தாரை புலம்புறு படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

தாரை புலம்புறு படலம்

(வாலியின் மரணத்தை கேள்விப் பட்ட அவனது மனைவி தாரை புலம்புவதும், அழுவதும் போன்ற செய்திகள் இப்படலத்தில் கூறப்படுவதால். இது தாரை புலம்புறு படலம் எனப்பட்டது)

வாலி பரமபதத்தை அடைந்ததும், ஸ்ரீ ராமர் சுக்கிரீவனின் கையைப் பிடித்துக் கொண்டும், அங்கதனையும் அழைத்துக் கொண்டு லக்ஷ்மணனும், அனுமனும், மற்றவர்களும் தொடர அங்கிருந்து சற்று விலகிச் சென்றார். அப்பொழுது வாலி இறந்த செய்தியைக் கேட்ட தாரை தனது தோழி மார்களுடன் அவ்விடம் வந்தாள். இறந்து கிடக்கும் கணவனைக் கண்டாள். அவள் நெஞ்சில் துன்பம் பீறிட்டுப் பிறந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவள் வாலியின் மீது விழுந்தாள், புரண்டாள் , அழுதாள், கதறித் துடித்தாள். வாலியின் மார்பின் வழியாகப் பெருக்கெடுத்த ரத்தக் கடலில் அவளது மேனி நீராடியது. உள்ளமும், உடலும் கரைந்து தனது இரண்டு கைகளையும் தலைமேல் கூப்பி அவனைத் தொழுதாள். கூந்தல் அவிழ்ந்து தரையில் விழுந்து புரள, அவள் பெருங்குரலில்," எனது ஆருயிரே, நீ இருந்தவரையில் துன்பன் காணாதவள் நான். எங்கு சென்றாலும் என்னிடம் சொல்லி விட்டுப் போவீர்களே! ஆனால் இன்று மட்டும் ஏன் என்னை விட்டுத் தனியாகப் போனீர்கள்?.நீங்கள் அன்று உங்கள் இரு கைகள் கொண்டு கடைந்து எடுத்த அந்த அமுதத்தை யமுனும் தானே பருகினான். அப்படி இருக்கும் போது இன்று அவன் தங்கள் உயிரை எப்படி எடுத்தான்.இது நன்றி கெட்டத்தனம் அல்லவா?

அரசே! மலர் படுக்கையில் படுத்திருக்க வேண்டிய நீர், மண் தரையில் கிடக்கின்றீரே. இவ்வாறு இருப்பதற்கு என்னிடத்திலே கண்ட குற்றம் என்னவோ? பொய் சொல்லாத உத்தமரே! நான் இங்கு இருந்து உம்மை எண்ணி அழுது கொண்டு இருக்க நீர் மட்டும் சுவர்கத்தில் இன்புற்று இருப்பது தருமமோ? என்னையும் அழைத்துக் கொண்டு போய் இருக்கலாம் அல்லாவா? நான் மட்டும் உங்களைப் பிரிய என்ன பாவம் செய்தேன் அன்பரே.

நீர் உமது தம்பியுடன் போர் செய்யப் புறப்படும் போதே, சுக்கிரீவனுக்கு இராமர் துணை நிற்கிறார் என்று சொன்னனே! அதற்கு,' தமக்குத் தகுதியில்லாத காரியங்கள செய்ய அறியாதவர் ஸ்ரீ ராமர்' என்று புகழ்ந்தீரே! ஆனால், இப்போதோ இராமன் உங்களைப் பழி வாங்கி விட்டாரே! அவர் செய்த சதியால் கற்பாந்த காலம் உயிர் வாழ வேண்டிய நீர் இப்படி உயிர் விட்டீரே! இனி, நான் மீண்டும் எப்போது உம்மைக் காண்பேனோ? நீர் சென்று உமது மார்பு கொண்டு மோதினால் மேரு மலையும் பொடிப் பொடியாக ஆகிவிடுமே ! அப்படிப் பட்ட தங்கள் மார்பை ஒரு எளிய பானம் தாக்கியது உண்மையா? அல்லது இது தேவர்களின் மாயையோ?

மகனே, அங்கதா! உனது தந்தையாருக்குப் பெருமையுடைய தம்பியாக வாழ்ந்து இருந்து, பின்பு அவரோடு பகை கொண்ட சுக்கிரீவனால் நமது செல்வ வாழ்க்கை எல்லாம் தகுதி கெட்டு அழிந்தனவே! இதனை நீ பார்க்கவில்லையோ? இராமபிரான் ஒரு வீரனுக்குத் தகாத செயலை அல்லவா செய்துவிட்டார்" என்றெல்லாம் புலம்பிக் கடைசியில் மூர்ச்சித்தாள்.

தாரையின் புலம்பலைக் கேட்ட அனுமான் அங்கே விரைந்து அங்கதனோடும், சுக்கிரீவனோடும் வந்தான். மூர்ச்சித்து விழுந்த தாரையை அவள் தோழிமார் மூலமாக கிஷ்கிந்தாபுரி அரண்மனை அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தான். அதன் பிறகு அங்கதனைக் கொண்டு வாலிக்கு செய்ய வேண்டிய ஈமக் கடன்களை எல்லாம் செய்து முடித்தார். எல்லாம் முடிந்த பின்பு, அவர்கள் அங்கிருந்து சென்று இராம லக்ஷ்மணர்களை அடைந்தார்கள். அவர்களுக்குச் சுக்கிரீவன் நடந்த செய்திகளைக் கூறினான். அச்சமயம் சூரியனும் அஸ்தமனம் அடைந்தான். உலோபிகளின் மனம் போல இருள் எங்கும் பரவியது. இராமபிரான் நினைவில் சீதையின் முகம் ஆடியது. அவளைப் பற்றிய நினைவில் மீண்டும் அவர் வருந்தினார். அந்த வருத்தத்துடனேயே அந்தக் கொடிய இரவை அவர் கழித்தார். அவரது வருத்தத்தை கரைக்க அந்த இரவால் முடியாமல் அது நாணி விலகியது. மறு நாள், சூரியனும் உதயமானான்.