சுக்கிரீவன் வானர சேனைகளுடன் வருவதாகக் கூறிய அந்த நாளும் வந்தது. முதலில் முகத்தில் நூறு மடிப்புகளைக் கொண்ட சதவலி என்பவன், பத்து லட்சம் யானை பலங்கொண்ட ஆயிரம் வானரப்படைத் தலைவர்கள் தன்னைத் தொடர்ந்து வர, பதினாயிரம் கோடி வானர சேனையுடன் சுக்கிரீவனிடத்தில் வந்து சேர்ந்தான். கும்பன், சங்கன் ஆகிய இருவரும், இராமரின் அம்பறாத் தூணியில் அம்புகள் அளவற்று நிறைந்து இருப்பது போன்ற பெரும் வானர சேனைகளுடன் வந்தார்கள். தெய்வச் தச்சனான விசுவகர்மாவின் மகனாய் அவனது அமிசமாய்ப் பிறந்த நலன், லட்சம் கோடி வானர சேனையைக் கொண்டு வந்தான்.
வருணதேவனின் குமாரனும், தாரையின் தந்தையுமான சுசேடணன், மேரு மலையை பெயர்த்து எடுக்கும் வலிமை கொண்ட பத்து லட்சம் கோடி வானர சேனையுடன் வந்தான். தேவகுருவான பிரகஸ்பதியின் புதல்வனும், சுக்கிரீவனின் மாமனும், உரிமையின் தந்தையுமான தாரன், கடலையும் கலக்கிச் சேறு காணவல்ல நாற்பத்தெண்ணாயிரங் கோடி வானரசேனையுடன் வந்தான். அனுமனைப் பெற்ற கேசரி, மேருமலைகளையொத்த தோள்களையுடைய ஐம்பது லட்சம் கோடி வானர சேனையுடன் வந்தான். இடபன் தொளாயிரங்கோடி வானரசேனையுடன் வந்தான். நீண்ட கால்களை உடைய தீர்க்க பாதனும், மிகவும் வணக்கமுடைய விநதனும், மேகத்துக்குரிய கடவுளான பர்ஜ்ஜந்ய தேவதையின் குமாரனான சரபம் போன்ற பலமுடைய சரபனும் கறுத்தமுகமுள்ள கோடிக் கணக்கான வானர சேனைகளுடன் வந்தார்கள்.
பசுவின் கண் போன்ற கண்களை உடையவனும், 'கோலாங்கூலம்' என்னும் கொண்டைமுசுக்கள் என்று சொல்லப்படுகின்ற குரங்குச் சாதிக்குத் தலைவனுமான கவாட்சன், பூமியையே பெயர்த்து எடுக்கும் வலிமை உள்ள நாலாயிரங் கோடி வானர சேனைகளுடன் வந்தான். ஜாமப்வானுக்கு உடன் பிறந்தவனும், கரடிகளுக்குத் தலைவனுமான தூமிரன் இராண்டாயிரம் கோடி மிக்க வலிமையுள்ள கரடிகளின் கூட்டத்தைத் தன்னுடன் கொண்டு வந்தான். பெரிய மலை போன்ற தோற்றத்தை உடையவனும், கோபத்தினால் தன்னைக் காண்பவர்களை இடிபோலவும், விஷம் போலவும் நடுங்கச் செய்யக் கூடியவனான பணசன், பரிசுத்தமும் கொடுங்கோபமும் கொண்ட பன்னிரண்டு ஆயிரங்கோடி வானர சேனையுடன் வந்தான்.
பருத்த கைகளும், வழிய மார்பும், தேக வலிமையும், மன உறுதியும், உக்கிரமும், தீப்பொறி பறக்கும் கொடிய கண்களும், மலை போன்ற தோற்றமும் கொண்ட முப்பது கோடி வானரசேனா சமுத்திரத்தோடு, குகை போன்ற முகத்தையுடைய தரீமுகன் வந்தான். அக்கினியின் குமாரனும், நீல நிறம் உடையவனுமான நீலன், இடியோசையும் கடலின் ஒளியும் அஞ்சும்படியான பேராரவாரம் கொண்டதும், மிக்க பரபரப்பும் வலிமையும் பெற்று கொடுமை உள்ள யமனைப் போன்றதுமான ஐம்பது கோடி பெரிய வானர சேனையை உடன் கொண்டு வந்தான்.
யானை போன்ற வடிவுடைய கயன், கடும் கோபத்தை உடைய சிங்கத்தின் கூடமும் அஞ்சும்படியான முப்பத்தினாயிரங்கோடி வானர சேனையுடன் வந்தான். முன்னொரு காலத்தில் பிரமன் கொட்டாவி விட்டபோது அவனது வாயில் இருந்து கரடி வடிவமாய்த் தோன்றியவனும், கரடிகளுக்கு அரசனும், திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் உலகம் முழுவதும் நிறைந்த அப்பெருமானைப் பதினெட்டு முறை வலம் வந்தவனுமான ஜாம்பவான் ஆயிரத்தறு நூறு கோடி வானர சேனையுடன் வந்தான். தேவவைத்தியர்களாய் இரட்டையரான அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த துமிந்தன் பலகோடி லட்சக் கணக்கான வானர சேனையுடன் வந்தான்.
அவ்வாறு வந்து சேர்ந்த வானர சேனைகள் ஒரு பக்கமாகச் சாய்ந்தால் உலக உருண்டையும் மகாமேருமலையுடன் சேர அப்பக்கமாய் சாய்ந்து விடும் ஒருவேளை அந்த பெரிய வானர சேனையில் உள்ள வீரர்கள் அனைவரும் எழுந்து நடந்தார்கள் என்றால், இந்த உலகத்தில் எள் விழுவதற்கும் இடம் இருக்காது போய்விடும். அப்படையில் உள்ள வீரர்களை எண்ணுவது என்றால் எழுவது ஆயிரம் பிரம்மாக்கள் ஒன்று சேர்ந்தாலும் அது லேசான காரியமாக இருக்காது. அப்பெரும் படையில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு பிடியளவு உண்ணத் தொடங்கினாலும் எல்லா அண்ட கோளங்களும் அவைகளுக்குப் போதாது. அந்த வானர சேனை ஒடிக்க நினைத்தால் நிமிடத்தில் மகா மேரு மலையையும் உடைத்து எரிந்து விடும் படியான வல்லமை கொண்டது. பிடிக்க விரும்பினால் யமனையும், காற்றையும் கூட அந்தச் சேனை எளிதில் பிடித்து விடும். குடிக்க முற்பட்டால் அந்தச் சேனை ஏழு கடலையும் குடித்து விடும்.
சுக்கிரீவனின் தூதுவர்கள் வந்து சொன்னவுடனே இவ்வாறு உலகெங்கிலும் இருந்து திரண்ட சுமார் அறுபத்தேழு கோடி வானர சேனைத் தலைவர்கள், தங்களாலும் எண்ணமுடியாத வீரர்களைக் கொண்ட பெரும் படைகளுடன் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் சுக்கிரீவனை வாழ்த்தினார்கள்.
சுக்கிரீவன் உடனே விரைந்து சென்று இராமபிரானைக் கண்டு வணங்கிவிட்டு, "ஐயனே! நமது வானர சேனைகள் அனைத்தும், எல்லாத் திசைகளிலும் இருந்து வந்து சேர்ந்து விட்டது. தாங்கள் இனி வந்து அவற்றைக் காணலாம்" என்று வேண்டினான். சுக்கிரீவனின் வேண்டுதலுக்கு இணங்க, இராமபிரான் ஒரு மலையின் உச்சியில் இருந்து சுக்கிரீவன் திரட்டிய வானர சேனையின் அளவைக் கண்டார். அப்போதே சீதையை மீட்டு விடலாம் என்ற திருப்தி அவருக்குள் வந்தது.
சுக்கிரீவன் திரும்பி அச்சேனைகளிடம் சென்றான். அங்கே சென்றவன், ஸ்ரீ ராமருக்குச் சேனையின் தோற்றத்தை நன்கு தெரிவிப்பதற்காக, வடக்கில் இருந்து தெற்காகச் சிறிது தூரம் சென்று திரும்பும் படி கட்டளை பிறப்பித்தான். அந்தச் சேனைகள் அனைத்தும் அவ்வாறே செய்ய. அச்சமயத்தில் அந்த சேனையை நடத்தும் ஒவ்வொரு சேனைத் தலைவர்களின் வரலாற்றையும் இராமபிரானுக்கு விளக்கினான் சுக்கிரீவன்.
அது கேட்டு இராமர் மகிழ்ந்தார். பிறகு தம்பி லக்ஷ்மணனை நோக்கி, "லக்ஷ்மணா! நமது அறிவு கொண்டு இந்த வானரசேனையின் எண்ணிக்கையை ஒருவாறு கண்டோம். இது சேனை என்பதை விட மனிதக் கடல் என்று சொன்னால் அதுவும் இதற்கு முன் சமம் அல்ல, காரணம் இங்கே திரண்டு இருக்கும் பெரும் வானர சேனையின் தொடக்கத்தை நான் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் கூடியுள்ள இந்தப் பெரும் வானர சேனையின் எல்லையின் முடிவை என்னால் கூட காண முடியவில்லையே! மேலும் நான் மாட்டும் அல்ல இந்த வானர சேனை சென்று முடியும் எல்லையை யாரால் தான் கண்டு கொள்ள முடியும்? அதனால் இங்கு வந்து இருக்கும் சேனையை கணக்கிடுவதை விட நாம் இனி வரும் காலங்களில் நன்மை தரும் செயல்களைப் பற்றி பேசத் தொடங்குவோம்" என்றார்.
அதற்கு லக்ஷ்மணன், "அண்ணா! இந்த வானர வீரர்கள் அதிக வலிமை கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். உலகத்தில் எந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டாலும், அதனை நொடியில் திருத்தமாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை. அன்னை சீதையைத் தேடுவது என்பது நிச்சயம் இவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத செயலாக இருக்காது. அதனால், பிராட்டியைத் தேட இந்த வானர வீரர்களை எட்டுத் திக்கிலும் அனுப்புவதே சரியானது. அதனால், இனியும் தாமதம் செய்வது நன்று அன்று" என்று இராமபிரானிடம் கூறினான்.