவிலும் போர்க்களம் முழுக்க அதீத வெப்பக் காற்று வீசுவதை உணர்ந்தான். அக்கணமே புத்தி கூர்மை கொண்ட விபீஷணன்," ஒரு திவ்விய பாணத்தால் தான் இவர்கள் அனைவரும் தாக்கப் பட்டு உள்ளார்கள். அதுவும், போர்க்களத்தில் வீசும் வெப்பக் காற்றைப் பார்க்கும் போது, அது நிச்சயம் பிரமாஸ்த்திரமாகத் தான் இருக்கும்" என்ற முடிவுக்கு வந்தான்.
மேலும், பிரம்மாஸ்த்திரம் ஏவப்பட்ட நிலையிலும் ஸ்ரீ ராமர் இறக்காத தன்மையைக் கண்ட விபீஷணன் பிரம்மனை வணங்கி நன்றி கூறி ஆறுதல் அடைந்தான். பின்பு விபீஷணன் சற்றே மனம் தேறினவனாய்," இராமபிரான் மயக்கம் நீங்கி எழுவதற்குள், இதுவரையிலும் இறவாமல் உயிருடன் யாராவது இருந்தால், அவர்களை அவருக்கு உதவுவதற்காகத் தேடிச் சென்று அழைத்து வருவேன்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். மறுகணம் அவன் கையில் எரிகின்ற கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டான். உடனே கடல் போன்ற இரத்தம் வழிந்து ஓடிக் கொண்டு இருந்த அந்தப் போர்க்களத்தில் பல இடங்களில் " யாராவது உயிருடன் இருக்கின்றீர்களா?" என்று கேட்ட படி தேடி அலைந்து இறுதியில் அனுமனைக் கண்டு அடைந்தான். அனுமனைக் கண்ட மாத்திரத்தில் விபீஷணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். விபீஷணன், அனுமனின் பலம் பற்றி நன்கு அறிவான். அதனால், "அனுமனை இந்த பிரம்மாஸ்த்திரத்தின் தாக்குதல் கொன்று இருக்க வாய்ப்பில்லை" என்று தனக்குள் கூறிக் கொண்டவனாக அனுமனை நெருங்கினான்.
விபீஷணன் கூற்று உண்மை தான், அனுமான் உண்மையில் சாகவில்லை, ஆனால் அதே சமயத்தில் எண்ணற்ற பாணங்கள் அவன் உடம்பில் தைத்த காரணத்தால் மயங்கிக் கிடந்தான். அனுமனை நெருங்கிய விபீஷணன் அவனது உடலில் பாய்ந்து இருந்த கணைகளை எல்லாம், அனுமனுக்கு நோகாதவாறு பக்குவமாக எடுத்து எறிந்தான். பிறகு, மாயைகளில் கைதேர்ந்த விபீஷணன், பூத ஜாலத்தால், மேகத்தில் இருந்த குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து அனுமனின் முகத்தில் தெளித்து அவனை நினைவு தெளியும் படிச் செய்தான். இமயத்தில் இருந்து புறப்படும் கங்கைக்கு நிகரான அந்தக் குளிர்ந்த நீர், தன் மீது பட்ட காரணத்தால், அனுமான் மெல்ல மூர்ச்சை தெளிந்து ஸ்ரீ ராம நாமத்தை சொன்னபடி எழுந்தான்.
அவ்வாறு எழுந்த அனுமான் மெல்ல, மெல்லத் தனது பழைய நிலையை அடைந்தான். அக்கணமே, எதிரில் நின்று கொண்டு இருந்த விபீஷணனை கண்டான். விபீஷணனைக் கண்ட மாத்திரத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவனை அன்புடன் தழுவிக் கொண்டு," விபீஷணா! எனது சுவாமி ஸ்ரீ இராமர் எங்கே உள்ளார்? உனக்கு அவரைப் பற்றித் தெரியுமா?" என்று கேட்டான்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட விபீஷணன்," பிரமாஸ்த்திரத்தின் தாக்குதலால் இளைய பெருமாள் மரணித்தது போல பூமியில் விழுந்து கிடக்க,அவர் அருகிலேயே ஸ்ரீ இராமபிரான், வருத்தம் தோய்ந்த முகத்துடன் விழுந்து கிடக்கிறார். மற்றபடி நான் பார்த்த வரையில் அவரது உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. ஒருவேளை, ஸ்ரீ இராமர் கண்விழித்த பிறகு என்ன நடக்குமோ? லக்ஷ்மணனின் நிலை கண்டு என்ன முடிவு எடுப்பாரோ! நான் அறியேன்" என்று கூறி முடித்தான்.
இராமபிரான் உயிருடன் தான் இருக்கிறார் என்ற பதிலைக் கேட்ட அனுமான் மிகவும் மகிழ்ந்து ஸ்ரீ இராமர் இருக்கும் இடத்தை நோக்கி கைகள் குவித்து வணங்கினான். பிறகு வாயு புத்திரன்," விபீஷணா! உனது மனதில் கொண்ட கவலையை நானும் அறிவேன். நமது வானர சேனை கடைத்தேறவும், லக்ஷ்மணன் பழைய நிலைக்குத் திரும்பவும் வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, புத்தியில் சிறந்த ஜாம்பவானிடத்தில் போய் ஆலோசனை கேட்பது தான். மேலும், ஜாம்பவான் பிரம்மனின் அவதாரம். சிரஞ்சீவி. அவனை இந்த பிரம்மாஸ்த்திரம் எதுவும் செய்து இருக்காது. அவன் எங்கோ உயிருடன் தான் விழுந்து கிடப்பான். அதனால், உடனே வாருங்கள்!" என்றான்.
அனுமனின் கூற்றை ஏற்று விபீஷணனும் ஜாம்பவானைத் தேடி அந்த இருண்ட போர்க்களம் முழுவதும் அலைந்து, இறுதியில் ஜாம்பவானைக் கண்டு அடைந்தான். ஜாம்பவானின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது, ஏற்கனவே வயது முதிர்ந்த காரணத்தால் களைத்துப் போய் இருந்த ஜாம்பவானின் உடலில், அந்தக் களைப்பிற்கு மேலும் களைப்பு சேர்க்கும் விதமாக எண்ணற்ற பாணங்கள் அவன் உடலை தைத்து இருந்தது. அப்போது ஜாம்பவான், தனது மூச்சை அடக்கி ஒன்றும் அறியமாட்டாது மயக்கம் கொண்ட மனத்தை உடையவனாக இருந்தான். அந்த நிலையிலும், யாரோ இருவர் தன்னை நெருங்கி வந்து கொண்டு இருப்பதை அவர்களின் காலடி ஓசையின் மூலம் அறிந்து கொண்டான்.
ஜாம்பவான் தன்னை யாரோ இரு வீரர்கள் நெருங்கி வருகின்றார்கள் என்பதை அறிந்தானே ஒழிய, அவர்கள் யார் என்பதை மட்டும் அவன் உணரவில்லை. உடனே அவன் அது குறித்து," வருபவன் நண்பனா (மித்திரன்)? இல்லை பகைவானா? ஒருவேளை மித்திரன் என்றால் அவன் மாருதியா? இல்லை விபீஷணனா? இல்லை சாக்ஷாத் ஸ்ரீ இராமசந்திர மூர்த்தியா? இல்லை அருமை லக்ஷ்மணனா? பகைவன் என்றால் துஷ்ட இந்திரஜித்தா? இல்லை அந்த இராவணனே வந்துள்ளானோ? ஆனால், எப்படிப் பார்த்தாலும், பகைவனாக இருக்க வாய்ப்பு இல்லை. காரணம் வானர சேனை வீழ்ந்தது கண்டு அப்போதே குதுகலத்துடன் பகைவர்கள் இருப்பிடம் சென்று விட்டார்களே! அதனால், இப்போது இங்கு வந்து இருப்பது நிச்சயம் நமது மித்திரர்களாகத் தான் இருக்கும்" என்று கூறிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தான். அதனால், அவன் தான் கொண்ட துன்பம் நீங்கினான்.
மறுபுறம் அனுமனும், விபீஷணனும் ஜாம்பவானின் முன்னே கண்ணீருடன் சென்று நின்றார்கள். தன் முன் வந்து நின்ற அவர்களை ஜாம்பவான் காணவில்லை. காணமுடியாதவாறு அவனுடைய கண்கள் முடி இருந்தன. ஜாம்பவானால் தனது கண்களை திறக்க முடியவில்லை. ஆதலால், அவன் அவர்களிடம்," எனது அருகே வந்து நின்று இருக்கும் நீங்கள் இருவரும் யார்?" என்று கேட்டான்.
ஜாம்பாவனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட விபீஷணன், ஜாம்பவான் நலமுடன் தான் இருக்கிறான். மேலும், அவனுக்கு எதுவும் நேர வில்லை என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அக்கணமே, அனுமன் ஜாம்பவானிடம்," ஐயனே! அனுமனாகிய நான் மித்திரன் விபீஷணனுடன் சேர்ந்து உம்மை வணங்குகிறேன்" என்றான்.
அது கேட்ட ஜாம்பவான்," வேதத்தின் பொருளான ஸ்ரீ இராமர் நலமா?" என்றான்.
அதற்கு அனுமான்," அவர் கண்கள் முடிய நிலையில், மூர்ச்சையாகிக் கிடக்கும் தம்பி லக்ஷ்மணன் அருகே துக்கத்தால் கண் மூடிக் கிடக்கிறார். மற்றபடி அவர் நலமே" என்றான்.
ஸ்ரீ இராமர் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி கேட்ட ஜாம்பவான் மறுகணமே மகிழ்ச்சி வெள்ளம் உடலில் பாய, சோர்வும் தளர்ச்சியும் நீங்க துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தான். அப்போது புன்முறுவலுடன் அனுமனை நோக்கி,” நல்ல செய்தி கொண்டு வந்தாய்! நீ வாழ்க!” என்று கூறி வாழ்த்தினான். பிறகு, மீண்டும் அவன் முகம் சோகத்தில் ஆட்பட அனுமனிடம் ," அஞ்சனை பெற்று எடுத்த செல்வமே! நீ சொன்னதெல்லாம் சரி! ஆனால், ஸ்ரீ இராமர் கண் விழித்த மாத்திரத்திலேயே, லக்ஷ்மணன் மெல்ல, மெல்ல பிரம்மாஸ்த்திரத்தால் மரணம் நோக்கிப் போய்க் கொண்டு இருப்பதை கண்டு துடிக்க மாட்டாரோ? லக்ஷ்மணன் இறந்தால் இராமனும் இறந்து விடுவாரே? ஏனெனில், இருவரது உயிரும் ஒன்றே! அதனை நீயும் கூட அறிவாய். இதில் இருந்து நாம் மீள வழி தேடவேண்டும் " என்றான்.
அது கேட்ட அனுமான்," ஐயனே! அதற்காகத் தான் நானும், விபீஷணனும் மதி நுட்பம் கொண்ட தங்களிடம் இது பற்றி ஆலோசனை கேட்க வந்துள்ளோம்" என்றான்.
உடனே ஜாம்பவான் வெகு நேரம் சிந்தித்தவாறு சிலை போல இருந்தான். மீண்டும், அவனது முகம் மலரத் தொடங்கியது. அப்போதே அனுமானுக்குத் தெரிந்து விட்டது, ‘ ஜாம்பவான் ஸ்ரீ இராமர் உட்பட, அனைத்து வானர சேனையின் துயர் நீங்க வழி ஒன்றைக் கண்டு பிடித்து விட்டார்’ என்று.
உடனே அனுமான், ஆவலுடன் ஜாம்பவான் சொல்வதை கேட்கத் தொடங்கினான். அப்போது ஜாம்பவான் அனுமானிடம்," அனுமனே! நான் சொல்வதை கவனமாகக் கேட்பாயாக. பிரம்மாஸ்த்திரத்தில் இருந்து வானர சேனையையும், லக்ஷ்மணனையும் மீட்க சிறந்த வழி ஒன்று உண்டு. அதற்கு நீ போய் உடனே சஞ்சீவினி மூலிகைகளை கொண்டு வா" என்றான்.
அனுமான், மேற்கொண்டு அந்த சஞ்சீவினி இருக்கும் இடம் மற்றும் அதன் தன்மை பற்றி ஜாம்பவானிடம் வினவினான்.
ஜாம்பவான் அது பற்றி அனுமனிடம் கூறத் தொடங்கினான்," அனுமனே! லக்ஷ்மணன் உட்பட எழுபது வெள்ளம் வானர சேனைகளையும் பாதுகாக்க நான் சொல்லும் வழியை விரைந்து செயல்படுத்துவாயாக. அதன் படி வலிமை உள்ளவனே! நீ உடனே ஒன்பதாயிரம் யோசனை தூரம் கடந்து சென்று இரண்டாயிரம் யோசனை தூரம் பரப்பளவு கொண்ட இமயத்தை அடைந்து, மேலும் அங்கு இருந்து பறந்து சென்று ஏமகூட மலைக்கு அப்பால் நிடதம் என்னும் சிறப்புப் பொருந்திய மலையையும் அடைந்து அதனையும் தாண்டிச் சென்றால் மேரு மலையைக் காண்பாய். அம்மலை அருவதாயிரம் யோசனை தூரம் தனது பரப்பளவை விரித்து காணப்படும். அதனையும் தாண்டிச் சென்றால் நீலகிரி என்னும் மலையை அடைவாய். அது இரண்டாயிரம் யோசனை தூரம் பரப்பளவு கொண்டது. மாருதியே! அதற்கும் அப்பால் நாலாயிரம் யோசனையில் மருந்துகள் உள்ள கரிய மலையாகிய சஞ்சீவி பருவதத்தைக் காண்பாய். அம்மலை, எழுபதாயிரம் யோசனை தூரம் பறந்து விரிந்து இருக்கும். அம்மலையிலே இல்லாத மூலிகைகளே இல்லை. அம்மலையிலே, இறந்தவர்களை உயிருடன் எழச் செய்யும் மருந்து ஒன்றும், உடம்பு துண்டு துண்டாகப் பிளவுபட்டுப் போனாலும் ஓட்டிச் சேர்ப்பதற்கு ஒரு மருந்தும், உடம்பிலே பாய்ந்த ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு மருந்தும், உருவம் மாற்றிவிட்டாலும் திரும்பவும் தமது உருவத்தையே பெறுமாறு செய்ய வல்ல உண்மையான மருந்து ஒன்றும் இருக்கின்றன. வீரனே! நீ அங்கே போய், அம்மருந்துகளை எல்லாம் சூரியன் உதயமாவதற்குள் கொண்டு வருவாயாக! அப்போது தான் நாம் இங்கு உள்ளவர்களை காப்பாற்ற இயலும்" என்று கூறி, அந்த மருந்துகளின் அடையாளங்களையும் சொன்னான்.
மீண்டும் ஜாம்பவான் வாயு குமாரனிடம்," மேற்சொன்ன அந்த நான்கு மூலிகைகளும், முன்பு தேவர்கள் பாற்கடலை கடையும் பொழுது மேல் எழுந்தவை. அவற்றைத் தீயவர்கள் கைக்குக் கிடைக்காதவாறு தேவர்கள் ஆராய்ந்து பாதுகாப்பாக வைத்து இருக்கின்றனர். வேதங்களின் நாயகனாகிய திருமால் முன்னொரு காலத்தில் தனது வாமன அவதாரத்தில் உலகை அளந்த பெருமாளாக வான் உயர நின்றபோது, நான் இந்த உலகத்தைப் பதினான்கு முறை சுற்றி வந்தேன் அல்லவா? அப்போது தான் அந்த சஞ்சீவி பருவதத்தை கண்டேன். கண்களை பறிக்கும் தேஜசுடன் அந்த மூலிகைகள் ஒளிர்ந்த காட்சி இன்றும் கூட எனது கண்களில் நிற்கிறது. ஆனால், அந்த மூலிகைகளை அவ்வளவு எளிதாக யாராலும் பறித்துச் செல்ல இயலாது, கணக்கற்ற தேவதைகள் அந்த மூலிகைகளை பாதுகாத்து வருகின்றன. அந்த தேவதைகளின் அனுமதி இல்லாமல், அந்த மூலிகைகளை தொடக் கூட யாராலும் இயலாது. அத்துடன் திருமாலின் சக்கரப் படையும் அந்த மலையை பாதுகாத்து வருகிறது. அதற்காக அனுமானே! நீ சங்கடம் கொள்ளத் தேவை இல்லை, நீ தர்மம், அதர்மத்தை ஜெயிக்க வேண்டியே அந்த மூலிகைகளைக் கொண்டு வரப் போகிறாய். அதனால், தெய்வங்கள் உன்னை தடுக்காது. மேலும், உன்னிடம் கோபமும் கொள்ளாது. அதனால் நிச்சயம் நீ வெற்றி வாகை சூடி வருவாய் " என்றான்.
ஜாம்பவானின் வார்த்தைகளைப் பொறுமையுடன் கேட்ட அனுமான், அக்கணமே அந்த மூலிகைகளை கொண்டு வர சித்தம் கொண்டான். உடனே, மலையை விடப் பெரிய உருவத்தை அடைந்தான். அவ்வாறு அனுமனைக் கண்ட போது, முன்பு திரிவிக்கிரம அவதாரம் எடுத்தத் திருமாலே வியந்து நின்றார். ஏன்? அச்சமயத்தில் நட்சத்திரங்களும், கிரகங்களும் கூட அவனுக்குக் கோத்துக் கொடுத்த முத்து மணிச் சரங்களைப் போலாயின. அவனுடைய ஒரு தோலுக்கும் மற்றொரு தோலுக்கும் உள்ள அகலம் ஆயிரம் யோசனை தூரம் என்றும் சொல்ல முடியாததாயிற்று. ஆம், அதனைக் காட்டிலும் அதிக தூரம் கொண்டு இருந்தது. அவன் வைத்துள்ள தனது காலடியைப் பெயர்த்து வேறு ஒரு அடி வைக்க இலங்கையில் இடம் இல்லாமல் போய் விட்டது. அவன் தனது பெரிய கைகளை வீச உலகத்தின் திசைகளும் போதவில்லை. அவ்வாறு பேர் உருவம் கொண்ட அனுமான், தனது வாலை வளைத்து, கைகளை உயர்த்தித் தூக்கி, வாயையும் சிறிது அகலமாக ஆகும் படி மடித்து, பெருமை பொருந்திய திருவடிகளைத் தரையில் ஊன்றி, மார்பை விரித்து, கழுத்தினையும் சுருக்கிக் காட்டி இலங்கை நகரமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி வானத்தை நோக்கி எழுந்தான்.
அந்தக் கணத்தில் பெரிய மழை மேகங்கள் கிழிந்தன; நீண்ட பரந்து கிடந்த கடல் பிளவு பட்டது; கிழக்கிலும், மேற்கிலும் நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அது மட்டுமா? அனுமன் வானத்தை நோக்கி எழுந்த வேகத்தில், கடல் நீரானது , வான் உயர ஆழிப் பேரலை போல எழுந்தது. அதனால், உலகத்தில் உள்ள ஜீவன்கள் எல்லாம் அலறின.
அவ்வாறாக கடல் முன்னே நிமிர்ந்து செல்லவும், கால் பின்னே விரைந்து செல்லவும் காற்று போல விரைந்து சென்றான் அனுமன். கண் இமைக்கும் நேரத்தில் சூரிய, சந்திர மண்டலத்தைக் கடந்து சஞ்சீவி மலை இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டு இருந்தான் மாருதி. அவ்வாறு, பறந்து சென்று கொண்டு இருந்த அனுமனின் மீது அனைத்து தேவர்களும், முனிவர்களும், மும்மூர்த்திகளும் மலரையும் அத்துடன் சந்தனப் பொடிகள், சாந்துப் பொடிகள் உட்பட அனைத்து வித வாசனைப் பொடிகளையும் தூவி மகிழ்ந்தனர்.
அவ்வாறு சஞ்சீவி மலையை நோக்கிப் பறந்து சென்ற வாயுபுத்திரன், இடையில் குறிக்கிட்ட இமயமலையை அடைந்தான். அப்போது முக்கண் கொண்ட ஈசன் அனுமனின் நல்ல எண்ணத்தை ஆசிர்வதித்தார். அத்துடன் உமா தேவியிடம்," இதோ இந்த அனுமான் ஸ்ரீ இராமனின் சேவைக்காகவே விரைந்து சென்று கொண்டு இருக்கிறான். இப்படிப் பட்ட இவனை நீயும் ஆசிர்வதிப்பாயாக" என்றார். அதன் படி உமா தேவியும் அனுமனை வாழ்த்தினார்கள். அக்கணமே, அனுமான் உமாதேவியை வணங்கினான்.
மேலும், உமா தேவியின் ஆசிர்வாதம் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் அனுமான் மேலும் தனது வேகத்தைக் கூட்டியவாறு நீலகிரி மலையை அடைந்தான். அதன் அழகைக் கண்டு வியந்த அனுமான். மேலும், விரைந்து சென்று சஞ்சீவி மலையை அடைந்தான். அப்போது ஜாம்பவான் சொன்ன மூலிகையின் அடையாளங்கள் அங்கு காணப்படும் அனைத்து மூலிகைகளுக்கும் பொருத்தியதால், என்ன செய்வது என்று திகைத்தான் அனுமான். அவனுக்கு சஞ்சீவி மூலிகை எது என்று அறியாத காரணத்தால், அந்த மலையையே பெயர்த்து எடுத்துச் செல்ல முடிவு செய்தான்.
அதன்படியே அந்த சஞ்சீவி மலையை தரையுடன் பெயர்த்து எடுத்தான் சிரஞ்சீவி அனுமான். அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் அம் மூலிகைகளை அது நாள் வரையில் காத்து வந்த தேவதைகள் யாவும் நிலை கலங்கினர். ஆனால், சிறிது நேரத்திற்குள் அவைகள் மனம் தேறித் துணிவுடன் அனுமனை வந்து தடுத்து நிறுத்தி, வெகு கோபத்துடன்," நீ யார்? உன் எண்ணம் என்ன? சொல்!" என்று வினவின.
அந்த தேவதைகள் யார் என்று தனது ஞானத்தினால் அறிந்த அனுமான். அவர்களை வணங்கித் துதித்து தன்னைப் பற்றியும், தான் வந்த நோக்கத்தைப் பற்றியும் கூறினான். அக்கணமே, அந்த தேவதைகள் சத்தியத்தை உணர்ந்த படியால் அனுமனிடம்," ஐயனே! மருந்துகளினால் உனக்கு வேண்டிய செயலைச் செய்து விட்டு, அவற்றை பிறகு பத்திரமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுவாயாக!" என்று சொல்லி விட்டு அவனையும் வாழ்த்தி மறைந்தன.
பிறகு, திருமாலின் சக்கராயுதம் அனுமனுக்குக் காட்சி கொடுத்து விட்டு அதுவும் மறைந்து போயிற்று. தெய்வங்களும் சக்கராயுதமும் மறைந்து போனதும் அனுமன், வயிரம் போலுறுதியான தனது தோள்களினால் அந்த மலையினைப் பூமியில் இருந்து வேரோடு தோண்டி எடுத்துக் கையில் ஏந்திக் கொண்டான். அடுத்த கணம், தாமதிக்காமல் இலங்கையை நோக்கி வாயு தேவனையே மிஞ்சும் வேகத்தில் பறந்தான்.
அனுமனின் செயல் அப்படி இருக்க, இலங்கையில் நடந்த நிகழ்ச்சிகளை இனி காண்போம். அனுமன் சஞ்சீவி மலையை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற பின்பு, ஜாம்பவானும் விபீஷணனும் விரைந்து சென்று ஸ்ரீ இராமபிரானை அடைந்தார்கள். இராமரின் அருகே வந்து சேர்ந்த அவ்விருவரும், மெல்லத் தங்களுடைய கைகளினால் அவருடைய திருவடிகளைப் பிடித்தார்கள்.
அதனால் ஸ்ரீ இராமர், உணர்வு நிலைக்குத் திரும்பி மெல்ல தனது கண்களைத் திறந்தார். அக்கணம், கண்களில் நீர் வழிய, தன்னை வணங்கிய நிலையில் ஜாம்பவானும், விபீஷணனும் நின்று கொண்டு இருப்பதைக் கண்டார். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் ஸ்ரீ இராமர் விபீஷணனிடம்," விபீஷணா! நான் முன்பு செய்யச் சொன்ன செயலை செய்து முடித்தாயா? துன்பம் இல்லாமல் இருக்கின்றாயா?" என்று கேட்டார்.
பின்பு, விபீஷணனின் அருகே நின்று இருந்த ஜாம்பவானைப் பார்த்து ஸ்ரீ இராமர்," ஆவி வரப் பெற்றாயா?" என்று அருள் கொண்டு கேட்டார்.
கடைசியில் அவர், அவர்கள் இருவரையும் கண்களில் கண்ணீர் பெருக ஒன்றாக நோக்கி," எனது நிலையைக் கண்டீர்களா? எனது தம்பியையும் நண்பர்களையும் இழந்து விட்டு, அதன் பின் இனிமேல் மனம் வெதும்பிச் செய்கின்ற போரிலே அரக்கர்களை எல்லாம் வேரோடு அழித்து ஒழித்து விட்டு, எனது அம்பினால் இராவணனுடைய ஆவியையும் போக்கித் தேவர்களுக்கு உதவி புரிந்து பின்பு, நான் அடையப் போவது என்ன? எனது அருமைத் தம்பியே இறந்து போன பிறகு, எனக்கு எவர் தான் எதற்கு? அளவற்ற கீர்த்தி தான் எதற்கு? அறந்தான் எதற்கு? ஆண்மை தான் எதற்கு? நல்வினை தான் எதற்கு? மேலும், எனது தம்பியின் சாவினைக் கண்ட பின்பும் நான் உயிருடன் இருப்பேனாயின் என்னை விட உலகத்தில் ஒரு வஞ்சகன் இருப்பானோ? அதனால், உலகம் என்னைப் பழிக்காமல் இருக்க நான் உயிர் துறப்பதே நல்லது. அதை விடுத்து நான் செய்ய வேண்டிய செயலும் வேர் ஒன்று உண்டோ?" என்று கூறி முடித்தார்.
ஸ்ரீ இராமபிரான் அப்படிச் சொன்னதைக் கேட்டவுடனே, ஜாம்பவான் அவருடைய திருவடிகளை வணங்கி, " உலகங்களை எல்லாம் ஆள்பவரே! உம்மிடம் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. யாராலும் தெரிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவரே! உம்மை நீர் அறியாதவர் போல் இருக்கின்றீர். அடியேன் உம்மை முன்பே அறிவேன். அதைப் பற்றிச் சொல்லுதல் நல்லதில்லை. ஏனென்றால், தேவர்களின் எண்ணத்துக்கு அதனால் குறைவு உண்டாகும். மேலும் ஐயனே! பகைவன் தொடுத்த அஸ்த்திரம் அது வெளிப்படுத்திய கொடும் வெப்பத்தால் பிரம்மாஸ்த்திரம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மேலும், அந்த அஸ்த்திரம் யார் மீது ஏவப் பட்டாலும், அவர்கள் அழிவது நிச்சயம். அப்படி இருக்க, இந்திரஜித்து " இராமலக்ஷ்மணர்களைக் கொன்று வா" என்று கூறியும் பிரம்மாஸ்த்திரம் லக்ஷ்மணனை தாக்கியதே தவிர, உம்மை ஒன்றும் செய்யாமல் ஒழிந்து நீங்கியது. இதைக் காட்டிலும் வேறு மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஒன்று என்ன வேண்டுமோ? இதில் இருந்தே தெரியவில்லையா தாங்கள் சாமான்ய மனிதர் அல்ல என்பது. அப்படி இருக்க சாமான்ய மனிதர்கள் போலத் தாங்கள் புலம்புவது சரியோ? அது மட்டும் அல்ல, நான் உம்மிடம் இன்னொரு சந்தோஷமான விஷயத்தைப் பற்றிக் கூற சித்தம் கொண்டு உள்ளேன். அவ்விஷயம் யாதெனில், பெருந்திறமை படைத்த அனுமன், இப்போது உணர்வு தெளிந்து எழுந்தான். அவனிடம் நான் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கக் கூடிய மருந்தைக் கொண்டு வரும் படிக் கூறினேன். அதற்கு உடன் பட்டு அவன் வடக்குப் பக்கம் விரைந்து சென்று இருக்கிறான். இமயமலைக்கும் மேரு மலைக்கும் அப்பால் சென்று, சஞ்சீவி பருவதத்தில் உள்ள மருந்துகளை எடுத்துக் கொண்டு, அனுமான் இனியொரு கணத்துக்குள் இங்கே வந்து சேர்வான். அதனால் உமது துன்பம் நீங்கும். மேலும், அந்த அபூர்வ மூலிகைகள் இறந்தவர்களையும் பிழைக்க வைக்கக் கூடிய தன்மை கொண்டவை அப்படிப் பட்ட மூலிகைகளை லக்ஷ்மணன் உட்பட நமது படையினர் அனைவருக்கும் கொடுத்து அவர்களை முன்போலவே பழைய நிலைக்குக் கொண்டு வருவேன். அதனைத் தாங்களும் கண்டு மகிழத்தான் போகின்றீர்! " என்று ஆறுதல் கூறினான்.
ஜாம்பவானுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்தார் ஸ்ரீ இராமர். மேலும், ஜாம்பவானிடம் " அனுமன் அந்த மூலிகைகளை நிச்சயம் கொண்டு வருவான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை" என்று கூறி முடித்தார்.
ஸ்ரீ இராமபிரான் அப்படிச் சொன்னது தான் தாமதம். வட திசையில் இருந்து பெரும் ஒலி எழுந்தது. அக்கணமே சண்ட மாருதம் தோன்றி வடதிசையில் வீசியது. அதனால், அப்போது பெரும் கலக்கம் உண்டானது. மேகங்கள் கூட ஒன்றோடு, ஒன்று மோதிக் கொண்டன. கடல்கள் ஆர்பரித்தன. அப்போது எழுந்த பெரும் ஒலியால் பூமி பிளந்ததோ என்று வானில் நின்று இருந்த தேவர்களும் கருதினர். அதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக, அவர்களும் கூட அவ்விடம் விட்டு ஓடினர்.
அப்போது ஸ்ரீ இராமர், ஜாம்பவான், விபீஷணன் ஆகியோருடைய துயரத்தைத் தீர்க்கும் பொருட்டு மாருதி வானத்தில் நின்ற படி பெருத்த ஆரவாரத்தை செய்தான். வாயு தேவன் ஒரு காலத்தில் எவ்வாறு திரிகூடமலையை கொண்டு வந்தானோ, அது போலவே இன்று அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு வானத்தில் விரைந்து வந்தான்!
சண்டமாருதமும் பேரொளியும் தோன்றியதைக் கண்டு ஜாம்பவான்," இதோ, அனுமான் வந்து விட்டான்!" என்று சொல்லத் தொடங்கினான். அவனுடைய சொற்கள் முடியும் முன், அனுமன் அந்த இடத்திலே வந்து தரையிலே தனது கால்கள் பதிய நின்றான்.
வஞ்சகருடைய ஊரிலே வருவதற்கு சஞ்சீவி மலை உடன் படவில்லை. ஆகவே, அது வானில் தானே நின்றது! அந்தக் கணத்தில் வாயு பகவான் மகிழ்ச்சியுடன் விரைந்து வந்து, சஞ்சீவி மலையில் உள்ள மருந்துகளின் மேல் படிந்து, அவைகளின் மனத்தைத் தன்னோடு வாங்கிப் போர்க்களப் பூமியிலே வீசினான். இறந்த தமது உடலின் மீது அந்த மருந்து காற்று பட்டதும், பிரம்மாஸ்த்திரத்தினால் மரணம் உண்டானதால் சுவர்கத்தை அடைந்து தேவர்களால் போற்றப் பட்ட சூரிய குமாரனான சுக்கிரீவனும் மற்றுமுள்ள வானரர்களும் மேன்மையும் பெரும் வலிமையும் அழகும் பெற்றவர்களாய், யமனை வென்று தம்முருவையும் கூடினார்கள்.
போர்களத்திலே கிடந்த இறந்த அரக்கர்களுடைய உடலை எல்லாம் இராவணன் கட்டளையிட்ட மருதன் கடலிலே கொண்டு சென்று போட்டு விட்டதால், அந்த அரக்கர்கள் எல்லோரும் சந்சீவினியால் பிழைக்காதவர்கள் ஆனார்கள்! ஆனால் அவர்களைத் தவிர, கடலின் மேலே காணப்பட்ட மரக்கலம் முதலியனவும் உய்ந்து வாழ்வு பெற்றன. அப்படி இருக்க, வானரர்கள் உய்ந்தது பற்றிக் கூற வேண்டுமோ?
இளையபெருமாளின் மேலும் மருந்து காற்று பட்டது. உடனே அவனுடைய உடம்பை விட்டு நெடிய அம்புகள் கழன்றன. அடுத்த நொடி, லக்ஷ்மணனின் செந்நிறக் கண்கள் சுழலத் தொடங்கின. லக்ஷ்மணன் மெல்ல உணர்வு நிலைக்கு வந்தான். அக்கணம், தேவர்களும் அவனை வாழ்த்தினார்கள்.
மறுபுறம், வானர வீரர்கள் எல்லோரும் உயிர் பெற்று எழுந்ததும், ஏழ் கடல்களையும் விட மிகுதியான ஆரவாரம் செய்தார்கள். அவ்வொலி தன் செவியிலே பட்டவுடனே, தேவர்கள் வாழ்த்துகின்ற ஒலியைக் கேட்டு திருமால் யோக நித்திரையில் இருந்து எழுவது போல இளையபெருமாள் எழுந்து நின்றான்.
தம்பி உயிருடன் எழுந்ததைக் கண்டதும் இராமபிரான் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய தோள்கள் களிப்பால் பூரித்தன. அவர் அது வரையில் அனுபவித்தக் கொடிய துன்பம் எங்கோ ஓடிச் சென்று மறைந்தது. அது கண்ட தேவ மகளிரும் கூட மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுத் திளைத்தனர்.
அப்போது பிரம்மாஸ்த்திரம் ஸ்ரீ இராமபிரானை வலம் வந்து வணங்கி முன்னே நின்று," நீர் எப்போதும் நீங்காத சத்தியத்தைத் தந்தீர். அது உமக்குப் பெருமையே!" என்று சொல்லி விட்டு மறைந்து போயிற்று.
பிரம்மாஸ்த்திரம் தம்மிடம் விடை பெற்றுச் சென்றதும் இராமபிரான், தமது துயரம் நீங்கவே தூய அன்பினால் நீர் ததும்புகின்ற கண்களை உடையவராகி அனுமனை அன்புடன் தழுவிக் கொண்டார். அவ்வாறு மனமுருகித் தன்னை இராமர் தழுவிக் கொண்டவுடனே, அனுமன் அவருடைய பாதங்களிலே விழுந்து வணங்கி எழுந்தான்.
அக்கணம் அனுமனை நோக்கி ஸ்ரீ இராமர் ," அனுமனே நீ லக்ஷ்மணனுக்கு மட்டும் அல்ல, அவனை மரணத்தில் இருந்து மீட்டு எனக்கும் உயிர் தந்து உள்ளாய், அதன் மூலம் நீ எம்மை குலத்தோடு காத்து அருளினாய். எனக்கு இன்னொரு பிறப்பு தந்து தாய்க்கு சமமாக காணப்படுகிறாய். நீ என்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக! " என்றார்.
பிறகு ஸ்ரீ இராமர் அனுமனை வாழ்த்திய பின்னர் மற்ற வானர வீரர்களும் நடந்த விவரங்கள் அனைத்தையும் அறிந்து அனுமனை சூழ்ந்து நின்று வணங்கி வாழ்த்தினார்கள். ஸ்ரீ இராமபிரான் போன்ற புகழ் உடையவர்கள் மத்தியில் வைத்து மற்ற வானரர்கள் அனுமனைப் புகழ்ந்ததால் , அனுமான் சிறிதே வெட்கம் கொண்ட மகிழ்ச்சிக்கு ஆட்பட்டான்.
ஜாம்பவான் அப்போது அனுமனைப் பார்த்து, " எல்லையற்ற வலிமை உடையவனே! நீ கொண்டு வந்த இந்த சிறந்த மருந்து மலை, எக்காரணம் கொண்டும் பகைவர்களின் வசம் போய் சேராதபடி பத்திரமாக அது முன்பு இருந்த இடத்திலேயே கொண்டு சென்று வைத்து விட்டுத் திரும்பி வருவாயாக!" என்றான்.
ஆண்மையில் சிறந்த மாருதி," ஜாம்பவான் சொன்னது உண்மையே!" என்று சொல்லிவிட்டு, ' ஒரு நாழிகையில் சென்று திரும்பி வருவேன்' என்று தன் மனத்தில் எண்ணி, தெய்வத் தன்மை பொருந்திய அந்தப் பெரிய சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு, விரைந்து வட திசை நோக்கி வானத்தில் எழுந்து சென்றான்!