மகுட பங்கப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
மகுட பங்கப் படலம்
(இராவணன் முதலியோர் வானரப் படைகளைக் கண்ணுற்றபோது, இராமபிரான் விபீஷணனுடன் சுவேல மலை மீதிருந்து அவர்களைக் காண்கின்றான். இவன்தான் இராவணன் என விபீஷணன் சொல்லி முடியும் முன், இராவணனை நோக்கிச் சுக்கிரீவன் பாய்ந்து விடுகின்றான். இருவரும் கைகலக்கின்றனர். சுக்கிரீவனைக் காணாது இராமபிரான் சோகப்படுவதும். இராவணன் முடிமணிகளைப் பறித்துக் கொண்டு சுக்கிரீவன் மீண்டு வருவதும், இராமன் மகிழ்ச்சியும், சுக்கிரீவன் பணிவுரையும் விபீஷணன் பாராட்டுவதும், இராமன் பாராட்டுவதும் இப்படலச் செய்திகள் ஆகும்)
இலங்கை நகரத்து அரண்மனையின் கோபுரத்தின் மீது நின்று கொண்டு இராவணன், சாரணனிடம் வானரர்களைப் பற்றி விசாரித்தறிந்து, அவர்களை இகழ்ச்சியாகக் கூறியபோது...
சுவேல மலையின் உச்சியில் இலங்கைக் காணுமாறு நின்று இருந்த இராமபிரான், இராவணனையும் அவனது துணை அரக்கர்களையும் கண்டார். அவர்களைப் பற்றி உடனே அறிந்து கொள்ள விரும்பினார். தமது பக்கத்தில் நின்று இருந்த விபீஷணனை நோக்கி," நமது சேனையைப் பார்ப்பதற்காக அதோ இலங்கை நகரத்து அரண்மனை கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு இருக்கும் பகைவர்களை யார் யார் என்று எனக்குத் தெரிவிப்பாய்! " என்று கேட்டார் இராமர்.
அவ்வாறு கேட்டவுடன்," ஐயனே! அதோ அந்தக் கோபுரத்தின் உச்சியில் கிலோத்தமை போன்ற தேவ மகளிர் சூழ நின்று கொண்டு இருக்கிறானே அவன் தான் தனது குலத்தை அழிக்கும் பொருட்டு சீதையை சிறை எடுத்துச் சென்ற இராவணன் ஆவான்" என்று விபீஷணன் கூறி முடிப்பதற்குள் அருகில் இருந்த சுக்கிரீவன் " இராவணன்" என்ற பெயரைத் தனது காதுகளால் கேட்ட மாத்திரத்திலே கொதித்துப் போய், தனது கண்களில் இருந்து தீப்பொறிகள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டுச் செல்ல, சுவேல மலையின் உச்சியில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் இராவணன் நின்று இருந்த மாளிகையின் உச்சிக்குத் தாவினான். அக்கணமே, வெகுண்டு இராவணன் மீதும் பாய்ந்தான். சுக்கிரீவன் தன் மீது பாய்ந்த வேகத்தில் இராவணன் தடுமாறிக் கீழே விழுந்தான். அது கண்டு, அச்சமயத்தில் இராவணனை சூழ்ந்து இருந்த பெண்கள் அனைவரும் பயந்து அலறி ஓடினார்கள்.
இராவணனுக்கு சில கணங்கள் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பின்னர், சூதாரித்துக் கொண்டு சுக்கிரீவனைப் பார்த்தான். அக்கணமே, " இவன் தாக்கத் தான் நாம் கீழே விழுந்துள்ளோம்" என்று உணர்ந்தான். அப்போதே இராவணனின் கண்களில் தீப் பொறி பறந்தது. சுக்கிரீவனை நோக்கி கோபித்தக் குரலில்," நீ இப்பொது இங்கே வந்த காரியம் என்ன?" என்று கேட்டான்.
அப்படி இராவணன் கேட்ட அளவில் சுக்கிரீவன் அவனுக்கு மறுமொழி சொல்லாது, தாவி அவன் எதிரே சென்று, பெரிய மலைகள் எனத் திகழும் அவனது இருபது தோள்களும் பதை, பதைக்க ஓங்கி ஒரு குத்து குத்தினான். அந்தத் தாக்குதலால் இராவணன் மேலும் கோபம் கொண்டான். தனது இருபது கைகளையும் குவித்து வானர அரசன் சுக்கிரீவனை ஓங்கி ஒரு அடி கொடுத்தான். உடனே சுக்கிரீவனின் உடம்பில் இருந்து ரத்தம் பெருகியது. சுக்கிரீவனும் முன்பை விட அதிகம் சினம் கொண்டவனாக இராவணனை தாக்க, இருவருக்கும் இடையில் துவந்த யுத்தம் வெகுவாக நடக்கத் தொடங்கியது.
இராவணன் மறுபுறம் மதம் கொண்ட யானையைப் போல சுக்கிரீவனை போட்டுத் தரையில் தேய்த்தான். கால்களைப் பிடித்து சுற்றி சுக்கிரீவனின் அறிவு மயங்க தூக்கி எறிந்தான். மேலும் பல இடங்களில் அடித்து சுக்கிரீவனைக் கும்மித் துவைத்தான். அதனால், அதிக அளவில் சுக்கிரீவனின் உடலில் இருந்து ரத்த ஆறு வெளியேறியது.
ஆனால், சுக்கிரீவனோ ஸ்ரீ இராமனின் நாமத்தை உச்சரித்து புத்துயிர் பெற்று இராவணனை திரும்ப தாக்கத் தொடங்கினான். மேலும், அவன் இராவணனின் முகத்தில் குத்திய குத்தில், இராவணனின் குகை போன்ற வாயில் இருந்து இரத்தம் வடியத் தொடங்கியது. அதனால், ஆத்திரம் அடைந்த இராவணன், சுக்கிரீவனின் தலையைப் பிடித்து தரையில் வேகமாக மோதினான். அப்போது, சுக்கிரீவன் தனது நகங்கள் கொண்டு இராவணனின் மேனி முழுவதும் கீறினான். அதனால், இராவணன் சுக்கிரீவனை விட்டு, விட உடனே மீண்டும் அவன் மீது பாய்ந்த சுக்கிரீவன் இராவணனின் கால்களை மிதித்து அவனது இருபது கரங்களையும் முறுக்கினான். அப்போது,அந்த வலியைத் தாங்க முடியாத பெரும் பலம் கொண்ட இராவணன் மிகவும் கோபம் அடைந்து தனது அரக்க பலம் முழுவதையும் பயன்படுத்தி சுக்கிரீவனை அகழிகையில் தள்ளி விட்டான். ஆனால் சுக்கிரீவனோ, சமுத்திரம் போன்ற அந்த அகழிகையில் இருக்கும் உயிர் பறிக்கும் நீர்வாழ் விலங்குகளைக் கொன்று மீண்டும் எழுந்து வந்து துணிச்சலுடன் இராவணனை எதிர்த்தான்.
அப்போது இராவணன்," நீ வாலியின் தம்பி தான் என்பதை இந்தப் பெரும் அகழிகையில் இருந்து மீண்டு வந்து நிரூபித்து விட்டாய். எனினும், சுக்கிரீவா! நீ என்னை எதிர்த்து இங்கு வந்துப் பெரும் தவறு செய்து விட்டாய். இனி இங்கிருந்து நீ உயிருடன் திரும்பி இராமனைக் காணப் போவதில்லை " என்று கூறிய படி வெகுவாக சுக்கிரீவனின் முகத்தை குத்தினான். அக்கணமே, சுக்கிரீவனுக்கும், இராவணனுக்கும் கடும் போர் மீண்டும் மூண்டது. அவர்கள் நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலும் மாறி, மாறி குத்திக் குமுறிக் கொண்டார்கள். அப்போது அந்த அதிர்ச்சியில் இலங்கையில் உள்ள பல மரங்கள் வேறுடன் சாய்ந்தது, நிலங்கள் பிளவுபட்டன, இலங்கையின் நெடிய சுவர்கள் பிளந்தன.
அவ்விருவரும், மேலும் மேலும் சினம் கொண்டு சளைக்காமல் போர் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் போர் செய்யும் வேகத்தால், யார் அரக்கன் யார் வானரன் என்று அறியமாட்டாமல் அரக்கர்கள் அப்போரைக் கண்டு மனம் சோர்ந்தார்கள்!
இது இப்படி இருக்க, 'இலங்கை நகரத்து அரண்மனை கோபுரத்தின் உச்சியில் அரம்பையர்களின் நடுவே நிற்பவன் தான் இராவணன்!' என்று விபீஷணன் கூறியவுடனே, அவன் மீது பாய்ந்து சென்ற சுக்கிரீவன் இன்னும் திரும்பி வராததைக் கண்டதும், இராமபிரான் மிகுந்த கவலை கொண்டார்." நான் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த தொழில்கள் யாவும் உன்னோடு முடிந்து விட்டனவா? என்னுடைய உணர்வுடன் ஒத்த உணர்வுகளை உடையவனே! எனது ஒப்பற்ற உயிர் நண்பனே! உன்னை அன்றி நான் மட்டும் உயிருடன் இருப்பேனா? உனது கோபம் எல்லாவற்றையும் கெடுத்து விட்டதே! கொடிய இராவணன் இரக்கமற்றவன் மட்டும் அல்ல, பலசாலியும் கூட! அவன் இனி தனது கைகளில் சிக்கிய உன்னைத் தப்பிக்க விடுவானோ? நீ இல்லாமல் நான் ஒருவேளை ஏழு உலகங்களையும் வெற்றி கொண்டாலுமே, அதனால் எனக்கு என்ன பயன்? எனவே, இப்போதே நானும் இந்த வாழ்க்கையைத் துறந்து விடுகிறேன். என்னால், நீ இறந்த செய்தியைக் கேட்க முடியாது" என்று சுக்கிரீவனை நினைத்து புலம்பித் தவித்தார் இராமபிரான்.
அவ்வாறு இராமபிரான் வருந்திக் கொண்டு இருக்கையில், சுக்கிரீவன் இராவணனது மகுடத்தில் உள்ள மணிகளைத் தன் வலிமையால் பறித்துக் கொண்டு அவர் எதிரே வந்து நின்றான்! தான் பறித்து வந்த மணிகளை இராமரின் திருவடிகளிலே சமர்பித்து, தொழுது நாணங்கொண்டு சுக்கிரீவன் சற்றுத் தள்ளி பக்கத்திலே நின்றான். அந்தக் கணத்தில் இராமபிரான், சுக்கிரீவன் திரும்பி வந்ததால் ஆனந்தக் கண்ணீர் கொண்டார். உடம்பில் இருந்த புண்களில் இருந்து ரத்தம் வழிய நின்று கொண்டு இருந்த சுக்கிரீவனை, இராமபிரான் அன்போடு இறுகத் தழுவி, இராவணனைத் தீண்டியதால் அவனுக்கு உண்டான இழிவும் போகுமாறு, தம்முடைய பெரிய கண்கள் என்கின்ற தாமரைத் தடாகத்தின் நீரினால் குளிப்பாட்டினார்!
பிறகு சுக்கிரீவனிடம்," சுக்கிரீவா! எதையும் யோசித்து நிதானித்து செய்பவன் நீ. அப்படிப் பட்டவனான நீ இப்படி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது சரியோ! நீ ஏன் எனது அனுமதி பெறாமல் இராவணனை தாக்கினாய்?. கொடிய இராவணன் உன்னை எதாவது செய்து இருந்தால் நாங்கள் அனைவரும் என்ன நிலைக்கு தள்ளப்பட்டு இருப்போமோ? நீ இல்லாமல் இந்த வானரப் படைகளை யார் வழி நடத்திக் கொண்டு செல்வார்கள். உனது முக்கியத்துவத்தை அறியாமல் போய்விட்டாயே? உனக்கு ஏதேனும் இராவணனால் கெடுதல் நடந்து இருந்தால், அதன் பின்னர் நான் அந்தக் கொடிய இராவணனை வெற்றி கொண்டு தான் என்ன பயன்? நல்லவேளை தெய்வத்தின் துணையால் நீ இப்போது நல்ல படியாக வந்து விட்டாய். எனது நட்புக்குரியவனே! நீ இல்லாமல் நான் எப்படித் துடித்துப் போனேன் தெரியுமா? அதனால் நீ இனிமேல் என்னைக் கேட்காமல் இது போன்ற விளையாட்டுத் தனமான காரியத்தில் தயவு செய்து இனியாவது நீ ஈடுபடாமல் இரு" என்றுக் கூறி முடித்தார்.
அப்போது சுக்கிரீவன் ஸ்ரீ இராமபிரானிடம்," எம்பெருமானே! ஐயனே! அன்று இராவணனை ஜடாயு எதிர்த்து தீரத்துடன் போர் புரிந்தார். அது கேள்விப் பட்ட பிறகும், என்னால் அது போன்ற ஒரு வீரச் செயலை இதுவரையில் செய்ய முடியவில்லை எனக்கு ராஜ்யத்தை மீட்டுத் தந்த உயிர் நண்பராகிய உமது பகையை நான் முடித்து இருக்க வேண்டும். ஆனால், நான் அப்படியும் செய்யவில்லை. இவ்வாறு பூமிக்கு பாரமாக வாழ்ந்து வருகிறேன். இந்தக் குறையை போக்குவதற்காகத் தான் இப்போது இராவணின் மீது பாய்ந்து அவனது முடிமணிகளைப் பறித்துக் கொண்டு வந்தேன். அன்று உமது பெருமை பெற்ற தூதுவனும், பண்டிதனுமான அனுமன், தான் நிகழ்த்திய கொடிய போரில் தமது வேல் வலிமையைக் காட்டியவர்களுக்கும், வில் வலிமையைக் காட்டியவர்களுக்கும் மாறாகத் தனது வாலின் வலிமையைக் காட்டி வந்த வளஞ்சிறந்த நகரான இலங்கையிலே, என்னுடைய கால் வலிமையைக் காட்டி வந்தேன். எனது கை வலிமைக்கு எல்லையுண்டோ?" என்று சொன்னான்.
சுக்கிரீவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த விபீஷணன் உடனே," நண்பரே! நீர் இராவணனின் மணி முடியில் இருந்து வீரத்துடன் ரத்தம் சிந்தி பறித்துக் கொண்டு வந்த முடிமணிகளைக் காட்டிலும் உலகத்தில் வேறு ஏதேனும் விலை உயர்ந்த பெருமைக்கு உரிய பொருட்கள் தான் உண்டோ? நீர் செய்த இந்தச் செயலால் இராவணன் என்னும் தீயவனின் சிறந்த புகழை எல்லாம் வேரோடு பறித்து விட்டீர்! ஆதிசேஷனது பணாமணிகளைப் பறிக்க விரும்பினாலும், தனது கால்களாலேயே அவற்றைப் பறிக்க வல்லவன் இராவணன். அவனுடைய வலிமையை ஆலோசிக்குமிடத்து, அவனது மகுடங்களில் பதிந்து உள்ள சிறந்த மணிகளை வலிமை உடையவனே நீ பறித்துக் கொண்டு வந்து கொடுத்த வீரச் செயலை ரிஷப வாகனம் கொண்ட சிவ பெருமானால் தான் செய்ய முடியுமோ? இதைக் காட்டிலும் பெருமை தரும் செயல் தான் இந்த உலகத்தில் உள்ளதோ?" என்று அவனைப் பார்த்துப் பரவசம் அடைந்து கூறினான்.
விபீஷணன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இராமபிரான்," பெரும் அறிஞர்கள் மற்றும் வீரர்கள், சிறந்த எந்த ஒரு அறிய செயலைச் செய்தாலும், அதைப் பற்றித் தாம் என்ன சிறப்பாக பெரிய செயலைச் சாதித்து விட்டோம் என்று தான் கூறுவார்கள். அதன்படித் தான் சுக்கிரீவனும் இப்போது பெருமை பாராட்டாமல் அமைதியாக நிற்கிறான். ஆனால், உண்மையில் இந்தச் சுக்கிரீவன் இன்று செய்து காட்டிய செயல் வெற்றிக்கு உரிய வீரச் செயல் தான். அது மட்டும் அல்ல, நண்பன் சுக்கிரீவன் செய்த வீரச் செயலை உலகத்தில் அவனுக்கடுத்து திருமால் மட்டுமே செய்யக் கூடியவர்" என்று சுக்கிரீவனைப் புகழ்ந்தார்.
அப்போது சூரியன்," தனது புதல்வன் இராவணனின் மகுடமணிகளைப் பறித்தான். இதனால் என்ன நேருமோ?" என்று அஞ்சுபவனாகி, இராவணன் கண்களுக்கு அகப்படாமல் மறைபவன் போல, வலிய தனிப்பட்ட அந்த மலைக்கு அப்பால் விரைந்து சென்று மறைந்தான்!
இரவு வந்தது கண்டு இராமபிரான், தன்னிருக்கைக்கு சுக்கிரீவனது வெற்றியை மனத்தில் கொண்டாடியவராகச் சென்றார்!
அதேசமயம்...
ஒரு போதும் அத்தகைய இழிவைப் பெறாத இலங்காதிபதியான இராவணன், சுக்கிரீவனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தேவர்கள் கண்டதை எண்ணி வெட்கப்படுகின்ற நெஞ்சத்தோடும், அன்று அங்கிருந்த பெண்கள் பார்க்கும் பார்வை தனக்குக் காதலை உண்டாக்காமல் ஆண்களின் பார்வையைப் போல் தோன்றவும், உயிர் போகாமல் இறந்தவன் போன்றவனாகித் தன் புகழ் இழிந்தது போல, தான் வானர சேனையைக் காணுமாறு நின்று இருந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து இறங்கி கீழே சென்றான்!