பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்
இராவணனின் ஆணையை ஏற்று பஞ்சசேனாபதிகள் தாங்கள் திரட்டியப் பெரும் படையுடன் அனுமனைப் பிடிக்க அசோகவனத்தை நோக்கி விரைந்தனர். அப்போது அந்தச் சேனையில் உள்ளவர்கள் யுத்த பேரிகையை முழங்கியபடி சென்றாகள். பஞ்சசேனாபதிகளின் படைகளில் ஐம்பதாயிரம் யானைகளும், ஒரு லட்சம் குதிரைகளும், இரண்டு லட்சம் காலாள் படை வீரர்களும் இருந்தனர். அப்படைகளின் நெருக்கத்தால் ஒன்றோடு, ஒன்று உரசிக் கொண்ட ஆயுதங்கள் பேரொலி எழுப்பித் தீப் பொறிகளைக் கக்கின. அந்தத் தீப் பொறி வானில் பறந்து அங்கு கூடி இருந்த மேகக் கூட்டத்தையே தீய்த்தன.
அப்போது அனுமனுடன் போர் செய்யப் புறப்பட்ட அரக்கர் சேனையைச் சேர்ந்த வீரர்களை, அவர்களுடைய மனைவிமார்களும், தாய்மார்களும், பெண்பிள்ளைகளும், மற்றுமுள்ள சுற்றத்தவரும் மனங்கலங்கி தடுத்து," அந்தக் கொடிய குரங்கோடு போர் செய்யச் சென்றவர்கள் ஒருவரும் திரும்பி வரவில்லை. இப்போது அந்தக் குரங்கிடம் உயிரைப் பலி கொடுக்கும் படி, நாம் எல்லோரும் ஒன்றாகச் செல்வோம்!" என்று சொல்லி, கோவென்று கதறி அழுதார்கள்!
ஆனால், சதுரங்கச் சேனையில் உள்ள வீரர்களோ அவர்களது சொந்த பந்தங்கள் கூறிய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல். இலங்கேஸ்வரன் இராவணன் விடுத்த ஆணையயே முக்கியமாகக் கருதி, இன்னும் அனுமனைப் பிடிக்க அதிவேகமாகச் சென்றனர். அதிலும் குறிப்பாக அப்படைகளைத் தலைமை ஏற்று வழிநடத்திய அந்தப் பஞ்சசேனாபதிகள் வலிமையான தோள்களைக் கொண்டு விளங்கினார்கள். இந்திரனின் வலிய வஜ்ஜிராயுதமும், வருணனின் வலிய பாசாயுதமும், யமனின் வலிய தண்டாயுதமும், சிவனின் சூலமும் கூட ஒருவேளை அவர்களைத் தாக்கினாலும் கூட ஊசி குத்துவது போன்ற வடுவைக் கூட அவர்களுக்கு, அவைகள் ஏற்படுத்தாது. அவ்வளவு வலிமையானவர்கள் பஞ்ச சேனாபதிகள் மேலும், அந்த பஞ்சசேனாபதிகள், முன்பு இராவணனால் தோற்கடிக்கப்பட்டு ஓடிய குபேரன், அப்போது மூட்டையாகப் போட்டுச் சென்ற அவனது பொன்னாபரணங்களை அணிந்து காணப்பட்டனர்.
அதுபோலவே, முன்பு ஒரு சமயம் இராவணனிடம் தோற்று ஐராவத யானையின் மேல் ஏறிக் கொண்டு இந்திரன் ஓடிய பொழுது," வலியவனானால் நீ இந்த யானையைச் செலுத்திக் கொண்டு போவாய்" என்று சொல்லி, அந்த யானையை மேலே செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்திய பேராற்றல் படைத்தவர்கள். யமனையும் கோபித்து அவனுடைய கால்களையும், கைகளையும் கட்டி முன்பு சிறையில் வைத்தவர்கள். மலைகளைக் கேலி செய்கின்ற அகன்று உயர்ந்த மார்புகளைக் கொண்டவர்கள். சண்டமாருதம் மேலும், மேலும் ஓங்கி வீசியடித்தாலும், பிரளயக் கடல் பொங்கி வந்தாலும் அவற்றை எல்லாம் அடக்கும் பலம் பொருந்தியவர்கள்.
அப்படிப்பட்ட பஞ்சசேனாபதிகள் தமது சேனைகளுடன் அனுமன் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். பிறகு அனுமனை நெருங்கியவுடன் பஞ்சசேனாபதிகள் அனுமன் மீது கடுமையான ஒரு தாக்குதலைத் தொடங்க படைகளை ஆயத்தம் செய்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதைக் கண்ட அனுமான் புன்முறுவல் செய்து " இச்சேனை முழுவதும் ஒரு பகற் பொழுதிற்குள் என்னால் அழிவது நிச்சயம்" என்று கூறி மகிழ்ந்தான். அச்சமயம் அந்தப் பெரும் அரக்கர் சேனையும் அனுமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னைச் சூழ்ந்து கொண்ட அரக்கர் சேனையை அலட்சியமாக நான்கு திசைகளிலும் பார்த்துவிட்டுத் தன் தோள்களையும் பார்த்துக் கொண்டான் அனுமான்!
அனுமனோடு போர் செய்ய வந்த அரக்கர்கள் அவனை நன்றாகப் பார்த்தார்கள். "இந்த அற்பக் குரங்கோ தேவர்களையும் வென்ற அரக்கர்களை அழித்தது?" என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.
அவர்களது எண்ணத்தை முகக் குறிப்பால் நன்கு உணர்ந்த அனுமான் தனது வீரப் பிரபாவத்தை அந்த அரக்கர்களுக்கு நன்கு புரியவைக்க, மீண்டும் பேருருவம் கொண்டான். அது கண்டு அந்தப் பெரும் அரக்கர் படையும் சில மணித் துளிகள் பயந்து நின்றது. பிறகு,சில கணங்களிலேயே அவர்களது அந்த அச்சத்தை விடுத்து சங்குகளும், பேரிகைகளும் முழங்க அனுமானுடன் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள்.
அவ்வாறு அந்தக் கொடிய அரக்கர்கள், கையில் உள்ள ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அனுமனின் மீது அதிக விசையுடன் வீசினார்கள். அவற்றை எல்லாம் அனுமான் கணப் பொழுதில் உடைத்து எறிந்தான். பிறகு அந்த அரக்கர் கூட்டம் பெரிய, பெரிய பாறைகளைப் பெயர்த்து அனுமான் மீது வீச. அவன் அந்தப் பாறைகளைப் பிடித்து மீண்டும் அதிக விசையுடன் அரக்கர்களை நோக்கி விட்டெரிய எண்ணற்ற அரக்கர்கள் அந்தப் பாறை விழுந்து மண்ணில் சாய்ந்து மண்ணோடு மண்ணாகப் போனார்கள். பிறகு அனுமன் அந்த அரக்கர்களின் வலிய தேர்களை எடுத்து அந்த அரக்கர்களின் யானைப் படையின் மீது வீச, அவைகளும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தன.
இது கண்ட அரக்கர்கள் மிகுந்த கோபம் கொண்டு அனுமனின் மீது அம்பு மழையைப் பொழிந்தனர். ஆனால், அனுமனுக்கோ அந்த அம்புகளாலும் ஒரு சேதமும் ஏற்பட வில்லை, மாறாக அரக்கர்கள் விடுத்த அந்த அம்புகள் அவனுடைய தினவுகளை இதமாகச் சொறிந்து விடுவது போல் இருக்க, ஆனந்தமாகக் கண் மூடிக் கொண்டு இனிது இருந்தான்.
சற்றுநேரம் அந்த நிலையிலேயே இருந்த அனுமான், பின் மீண்டும் அரக்கர்களுடன் கடுமையான போரைத் தொடங்கினான். முன்பு இடிந்து விழுந்த, ஒரு பெரிய மாளிகையின் மலை போன்ற தூணைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த மலை போன்ற பெரிய தூண் அனுமனின் கைகளில் சிறு குச்சியைப் போலக் காணப்பட்டது. அதாவது, அவ்வளவு பெரிய பேருருவத்தை அனுமன் எடுத்து இருந்தான். அந்தப் பெரிய தூணைக் கொண்டே அனுமான் அரக்கர்களை துவம்சம் செய்தான். அதனைக் கண்டு தேவர்கள் வானுலகில் மகிழ்ந்து நின்றார்கள். இதனைக் கண்ட பஞ்சசேனாபதிகள் ஆத்திரம் கொண்டார்கள். அனுமனுடன் போரைத் தீவிரப் படுத்தினார்கள். அனுமனும் விரைந்து தாக்க பஞ்சசேனாபதிகள் என்று சொல்லக் கூடிய இராவணின் ஐந்து சேனைத் தலைவனுள் ஒருவன் மாண்டான்.
அது கண்ட மற்ற நான்கு சேனாபதிகளும் உக்கிரம் அடைந்தார்கள். கண்கள் தீப்பொறி பறக்க அனுமனை முன்னிலும் வேகமாகத் தாக்கினார்கள். அவர்களில் இருவரை அனுமன் தன் பலம் கொண்ட கால்களால் மண்ணில் புதைத்துக் கொன்றான். எஞ்சிய இருவரையும் ஒருவர் தலையை ஒருவருடன் மோதிக் கொன்றான். இவ்வாறு, இராவணனால் அனுப்பட்ட அந்தப் பஞ்சசேனாபதிகளும், வீர நடை போட்டு வந்த சதுரங்க சேனையும் அனுமனின் கைங்கர்யத்தால் மாண்டு ஒழிந்தனர்.
ஒரு புறமாக மறைந்து நின்று அப்போரைப் பார்த்துக் கொண்டு இருந்த சோலையைக் காக்கும் தேவர்கள், பஞ்சசேனாபதிகளும் அவர்களின் சதுரங்கச் சேனையும் அழிந்ததைக் கண்டதும், அச்சத்தால் உடல் நடுங்க விரைந்து சென்று இராவணன் முன் நின்றார்கள்.
வேகமாக ஓடி வந்ததால், அவர்களின் மேனியில் இருந்து வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இராவணன் அவர்களை நோக்கினான். நடந்தவைகளை ஒருவாறு சிந்தித்து அறிந்தான். ஆயினும், அது உண்மையோ என்ற சந்தேகம் அவன் மனதில் எழ, அவர்களை நோக்கினான்.
உடனே அவர்கள் இராவணனை நோக்கி," ஐயனே! அந்தக் குரங்கு தாக்கியதால் சதுரங்கச் சேனை அழிந்தது! பஞ்சசேனாபதிகளும் இறந்து போன்றாகள்! இப்போது அந்தக் குரங்கு தன்னோடு போர் செய்வதற்கு ஒருவரும் இல்லாததால் சோம்பல் கொண்டு இருக்கின்றது!" என்று உண்மையாக நடந்த செய்தியை அவனுக்குத் தெரிவித்தார்கள்.