படைக் காட்சிப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

படைக் காட்சிப் படலம்

(தன் ஆணையை ஏற்றுப் பலவிடங்களிலிருந்தும் வந்த அரக்கர் படைகளை இராவணன் காண்பதைத் தெரிவிக்கும் பகுதியாதலின் இப்பெயர் பெற்றது. இப்படலம் 'மூலபல வரவு காண் படலம்' எனவும், 'படைக்காட்டுறு படலம்' எனவும், 'படை வரவுப் படலம்' எனவும் வெவ்வேறு பெயர்களுடன் சுவடிகளில் காணப்பெறுகின்றது)
இராவணனுடைய கட்டளைப் படியே அங்கே நின்று கொன்றிருந்த பணியாளர்கள் இந்திரஜித்தின் உடலை எண்ணெய்த் தோணியில் இட்டார்கள். அப்போது தூதுவர்கள் இராவணனை நெருங்கி வணங்கி விட்டு," ஆங்காங்கு இருந்து நமது சேனைகள் வந்து இருக்கின்றன. அவைகள் தங்குவதற்கு இலங்கையில் இடம் போதவில்லை. இனி, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
சேனைகள் வந்து விட்டதைக் கேட்டு இராவணன் மகிழ்ச்சி அடைந்தான். பின்பு அவர்களைப் பார்த்து," அவ்வாறு வந்த சேனைகள் எந்த இடத்தில் உள்ளன?" என்று கேட்டான்.
"ஐயனே! சேனைகள் எங்கு இருக்கின்றன என்று கூற முடியுமோ? ஊழிக் காலத்தில் பொங்கி எழுகின்ற ஏழு கடல்களையும் போல, வந்துள்ள சேனைகள் எங்கும் பரவி இருக்கின்றன!" என்று, உடனே தூதுவர்கள் இராவணனுக்குத் தெரிவித்தார்கள்.
அவ்வாறு இலங்காபுரிக்கு வந்து சேர்ந்த அச்சேனைகளை இராவணன் காண விரும்பினான். உடனே அரண்மனையை விட்டு வெளியே வந்தான். பரம் பொருளின் உருவத்தை நல்லாசிரியன் சீடனுக்குக் காட்டி விளக்கிக் கூறுவது போல, தூதுவர்கள் அவனுக்கு வந்து இருந்த படைகளைக் காட்டி அவற்றின் தன்மையை முழுவதும் விளக்கிக் கூறினார்கள். ஒரு சேனையை சுட்டிக் காட்டி இராவணனிடம் தூதுவர்கள், " இதோ இந்தச் சேனையில் இருப்பவர்கள் சாவகத் தீவில் வாழ்பவர்கள். தானவர்கள் முயன்று செய்த யாகத்திலே பிறந்து வந்தவர்கள். தேவர்களை எல்லாம் மோகத்தில் புகுத்தி அவர்களின் சித்தத்தை கலங்கச் செய்தவர்கள். மாயைகள் பல செய்வதில் முதன்மை பெற்றவர்கள். மேகத்தை தொடுகின்ற உடம்பைக் கொண்டவர்கள்!" என்று விளக்கின்றாகள்.
மற்றும் ஒரு சேனையைக் காட்டி," இதில் உள்ளவர்கள் குசைத் தீவில் வசிப்பவர்கள். யமனுக்குப் பழிப்பையும் பிரமனுக்கு வலிமையையும் வளர்ப்பவர்கள். வெற்றியையே உடலாகக் கொண்டு இருப்பவர்கள்!" என்றார்கள்.
வேறொரு சேனையைக் காட்டி," இதில் உள்ளவர்கள் சான்மலித் தீவில் இருந்து வந்தவர்கள். தேவேந்திரன் அமராவதிப் பட்டணம் முன்னொரு நாளில் அழியும் படியாக போரிட்டவர்கள். சிவ பெருமானிடம் இருந்து வரங்கள் பல பெற்றவர்கள். தீ போன்ற கோபத்தைக் கொண்டவர்கள்!" என்றார்கள்.
இன்னொரு சேனைக் காட்டி," இதில் உள்ளவர்கள் கிரௌன்ஞ்சத் தீவில் உறைபவர்கள். தேவர்கள் என்றைக்கும் இருந்து வாழ்கின்ற வடமேரு மலையைக் கடலிலே கொண்டு போய் போடத் தொடங்குகையில், அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அவ்வாறு செய்யாமல் விட்டவர்கள்!" என்றார்கள்.
அருகில் சென்ற ஒரு சேனைக் காட்டி," இதில் உள்ளவர்கள் பவள மலையில் வாழ்பவர்கள். அரக்கர்களின் குருவான சுக்கிராச் சாரியானின் மீது ஒரு முறை மன்மதன் பாணம் தொடுக்க, அதனால் அவருக்கு எழுந்தக் காமப் பசியின் காரணமாக பவள மலையில் வாழ்ந்த அரக்கப் பெண்களுடன் அவர் உறவு கூட அப்போது தோன்றியவர்கள் தான் இவர்கள். பாற்கடலையே தூர் வாரும் தன்மை கொண்டவர்கள். அப்படி இருக்க இராமனின் குரங்குப் படைகள் எம்மாத்திரம்!" என்றார்கள்.
தூரத்தில் சென்ற ஒரு சேனையைக் காட்டி," இலங்கேஸ்வாரா! இந்தச் சேனையில் இருக்கின்ற அரக்கர்கள் கந்தமாதனம் என்னும் தென்றல் தவழப் பெற்ற சிறந்த மலையிலே வசிப்பவர்கள். மேனி நிறத்தில் இருளையும் ஆலகாலத்தையும் ஒத்துப் பிறந்தவர்கள். இவர்களுடைய எண்ணிக்கையை நாம் அறியவில்லை!" என்றார்கள்.
மற்றொரு சேனையைக் காட்டி," கடலின் நடுவில் உள்ள தீவிலே இருக்கின்ற பொதிகை மலையிலே தோன்றி வாழ்பவர்கள் இந்தச் சேனையில் இருப்பவர்கள். இவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால் இந்த உலகமே அழிந்து விடும். அதனால் பிரமதேவன் இவர்களை அங்கு வசிக்கச் சொல்ல, இவர்களும் அதன்படியே அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்!" என்றார்கள்.
வேறொரு சேனையைக் காட்டி," புகழோய் ! இவர்கள் செம்மட்டியைக் கையில் கொண்டவர்கள். முத்தலை வேலை வைத்து இருக்கக் கூடியவர்கள். முசுண்டியையும் சக்கரத்தையும் உடையவர்கள். வில்லேந்தியர்கள். இவர்கள் பெரும் தலைவர்கள். ஆம்...! ஏழு கடல்களுக்கும் தலைவர்கள். புஷ்கரத் தீவில் குடி இருப்பவர்கள்!" என்றார்கள்.
இடப்பக்கமாகச் சென்ற சேனையைக் காட்டி, " தலைவா! இவர்கள் வேதாளத்தின் கையைப் போன்ற கையை உடையவர்கள். இவர்கள் வசிப்பதற்கு பூலோகத்தில் இடம் போதாது என்பதால், பிரமதேவன் இவர்களைப் பாதாள உலகத்தில் வாழுமாறு கூறினான். அதன்படியே இவர்கள் இதுவரையில் பாதாள உலகத்தில் வசித்து வருகின்றார்கள். இப்போது உன்னிடத்திலே கொண்ட அன்பினால் இங்கே வந்தவர்கள்!" என்றார்கள்.
வலது பக்கமாகச் சென்ற சேனையைக் காட்டி, " இவர்கள் நிருதி என்னும் திக்குபாலகியின் குலத்தில் பிறந்த புத்திரர்கள் ஆவார்கள். உன் குலத்துக்குச் சமமானவர்கள். அரக்கருள் மேம்பட்டவர்கள். குடிப்பதற்கு இரத்தம் இல்லாவிட்டால், இவர்கள் கோபம் கொண்டு ஏழு கடல்களையும் குடித்து விடும் தன்மை கொண்டவர்கள். இருளைப் போன்ற நிறம் கொண்டவர்கள். எண்ணற்ற மலைகளை தூக்கிப் போட்டு விளையாடக் கூடியவர்கள். அவ்வளவு வலிமை பெற்றவர்கள்!" என்றார்கள்.
வேறொரு சேனையைக் காட்டி," இவர்கள் கொடும் கண்களைக் கொண்டவர்கள். பெரும் கோபக்காரர்கள். இவர்கள் ஓயாது அழிக்கும் தொழிலைத் தான் அதிகம் செய்வார்கள். இவர்கள் சற்றும் ஓய்வின்றி தாம் வாழ்கின்ற இடத்தில் நடந்து அலைதலினால், ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உறக்கம் நீங்கியவனாய் மிகவும் கண் துஞ்சாதவனாயினான்!" என்றார்கள்.
இன்னொரு சேனையைக் காட்டி," சிவபெருமான் நடனத்தில் காளியை வேறு வகையால் வெல்ல முடியாது போகவே, ஒரு காலைத் தூக்கிப் புரியும் ஊர்த்துவ தாண்டவத்தைச் செய்து காட்டி வெல்லக் கருதினான். அதன்படியே செய்ய, எல்லா நடனங்களிலும் வென்ற காளி அந்த ஊர்த்துவ தாண்டவத்தைப் புரிய நாணித் தோற்றுச் சிவபெருமானின் வஞ்சக வெற்றிக்காகச் சினந்தாள். அக்கொடிய சினமாகிய கொடும் தீயில் இருந்து பிறந்தவர்களே இவர்கள். பேய்களுக்கு உடன் பிறந்தவர்களைப் போன்ற சிறப்பைக் கொண்டவர்கள். கையிலே வாளேந்தி பெருங் கூட்டமாய் வருபவர்கள்!" என்றார்கள்.
பிறகு முன்னே சென்ற சேனைக் காட்டி,"ஐயனே! இந்தச் சேனைகளில் உள்ளவர்கள் இவ்வளவு பேர்கள் என்று கூறுவதற்கு முடியாதவர்கள். இவர்கள் இன்னின்னார் என்று கூறுவதற்கும் முடியாதவர்கள். மேலும், இவர்களைப் பற்றி நினைக்கவும், குறிப்பிட்டுச் சொல்லவும் இயலாது. அத்துடன் இவர்கள் செய்த தவத்தையும் அதனால் பெற்ற வரத்தையும் கூட அளவிட முடியாது. இவர்களில் ஒருவனே சென்று அனுமானை அடித்து நொறுக்கி விடும் ஆற்றல் கொண்டவன். இப்படி பட்ட இவர்களைப் பற்றி இன்னமும் சொல்லத் தான் வேண்டுமோ? "என்று கூறினார்கள்.
அப்படிச் சொன்ன தூதுவர்களை நோக்கி இராவணன்," தூதுவர்களே! இந்தச் சேனைகளில் உள்ளவர்களின் அளவை எனக்குச் சொல்லுங்கள்!" என்று கேட்டான்.
"ஐயனே! ஓராயிரம் வெள்ளமாகும்!" என்றார்கள் சில தூதுவர்கள்.
அதை மறுத்து மற்றவர்கள்," இவர்களின் எண்ணிக்கையைக் கூறுவதற்கு கணித நூலில் உள்ள உச்ச எண்ணே சிறியதாகும்!" என்று தெரிவித்தார்கள்.
மீண்டும் இராவணன் அவர்களைப் பார்த்து," சேனாபதிகளை எல்லாம் என்னிடம் அழைத்து வாருங்கள்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
உடனே விரைந்து சென்ற தூதுவர்கள் இராவணனின் கட்டளையை வந்து இருந்த சேனைகளின் சேனாபதிகளுக்கு தெரிவித்தார்கள். அந்தக் கணத்தில் அந்த ஒவ்வொரு சேனைக் குழுவில் உள்ள சேனாபதிகளும் இராவணனை வந்து வணங்கி நின்றார்கள். தன்னை வணங்கிய அரக்கர் தளபதிகளைக் கண்ட இராவணன் மகிழ்ச்சி கொண்டு," உங்கள் எல்லோருக்கும் நலம் உண்டாக்கட்டும்.எனது அன்பு அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்தவர்களே. உங்கள் வீட்டார் அனைவரும் நலமா?" என்றான்.
அதற்கு அவர்கள், " அரசே! அரக்கர்களின் திலகமான தாங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு ஏது குறை? "என்றார்கள்.
அதன் பிறகு அந்த சேனாதிபதிகள் இராவணனைப் பார்த்து,” அரசர்கரசே! தாங்கள் ஏன் வருத்தம் கொண்ட முகத்துடன் காணப்படுகின்றீர்கள். மேலும்,உங்கள் முகத்தில் காணப்படும் வருத்தம் இலங்கை நகரத்திலும் பிரதி பலிக்கின்றதே இவ்வாறாக அனைவரும் சோகத்தில் மூழ்கக் காரணம் தான் என்ன?" என்று வினவினார்கள்.
அது கேட்ட இராவணன் சீதையின் மீது தான் கொண்ட காதாலால் அவனுக்கு அது நாள் வரையில் நேர்ந்த சோகக் கதைகளை எல்லாம் சொல்லத் தொடங்கினான். அவற்றை எல்லாம் கேட்ட படைத் தளபதிகள் இராவணனிடம்," ஐயனே ! தாங்கள் இனியும் இது பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது அரக்க குலத்திர்க்கே வந்த பிரச்சனை. அதனால் உங்கள் பிரச்சனை இனி எங்கள் பிரச்சனை. ஆனால் என்ன எங்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு வருத்தம் தான், அது யாதெனில் தாங்கள் எங்களை வரச் சொல்லி செய்தி அனுப்பிய பொழுது, நாங்கள் ஏதோ பெரிய வேலையாக இருக்கும் என்று நினைத்துத் தான் வந்தோம். ஆனால் இப்போதோ குரங்குகளுடன் சண்டை போட வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான் மனதில் கொஞ்சம் மானக் கேடாக உள்ளது. அதற்காக நாங்கள் இவ்வளவு தூரம் வந்து விட்டுப் பின் வாங்குவோம் என்று நினைக்க வேண்டாம் உங்களுக்காக நாங்கள் வானரர்களுடனான இந்த யுத்தத்தை மேற்கொள்கிறோம்" என்றார்கள்.
அப்போது புஷ்கரத்தீவின் மன்னனான வன்னி, இராவணனின் முன் வந்தான். அக்கணம் அவன இராவணனிடம்," அந்த மனிதர்களின் வலிமை எப்படிப் பட்டது?" என்று கேட்டான். மாலியவான் அதற்கு உடனே," அந்த மனிதர்களின் வலிமையை பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள். இராமனுடைய அம்பினால் வலிமை படைத்த எண்ணற்ற அரக்கர்கள் இதுவரையில் இறந்து உள்ளார்கள் அவர்களில் விராடனும், மாரீசனும், தூஷணனும், திரிசிரனும், மகரக்கண்ணனும்,கும்பகர்ணனும் குறிப்பிடத் தக்கவர்கள். மேலும், வாலி என்ற மாவீரன் கிஷ்கிந்தையின் அரசனாக ஒருகாலத்தில் இருந்தான். பாற்கடலை தேவர்களும், அரக்கர்களும் கடைந்து சோர்ந்து போன பொழுது, அவனிடம் இந்திரன் உதவி கேட்க, அவன் ஒருவனாகவே அந்தப் பாற்கடலை கடைந்தான். அப்படிப் பட்ட பலசாலி அவன். நீங்களும் கூட அந்த வாலி என்கிற மாவீரனைப் பற்றி அறிந்து இருக்கலாம். அவனும் கூட இராமனின் ஒரே பாணத்தால் கொல்லப் பட்டு இறந்தான்.
அது மட்டுமா! முன்பு ஒரு முறை சீதையை திருமணம் செய்வதற்காக சுயம்வரத்தில் பந்தயமாக ஒரு வில் வைக்கப் பட்டு இருந்தது. அது யாராலும் அசைக்கக் கூட முடியாத ஒரு சிவ தனுசு. ஆனால், இராமனோ அதனைத் தூக்கி நாணேற்றும் சமயத்தில் தான் ஒருவனாக அதனை உடைத்து எறிந்தான். அந்த சத்தம் உலகம் முழுவதும் கேட்டது. நீங்களும் கூட அந்த சத்தத்தை கேட்டு இருக்கலாம். அத்துடன் அந்த இராமனுடன் இருக்கும் வானர சேனையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்,அவர்கள் அனைவருமே பெரும் வீரம் கொண்டவர்கள். தேவர்களாலும் வதைக்க முடியாத நமது அரக்கர் சேனையை வெள்ளம், வெள்ளம்கா வதைத்து ஒழித்தவர்கள். அத்துடன், அந்த வானர வீரர்களில் ஒருவன் கடலைத் தாண்டி இலங்கைக்கு வந்து எங்கள் இராவணனின் மகனான அட்சகுமரனை பூமியில் வைத்துத் தேய்த்தே கொன்றான். அத்துடன் எண்ணற்ற அரக்கர் சேனையை அழித்தான், இலங்கைக்கும் தீ வைத்தான். மேலும், அந்த இராமன் கடலிலே சேது அமைத்து வானர சேனையுடன் இலங்கை வந்து சேர்ந்தான். அக்கூட்டத்தில் இன்னொரு வானரனோ , எங்கள் இலங்கேஸ்வரரின் மணிமுடியில் இருந்த விலை மதிக்க முடியாத ரத்தினங்களை அபகரித்துச் சென்றான். மேலும், அந்த இராமனின் தம்பி லக்ஷ்மணன் நேற்றைய போரில் இந்திரஜித்தையும் வதைத்தான். அந்த லக்ஷ்மணன் ஏற்கனவே இராவணனின் இன்னொரு மகனான அதிகாயனைக் கொன்றவன். அத்துடன், நான் இன்னொன்றையும் சொல்லக் கடமைப் பட்டு உள்ளேன், ஒருமுறை இந்திரஜித்தின் அம்பால் லக்ஷ்மணன் தாக்கப்பட்டு மயங்கிய பொழுது, முன்பு இலங்கையை எரித்த அனுமான் என்னும் வானரன் ஒரு பெரும் மூலிகை மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து அதன் சக்தியால் இறந்த வானர வீரர்களையும், லக்ஷ்மணனையும் உயிர் பிழைக்கும் படிச் செய்தான்.
மேலும், அந்த வானர சேனையின் எண்ணிக்கை எழுபது வெள்ளம் கொண்டதாகும். கற்புக்கு அரசியான சீதையின் பொருட்டே விதியின் விளையாட்டால் இந்தப் போர் நடந்து வருகிறது. அப்போரின் காரணமாக சுவர்ண புரியாக இருந்த இலங்கை இப்பொழுது சவ புரியாக மாறி வருகிறது. நாங்களும் செய்வதறியாது தவித்து வருகிறோம். ஆகவே, இதுவரையில் நடந்த விவரத்தை நான் உங்களிடம் கூறி விட்டேன். இனி நீங்கள் தான் நடக்கப் போவதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி முடித்தான் மாலியவான்.
மாலியவானின் வார்த்தைகளைப் பொறுமையுடன் கேட்ட வன்னி இராவணனைப் பார்த்து," மாமன்னா! இவர்கள் எல்லோரும் இறக்கவும், நீர் போர் செய்யாதிருந்ததற்க்கு என்ன காரணம்?" என்று வினவினான்.
வன்னியிடம் உடனே இராவணன்," முதல் நாள் போரில் தான் யுத்த களம் சென்று இராமனால் தோற்று வந்தது பற்றிக் கூறத் தொடப்பட்ட பொழுது. அவனது கர்வம் ஒரு கணம் அவனை தடுத்து நிறுத்தியது. அதனால், வன்னியிடம்," நிச்சயம் இனி நானே யுத்த களம் செல்வேன்" என்று கூறி அதன் மூலம் தனது தோல்வியை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டான் இராவணன்.
அப்போது புஷ்கரத் தீவின் மன்னனான வன்னி, மாலியவானின் பேச்சைப் பற்றி நினைத்தான். சீதையை இராமனிடத்தில் விட்டுச் சமாதனம் செய்து கொள்வதே நல்லது என்று பொருள் பட அவனது அப்பேச்சு இருந்ததை அவன் உணர்ந்தான். அது வன்னிக்கு ஏற்ற செயலாகத் தோன்றவில்லை.' இவ்வளவும் நடந்த பின் சமாதனப் பேச்சு எதற்கு? முதலில் அல்லவா அதனை செய்து இருக்க வேண்டும்?" என்று சிந்தித்தான்.
கடைசியாக அவன் இராவணனிடம்,"மாலியவான் சீதையை இராமனிடத்தில் விட்டுச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றான். இது முதலிலேயே செய்து இருக்க வேண்டியது. இப்போது செய்வது இழிவைத் தருவதாகும். ஏனெனில், அன்பன் இந்திரஜித்து இறந்து விட்டான், இனி அவன் மீளப் போவதும் இல்லை. அது போல போரிலே மாண்ட நமது வீர்களும் இனி திரும்பி வரப் போவது இல்லை. எனவே, தலைக்கு மேல் வெள்ளம் ஓடிய பிறகு, இனி சமாதனம் போன்ற காரியங்களில் ஈடுபடுதல் பயன் தாராது. எனவே சீதையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
அப்படிச் செய்தால், அவர்களிடம் போரிட பயந்து தான் நாம் இப்படி சமாதானம் செய்வதாக எதிரிகள் நினைத்து விடுவார்கள். அது நமது பெருமைக்கு உரிய காரியமும் அல்ல. அதனால், போரிட்டு அவர்களை அழிக்க வேண்டும். இதுவே, இப்போது நாம் செய்ய வேண்டிய உருப்படியான செயல்" என்று கூறி முடித்தான்.
வன்னியின் பேச்சைக் கேட்ட எல்லோரும்," அதுவே சரி" என்று ஆமோதித்தார்கள். அக்கணம் எல்லா அரக்கர்களும் போருக்கு எழுந்தவர்களாய் இராவணனை நோக்கி," மன்னா! நீர் இங்கே இருப்பீர். நாங்கள் சென்று அந்த மனிதர்களின் சிறிய உடலில் இருக்கும் குருதியை குடித்து விட்டு வருகிறோம். அதை விடுத்து அற்ப மனிதர்களுடன் சமாதானம் செய்வது நமக்குப் பெருமை தராது" என்று சொல்லிவிட்டு இராவணனை வணங்கி, ஆசிகள் பெற்று போருக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.