நட்புக் கோட் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
நட்புக் கோட் படலம்
(இராமனும் சுக்கிரீவனும் நட்புகொண்ட நிகழ்ச்சியைக் கூறும் பகுதியாதலின் 'நட்புக்கோட்படலம்' எனப்பெயர் பெறுகின்றது. அனுமன் சுக்கிரீவனிடம் சென்று இராமன் சிறப்புகளைக்கூறி இராமனிடம் அழைத்து வந்தான். இராமன் சுக்கிரீவனை வரவேற்று உபசரித்துத் தாங்கள் வந்த காரியத்தை உரைத்தான். சுக்கிரீவனின் பெருமைகளை அனுமன் உரைத்து, வாலி சுக்கிரீவனிடம் பகைமை கொண்ட காரணத்தையும் அறிவித்தான். வாலிக்கு அஞ்சி, சுக்கிரீவன் வாழ்வதை அறிந்த இராமன் வாலியைக் கொன்று வானரத் தலைமையினையும் பெற்றுத்தருவதாக உறுதி கூறினான். பின்னர்ச் சுக்கிரீவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினான். மராமரங்கள் ஏழனுள் ஒன்றை அம்புகொண்டு துளைக்கச் செய்து இராமன் திறமையை அறியலாம் என அனுமன் கூறச் சுக்கிரீவன் அதனை ஏற்று இராமனிடம் சென்று, தான் சொல்வது ஒன்று உண்டு எனக்கூற, இராமனும் அதைச்சொல்லுமாறு பணித்தான். இவையே இப்படலத்தில் நாம் காணவிருக்கும் செய்திகள்)
ஹனுமான் உடனே சுக்கிரீவனிடம், இராமபிரானைக் கண்டு தான் கேட்ட செய்திகளை உரைக்கச் சென்றான். சுக்கிரீவனும் ஹனுமனைத் தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தான். அச்சமயத்தில் சுக்கிரீவனை அடைந்த ஹனுமான், "தலைவா! நீர் முன்பு சந்தேகப்பட்டபடி அவர்கள் இருவரும் வாலியை சேர்ந்தவர்கள் இல்லை! நமக்குப் பகைவர்களும் இல்லை! அந்த வாலியை வெல்லக் கூடிய அதிக பலம் பெற்ற மகாவீரர்கள் அவர்கள்!" என்று கூறினான்.
அதனைக் கேட்டுப் பயம் நீங்கி சுக்கிரீவன் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் கூத்தாடினான். அவனோடு சேர்ந்து மாருதியும் கூத்தாடினான். அது கண்டு மற்ற வானர வீரர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். பின்னர் சுக்கிரீவனிடம், "அந்த வீரர்கள் இந்த மண்ணுலகம் மட்டும் இல்லாமல் அனைத்து உலகங்களுக்கும் நன்மை செய்யக் கூடியவர்கள். யார் தன்னிடம் அடைக்கலம் கேட்டாலும், அவ்வாறு அடைக்கலம் கேட்பவர் பக்கம் தர்மம் இருந்தால் உடனே அடைக்கலம் தருபவர்கள். அமுதம் போன்றவர்கள். கட்டழகு கொண்ட அவர்கள் இருவரும் தசரத சக்கரவர்த்தியின் மைந்தர்கள். மனு நீதி கொண்ட அவர்கள் உனக்கு நிச்சயம் ஞாயம் வழங்கி வாலியினிடம் இருந்து உனது மனைவியை மீட்டுக் கொடுக்கக் கூடிய வல்லவர்கள். அது மட்டும் அல்லாமல் அந்தக் கொடியவனிடம் இருந்து ராஜ்யத்தையும் மீட்டுக் கொடுப்பவர்கள். எல்லை அற்ற அறிவைக் கொண்டவர்கள். விசுவாமித்திரரின் அருளால் திவ்ய அஸ்திரங்களைப் பெற்றவர்கள். சாபத்தால் கல்லாக மாறிய அகலிகை என்னும் பெண்ணுக்கு சாப விமோசனம் கொடுத்தவர்கள். யாருமே தூக்க முடியாத சிவ தனுசை, ஸ்ரீ ராமர் நாணேற்றி முறித்து உடைத்து, சீதையை திருமணம் செய்து கொண்டார். அந்த சிவ தனுஷை மூம்மூர்த்திகளால் மட்டுமே தூக்க முடியும் என்று அதுவரையில் நம்பப்பட்டத்து. அத்துடன் அகத்தியரிடம் இருந்தும் பல விசேஷ பாணங்களைப் பெற்றவர்கள். அதுமட்டும் அல்லாமல் தாடகை, சுபாகு, மாரீசன், கரன், தூஷணன், விராதன், கவந்தன் போன்ற பல அரக்கர்களைக் கொன்றவர்கள். நல்லொழுக்கம் கெட்டதால் இராவணனின் தங்கையான சூர்ப்பணகையயே மூக்கை அறுத்து தண்டித்தவர்கள். ஆனால், மறுபுறம் அனைத்து முனிவர்களும், தவசிகளும் இராமனிடத்தில் பக்தியும், விசுவாசமும் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். சரபங்கர், சவரி போன்ற மகாத்மாக்களுக்கு முக்தி அளித்தவர்கள். ஐயனே! இப்படிப் பட்ட ஸ்ரீ ராமனின் மனைவியை, புத்தி கெட்ட இராவணன் அபகரித்துச் சென்று விட்டான். அந்த உத்தம சீதையை தேடிக் கொண்டு தான் அவர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு தேடும் போது தான் சவரி என்னும் பெயர் கொண்ட தர்மாத்மாவை சந்தித்து அவர்களது அறிவுரைப் படி உங்களுடன் சிநேகம் கொள்ள வந்து உள்ளனர். அவர்களது நட்பு நமக்குக் கிடைப்பதே நாம் செய்த பாக்கியம் தான். அதனால், தாமதிக்காமல் உடனே செல்லுங்கள். அவர்களுடன் சிநேகம் கொள்ளுங்கள்" என்று கூறி முடித்தான் நீதி சாஸ்த்திரங்களை நன்கு கற்று உணர்ந்த அனுமான்.
அது கேட்ட சுக்கிரீவன் அதிகம் மகிழ்ந்து அனுமனைப் பார்த்து, "பொன் போன்றவனே! மிக அறிவாளியான உன்னையே துணையாகக் கொண்டுள்ள எனக்கு எந்தக் காரியம் தான் முடியாதது? வா போகலாம்?!" என்று சொல்லிவிட்டு, சுக்கிரீவன் முன்னே நடந்தான். அதன் பின்னே அனுமன் தொடர்ந்தான். இருவரும் இராம லக்ஷ்மணர்களை அடைந்தார்கள். தெய்வாம்சம் பெற்ற இராமபிரானைக் கண்ட மாத்திரத்தில் அவருடைய மலர் போன்ற முகத்தைக் கண்ட சுக்கிரீவன் தன்னையே மறந்தான்.
அப்படி அவரின் அழகில் தன்னை மறந்து வெகுநேரம் நின்ற சுக்கிரீவன், "இவர்கள் பிரம தேவனால் படைக்கப்பட்டவர்கள் தானா? பிரமனால் இப்படியும் ஒரு சுந்தர ரூபத்தைப் படைக்க முடியுமா? இல்லை, நம்மை சோதிக்க திருமால் தான் வைகுண்டத்தில் இருந்து இறங்கி மனித ரூபம் எடுத்து வந்தாரா?" என்று மனதினில் சிந்தித்துக் கொண்டு இருந்தான்.
அவ்வாறு சிந்தித்தபடியே, இராமபிரானை அடைந்தான், சுக்கிரீவனைக் கண்ட இராமபிரான் அன்புடன் அவனை உபசரித்தார். இவ்வாறு சுக்கிரீவனும், இராமபிரானும் கணப் பொழுதில் ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்து கொண்டு நண்பர்களாக மாறினர். அவர்கள் அவ்விடத்தில் அமாவாசை வர ஒன்றாக வந்து கூடுகின்ற சந்திர சூரியர்களைப் போலக் காட்சி அளித்தார்கள். மேலும், அவ்விருவரும் அங்கு கூடியது, முற்பிறவியில் செய்த நல்ல வினைகள் எல்லாம் இந்தப் பிறவியில் ஒன்று கூடியது போலக் காணப்பட்டது.
பிறகு இராமபிரானைப் பார்த்த சுக்கிரீவன், "எனது இன்னலைப் போக்க வந்த அண்ணல் பெருமானே. விதி என்னை கை விட்டது என்று நினைத்தேன். ஆனால், இப்போதோ உங்கள் ரூபத்தில் அது என்னைக் கைவிடவில்லை என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். உங்களை நான் காணப்பெற்றது நான் முற்பிறவியில் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தின் பலன் தான்" என்றார்.
இவ்வாறு சொன்ன சுக்கிரீவன் பிறகு இராமபிரானை தனது இருப்பிடம் அழைத்துச் சென்றான். அங்கு இருந்த வானரங்கள் அனைத்தும் அவரை அன்புடன் வரவேற்றுக் காட்டில் உள்ள கனி, கிழங்குகளை பக்தியுடன் கொண்டு வந்த இராமபிரானுக்கு அன்புடன் கொடுத்தனர். அதனை உண்டு மகிழ்ந்தனர் இராமலக்ஷ்மணர். பிறகு, இராமபிரானின் களைப்பு நீங்க அவர்கள் அனைவரும் பணிவிடை செய்தனர்.
பிறகு சுக்கிரீவன் ஸ்ரீ ராமனிடம், "ஐயனே! எனது தமையனாகிய வாலி என்னைக் கொல்லத் துணிந்தான். அவனுக்கு அஞ்சியே நான் இந்த மலையில் வந்து தங்கினேன். அவனால் இந்த ருசியமூக பருவதத்தை அடைய இயலாது. அதற்குக் காரணம் மதிர்ப்புக்குரிய மதங்க முனிவர், வாலியின் ஆணவத்தால் அவனுக்குக் கொடுத்த சாபம் அப்படி. ஒரு வேளை அந்த வாலி மதங்க முனிவரின் சாபத்தை உதாசீனப் படுத்திவிட்டு இந்த ருசியமூக பர்வதத்தில் கால் வைத்தால், அவனது தலை சிதறிவிடும். அதனால் தான் நான் இங்கு வந்து தங்கி உள்ளேன்" என்றான்.
பிறகு சுக்கிரீவனை தனது ஆருயிர் நண்பனாக ஏற்றுக் கொண்ட இராமபிரான். சுக்கிரீவனிடம், "நண்பனே! நீ கவலைப் படாதே இன்றுடன் உனது துன்பங்கள் அனைத்தும் முற்றுப் பெற்று விட்டன என்பதை மட்டும் எண்ணிக் கொள். இனி வருகின்ற சுக துக்கங்கள் அனைத்தையும் நாம் சமமாகப் பகிர்ந்து கொள்வோம். இந்த மண்ணில் உனக்குத் துன்பம் தந்தவர், எனக்குத் துன்பம் தந்தவர். உன்னை வருத்தியவர் என்னையும் வருத்தியவர். உனது நண்பர்கள் எனக்கும் நண்பர்கள். உனது சுற்றம் யாவும் இனி எனக்கும் சுற்றம். நீயே இனி என்னுடைய உயிருக்கு சமமானவன்" என்றார்.
இராமபிரானின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன், அனுமன் உட்பட அனைத்து வானரங்களும் மிகவும் ஆனந்தம் கொண்டன. பிறகு மீண்டும் இராமபிரான் சுக்கிரீவனிடம், "சுக்கிரீவா! எனக்கு இனிய பழ வகைகளை வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். நீயும் அன்புடன் என்னை உபசரித்தாய், நானும் அதனால் மிகவும் திருப்தி அடைந்தேன். ஆனால் வந்த விருந்தினர்கள் யாராக இருந்தாலும் முறைப்படி மனைவியுடன் தான் உபசாரம் செய்ய வேண்டும் என்பது தர்மம். இதனை நீயும் அறிந்து இருப்பாய் அல்லவா? அப்படி இருக்கும் போது உனது மனைவி எங்கே? ஒருவேளை நீயும் என்னைப் போல மனைவியைப் பிரிந்து விட்டாயா?" என்று கவலையுடன் கேட்டார்.
இராமர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன் கண்கள் கலங்கின. அவனால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அச்சமயத்தில் சுக்கிரீவனின் மனநிலையைப் புரிந்து கொண்ட ஹனுமான், தானே முன்வந்து ஸ்ரீ ராமனிடம், "நிலையாய் நிற்கும் நீதியே! அடியேன் அவ்விஷயத்தைப் பற்றிக் கூறுகிறேன், தயை கூர்ந்து அதனைக் கேளுங்கள். அது ஒரு பெரிய கதை. சிவபெருமானின் கருணையைப் பெற்ற வாலி என்னும் பேர் கொண்ட மாவீரன் இருக்கிறான். ஒரு முறை திருப்பாற்கடலை கடையும் போது தேவர்களும், அசுரர்களும் சோர்ந்து போன நேரத்தில் தான் ஒருவனே தனது கைகள் கொண்டு அக்கடலை கடைந்தவன். பஞ்ச பூதங்களின் வலிமையை ஒரு சேரப் பெற்றவன். உலகத்தின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு ஒரே தாவில் சென்று சேர்ந்து விடுவான். அந்த வாலியின் வேகத்தின் முன் காற்றும் போகாது. அவன் மார்பிலே முருகப் பெருமானின் வேல் கூட நுழையாது. அவனுடைய வால் சென்ற இடத்தில் எல்லாம் இராவணன் போன்ற கொடிய அரக்கர்களின் அதிகாரங்கள் கூட செல்லாது. அவன் தனது இடத்தை விட்டு எழும் போது அந்த அதிர்ச்சியால் மேரு மலையே நடுங்கும்.
ஒரே இடத்தில் இருந்து கொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன், வாலி இப்பூமியில் நடக்கையில் அவனுடைய உடற்சுமையைச் சுமக்க முடியாமல் பூமி குழிந்து அழுந்த, பூமி பிளந்திடுமோ என்று அஞ்சித் தானும் இடம்விட்டு அவனுடனே நடந்து வருவான். வானர சேனைகளுக்கு எல்லாம் தலைவனான வாலியின் அனுமதி இல்லாமல், குரங்குகளின் உயிரைக் கொண்டு போவதற்கு யமனும் அஞ்சுவான். வாலியின் மீது கொண்ட பயத்தால், மேகங்கள் கூட கிஷ்கிந்தையில் இடி ஒலி எழுப்பாது. சிங்கம் முதலான கொடிய விலங்குகள் கூட கர்ஜனை இடாது. வலிமையுடைய காற்றும் அங்குள்ள மரங்களின் இலைகளை உதிரச் செய்யாது. முன்பு ஒரு முறை வாலி தனது வால் கொண்டு இராவணனை கட்டி இழுத்துச் சென்று ஏழு உலகத்திலும் தனது வெற்றியை பறை சாற்றியவன். இந்திரனின் குமாரனாகிய வாலியின் கட்டளைக்கு அந்த எமனும் அடிபணிவான். வாலி வெண்ணிற மேனி உடையவன். இந்திரனிடம் இருந்து அவன் பெற்ற வரத்தால் அவன் முன் யார் யுத்தம் செய்ய வந்தாலும் அவர்களின் பலம் பாதியாகக் குறைந்து வாலிக்கே வந்து விடும்.
இப்படிப் பட்ட வாலியை எதிர்க்க மாயாவி என்னும் அரக்கன் வாலியிடம் தோற்ற இராவணனின் பழி உணர்ச்சியால் ஏவப்பட்டு கிஷ்கிந்தைக்கு வந்தான். வாலியை வழிய வந்து போருக்கு அழைத்தான். அதீத கோபம் கொண்ட வாலி அவனுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டான். வெகு நாட்கள் அவர்களுக்கு இடையில் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில், இந்த வாலியை தன்னால் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்த மாயாவி புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினான். அந்த மாயாவியை துரத்திக் கொண்டு வாலியும் அதிவேகமாக ஓடினான். இறுதில் மாயாவி ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். வாலியும் அந்த குகைக்கு சென்றான். அங்கு வேறு வழி இல்லாத காரணத்தால் அந்த மாயாவி மீண்டும் வாலியை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினான். மீண்டும் அவர்களுக்கு இடையில் கடுமையான துவந்த யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தம் சுமார் பதினான்கு பருவகாலங்கள் தாண்டியும் (இருபெத்தெட்டு மாதம்) முடிவு பெறாமல் நடந்து கொண்டு இருந்தது. நாங்கள் யாவரும் யுத்தம் நடந்த அந்தக் குகையின் வாயிலில் நின்று கொண்டு இருந்தோம். அதுவும் கூட வாலியின் ஆணை தான், ஒரு வேளை அந்த அரக்கன் அடி தாங்காமல் குகைக்கு வெளியில் ஓடி வந்தால், அவனைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுக்கிரீவனைக் காவல் காக்கப் பணித்து இருந்தான் வாலி. ஆனால், வெகு காலமாக ஆகியும் வாலி அந்தக் குகையை விட்டு வெளியில் வராத காரணத்தால் சுக்கிரீவன் அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று அழுது துடித்துக் கொண்டு இருந்தான். நாங்கள் அனைவரும் அவனுக்கு ஆறுதல் கூறினோம்.
இறுதியில், அந்தக் குகையின் வாயிலில் இருந்து கடல் போல இரத்தம் பெருக்கெடுத்து வந்தது. அது கண்ட நாங்கள், அந்தக் கடல் போன்ற இரத்தம் வாலியின் ரத்தமோ! என்று சந்தேகம் கொண்டோம். அதனைப் பார்த்து, வாலி இறந்து விட்டதாகவும் கருதினோம். உடனே அந்த அரக்கன் அந்தக் குகையில் இருந்து தப்பி வராத படி அந்தக் குகையின் வாயிலைப் பெரும் பாறைகள் கொண்டு அடைத்தோம். பிறகு சுக்ரீவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் படி நாங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டோம். ஆனால் சுக்கிரீவனோ இதனை மறுத்து விட்டான். நாங்கள், அனைவரும் மீண்டும், மீண்டும் சுக்கிரீவனை வற்புறுத்திக் கொண்டே இருந்தோம். அதன் காரணமாக சுக்கிரீவன் சம்மதித்து ஆட்சிப் பொறுப்பை ஒருவழியாக ஏற்றான். மேலும், அது எங்கள் தவறு தானே தவிர சுக்கிரீவனின் தவறு இல்லை, அவன் பாவம் அரியணையை மறுக்கத் தான் செய்தான்.
பிறகு காலங்கள் பல உருண்டது, குகைக்குள் இருந்த வாலி, அந்த மாயாவி என்னும் அரக்கனை வதைத்து ஒழித்து விட்டு. குகையின் வாயிலை அடைந்தான். அங்கு குகையின் வாயில் பாறைகள் கொண்டு மூடப் பட்டு இருப்பதைக் கண்டான். ஆத்திரம் அடைந்தான். சுக்கிரீவன் உட்பட மற்ற வானர அமைச்சர்களை பெயர் சொல்லி அழைத்தான். ஆனால், பதில் ஏதும் எதிர் தரப்பில் இருந்து வராததால் மேலும் ஆத்திரம் அடைந்து, தனது வலிமையான வால் கொண்டு, குகையின் பாறையில் ஒரு மோது மோதவே, அப்பாறைகள் அனைத்தும் துண்டு துண்டாக உடைந்து ஏழு சமுத்திரம் தாண்டி அப்பால் விழுந்தது. உடனே 'அடே சுக்கிரீவா, நீ காவல் காக்கும் லட்சணம் இது தானா? எங்கே தொலைந்தாய்?' என்று கூறிய படி ஆத்திரத்துடன் சபைக்கு வந்தான். அவ்விடத்தில் சுக்கிரீவன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருப்பதைக் கண்டான். அது கண்டு அவன் வெகுண்டு எழுந்தான்.
பிறகு சுக்கிரீவனிடம் வாலி, "அடே சுக்கிரீவா! அண்ணன் எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பதைப் போல எனது சாவுக்காகத் தான் இத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டு இருக்கிறாயா? நம்பிக்கை துரோகியே! உன்னை நான் உயிருடன் விடப் போவதில்லை. இனி நீ ஒருவனே எனது முதல் எதிரி' என்று கூறிக் கொண்டு எங்கள் முன்னிலையிலேயே அச்சபையில் சுக்கிரீவனை வாலி பலர் பார்க்க அடித்து நொறுக்கினான். உயிருக்கு பயந்த சுக்கிரீவன் அவ்விடம் விட்டு ஓடி இந்த ருசியமூக பர்வதத்தை அடைந்தான். அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கவே நாங்களும் அவன் உடன் வந்தோம். அத்துடன் அந்த வாலி நிறுத்திக் கொள்ளவில்லை, சுக்கிரீவனுக்கு உருமை என்ற பேர் கொண்ட மனைவி ஒருத்தி இருந்தாள். அவளையும் வாலி விரும்பிக் கவர்ந்து கொண்டான். இப்போது சுக்கிரீவன் தனது மனைவி, செல்வம், ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து தர்ம சங்கடத்தில் தவித்து வருகிறான்" என்று அனுமன் சுக்கிரீவனின் சோகம் நிறைந்தப் பக்கங்களை கூறி முடித்தான்.
அனுமன் கூறிய அனைத்தையும் பொறுமையோடு கேட்டு வந்த இராமர், சுக்கிரீவனுடைய மனைவியை வாலி அபகரித்தான் என்றதைக் கேட்டதும் மிகுந்த கோபம் கொண்டார். அவரது கண்கள் அது கேட்டுக் கோபத்தில் அனலைக் கக்கின. உதடுகள் கோபத்தால் துடித்தன. முகம் சிவந்தது.
அவ்வாறு சினம் கொண்ட சீதையின் மணாளர். "பதினான்கு உலகத்தில் உள்ள எல்லாப் பிராணிகளும் அந்த வாலிக்கு வந்து உதவி செய்தாலும், நான் என்னுடைய அம்பால் அவை உட்பட அவனையும் கொன்று, அரசாட்சியுடனே உனது மனைவியையும் இப்பொழுதே உனக்குக் கொடுப்பேன். அறிவுடையவனே! அந்த வாலி வசிக்கின்ற இடத்தை எனக்குக் காண்பிப்பாயாக!" என்றார் சுக்கிரீவனை நோக்கி.
இராமனின் வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். "இனி வாலியின் வலிமை அழிந்தது என்று பூரித்தான்" ஆயினும் அவன் இராமரிடம், "ஐயனே! இருந்தாலும் நாங்கள் ஆலோசிக்க வேண்டியது ஒன்று உண்டு!" என்றான். பிறகு ஞானத்தைக் கொண்ட அனுமன் முதலான தனது மந்திரிகளுடன், இராமலக்ஷ்மணர்களை விட்டு விலகிச் சென்று ஆலோசனை செய்தான். அப்போது அனுமான், "வேந்தே உமது உள்ளத்தின் எண்ணத்தை நான் ஆலோசித்து அறிந்தேன். பெரும் பலசாலியான வாலியை வென்று கொல்லக் கூடிய ஆற்றல் இந்த வீரர்களுக்கு உள்ளதா என்று தானே நீர் சந்தேகம் கொள்கின்றீர். இனி, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அவற்றை உறுதியாகக் கொள்வீர். இராமபிரானின் கைகளிலும், திருவடிகளிலும் சங்கு சக்கர ரேகைகளைக் கண்டேன். அந்த ரேகைகள், இது வரையில் எந்த ஒரு உத்தம புருஷனிடமும் மூவுலகத்திலும் காணப்படாதவை. மேலும், அவை திருமாலிடம் மட்டுமே காணப்படுபவை. அதனால், நிச்சயம் ஸ்ரீ ராமர் தருமத்தை நிலை நாட்ட பூமியில் அவதாரம் எடுத்த ஸ்ரீ மந் நாராயணனின் அவதாரம் தான். யமனையே காலால் உதைத்துத் தள்ளிய சிவ பெருமானின் வில்லை, விஷ்ணுவின் அவதாரமாக இருந்ததால் தான் ஸ்ரீ ராமனால் எளிதில் எடுத்து முறிக்க முடிந்தது. அது மட்டும் அல்ல எனது மானசீக தந்தையான வாயு பகவான் ஒரு முறை எனது சிறு வயதில் என்னிடம் 'நீ அந்த மகாவிஷ்ணுவுக்கே சேவை செய்யப் பிறந்தவன்' என்றார். நான் அவரிடம் 'அது எப்படி? விஷ்ணு வைகுண்டத்தில் உள்ளார். நானோ பூமியில் உள்ளேன். பின் இது எப்படி சாத்தியம் ஆகும்?' என்று கேட்டேன். அதற்கு எனது தந்தையான வாயு தேவர், 'விரைவில் மகா விஷ்ணு, ஸ்ரீ ராமரின் வடிவத்தில் பூமியில் தோன்றுவார். அப்போது நீ அவருக்கு சேவை செய்து அந்த பாக்கியத்தைப் பெறுவாய். மேலும், நீ ஸ்ரீ ராமரைக் கண்ட மாத்திரத்திலேயே உனக்குள் அன்பு என்னும் ஊற்று பிரவாகம் எடுக்கும். உனது கைகள் தானாகவே இராமபிரானை தொழுவதற்கு எழும். உன்னால் பேச முடிந்தும் வார்த்தைகள் உனக்கு அந்நேரம் வராது. இவ்வாறான வர்ணிக்க முடியாத அன்பின் உணர்வுகள் உனக்குள் தோன்றும் போதே நீ அறிந்து கொள்வாய் ஸ்ரீ ராமரை நீ காண்கிறாய் என்று' என்றார்.
வாயு தேவனின் வார்த்தைக்கு ஏற்ப ஸ்ரீ ராமனைக் கண்ட போது எனக்கு அவ்வகை உணர்வுகள் எல்லாம் தோன்றியது. அது மட்டும் அல்ல, அப்படியும் நீ ஸ்ரீ ராமனின் பலத்தை சோதிக்க நினைத்தாய் என்றால் அதற்கும் நான் ஒரு வழி சொல்கிறேன். அது என்னவென்றால் போகும் வழியில் இருக்கும் துளைப்பதற்கு முடியாத மராமரங்கள் எழிலும் ஒன்றை ஓரம்பு கொண்டு துளைக்கும் படிச் சொல்லி அந்த அம்பு ஊடுருவிச் செல்வதைப் பார்த்தால், வாலியைக் கொல்வதற்கு ஏற்ற வலிமை இவருக்கு உண்டு என்று நீரே தெளியலாம்!" என்று சுக்கிரீவனைப் பார்த்துச் சொல்லி முடித்தான் அனுமான்.
சுக்கிரீவன் அனுமனுடைய வார்த்தைகளைக் கேட்டதும், "நல்லது!... நல்லது!" என்று மகிழ்ந்தான். பிறகு அனுமனை தோளுடன் தோளாக அணைத்துக் கொண்ட அந்த வானர அரசன், ஸ்ரீ ராமபிரானின் முன்போய் நின்றான். அவரை மிக்க அன்புடன் நோக்கி, "ஐயனே! தங்களிடம் கூறுவதற்கு ஒன்று உண்டு" என்றான் சுக்கிரீவன்.
"அதனைச் சொல்" என்றார் ஸ்ரீ ராமர்.
"இவ்வழியாகப் போக வேண்டும். வாருங்கள்! என்று சொல்லி, இராமலக்ஷ்மணரை அழைத்துக் கொண்டு ஏழு மராமரங்களும் நிற்கும் இடத்துக்குச் சென்றான் சுக்கிரீவன். அவன் இராமரைப் பார்த்து, "ஐயனே! இதோ மொத்தமாக நிற்கும் ஏழு மரங்களையும் பாருங்கள். இதில் ஒன்றைத் துளைக்கும் படி தங்களின் அம்பு ஒன்று செல்ல வேண்டும். அது அப்படி சென்ற மாத்திரத்திலேயே, எனது மனத்தில் உள்ள துன்பம் நீங்கும்!" என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட பகவான் ஸ்ரீ ராமர், சுக்கிரீவன் தனது பலத்தை சோதிக்க நினைப்பதை அறிந்து, அவனது அறியாமையை நினைத்துப் புன்னகை செய்தார். அந்தப் புன்னகை மாறாமலேயே வலிமை பொருந்திய தமது பெரிய கைகளால் வில்லை எடுத்து நாணேற்றியவாறு, அறிவினால் அளவிட்டு அறிவதற்கு முடியாததான அந்த மரங்களின் அருகிலே சென்று சேர்ந்தார்!