நகர் நீங்கு படலம் - 1874
1874.
தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்
கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,
உண்டு இடர் உற்ற போது என் உறாதன?
தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த
கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் -
சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர்
போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும் ஒருபொழுதும் காணாதவன்)
கண்டான்; விண் தலத்து உறையும் நல்வேந்தற்கு ஆயினும் -
விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்; இடர்
உற்றபோது - துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம்
வராதவை உண்டு.
வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா
அவமானமும் வந்து சேரும் என்பது உலகியல்; அரண்மனையை விட்டு
வெளியே வராதவர் ஆதலின்இதுகாறும் சூரியனால் பார்க்கப்படாதது
அவர் முகம் என்றானாம். 179
