பள்ளிப்படைப் படலம்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பள்ளிபடைப் படலம்
வசிஷ்ட முனிவனால் அனுப்பப் பெற்ற, தூதர் பரதன் தங்கியுள்ள கேகய நாட்டை அடைந்தனர். ஒலையைக் கொடுத்தனர். அது கண்ட பரதன் கோசல நாடு அடைகின்றான். அவலத்தில் ஆட்பட்டுப் பொலிவழிந்த கோசல நாட்டையும் அயோத்தியையும் கண்டு திகைக்கின்றான்.
கைகேயி மூலமாக நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து மனங் கலங்குகிறான்; தாயைவெறுக்கின்றான்; தன்னையே நொந்துகொள்கிறான்; கோசலை திருவடியில் பணிகிறான். வசிஷ்ட முனிவனால் தன்னைத் தந்தை 'மகனல்லன்'என நீக்கியது அறிந்து மனம் மாழ்கிறான். முனிவன் கருத்துப்படி சத்ருக்கனனால் தந்தைக்குரிய ஈமக்கடன்களை நிறைவேற்றுகிறான்.
பத்து நாள் கிரியைகள் முற்றிய பின்னர் முனிவனும் பிறரும் மந்திரக் கிழவரும் மன்னரின்றி நாடு இருத்தல் தகாது என்று கருதிப் பரதனிடம் வந்து கூடுகின்றார்கள் என்பது வரை உள்ள செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.)
கேகய நாட்டுக்கு வஷிஸ்டர் அனுப்பிய தூதுவர்கள் பரதனைக் கண்டனர். அவனிடம் வஷிஸ்டர் கொடுத்து அனுப்பிய ஓலையை கொடுத்தனர்.
" கைமிஞ்சிப் போகின்ற காரியம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது கண்டவுடன் வருக" என்று அதில் வஷிஸ்டர் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்ததின் பொருளை உணர்ந்து கொள்ளாதவனாக," சரி ஏதோ அரசியல் காரணங்கள் போல, எது எப்படியோ! அண்ணன் இராமபிரானை பார்க்கப் போகிறோம்" என்று நினைத்துக் கொண்டான்.
அண்ணனை, பார்க்க அயோத்தி செல்லப்போகும் களிப்பில், செய்தி கொண்டு வந்த வீரர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். பிறகு சத்ருக்கனனிடம் அயோத்தியில் இருந்து செய்தி வந்த விவரத்தைக் கூறினான். நேரம் ,காலம் என எதையும் பார்க்காமல், அண்ணனை வெகு நாட்கள் கழித்துப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் தனது பரிவாரங்கள் சூழ புறப்பட்டான்.
அப்படிச் சென்ற பரிவாரங்களுடன் பரதன் கோசல நாட்டின் எல்லையைக் கடந்தான். அப்போது அயோத்தியைக்கு சில யோசனை தூரத்திலேயே வயல் வெளிகளில் நீர் நீங்கிப் பொலிவு இழந்து இருப்பதைக் கண்டான். அயோத்தியின் கொடிகள் ஏதும் பறக்கவில்லை. மக்களின் முகங்கள் யாவும் கலை இழந்து கிடந்தன. இன்னும் பெரும்பாலான வீதிகளில் மக்களின் நடமாட்டமே இல்லை. சோலைகளில் கூட பூக்கள் மலராமல் மொட்டாக காட்சி தந்தன. இன்னும் பலவகையாலும் அந்நாடு சீரழிந்து கிடந்தது.
இக்காட்சிகளைத் தனது தம்பி சத்ருக்கனுக்குச் சுட்டிக் காட்டினான் பரதன். அது கண்ட சத்ருக்கனன் அண்ணன் பரதனிடம் ," அண்ணா ! நகரைப் பார்த்தால் ஏதோ துயரச் சம்பவங்கள் நடந்தது போல அல்லவா தோன்றுகிறது. இலக்குமி போய்விட்டது போலவும் இருக்கிறதே!" என்றான்.
பரதனும் " என்ன நேர்ந்ததோ?" என்ற அதே சிந்தனையில் தான் இருந்தான். இப்படி இருக்க வீதியில் சிலர் பரதனைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டனர். சிலர் அவனை கோபம் கொண்டு பார்த்தனர். சிலர் கதவுகளை அடைத்துக் கொண்டனர். பரதனுக்கு இவை எல்லாம் வேறுபட்டுத் தோன்றியது,
"எப்போதும் நம்மைக் கண்டால் வணங்கும் அயோத்தியை மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? " என்று சிந்தித்தான் பரதன். சில நாழிகைகளில் பரதனும், சத்ருக்கனனும் அரண்மனையை அடைந்தார்கள். அரண்மனையை அடைந்த பரதன் முதலில் ஆவலுடன் தனது தந்தை தசரதரைத் காணச் சென்றான் .முதலில் தந்தையின் வழக்கமான இருப்பிடம் சென்று தேடினான் அங்கு அவரைக் காணவில்லை. அவர் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் சென்று தேடினான், ஆனால் எங்கும் தந்தையைக் காணாமல் தவித்தான். அக்கணம் அவனிடம், கைகேயியின் தாதிப் பெண் ஒருத்தி வந்து," உமத தாயார் அழைத்தார்" என்று கூறினாள்.
உடனே தாய் கைகேயியைக் காண ஆவலுடன் அந்தப்புரம் சென்றான் பரதன். பிறகு, கைகேயியை வணங்கி ஆசி பெற்றான். அச்சமயத்தில் தான் அவன் தாயை கவனித்தான் , அவனது தாய் வெள்ளாடை உடுத்தி இருப்பது கண்டு அதிர்ந்தான். உடனே தாய் கைகேயியிடம் பதறி அடித்துக் கொண்டு," தாயே! இது என்ன கோலம்? என் தந்தைக்கு ....! " என்று அவன் முடிப்பதற்குள், எதற்கும் வருத்தப்படாத கல் மனம் கொண்ட கைகேயி பேசத் தொடங்கினாள், "உன் தந்தை மா மன்னர் தசரதர், தேவர்கள் கை கூப்பி வணங்க விண்ணுலகம் சென்று விட்டார்! மகனே, நீ அதற்காக வருந்தாதே" என்றாள்.
தன் தந்தை இறந்த செய்தியை தாய் சொல்லிக் கேட்ட பரதன் நினைவு தடுமாறி எழுந்தான். முகத்தில் பெரும் கவலையுடன் கண்களில் நீர் ததும்ப தாய் கைகேயியை நோக்கி,"நெருப்புச் சுவாலையைக் காதினுள் வைத்தது போல, வேதனை கொடுக்கும் சொல்லைச் சொல்லி விட்டாயே. தந்தை இறந்ததற்காக யாராவது தனயனைப் பார்த்து வருந்தாதே என்று சொல்வார்களா? இப்படிச் சொல்வதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது? உன் மனம் என்ன கல்லா? இல்லை இரும்பா?" என்று கேட்டான்.
பின்னர் மீண்டும் தந்தை இறந்ததை நினைத்துப் பலவாறு வருந்திப் புலம்பினான். சில சமயங்களில் பித்துப் பிடித்தவன் போலப் பேசினான், கதறி அழுதான், துடி துடித்தான், கடைசியில் ஒருவாறு தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். ஆனாலும்,அவன் துயரம் பூரணமாக ஆறவில்லை. முழுதும் ஆறாத அந்தத் துயருடன், "தந்தையும் குருவும் தெய்வமுமாக இருக்கும் ஸ்ரீ ராமபிரானைச் சென்று வணங்க வேண்டும். அப்பொழுது தான் எனது துன்பம் தீரும்!" என்று சொல்லிக் கொண்டான். அந்த வார்த்தைகளைக் கைகேயி கேட்டாள்." மகனே! இராமன் தன் தம்பியுடனும் மனைவியுடனும் காட்டுக்குப் போய் விட்டான்!" என்றாள்.
தாய் சொன்ன அந்த வார்த்தைகளை பரதனால் காது கொண்டு கேட்க முடியவில்லை." அய்யோ, இன்னும் எத்தனை துன்பச் செய்திகளை நான் கேட்க வேண்டி இருக்குமோ?" என்று அலறித் துடித்தான். பின்னர் தனது தாய் கைகேயியிடத்தில் அண்ணன் கானகம் போன காரணத்தைக் கேட்டான்.
கைகேயி நடந்தவற்றை விளக்கிச் சொன்னாள் " முன்பு நான் பெற்ற இரண்டு வரங்களை இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டேன். ஒரு வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பி, அவனை காட்டை ஆளும் படி செய்து விட்டேன்.இன்னொரு வரம் கொண்டு என் செல்ல மகன் உனக்கு அரசாலும் உரிமையைப் பெற்றேன். இவ்வாறு, இராமன் தன் தம்பி லக்ஷ்மணன் பின்தொடர மனைவி சீதையுடன் கானகம் சென்று விட்டான். அத்துயரத்தில் உன் தந்தையும் இறந்தார். இனி ராஜ்ஜியம் உனக்கே உரியது மகனே!" என்று கூறி முடித்தாள்.
கைகேயி சொல்லிய கடுஞ்ச சொல்லைக் கேட்கப் பிடிக்காமல், பரதன் தன் கை கொண்டு காதுகளை மூடிக் கொண்டான். அப்போது தான் பரதனுக்குத், தான் வரும் வழியெல்லாம் அயோத்தியின் மக்கள் தன்னை ஏன் புறக்கணித்தார்கள் என்ற காரணம் தெரிந்தது. பெரும் சினம் கொண்டான் பரதன். கண்கள் நெருப்பை கக்கின .கன்னங்கள் துடித்தன. அவன் கோபம் கண்டு காலனும் தன் கண்களை மூடிக் கொண்டான். ஒரு கணம் அவனுக்குத் தன் தாய் கைகேயியை கொன்று விடலாமா? என்று கூட தோன்றியது. அப்போதும் தனது அண்ணனை நினைத்துக் கொண்டு, அண்ணன் ராமனுக்குத் தெரிந்தால் அவர் வருத்தப்படுவாரே, என்று தாயைக் கொல்லும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான் பரதன். ஆனால், அவனால் தன் கோபத்தின் காரணத்தால் வெளிப்பட்ட வார்த்தைகளை அடக்க முடியவில்லை.
பரதன் தனது தாய் கைகேயியை நோக்கி, "உன்னுடைய கொடிய சூழ்ச்சியால் எனது ஆருயிர் தந்தை இறந்தார். என் தமையன் பெரும் தவத்தை மேற் கொள்ள காடு சென்றார். இப்படி தந்தை இறக்கவும், தமையன் காடு செல்லவும் வரம் கேட்ட உனது நாவை அறுப்பதும் தவறில்லை. நான், இனி என் செய்ய, நான் அரசாள வேண்டும் என்று பேராசை கொண்டதால் தான் அண்ணனை காட்டுக்கு அனுப்பியதாக உலகத்தவர்கள் அனைவரும் நினைக்க, இப்படி ஒரு பழிச் சொல்லுக்கு என்னை ஆளாக்கி விட்டாயே. பிற்காலத்து வரை நிலைத்து நிற்கும் வசைச் சொல்லை நான் ஏற்கும் படி செய்து விட்டாயே. இன்னும் எத்தனைப் பழி பாவங்களைச் செய்ய காத்து இருக்கிறாய்?. இன்னும் நீ என்ன பாவத்தை என் தலையில் சுமத்தப் போகிறாய்? நோய் சிறிது காலம் தொந்தரவு செய்து கொள்ளும். அதனால் உடலும் அழியும்.ஆனால் தீடீர் என்று அறைந்து உயிரைப் பறித்துத், தானும் அழியாமல் நிற்பதற்குப் பெயர் பேய்! அந்தப் பேய் தான் நீ! தாயாகி பால் தந்து என்னை வளர்த்தாய். இன்று பழி பாவத்தால் என்னை வளர்க்க நினைக்கிறாய்.
யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு நல் வாழ்வு கிடைத்தால் போதும் என்று நினைத்தாயோ? நம்மிடம் உலகத்தவர்க்கு அன்பு இருந்தால் அல்லவா நமக்கு நல் வாழ்வு வந்து சேரும். இராமர் காடு சென்றதால், பசுவைப் பிரிந்த கன்று போல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களின் தவிப்பைக் கண் கொண்டு பார்த்த பிறகும் உனது மனம் உருகவில்லையா? நீ செய்த தவறை உனக்கு உணர்த்தவில்லையா? இல்லை நல் மனம் என்ற ஒன்றே உன்னிடத்தில் இல்லையா?
நீ கேட்ட வரத்தால் முதலில் அண்ணன் இராமன் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?" பரதன் நாட்டை ஆளும் கொடிய எண்ணம் கொண்டான் " என்று அண்ணன் என்னைப் பற்றி தவறாக நினைக்க நீ கேட்ட இந்த ஒரு வரம் போதுமே. மாண்டு போன எனது தந்தை என்னைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்து இருப்பார்? தாய் கோசலையின் முகத்தில் நான் இனி எப்படி முழிப்பேன்?
இராமர் காட்டுக்குச் சென்றதை அறிந்த பின்பும் நான் உயிருடன் இருப்பதே அதிகம். அதைவிட அவர் காட்டிலே காய் கனிகளை உண்டு பசியாற, நான் இங்கு சாலியரிசிச் சோற்றை புத்துருக்கு நெய்யோடு பொற் தட்டில் இன்னமுதென உண்டு கொண்டு இருந்தால்...
ஐயோ, அது கண்டு இந்த உலகத்தவர் என்னை இழிவாக நினைக்க மாட்டார்களா? நான் எனது தமையனுக்காக கண்ணீர் வடித்தாலும், நாம் இருவரும் இறக்காமல் இருப்பது கண்டு மக்கள் தூற்றுவார்களே. அந்த வசைக்கு ஆளாகிவிட்டனே. இறந்ததால் தந்தையின் நல்ல உள்ளம் வெளியாயிற்று. ஆனால் நான்,குற்றமற்றவன் என்பதை இந்த உலகத்துக்கு எப்படிப் புரிய வைப்பேன்?.இனி நான் உன்னை தாய் என்று கூப்பிடப் போவதில்லை.மேலும், இறந்துபோக வேண்டிய நீ இன்னும் இறக்காமல் இருக்கின்றாய். இப்போதாவது உன் தவற்றை உணர்ந்து இறந்து போ! அப்படி நீ இறந்தால் அறியாமையால் நீ இதனைச் செய்தாய் என்றாகும்" என்று இவ்வாறு தாயெனப் பாராமல் கைகேயியை கடிந்து கூறினான் பரதன்.
மேலும், அவனால் அந்த இடத்தில் வெகு நேரம் நிற்க முடியவில்லை. நடந்த தவறுக்காக தாய் கோசலையிடம் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே. தாய் கோசலை இருந்த மாளிகைக்குச் சென்றான். மாதேவி கோசலையைக் கண்ட பரதன் சட்டென்று அவளது பாதங்களில் விழுந்தான். அழுது துடித்தான், தனது கண்ணீர் கொண்டு மாதா கோசலையின் பாதங்களைக் கழுவினான். பின்னர் கோசலையிடம்," தாயே தந்தை இறந்ததையும், தமையன் காட்டுக்குச் சென்றதையும் அறிந்து கொள்ளவா நான் பட்டானார் ஊரில் இருந்து வந்தேன்? அதுவும் இவை அனைத்திற்கும் காரணம் என்னைப் பெற்றவள் என்று நினைக்கும் போது அவளது வயிற்றில் பிறந்ததற்காக வருந்துகிறேன். என் வருத்தம் தீர வேண்டுமானால், நான் என் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எனக்குச் சரியானது. கொடிய கைகேயியின் வயிற்றில் பிறந்த பாவத்துக்கு அது தான் எனக்குத் தக்க தண்டனை. என் பொருட்டு, நான் பிறந்த குலத்துக்கும் களங்கம் வரும் படி நடந்து கொண்டேனே" என்றெல்லாம் புழுதி மண் தோளில் படியும் படி தரையிலே புரண்ட வண்ணம் மனம் சோர்ந்தவனாய்ப் பரதன் கதறித் துடித்தான்.
உயர் குடிப்பிறப்பு, பொறுமை, பதிவிரதா தருமம் ஆகிய நற்குணங்களைக் கொண்ட கோசலை, அப்படிப் புலம்புகின்ற பரதனின் மனத்துயரைப் பிரதியட்சமாகக் கண்டாள். " இந்தப் பரதன் நாடாள விரும்பவில்லை. இவனுடைய மனம் களங்கமற்றது!" என்பதையும் அவள் உணர்ந்தாள். முன்பு " பரதனும் இராஜ்ஜியம் பெற உடந்தை ஆனவன்" என்று எண்ணிய ஒரு நினைவால், அவன் மீது கொண்டிருந்த கோபம் அவளுள் இப்போது இதனால் மாறியது. அக்கணத்தில் அவன் மேல் ஆழ்ந்த பாசமும் எழுந்தது. பாசத்துடன் மனத்தில் சோர்வும் ஏற்பட்டது. அத்துடன் அவள்," மகனே! உன் தாய் செய்ய இருந்த கொடிய செயல் உனக்கு முன்பே தெரியாது போலும்!" என்றாள். கோசலையின் கால்களில் விழுந்து கிடந்த பரதன், அவள் சொன்ன சொல்லைக் கேட்டவுடனே பொறி கொண்டு பிடிக்கப்பட்ட சிங்கம் போலக் குமறிக் குமறி அழுதான்.
பின்பு தாய் கோசலையிடம்," அறம் தவறி பகைவன் முன் அரசனைத் தனியாகத் தவிக்க விட்டு ஓடிவந்தவனும், அந்தணர்களுக்குத் தீங்கு செய்தவனும், பிச்சைக்காரரின் பொருளை அபகரித்தவனும், திருமாலைப் பரம் பொருள் இல்லை என்று சொல்பவனும், வேதத்தை மாற்றித் தானாக ஒன்றைப் புனைந்தவனும், தாயின் பசி தீர்க்காதவனும், தான் மட்டும் தனியே உண்டு கொழுப்பவனும் முடிவில் நரகத்திற்குச் செல்வார்கள். அது போல, இராமர் காடு செல்ல நான் உடந்தையாய் இருந்திருந்தால், அந்த நரகத்துக்கு நானும் செல்வேன்!" என்று இப்படிப் பலவாறு சபதமிட்டுப் புலம்பினான் பரதன்.
பரதனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு முற்றும் மனம் தெளிந்தால் கோசலை. அந்தக் கணத்தில் அன்போடு அவனை நோக்கினாள். தன் மகன் இராமனே வந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தாள். அவள் அழுதால். கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். அச்சமயத்தில் வஷிஸ்டர் பெருமானும், சத்ருக்கனனும் அவ்விடம் வந்தனர். கோசலையின் நிலை கண்டு வருந்தினான் சத்ருக்கனன். பரதன் வசிஷ்டரைக் கண்டு பாதம் பணிந்தான். பின்னர் அவரிடம்," முனிவர் பெருமானே எனது தந்தையின் உடல் எங்கே உள்ளது?" என்று வினவினான்.
அது கேட்ட முனிவர் துக்கம் கொண்டு பரதனை நோக்கி," குற்றமற்ற குமாரனே! உன் தந்தை இறந்து ஏழு தினங்கள் கடந்தன. புத்திரர் செய்யவேண்டிய கடமைகளை உடன் செய்வாய்!" என்றார்.
கோசலையும் பரதனுக்கு ஈமக் காரியங்கள் செய்ய அனுமதி தந்தாள்.
வசிஷ்டருடன் பரதனும் சத்ருக்கனனும் தசரதச் சக்கரவர்த்தியின் சடலம் பாதுகாத்து வைத்து இருந்த இடத்திற்குச் சென்றனர். எண்ணெய்க் கடாரத்தில் இட்டிருந்த தசரதரின் மேனியை எடுத்து வஷிஸ்டர் வெளியே மஞ்சத்தின் மேல் கிடத்தினார். பரதன் தந்தையின் உடலைக் கண்டான். கதறி அழுத அவனை வஷிஸ்டர் பெருமான் தேற்றினார். விரைவில் எல்லாக் காரியங்களும் நடக்க ஆயத்தமாயின. நான்கு வேதங்களை குற்றமற கற்ற அந்தணர்கள் தசரதரின் உடலை தங்க விமானத்தில் ஏற்றினார்கள். பின்னர் மன்னரின் உடல் தாங்கிய அந்த விமானத்தைப் பட்டத்து யானையின் மேல் ஏற்றினார்கள்.
பின்னர் தசரத சக்கரவர்த்தியின் சவ ஊர்வலம் புறப்பட்டது! பெரும் மக்கள் கூட்டமும், முனிவர் கூட்டமும், அரசர் கூட்டமும் அழுத வண்ணம் பின்தொடர்ந்து செல்ல இறுதியில் தசரதரின் உடல் சரயு நதிக் கரைக்கு வந்து சேர்ந்தது. அவ்விடத்தில் எல்லா சாஸ்திர விதிமுறைகளும் பின்பற்றப் பட்டு, தசரதரின் உடல் சிதையில் வைக்கப்பட்டது. பின்னர், பரதன் ஈமச் சடங்குகளைச் செய்ய சிதையின் அருகில் வந்தான். அச்சமயம், ஈமச் சடங்குகளை செய்ய பரதன் முற்படும் போது, தீடீரென வசிஷ்டர் பாய்ந்து சென்று பரதனைத் தடுத்தார். பரதன் புரியாது விழிக்க, "பரதா சற்றுப் பொறு, உன் தந்தை உன் தாய் செய்த தீவினையால் வருந்தி," எனக்கு பரதன் புதல்வன் இல்லை! அவன் எனக்கு ஈமக்கடனும் செய்யக் கூடாது!" என்று சொல்லி விட்டார்" என்று பரதனைத் தடுத்ததன் நோக்கத்தை வஷிஸ்டர் அவனிடம் விளக்கினார். இது கேட்ட பரதன் மிகவும் வருந்திக் கண்ணீர் மல்க புலம்பத் தொடங்கினான். அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும், பரதம் புலம்பிய புலம்பலில், அவனுக்கு ஒருவேளை சித்தப் பிரமை பிடித்து விட்டதோ எனக் கூடக் கருதினர்.
ஆனால், மறுகணம் வஷிஸ்டர் நேரமாவதை மனதில் கொண்டு விரைந்து காரியத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், சத்ருக்கனை அழைத்து ஈமக் கடன்களை முடித்தார். பிறகு எல்லோரும், மனதில் துக்கத்துடன் அரண்மனை திரும்பினர். பத்து நாட்கள் செய்ய வேண்டிய சடங்குகளைக் கூட சத்துருக்கனே செய்து முடித்தான்.
பதினான்காம் நாள் விடியற்காலையில் அரசனை நியமிப்பதற்காக, வசிஷ்ட முனிவர் தம்மை அந்தணர்கள் பின் தொடர பரதனிடம் வந்தார். அறிஞருடனே மந்திரிமார்களும் இராஜ்ஜியம் அரசனின்ரி இருப்பதைப் பற்றி பரதனிடம் ஆலோசிக்க வந்தார்கள்.