தோள் கொடு

தோள் கொடு

bookmark

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று பயந்து கொண்டார்.

  அதனால், அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா? ஆமாம் என்றான் அரசன். ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!

  மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே என்றார் அமைச்சர். உடனே புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!

  குரு என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் எழுந்தது. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

  அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

  சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை துறவியிடம் சொன்னார். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

  கடைசியாக அரசன் கேட்டான்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே? அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு நீ புறப்படலாம் என்றார்.

  அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

  அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே? என்று ஆர்வத்தோடு கேட்டார்.

  உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை என்றார் குரு. அப்படி என்ன செய்திருப்பார் குரு? 

  அதற்கு குரு கூறிய பதில், அரசன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன், அவ்வளவுதான், என்று கூறினார்.