நகர் நீங்கு படலம் - 1711

1711.
‘விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,
அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு
ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்’ என்றான்.
‘விண்ணும் - ஆகாயமும்; மண்ணும் - பூமியும்; இவ்வேலையும் -
இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம்- வேறாகிய தீ,
காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் - மாறுபட்டுக்
கெட்டுப் போனாலும்; அண்ணல் - தயரதனது; ஏவல் - கட்டளையை;
மறுக்க - மறுப்பதற்கு; அடியனேற்கு ஒண்ணுமோ - அடியேனுக்குத்
தகுமோ; இதற்கு -; உன் அழியேல்’ -(நீ) மனம் வருந்தாதே;’
என்றான் -.
‘ஏகினும்’ என்பது அவை நிலை கெடாமை உணர்த்தி நின்றது -
தயரதன் கட்டளையை அவ்வாறேநிறைவேற்றுதலே தனக்குத் தகுதி
என்றான் இராமன். 17