சம்பாதிப் படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

சம்பாதிப் படலம்

(இது சம்பாதி பற்றிய செய்தியை உணர்த்தும் பகுதி ஆகும். சம்பாதி என்பவன் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற போது அவனோடு எதிர்த்துப் போர் செய்த ஜடாயுவின் அண்ணன் ஆவான்.

வானரர் தென்கடலைக் காணுகின்றார்கள்; பின்பு, ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மகேந்திர மலை தனில் ஒன்றாகக் கூடுகின்றார்கள்; அந்த வானரர் சேனை சீதையைக் காணாமையினால் வருந்தியுரைக்கின்றார்கள். அங்கதன் தன்னோடு வந்தவரிடம் பேசுகின்றான்; பின்னர்ச் ஜாம்பவான் பேச அதற்கு அங்கதன் மறுமொழி கூறுகின்றான்;

அதுகேட்ட ஜாம்பவான் அங்கதனுக்கு மறுமொழி கூறுகின்றான். பின்னர் அனுமன் பேசுகிறான். அப்போது பேச்சு வாக்கில் ஜடாயு இறந்த செய்தியை பற்றிப் பேச . அது கேட்ட அவன் அண்ணன் சம்பாதி வருந்துகிறான். ஜடாயுவைக் கொன்றவர் யார் என அவன் வினவுகின்றான்; பின் தன் வரலாற்றை எடுத்துரைக்கின்றான். அவனிடம் அவன் தம்பி ஜடாயு இறந்த விதத்தை அனுமன் உரைக்கிறான். அதைக் கேட்ட சம்பாதி புலம்புகின்றான். சம்பாதி அனுமனை வினவுவதும் அதற்கு அனுமன் விடையளிப்பதும் நிகழ்கின்றன. அதன்பின் சம்பாதி சடாயுவைப் பலவாறாகப் பாராட்டுகிறான். பின்னர்ச் சம்பாதி தன் தம்பிக்கு நீர்க் கடன் செய்கிறான். இராம நாமம் கேட்கச் சம்பாதியின் சிறகுகள் வளர்கின்றன; அதைக் கண்டு வியந்த வானரர் அந்தச் சம்பாதியின் முன்னைய வரலாற்றை வினவுகின்றார்கள். சம்பாதியும் தன் முன்னைய வரலாற்றையுரைக்கிறான்.

சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்து, வானரரிடம் விடைபெற்றுச் செல்லுகிறான். இவையே இந்தப் படலத்தில் காணப்படும் செய்திகள் ஆகும்)

அனுமனுடன் சென்ற வானரசேனை மகேந்திர மலையை அடைந்த பொழுது, ஏம கூடத்தில் பிறந்து சென்ற வானரப் படைகளும் அப்போது அங்கே வந்து சேர்ந்தன. பிறகு, ஒன்றாக வானர சேனைகள் மகேந்திர மலையிலும், அதன் சுற்றிடங்களிலும் சீதையைத் தேடிவிட்டு அருகிலுள்ள தென்கடலை அடைந்தன.

தென் கடலின் அருகே வந்து சேர்ந்த வானர வீரர்கள் அங்கும் சீதா பிராட்டியைத் தேடினார்கள். ஆனால், அவ்விடத்திலும் சீதா தேவி இல்லை எனக் கண்டவுடன் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஒரு புறம் கிஷ்கிந்தையின் அரசர் சுக்கிரீவன் கொடுத்த தவணை முடியும் தருவாயில் இருக்க, சீதையோ இன்னும் கிடைக்கவில்லையே என அதில் சில வானர வீரர்கள் கவலையுடன் பேசத் தொடங்கினார்கள். "நமது அரசர் சுக்கிரீவர் நமக்குக் கொடுத்த குறிப்பிட்ட தவணையும் கழிந்து விட்டது. நாம் வந்த காரியமும் முடியவில்லை. இதனை அறிந்தால் இரகவப் பெருமாள் உயிரை விடுவார்! மன்னரான சுக்கிரீவரும் நம்மிடம் கோபம் கொள்வார். மேலும், நமது மன்னரின் ஆணைப்படியே, அவர் குறிப்பிட்ட இடங்கள் ஒன்று விடாமல் எல்லா இடங்களிலும் தேடித் பார்த்து விட்டோம். இனி மேல் நாம் என்ன செய்வது? கிஷ்கிந்தைக்குச் செல்லாமல் இங்கேயே கடும் தவம் புரியத் தொடங்குவோமா? இல்லை விஷம் குடித்து இறப்போமா? இவை இரண்டில் எது தகுதியானதோ அதனைச் செய்து விடுவோம்" என்றார்கள். அப்போது வருத்தத்துடன் அங்கதன் அவ்வாறு பேசிய வீரர்களிடம், "நாம் இராமபிரானிடம் சீதா பிராட்டியின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு கண்டிப்பாக வருவோம் என்றெல்லாம் சூழ் உரைத்தோம். ஆனால் அவ்வாறு நாம் செய்யவில்லை. இப்போது நமது வார்த்தைகளே நம்மை பற்றி நாளை பிறர் பழித்துக் கூற இடம் தந்து விட்டது. இனி நாம் சீதா தேவி கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் ஸ்ரீ ராமரை அடைவதற்கு பதிலாக இங்கயே இறப்பது நமக்கு நல்லது என்று நினைக்கிறேன். இதில் உங்கள் கருத்து என்ன" என்று வானர வீரர்களிடம் கேட்டான்.

அங்கதனின் வார்த்தைகளைக் கேட்ட ஜாம்பவான் அவனைப் பார்த்து, "வாலியின் குமாரனே! நல்ல வார்த்தையைச் சொன்னாய் போ! நீ ஒருவேளை இறந்து விட்டால் நாங்கள் எல்லோரும் இளவரசன் இல்லாமல் என்ன செய்வோம். அதனால், நாங்கள் அனைவரும் இறக்கிறோம். இளவரசனான நீ உயிருடன் வாழ்வது கிஷ்கிந்தையின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம்" என்றான்.

அது கேட்ட அங்கதன் மிகுந்த துயரத்துடன் அங்கு கூடி இருந்த வானரப் படைகளைப் பார்த்து, "சிறந்த வீரர்களே! ஜாம்பவான் கூறியதைக் கேட்டீர்கள். நான் மட்டும் உங்கள் அனைவரது மரணத்தையும் பார்த்தபடி கிஷ்கிந்தைக்குப் போவது எனக்குத் தகுதியோ? அவ்வாறு நான் செய்தால் நாளைய உலகம் என்னை என்ன சொல்லும்? 'உயிர் நண்பர்கள் இறக்க, சுயநலம் கொண்ட அங்கதன் மட்டும் உயிருடன் வந்தான்' என்றல்லவா பழித்துக் கூறும். அந்தப் பழி சொல்லுக்கும், கேலிக்கும் நான் ஆளாவதை விட மரணமே மேல் அல்லவா?" என்றான்.

அதற்கு மறுமொழியாக ஜாம்பவான், "வீரம் மிக்க அங்கதனே, உனது குலத்தில் உன்னையும், சுக்கிரீவனையும் விட்டால் ராஜ்யத்தை ஆள்வதற்கு வேறு யாரும் கிடையாது. அதனால், உனக்கு ஏதும் ஆகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன். அதை விடுத்து உன்னைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மீண்டும் சொல்கிறேன், நீ ஒன்றும் எங்களைப் போல சாதரணமானவன் அல்ல. கிஷ்கிந்தையின் வருங்கால அரசன், அதனால் நீ அவசியம் உயிர் வாழ வேண்டும். எனவே நாங்கள் அனைவரும் இறக்கிறோம். சுக்கிரீவனிடம் நாங்கள் அனைவரும் இறந்து விட்டதைப் பற்றித் தகவல் சொல்ல ஆள் வேண்டும். அதனால் நீ இரு" என்றான்.

அது கேட்ட அங்கதன், ஜாம்பவானின் சொற்களைக் கேட்டு கண் கலங்கி நின்றான். அதே நேரத்தில் இது வரையில் எல்லோருடைய மனக்கருத்துக்களையும் வாய் மூலம் கேட்டுக் கொண்டு இருந்த அனுமான் வானர வீரர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினான், "சூரியனுக்கு நிகரான வேகத்தை உடையவர்களே! நாம் பிராட்டியைத் தேடுவதற்காக மூன்று உலகத்திலும் ஒரு பக்கத்திலாவது முழுவதும் போய்ப் பார்க்கவில்லை. இப்படி இருக்க அங்கெல்லாம் நாம் தேடிச் செல்ல இயலாத வானரர்கள் போலவும். செய்ய வேண்டிய செயலைப் பற்றி சிந்திக்க இயலாதவர்கள் போலவும் வீணாக சலிப்படைவது சரியா? மேலும் நாம் பலம் கொண்ட வானர வீரர்கள். இராவணன் போன்ற கொடிய அரக்கர்களை நாம் புலம்ப வைக்க வேண்டுமே தவிர. அவர்களால் நாம் புலம்புதலுக்கு ஆளாவது வீரமோ? இன்னும் சீதா பிராட்டியை தேடிக் கண்டு பிடிக்க எவ்வளவோ இடங்கள் உள்ளது. நாம் ஒரு வேளை, பிராட்டியின் இருப்பிடம் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து அந்தச் செய்தியுடன் மன்னரைக் காணச் சென்றால், நமது மன்னர் சுக்கிரீவர் தவணைக் காலத்தின் எல்லைக் கடந்து விட்டதைப் பற்றிக் குற்றமாகச் சொல்வாரோ? நிச்சயமாகச் சொல்லமாட்டார். ஆகவே, இப்போது பிராட்டியைத் தேடுவதே நமக்கு முக்கியமான காரியமாகும். அதை விட்டு ஒருவரிடம் ஒருவர் புலம்பித் தவிப்பது அல்ல. அதனால், நாம் மன்னர் மகிழ பிராட்டியின் இருப்பிடத்தை உற்சாகத்துடன் தேடிப் பயணிப்போம் வாருங்கள். மேலும், தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள், அப்படி இறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கழுகு அரசன் ஜடாயுவைப் போல இராவணன் போன்ற கொடிய அரக்கர்களுடன் போர் செய்து இறப்போம். போகின்ற உயிர் அப்படியாவது நான்கு அரக்கர்களைக் கொன்று விட்ட திருப்தியுடன் போகட்டும். அதுபோன்ற ஒரு மரணம் தான் நமக்குப் பெருமையும் தரும்" என்றான்.

அப்போது அங்கு ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு இருந்தான் கழுகுகளுக்கு அரசனான சம்பாதி. இவன் ஜடாயுவின் அண்ணன். அவன் காதிலே அனுமன் கூறிய வார்த்தைகள் விழுந்தது. தம்பி இறந்த செய்தியைக் கேட்ட சம்பாதி துடி துடித்துப் போனான். விரைந்து அவர்கள் அருகே வந்தான்.

அவனது உடலில், குறைந்த இறக்கைகள் தான் காணப்பட்டன. பெரும்பாலான இறக்கைகள் எரிந்தது போலக் காணப்பட்டன. எனினும் அந்த குறைந்த இறக்கைகளைக் கொண்டே அவன் பறந்து வந்த காட்சி பெரும் புயலை ஏற்படுத்தியது. அவன் இறக்கைகள் ஏற்படுத்திய அந்தப் புயலில் மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன. வானர வீரர்கள் அது கண்டு அஞ்சி நடு நடுங்கினர். ஆனால், அனுமனோ சம்பாதியைக் கண்டு அச்சம் கொள்ளாமல் அவனை இராவணன் என்றே நினைத்து வீரத்துடன் எதிர்கொண்டு, "நீ மாற்று உருவம் ஏற்று வந்துள்ள அரக்கன் தானே? என் எதிரிலே நீ வந்த பிறகும் உன்னை நான் தப்பிப் போக விடுவேனா?" என்று கோபமாகக் கேட்டான். மீண்டும் சாம்பாதியை உற்று நோக்கினான், அப்போது தான் அவனது கண்களில் பெருகும் நீர்த் துளிகளைக் கண்டான். சினமற்று வருந்தும் சம்பாதியின் தோற்றத்தைக் கண்ட அனுமன் அவன் குற்றமற்றவன் என்பதை விரைவிலேயே புரிந்து கொண்டான்.

அப்போது அனுமனைக் கண்ட சம்பாதி, "ஜாடாயு போன்ற மாவீரன் எப்படி இறந்தான்?" என்று கேட்டான். உடனே அனுமன், "உன்னை யார் என்று முதலில் கூறு. பிறகு நான் நடந்த விவரங்களை உன்னிடம் தெரிவிக்கிறேன்" என்றான். அக்கணம் சம்பாதி தன்னை ஜாடாயுவின் அண்ணன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான்.

சம்பாதியைப் பற்றி அறிந்ததும், அனுமன் அளவற்ற வருத்தம் அடைந்தான். பின் ஒருவாறு தனது மனத்தை தேற்றிக் கொண்டு ஜடாயு இறந்த வகையை அவனுக்குக் கூறினான்.

தனது தம்பி இறந்த வரலாற்றைக் கேட்ட சம்பாதி துன்பக் கடலில் விழுந்தான். வெப்பமாக பெருமூச்சு விட்டான். "இளையவனே, எனது ஆருயிர் தம்பியே! உன் அண்ணன் நான் உயிரோடு இருக்க நீ இறந்தது என்ன நியாயம்? உனது இறப்புச் செய்தியை கேட்டும் நான் இன்னும் உயிருடன் இருக்க என்ன பாவம் செய்தேன்? கருடனை விடச் சிறந்தவனே! முன்னாளில் இரண்டு முட்டைகள் உண்டாகப் பெற்று, நாம் இருவரும் இத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தோம். பிறகு, என்னை விட்டுப் பிரியும் படி நீ மட்டும் வீரச் செயல் புரிந்து இறந்தது என்ன முறையோ? அந்த அரக்கன் இராவணன் கூட உனக்கு எதிராக நிற்க முடியாதே! அப்படி இருக்க அவனா உன்னைக் கொன்றான்? இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லையே!" என்று ஜடாயுவை நினைத்து சம்பாதி கதறிப் புலம்பினான்.

சம்பாதியின் துயர் கண்ட அனுமான், அவனுக்குத் தேறுதல் கூறினான். அதனால் சம்பாதியும் ஆறுதல் அடைந்தான். பிறகு அனுமனிடம், "ஜடாயு, இராவணனை எதிர்க்க என்ன காரணம்?" என்று கேட்டான்.

அதற்கு அனுமன் நடந்த சம்பவத்தை இன்னும் தெளிவாகச் சம்பாதிக்கு விளக்கினான். அதைக் கேட்ட சம்பாதி அனுமனைப் பார்த்து, "ஸ்ரீ ராமனுக்காக எனது தம்பி உயிர் கொடுத்தானா? இது எவ்வளவு பெரிய செயல்! சீதையைக் காப்பாற்ற போரிட்டு எனது தம்பி இறந்து இருக்கிறான் என்றால் உண்மையில் அவன் இறந்தவன் அல்ல. அவன் என்றும் இப்பூமியில் ஈன உடல்விட்டுப் புகழுடம்பு பெற்று வாழ்கிறான்! தருமசீலரான இராமபிரானுடன் உறவு கொண்டாடி, அதனால் இராவணனுடன் போர் புரிந்து வீர சுவர்க்கம் அடைந்த பேறு, எனது தம்பி ஜடாயுவுக்கன்றி வேறு யாருக்குக் கிடைக்கும்? இதை விடச் சிறந்த பேற்றையும், இன்பத்தையும் தருவது வேறு என்ன இருக்கிறது?" என்று மகிழ்ந்து கூறினான்.

பின்பு சம்பாதி ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய நீர்க்கடன் அனைத்தையும் கழித்தான். அக்காரியம் முடிந்ததும் அவன் வானர வீரர்களைப் பார்த்து, "மாவீரர்களே! உங்களது வரவு என்னை நல்வாழ்வு அடையச் செய்தது. தம்பி இறந்து விட்டான் என்று நினைத்தேன், ஆனால் ஸ்ரீ ராமனுக்காக போரிட்ட எனது தம்பி இந்நேரம் பரமபதம் அடைந்து இருப்பான். இந்த நல்ல செய்தியைக் கூறிய நீங்கள் அனைவரும் வாழ்வீராக. இனி நான் ஏன் எனது தம்பியின் மரணத்தைப் பற்றி வருந்தப் போகிறேன்? அவன் பாக்கியம் பெற்றவன் ஆயிற்றே. உங்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுதல், நீங்கள் அனைவரும் இராம நாமத்தை ஒன்று கூடி வாய்விட்டுச் சொல்லுங்கள். அதனால் இராமபிரானின் கருணை எனக்குக் கிடைக்க, நான் இழந்த சிறகுகளை மீண்டும் பெறுவேன்!" என்று வேண்டினான்.

வானரவீரர்கள் அனைவரும் அது கேட்டு வியப்படைந்து சம்பாதியின் வேண்டுகோளுக்கு இணங்க இராம நாமத்தை அங்கு இருந்த அனைவரும் வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினர்கள். உடனே சம்பாதியின் இறகுகள் பழையபடி முளைத்து ஆகாயமளாவி வளர்ந்தன!

அது கண்டு வானர வீரர்கள் யாவரும் முன்னிலும் அதிகமாக வியந்தார்கள். இராமபிரானின் கருணையை நினைத்து ஸ்ரீ ராமரை அந்த வானர வீரர்கள் போற்றித் துதித்தார்கள். பிறகு வானர வீரர்கள் சம்பாதியின் முழு வரலாற்றையும் கேட்க ஆவல் கொண்டனர். அதன் படி தங்கள் வேண்டுகோளை சம்பாதியிடம் முன் வைத்தனர்.

சம்பாதி அவர்களின் வேண்டுதலுக்கு உடன் பட்டு தனது கதையைக் கூறத் தொடங்கினான். "சூரிய பகவானின் சாரதி அருண தேவன். அவர் காசியப முனிவரின் பத்தினியான வினதையின் வயிற்றில் பிறந்தவர். கருடனின் தமையன். அருணனுக்குப் பிறந்த நானும் ஜடாயுவும், கழுகுகளுக்கு அரசனாகத் திகழ்ந்தோம். உயரப் பறக்கும் தன்மை கொண்ட நாங்கள் இருவரும் சுவர்கலோகத்தைக் காண ஆசை கொண்டோம். எனவே, வானத்தில் மிக அதிக தூரம் பறந்தோம். சூரிய மண்டலத்தைக் கடந்து கொண்டு இருந்த போது. சூரிய தேவன் பூலோகத்தவர்களான நாங்கள் சூரிய லோகத்தைக் கடப்பதை ஏற்றுக் கொள்ளாமல் எங்கள் மீது கோபம் கொண்டார். அவர் எச்சரிக்கை செய்தும், அதனை நாங்கள் கேட்கவில்லை. எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். முன்பை விட இன்னும் அதிக தூரம் நாங்கள் பறந்தோம். அப்போது சூரிய தேவன் இன்னும் அதிகமாகக் கோபம் கொண்டு, எங்கள் மீது அவருடைய வெப்பக் கதிர்களை செலுத்தினார். அதனைத் தம்பி ஜடாயுவால் தாங்க முடியவில்லை. தன்னைக் காப்பாற்றுமாறு அவன் என்னிடம் வேண்டினான். அதனால் அவன் எனது சிறகின் நிழலில் வருமாறு அவனுக்கு மேலே நான் பறந்து சென்றேன். அவனும் அவ்வாறு வந்து சூரியனின் கோபக் கதிர்களிடம் இருந்து தப்பினான். ஆனால், நான் சூரியனின் வெப்பக் கதிரால் சிறகுகள் பெரும்பாலும் அழிய கீழே விழுந்தேன். அப்போது பூமியில் சிறகுகள் இல்லாமல் துடி, துடித்துக் கொண்டு இருக்கும் என்னைக் கண்டு சூரிய தேவன் கருணை கொண்டார். என்னிடம், 'கவலைப் படாதே சம்பாதி, இனி ஒரு காலத்தில் இராமபிரானின் வானர சேனை இங்கு வர, அவர்கள் உன் வேண்டுகோளின் படி இராமநாமத்தை சொல்ல, இப்போது இழந்த சிறகுகளை நீ மீண்டும் பெறுவாய்!' என்றார்.

எனினும், அப்போது லோகசாரங்க முனிவரின் ஆசிரமத்தின் அருகே விழுந்திருந்த நான், மேலே இருந்து விழுந்த அதிர்ச்சியால் மிகுந்த துன்பம் அடைந்து இருந்தேன். சூரிய பகவான் அருள் புரிந்திருந்தாலும் நான் வாழ விரும்பாமல் உயிர் விடத் துணிந்தேன். அவ்வேளையில் லோகசாரங்க முனிவர் என்னிடத்தில் வந்து, 'நீ இவ்வாறு சிறகுகளை இழக்க நீ செய்த குற்றமே காரணம். ஆயினும் சூரியன் உனது குற்றத்தைப் பொறுத்து உனக்கு அருள் பாலித்து இருக்கிறார். அதனால், உனக்கு நிச்சயம் நல்ல காலம் வந்து சேரும். அப்படியிருக்க அது நாள் வரையில் நீ உயிருடன் வாழ்வதை விட்டு விட்டு தற்கொலை செய்ய சித்தம் கொள்வது சரியோ? அது இழிந்த பிறப்பை அல்லவா உனக்கு ஏற்படுத்தி விடும். அதனால், காலம் கனியும் வரை பொறுத்திரு' என்றார்.

நானும் அவர் எனக்கு உபதேசம் செய்த படியே உங்கள் வரவுக்காகக் காத்துக் கொண்டு இருந்தேன். நான் சிறகுகள் இழந்த காரணத்தால் எனது தம்பி ஜடாயு எனது கட்டளைப்படி கழுகுகளின் அரசனானான். இது தான் எனது கதை!" என்று சம்பாதி தனது கதையை வானர வீரர்களிடம் முழுவதுமாகக் கூறி முடித்தான். பிறகு அந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்த வானர வீரர்கள் ஸ்ரீ ராமர் இருக்கும் திசையை வணங்கி கழுகு அரசனான சம்பாதியிடன் தங்களது துன்பக் கதையையும் முழுவதுமாக சொல்லி முடித்தார்கள்.

வானர வீரர்களின் வருத்தத்தை கேட்ட சம்பாதி அவர்களைத் தேற்றினான். மேலும் அவன் அந்த வானர வீரர்களிடம், "பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற பொழுது அதனை நான் கண்டேன். ஆனால், எனக்கு அப்போது சிறகுகள் இல்லாத காரணத்தால் அவனை என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருந்தாலும் வருத்தப் படாதீர்கள். அவன் இலங்கைக்குத் தான் சீதையைக் கொண்டு சென்றான். அது எனக்கு நன்றாகத் தெரியும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. மேலும் அங்கே தான் பிராட்டியை சிறைக் காவலில் வைத்து இருக்கிறான் அந்தக் கொடிய இராவணன். எனவே, பிராட்டியை நீங்கள் இலங்கைக்கு சென்றால் காணலாம். இலங்கை இங்கு இருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ளது. ஆனால், குற்றமற்ற வானர வீரர்களே, நீங்கள் இலங்கைக்குச் செல்வது ஒன்றும் லேசான காரியம் இல்லை. இடையில் உள்ள இந்த மகா சமுத்திரத்தைக் கடக்க வேண்டும். இராவணன் இலங்கையைக் காக்க பணியில் அமர்த்தி இருக்கும் கொடிய அரக்கர்களை நீங்கள் வெல்ல வேண்டும். மேற்கண்ட இவற்றை எல்லாம் சிந்தித்து செயலாற்றுங்கள். அது மட்டும் அல்ல, நீங்கள் எல்லோரும் ஒன்றாக இலங்கைக்கு போவதென்பது முடியாத காரியம். வல்லமை உள்ள ஒருவர் மாத்திரம் இப்போதைக்கு கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்ல வேண்டும், பிறகு சீதா பிராட்டியைக் கண்டு, இராமபிரான் கூறிய நல்ல வார்த்தைகளை சீதா பிராட்டியிடம் சொல்லி, அவரது துயரைப் போக்கித் திரும்ப வேண்டும். இல்லையென்றால், அது முடியாவிட்டால் பிராட்டி இலங்கையில் தான் உள்ளார்கள் என்ற செய்தியை உடனே கிஷ்கிந்தை சென்று அண்ணலிடம் கூறுங்கள்! இது தவிர வேறு ஒரு மார்க்கம் எனக்குத் தோன்றவில்லை. நான் சொன்னதை ஆலோசித்துப் பாருங்கள். அதில் நன்மை தரக்கூடிய விஷயத்தை செய்யுங்கள்!

பாதுகாப்பவர் இல்லாமல் கழுகளின் கூட்டம் தமது இருப்பிடத்தை விட்டு நிலைகெட்டுப் போய் விடும். அத்தடுமாற்றத்தைப் போக்கி நான் அக்கழுகுக் கூட்டங்களை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளபடியால் இப்போதே அவ்விடம் செல்ல வேண்டியுள்ளேன். ஆகவே நண்பர்களே, இப்போதைக்கு எனக்கு விடை தாருங்கள்" எனக் கூறி சம்பாதி வானர வீரர்களிடம் இருந்து விடை பெற்று ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றான்.