நகர் நீங்கு படலம் - 1872

bookmark

1872.    

‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே.

     ‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’-  இராமனுக்கு இனித்
தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி;  தம் மகன் வயின் -
தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர்
வாய்களால் - அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல்
மதில் நெடு மனை - அகன்ற மதிலை  உடைய பெரிய அரண்மனை; 
அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்;  பகலிடை - பகற்காலத்தில்;
மலர்ந்தது - மலர்ந்துள்ளதான;  ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப்
போன்று ஆயின.

     வாய்க்கு ஆம்பல்  உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய்
செவ்வாம்பல்  மலர்ந்தாற் போலும்,  பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல
செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை
என்றார். ‘ஏ’ காரம்  ஈற்றசை.                                  177