சேது பந்தனப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

சேது பந்தனப் படலம்

(இராமபிரான், வானர சேனையோடு இலங்கை செல்வதற்காகக் கடலில் அணை கட்டியதைக் கூறும் படலமாதலின் இப்பெயர் பெற்றது. சேது - அணை; பந்தனம் - கட்டுதல்.

சுக்கிரீவன் இராமபிரான் ஆணைப்படி - அணைகட்டுவதற்காக அறிஞர்களுடனும் விபீஷணனுடனும் இலக்ஷ்மணன் உடனும் கலந்து ஆலோசித்து, நளனே அணைகட்டத் தகுதியுடையவன் என அவனை அழைத்துப் பணித்தான். நளனும் உடன்பட்டு அதற்கு சம்மதித்தான். சாம்பன் கடலை அடைக்க வருமாறு சேனைக்குக் கூறினான் வானர சேனை மலைகளைக் கொண்டு வந்து குவித்தது. நளன் மலைகளை அடுக்கத் தொடங்கினான். வானரங்கள் மலைகளைக் கைகளிலும் தோள்களிலும் தலைகளிலும் தாங்கி வந்து அணைகட்ட உதவின.

திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப வள்ளல் அடைக்கலம் என வந்தவர்களை ஆதரித்துத் தாங்குதல் போல, நளன் வானரங்கள் கொண்டு வந்த மலைகளைத் தூக்கினான் என்பார் கம்பர். மூன்று நாட்களில் அணைகட்டி முடிக்கப்பட்டது. வானரங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன.

ஆதிசேடன் கிடந்தது போலவும், இலங்கையாகிய பெண் கைகளை நீட்டிக் கொண்டிருப்பது போலவும் ஆகாய கங்கையே ஆறாகக் கிடந்ததுபோலவும் இந்திரவில் போலவும் அணை அழகுறக் காட்சியளித்தது. சுக்கிரீவனும் மற்றவர்களும் இராமனை அடைந்து; நூறுயோசனை நீளமும் பத்து யோசனை அகலமும் கொண்டதாக சேது கட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர். இவையே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்)

ஸ்ரீ இராமபிரானின் கட்டளையை ஏற்ற சுக்கிரீவன், விபீஷணனுடனும் மற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். பிறகு தனது வீரர்களை அழைத்து "மேலே செய்ய வேண்டியவற்றை நிறைவேற்றுவதற்கு வானரத் தச்சனான நளன் வரட்டும்!" என ஆணை பிறப்பித்தான்.

பணியாளர்கள் விரைந்து சென்று நலனுக்கு அந்தச் செய்தியைக் கூறினர். அவனும் சுக்கிரீவனின் ஆணையை ஏற்று அவனது எதிரில் வந்து நின்றான். பின்னர் சுக்கிரீவனிடம் "மன்னா! என்னை அழைத்தது யாது கருதியோ?" என்று பணிவுடன் கேட்டான்.

அது கேட்டு சுக்கிரீவன் நளனைப் பார்த்து," நளனே! கடல் மீது அணைகட்ட வேண்டும்! இதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய தொழில்!" என்றான்.

அதற்கு நளன்," இக்கடலில் பெரியதொரு சேதுவைக் கட்டுவது என்பது எனக்கு ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஆனால், அதற்கு நிறைய பாறைகள் வேண்டும். அவைகளை உடனே கொண்டு வரச் சொல்லுங்கள்" என்றான்.

சுக்கிரீவன் அதனைத் தனது படைகளுக்குத் தெரிவிக்குமாறு ஜாம்பவானுக்கு கட்டளை பிறப்பித்தான். ஜாம்பவான் அந்தக் கணமே," வானரவீரர்களே! அனைவரும் கடலின் மீது அணை கட்டும் ஒப்பற்ற பணியில் திரண்டு வாருங்கள்!" என்று பறையறைந்து தெரிவித்தான்.

உடனே வானர வீரர்கள் எங்கும் விரைந்தார்கள். எல்லை இல்லாத காதங்கள் பறந்து கிடக்கின்ற மலைகளை எல்லாம் பெயர்த்துத் தள்ளினார்கள். அவற்றை இரண்டு கைகளிலும், இரண்டு தோள்களிலும் சுமந்து, ஒரு கடலை அடைப்பதற்கு மற்ற கடல்கள் வருவது போல் வந்தார்கள்!

சில வானரர்கள் மலைகளைப் பிளந்தார்கள். சிலர் அவற்றைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சிலர் அவற்றைக் கடலில் இட்டுத் தூர்த்தார்கள். சில வானர வீரர்கள் அவற்றை எல்லாம் கண்டு ஆடிப் பாடினார்கள். நளன் மறுபுறம் ஒருவனாக இருந்து மூன்று கோடி வானர சேனைகளுக்கு மேல் கொண்டு வந்து கொடுத்த மலை போன்ற பெரிய பாறைகளை தனது கைகளால் பெற்று முறைப்படி அவற்றை ஒதுக்கி சேதுவை வெகு வேகமாகக் கட்டத் தொடங்கினான். நளன் கோடிக்கணக்கான வானர வீரர்கள் கொண்டு வரும் பாறைகளை வாங்கிய காட்சியைப் பார்க்கும் போது, தன்னை நோக்கி எத்தனை பேர் அடைக்கலம் கேட்டு வந்தாலும் அவர்களை அன்புடன் ஆதரிக்கும் சடையப்ப வள்ளல் போலக் காணப்பட்டான்.

அப்போது வானர வீரர்கள் பெயர்த்தெடுத்து வீசிய மலைக் குன்றுகள் ஒன்றோடு ஒன்று மோத, அதனால் பெரும் நெருப்புப் பொறிகள் கிளம்பின. அவற்றைக் கண்ட வருணன், "நீண்டு தோன்றுகின்ற இது யாருடைய நெருப்போ?" என்று அஞ்சினான். கவாட்சன் என்னும் பெயர் கொண்ட வானர வீரன் மேரு போன்ற பெரும் மலைகளைப் பெயர்த்து தூக்கிக் கடலில் எறிந்தான். அதனால் கடலில் பேரலைகள் எழுந்தது. அது நக்ஷத்திர மண்டலம் வரையில் போய் சேர்ந்தது.

மேலும், வானரர்கள் வீசி எறிந்த மலைகளில் வாழ்கின்ற யானைகள், அம்மலைகளுடன் கடலில் விழுந்தன. யானைகளைக் கண்ட கடல் வாழ் முதலைகள்,' தமக்கு நல்ல இரை கிடைத்தது" என்று மகிழ்ந்து, அவைகளைத் தமது வாயில் பற்றிக் கொண்டன. முதலையின் வாயில் அகப்பட்ட யானைகள், முன்பு, 'ஆதிமூலமே' என்று கத்திய யானை போலவே இப்போதும் அஞ்சிக் கதறியது.

கடலில் வீசி எறியப்பட்ட மலைகளில் உள்ள தேனும், மலர்களும், சந்தனமும், அகிலும் மற்றுமுள்ள வாசனைப் பண்டங்களும் அக்கடல் நீரோடு கலந்து, அந்நீரின் புதுப்புலால் நாற்றத்தைப் போக்கின. அப்போது அக்கடல் குடத்தில் வாசனைப் பொருள்களை இட்டு வைத்துள்ள தண்ணீர் போல, நறுமணம் கமழலாயிற்று! மேலும், பெரியோர்கள் தாம் அடியோடு அழிந்தாலும், தமது வள்ளல் குணத்தை விட மாட்டார்கள் என்பார்கள். அது போலவே இருந்த இடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப் பட்டு கடலில் விழுந்து அழிந்த மலைகள், தாம் அழிந்த போதிலும் தம்மிடம் கொண்டுள்ள கனிகளையும், காய்களையும், தேனையும் அக்கடலில் உள்ள மீன்கள் உண்ணும் படி உணவாகத் தந்தன.

வானரர்களால் கடலில் வீசி எறியப்பட்ட மலைகளில் உள்ள பெரும் பாம்புகள், மத யானைகள் தமது வயிற்றில் உள்ளனவாக வாய் திறந்த வண்ணம் அப்போதும் உறங்கிக் கிடந்தன. உணர்வில்லாதவர்கள் தாம் கேடு உற்றாலும் உணர்ச்சி அடைவார்களோ? என்பது போல அந்தக் காட்சி காணப்பட்டது.

அதுபோல, கடலில் விழுந்த மலைகளில் வாழ்ந்த போர் செய்யும் சிங்கங்களும், கொடிய புலிகளும், யாளிக்குட்டிகளும், சுராமீன்களால் தாக்கப்பட்டு, நீரிலே தோற்றுவிட்டன. பின்பு, அம்மீன்களுக்கு அவைகள் இரையாகின! இது வியப்பல்லவா? ஆனாலும், இதிலும் ஒரு உண்மை இருக்கத் தான் செய்கிறது. அது யாதெனில், தமது இடத்தை விட்டு நீங்கிய எவரிடத்தில் தான் தோல்வி ஏற்படாது? என்பது தான் அவ்வுண்மை.

வானரர்கள் இவ்வாறு பெயர்த்தெடுத்து எறிந்த பெரும் மலைகள் தம்மிடத்தில் தங்கியதால் கடலானது, நீர் அப்பால் சென்று விட வழிய பூமியாயிற்று; கடலில் உள்ள நீர் பாய்ந்ததனால் பூமியும் கடலாகி மறைந்தது! கடலில் எறியப்பட்ட மலைகளில் வாழ்ந்திருந்த சிங்கங்களும், யாளிகளும், புலிகளும் ஆகிய மிருகங்களில் சில கடல் நீரில் இருந்து எப்படியோ நீந்திக் கரைக்குத் தப்பி வந்து இங்கும், அங்கும் விரைந்து ஓடிப் பதுங்கின. அப்போது கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய அந்த நெய்தல் நிலம், அம்மிருகங்கள் உலவப் பெற்றதால் காடுமலையும் நிரம்பிய குறிஞ்சி நிலம் போல ஆயிற்று!

நீலன் என்னும் வானரன் பெரும் மலைகளை எல்லாம் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து கடலில் போட்டான். அப்படிப் போடப்பட்ட மலைகள், கடலின் ஆழம் வரை சென்று தரையைத் தாக்கிற்று அதனால் கரையை மீறி கடல் நீர் எழுந்து எங்கும் பரவ, உலகத்தில் உள்ள பிராணிகள் யாவும் எழுந்து ஓடிய வண்ணம் பேரிரைச்சல் செய்தன!. உடனே இதுகண்ட மற்ற வானர வீரர்களான மயிந்தன், அங்கதன், குமுதன், போன்றோரும் போட்டி போட்டுக் கொண்டு மலைகளைப் பெயர்த்துக் கொண்டு வந்து நளனிடம் கொடுத்து மகிழ்ந்தனர். உடனே, அது கண்ட கரடிகளின் தலைவன் ஜாம்பவான் கரடிகளும், குரங்குக் கூட்டத்திற்கு சளைத்தது இல்லை, என நிரூபிக்க கணக்கற்ற கரடிக் கூட்டங்களை அழைத்து வந்து சேது அமைக்கும் புனிதப் பணியில் ஈடு படுத்தி மகிழ்ந்தான்.

வானரதச்சனான நளன், தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மலைகளை எல்லாம் இரும்புத் தூண் போன்ற தன் நீண்ட கைகளால் வாங்கினான். அப்போது துண்டு பட்டு இடையில் நழுவி விழுந்தவற்றையும் கால்களால் வாங்கினான். அப்படி அவன் அம்மலைகளைக் கொண்டு மேடு பள்ளம் இல்லாமல் நேராக அணை அமைவதற்காக, அவற்றைத் துண்டு படுத்தியும் முழுமையாகவும் வைத்துக் கட்டினான். மேலும், அம்மலைகளின் சிகரங்கள் தனியே தெரியாமல் நேராய் விட, அவற்றின் மேல் மணலை வாரிச் சேர்த்து பெரிய தனது கைகளினால் நிரவினான்.

இவ்வாறு மூன்று பகல் பொழுது பெரிதும் பாடுபட்டு வானர வீரர்கள் அணையைக் கட்டி முடித்தனர். அவ்வாறாக, அந்த அணையும் இலங்கையை போய்ச் சேர்ந்தது. அது கண்டு வானர வீரர்கள் சந்தோஷத்தில் பெரும் ஆரவாரம் செய்தனர். அந்த வீரர்களின் ஆரவாரம் விண்ணையே முட்டியது.

அப்போது சேது,' கடலைக் கடக்க விரும்புபவர்களே! நீங்கள் வேறு வழியைத் தேடுவதேன்? இராமபிரானது தேவியின் துயரத்தைப் போக்கும் பொருட்டு, எனது முதுகிலே அடி வைத்து விரைந்து செல்லுங்கள்!' என்று தனது முதுகை உயர்த்திக் காட்டிய ஆதிசேஷனைப் போல விளங்கிற்று. மற்றும் இராமபிரான், சீதை இருக்கும் இடத்தை நோக்கித் தன் துணைவர்களான வானரர்களுக்குக் காட்டுவதற்காக நீட்டிய கையைப் போலும் அந்தச் சேதுவானது காணப்பட்டது! ஆகாய கங்கையானது இராமபிரானுக்கு வழிகாட்டி உதவுவதற்காக இந்த நில உலகத்துக்கு வந்ததைப் போலவும் அது காட்சி அளித்தது! சூரியன் மறைந்த இரவிலே இந்திரவில் கிடந்தது போலவும் அது விளங்கிற்று!

சேது அவ்வாறு கட்டப்பட்டு விட்ட நல்ல செய்தியை ஸ்ரீ இராமரிடம் தெரிவிக்கும் பொருட்டு சுக்கிரீவனும், விபீஷணனும், மற்றவர்களும் விரைந்து இராமன் இருப்பிடம் சென்றார்கள். பிறகு அவர்கள் இராமனைக் கண்டு," ஐயனே! சேது கட்டப்பட்டது! அந்த அணை நூறு யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும் அமையக் கட்டப் பட்டது!" என்று சொல்லி, அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்!