குயவன் கூறிய உண்மை!

குயவன் கூறிய உண்மை!

bookmark

பானைகளைச் செய்து விற்கும் குயவன் ஒருவன் ஒரு குப்பத்தில் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தான் செய்த பானைகளைப் பரணில் அடுக்கி வைக்கும்போது, ஒரு தேங்காய் ஓடு அவன் தலையில் வந்து விழுந்தது. தலையில் காயம் ஏற்பட்டது. பின்னாளில் அந்தக் காயம் ஒரு பெரிய தழும்பாக மாறிவிட்டது. 
ஒருமுறை அந்தக் குப்பத்தில் பஞ்சம் ஏற்பட, அந்தக் குயவன் வேறு ஒரு நாட்டிற்குச் சென்று, தன் குலத்தொழிலைச் செய்யாமல், அந்த நாட்டின் அரண்மனையில் சேவகனாகப் பணிக்குச் சேர்ந்தான். ராஜா தன் சேவகர்களைப் பார்வையிடும் போது, இவன் தலையில் பெரிய தழும்பு இருப்பதனைப் பார்த்தார். இவன் முன்பு ஏதாவது ஒரு படையில் சிறந்த வீரனாக இருந்திருப்பான் என்று நினைத்து, அவனுக்கு அதிக ஊதியமும் மதிப்பு மிக்க பதவியும் அளித்தார்.

ஒருநாள் குயவன் தனிமையில் ராஜாவுக்கு பணிவிடை செய்த சமயத்தில் ராஜா அவனிடம் உன் தலையில் உள்ள வெட்டுக்காயம் எந்தப் போர்க்களத்தில் ஏற்பட்டது? என்று கேட்டார். 

எதற்காக ராஜா கேட்கிறார் என்பதைப் புரிந்துக் கொள்ளாதக் குயவன், ராஜா எனக்கும் போர்க்களத்திற்கும் என்ன சம்பந்தமும் இல்லை. நான் ஒரு பானை செய்யும் குயவன் தானே! என் தலையில் ஒரு தேங்காய் ஓடு விழுந்து காயப்படுத்தி விட்டது. அந்தக் காயம் பின்னாளில் தழும்பாக மாறிவிட்டது என்று நடந்த உண்மையை அப்படியே சொன்னான். 

ராஜாவுக்குக் கடுமையான கோபம் வந்தது. இவனைப் போய் பெரிய வீரனென்று நினைத்து ஏமாந்தோமே என்று அவருக்கு அவமானமாகவும் இருந்தது. இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்? என்று நினைத்த ராஜா, குயவனிடம் உன்னைப்பற்றிய இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும் முன்பாக இந்த நாட்டைவிட்டே ஓடிவிடு என்று ஆணையிட்டார். 

குயவனுக்குத் தான் செய்த தவறு இப்போது தான் புரிந்தது. உடனே அவன், ராஜா என் கைகளிலும் கால்களிலும் உள்ள வெட்டுக் காயங்களைப் பாருங்கள். இவை ஒரு போர்க்களத்தில் ஏற்பட்டவைதான் என்று பொய் கூறினான். ராஜா அவன் வார்த்தைகளை நம்பவில்லை. பொய் சொல்லாதே! நீ பிறந்த குலம் போர்க்களத்தில் வருவதில்லை. இங்கு இருப்பவர்கள் யாரும் நீ போர்வீரன் அல்ல, ஒரு குயவன் என்பதனை அறிந்துக் கொள்வதற்கு முன்பாக ஓடிவிடு என்று எச்சரித்தார் ராஜா. 

நீதி : பேசும் முன் யோசித்துப் பேச வேண்டும்.