நகர் நீங்கு படலம் - 1843
இராம இலக்குவர் விடைபெற்றுப் போதல்
கலிவிருத்தம்
1843.
இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;
பொரு அருங் குமரரும் போயினார் - புறம்
திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே.
இருவரும் தொழுதனர் - இராம இலக்குவர்கள் இருவரும் (தாயை)
வணங்கினர்; தாயும் -சுமித்திரையும்; இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
ஆவினின் - இரண்டு கன்றுகளை நீங்கிஅஞ்சுகின்ற பசுப்போல;
விம்மினாள் - மனம் கலங்கித் துடித்தாள்; பொரு அரும்குமரரும் -
ஒப்பற்ற மைந்தர்களும்; புறம் திரு அரைத் துகில் ஒரீஇ, சீரைசாத்திப்
போயினார் - உடம்பின் வெளியே அழகிய இடுப்பில் அணிந்திருந்த
மெல்லிய ஆடைகளை நீக்கிமரவுரியைத் தரித்துக் கொண்டு சென்றார்கள்.
இரண்டு கன்றுகளைப் பிரிந்த பசுத் துடிக்குமாறு போல இராமனையும்
இலக்குவனையும்பிரிகின்ற சுமித்திரை விம்முகிறாள். ‘திரு அரைத்துகில்
ஓரீஇ புறம் சீரை சாத்தி’ எனஇயைக்கலாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 148
