நகர் நீங்கு படலம் - 1862
மக்கள் துயர்நிலை (1862-1869)
1862.
ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள்தாம்,
மொய் இளந் தளிர்களால் முளரிமேல் விழும்
மையலின் மதுகரம் கடியுமாறு என,
கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார்.
அணங்குஅனார்கள் தாம் - தெய்வ மகளிரை ஒத்த அயோத்தி
நகர மகளிர்; ஐயனைக் காண்டலும் - (வனம்புகும் மரவுரி அணிந்த)
இராமனைக் கண்டவுடன்; மொய்இளந்தளிர்களால் -நெருங்கி
இளமையான தளிர்களைக் கொண்டு; முளரிமேல் விழும் -தாமரை
மலர்மேல் வந்துவிழுகின்ற; மையலின் - கள்ளுண்ட மயக்கமுடைய;
மதுகரம் - வண்டுகளை; கடியுமாறு என - ஒட்டும்தன்மை போல;
கைகளின் - தம் கைகளால்; மதல்நெடுங்கண்கள்- செருக்கிய நீண்ட
கண்களை; எற்றினார் - மோதினார்கள்.
தளிர்கள் -கைகள், தாமரை - முகம். வண்டு - கண்கள்,.ஓட்டுதல் -
கை களால் மோதுதல் என உவமை காண்க. முடிசூட வேண்டிய அரச
மகன்மரவுரி தரித்தகோலம் அவர்கள் கண்களாற் பார்க்கப் பொறுக்க
முடியவில்லை; ஆதலின் இப்படிச் செய்தனர். 167
