
கார்முகப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
கார்முகப் படலம்
(இராமன் வில்லை நாணேற்றினால் துயர் நீங்குமென்று சனகன் கூறுகின்றான். அந்த வில்லை ஏவலர் அவைக்குக் கொண்டு வருகின்றார்கள். வில்லைப் பார்த்தவர்கள்
பலவாறு பேசுகின்றார்கள். சதானந்த முனிவன் வில்லினது வரலாற்றை உரைக்கின்றான். பின்னர் விசுவாமித்திரனது முகக்குறிப்பை அறிந்த இராமன் வில்லை நோக்கி எழுகின்றான். அந்த வில்லினை எடுத்து இராமன் நாணேற்றுகின்றான்; வில் முறிந்த ஓசையை யாவரும் கேட்டு அஞ்சுகின்றனர். மிதிலை நகர மக்களின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. காதல் நோயால் நைந்த சீதைக்கு அவள் தோழியான நீலமாலை
மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகின்றாள்; சனகன் உவந்து கோசிகனிடம் திருமணம் குறித்து வினவுகின்றான். அம் முனிவன் மொழிப்படியே சனகன் தசரதனுக்குத் தூது விடுக்கின்றான்.)
விசுவாமித்திரர் கூறியதைக் கேட்ட ஜனகமகாராஜர் இப்படிப்பட்ட ராம லக்ஷ்மணர்கள் தனது இருப்பிடம் தேடி வந்ததற்காக பெரும் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் விசுவாமித்திரரை வணங்கி அவரிடம்,“பெரும் முனிவரே உங்களிடம் ஒரு வேண்டுகோள். இந்தக் குமாரரான ஸ்ரீ ராமர் எனது துக்கத்தையும் போக்க வேண்டும்" என்றார்.
அதற்கு விசுவாமித்திரர்," உமது துக்கம் தான் என்ன?" என்று ஜனகரைக் கேட்டார்.
அதற்கு ஜனகர், "எல்லாம் அறிந்தும் அறியாதது போலக் காணப்படும் பெரும் முனிவரே. என்னிடம் உள்ள மாயவில்லை யார் ஒருவர் நாணேற்றிகிராற்களோ அவர்களுக்கே சீதையை மணம் முடிப்பேன் என்ற நிபந்தனையை வைத்திருந்தேன். ஆனால், இந்த மாயவில்லை இது வரையில் எப்பேர்ப்பட்ட வீரராலும் தூக்கக் கூட முடியவில்லை. எனவே, எனது வேண்டுகோள் இது தான், இப்போது கொண்டு வரப்போகும் சிவதனுசை இந்தக் குமாரர் வளைத்து நாணேற்றுவாரேயானால், அப்போது என் துயரும் தீரும்; என் மகள் சீதையும் முற்பிறவியில் செய்த தவப்பேற்றைப் பெற்றவள் ஆவாள்" என்று கூறினார்.
விசுவாமித்திரர் அந்த சிவதனுசைக் கொண்டு வரும் படி சொல்லவே. ஜனக மாகாராஜர் தனது ஏவலர்களை பணிக்க. அவர்கள், சுமார் அறுபதினாயிரம் பலசாலியான வீரர்கள் ஒன்று இணைந்து மலை போன்ற ஒரு வில்லை மிகவும் கஷ்டப்பட்டு சுமந்து கொண்டு சபைக்கு வந்தார்கள்.
அந்த சிவ தனுசைப் பார்த்த சிலர்,"சீதைக்கு எங்கே, இந்த ஜன்மத்தில் திருமணம் நடக்கப் போகிறது?"என்றார்கள். சிலர் "ஒரு வேளை, மும்மூர்த்திகள் யாரேனும் வந்து, இந்த சிவ தனுசை, நாணேற்றினால் சீதையின் திருமணம் உண்டு" என்றார்கள். இன்னும் சிலர்,"அந்த வில்லை வில் என்று சொல்வது வஞ்சனை ஆகும். நிச்சயம் இது பொன்மலையாகிய மேரு மலை" என்றார்கள். இன்னும் சிலர், "இந்த வில்லை நிச்சயம் மனிதன் நாணேற்றி இருக்க வாய்ப்பில்லை" என்றார்கள். மேலும் சிலர்,"அழகிய நீண்ட பாற்கடலை முன்பு கடைந்த மத்தாகிய மந்திரமலையே இப்படி வில்லாக உருவெடுத்து உள்ளது"என்றார்கள்.
இன்னும் சிலர்," ஆகாயத்தில் இருந்து நீண்ட இந்திர தனுசு அங்கிருந்து கீழே விழுந்து விட்டதோ?" என்றார்கள். "இந்த வில்லை எதற்காக ஜனக சக்கரவர்த்தி கொண்டு வரச் சொன்னார்?" என்று பலர் கேட்டனர். அதில் சிலர்," இந்த வில்லைக் கன்னியாசுற்கமாக வைத்த இவரைப் போன்ற ஒரு மதி கெட்ட அரசரும் உலகத்தில் இருப்பாரோ?" என்று ஜனகரை இகழ்ந்தனர். ஆனால் மற்றும் சிலர் மிகவும் பெருந்தன்மையாக, "பெருமை பெற்ற இந்த வில்லை ஜனகராஜர் தனது மகள் சீதையின் சிறப்பை வெளிப்படுத்தவே நிலை நிறுத்தி உள்ளார்" என்று புகழ்ந்தனர். இப்படி ஒவ்வொருவரும் அந்த வில்லைப் பார்த்து தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.
இங்ஙனம் கொண்டு வரப்பட்ட அந்த மகா பெரிய வில்லை, வீரர்கள் மெதுவாக சபையின் நடுவே இறக்கினார்கள்.இருந்தாலும், அந்த வில்லின் பாரம் தாங்காமல் பூமி சற்றே தெரித்தது.அதனைக் கண்டு அவையில் இருந்த மற்ற அரசர்கள்," இந்தப் பெரும் வில்லை, யாரால் தான் தூக்க முடியும்" என்று தீர்மானித்துக் கொண்டு.பலர் அந்த வில்லைத் தொடவே கூசினார்கள்.
மறுபுறம் ஜனக மகாராஜர், அந்த வில்லையும் பார்த்தார், தனது மகள் சீதையையும் பார்த்தார். மனதிற்குள், "அய்யோ, நான் அறியாமல் பந்தயத்தை வைத்து விட்டேனே, என் மகள் சீதை அப்படியே இருந்து விடுவாளோ?" என்று கண்கலங்கினார். அதனை கவனித்த சதானந்தர், விசுவாமித்திரரை நோக்கி மற்ற அரசர்களுக்கும் கேட்கும் படி "முனிவருள், தலை சிறந்தவரே, முன்னொரு காலத்தில் தட்சனின் மகள் தாட்சாயணி ,தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவ பெருமானைத் தனது தலைவனாக மணந்தார்.சிவனை ஏற்கனவே பிடிக்காத தட்சன், தனது மகளின் இந்தச் செய்கைக்காக, சிவனை அவமதிக்க தனது பரிவாரங்களுடன் பெரும் யாகத்தை நடத்தினான். அந்த யாகத்தில் நியாமாக சிவனுக்குத் தர வேண்டிய அவிர்பாகத்தை தராமல், மற்ற தேவர்களுக்கு மட்டும் முறைப்படிக் கொடுத்தான். இந்த அநியாயத்தைக் கேட்கச் சென்ற தாட்சாயணியை, முனிவர்கள், தேவர்கள் எனப் பலர் முன்னிலையில் அவமானப் படுத்தினான் தட்சன். மனம் வருந்திய தாட்சாயணி யாக குண்டத்தில் எறியும் அக்னிக்குத் தன்னை சமர்பித்துக் கொண்டாள். இதனால், கோபம் கொண்ட சிவன், தனது படை ,பரிவாரங்களுடன் தட்ச ராஜனை அழிக்கச் சென்றார். தனது கையில் இருந்த வில்கொண்டு யாகத்தை முற்றிலும் அழித்தார். தட்ச பரிவாரங்களை அழித்த பிறகும் கூட அந்த ருத்திர மூர்த்தி அந்த வில்லை கையில் வைத்துக் கொண்டு இருந்தார். அது கண்ட தேவர்கள்,"எங்கே இந்த வில்லைக் கொண்டு சிவ பெருமான் நம்மையும் அழித்து விடுவாரோ?" என அஞ்சி நடுங்க. அது கண்ட ருத்திர மூர்த்தி ஜனகரின் குலத்தில் உதித்த பூர்விக அரசர் ஒருவரிடம் இதனை வைத்துப் போக, அது பரம்பரையாக இவ்வரசருக்கும் கிடைத்தது!" என அந்த வில்லின் பெருமையையும், வரலாற்றையும் எடுத்து உரைத்த சதானந்தர், பின்பு சீதையின் வரலாற்றையும் விசுவாமித்திர முனிவரிடத்தில் சபையோர் கேட்கக் கூறத் தொடங்கினார்.
"முனிவரே! சீதையின் வரலாற்றையும் கேட்பீராக! யாகம் செய்யும் பொருட்டு இரத்தினங்கள் பதித்த பொன்னால் ஆன கலப்பையால் நாங்கள் நிலத்தில் உழுதோம். அப்படி உழும் பொழுது, கலப்பை அந்த நிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தட்டி நகராமல் நிற்கவே, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது கிடைத்த பெட்டியினுள் சீதை குழந்தையாகக் கண்டு எடுக்கப்பட்டாள். ஜனக மகாராஜனுக்கு அப்போது குழந்தைகள் இல்லாத காரணத்தால், பூமித்தாய் கொடுத்த மகள் என்று சீதையை ஜனகரே வளர்த்தார். இந்த சீதையின் குணத்தைத் தான் நான் என்னவென்று சொல்வது.சொல்ல வார்த்தைகள் இல்லை, அத்துணை சிறப்புக்கள் உடையவள். அதனால் தான், இந்தச் சீதையை அடைவதற்கு தரணியில் இருக்கும் அத்தனை ராஜ குமாரர்களும் தங்களுக்குள் போட்டி இட்டுக் கொண்டு இந்த மிதிலையை நோக்கிப் படை எடுத்தார்கள்.ஆனால், பந்தயப் படி இந்த சிவ தனுசை அவர்களால் நாணேற்ற அல்ல, அல்ல தூக்கக் கூட முடியாமல் வெட்கிப் போனார்கள். தங்கள் அவமானத்தால் வந்த கோபம் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் சீதையை அடைய வேண்டும் என்ற பேராசையில், அவர்கள் படைகலன் கொண்டும், பெரிய சேனைகளைக் கொண்டும், நாள் வகைப் படைகளின் புழுதி பறக்க எங்கள் ஜனக மன்னருடம் போரிட்டுத் தோற்றார்கள்.
மொத்தத்தில், அன்று முதல் இன்று வரை எந்த அரசனாலும் இந்த சிவ தனுசை நெருங்கக் கூட முடியவில்லை. தோற்று ஓடிய மன்னர்களும் திரும்பி வரவில்லை. அதனைக் கண்டு, சீதைக்கு திருமணமே நடக்காது, என்று பலர் கூறினர். ஆனால், இன்று அவர்களின் கூற்றைப் பொய் ஆக்கும் பொருட்டு தசரத மன்னரின் புத்திரரான ஸ்ரீ ராமர் வந்துள்ளார். இனி சீதையின் அழகும், வாழ்வும் வீணாகாது" என்று இங்ஙனம் விசுவாமித்திரரைப் பார்த்து சதானந்தர் கூறி முடித்தார்.
சதானந்தர் கூறிய வார்த்தைகளை ஆலோசித்துப் பார்த்து, அந்த வார்த்தைகளில் உள்ள சத்தியத்தைப் புரிந்தவராக ராமனை விசுவாமித்திரர் நோக்க, விசுவாமித்திரரின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஸ்ரீ ராமர், யாகத்தின் போது நெய் ஆகுதியில் விழுந்ததால் அக்கினி புறப்பட்டு மேல் நோக்கி எழுந்தது போல, தனது ஆசனம் விட்டு எழுந்தார். சிவ தனுசு வைக்கப் பட்டுள்ள இடம் நோக்கி நகர்ந்தார்.அது கண்ட சீதையின் உயிர் தோழிகள்," ஸ்ரீ ராமன், இந்த வில்லை எப்படியும் தூக்கி நாணேற்றி விடுவார். ஒரு வேளை, அப்படி நடக்காவிட்டால். சீதை நெருப்பில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்வாளே, அப்படி நடந்தால் நாங்களும் அவளுடன் சேர்ந்து தீயில் குதிப்போம்" என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள். இன்னும் சில பெண்கள்," ஜனகருக்கு மதி மயங்கி விட்டது, ராமன் வந்ததுமே சீதையை மணந்து கொடுக்காமல், தூக்கி நிறுத்தக் கூட முடியாத இந்த வில்லையா நாணேற்றும் படி சொல்வது? ஜனகருக்கு சீதை திருமணம் ஆகி கணவன் வீட்டுக்கு போக வேண்டும் என்ற ஆசை இல்லைபோல" என்று கூறிக் கொண்டார்கள். இப்படி அந்த சபையில் சீதைக்காக உருகிய உயிர்கள் பல.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, வில்லின் அருகே வந்து நின்றார் ராமபிரான். சீதைக்குச் சூட்டும் மாலையே அந்த வில் என்று எண்ணியது போல், ஸ்ரீ ராமர் அந்த வில்லை மிகவும் மென்மையுடனும், இலேசாகவும் எடுத்தார். அது கண்டு சபையில் வீற்று இருந்த ராஜகுமாரர்கள் அனைவரும் தாங்கள் காண்பது கனவா? என்ற ஐய்யத்தில் கண் இமைக்காமல் தங்கள் முன் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ராமர் கையில் அந்த வில், ஒரு விளையாட்டுப் பொம்மை போலக் காட்சி அளித்தது. ஸ்ரீ ராமர், அந்த வில்லை நாணேற்றியத்தை அவர்கள் பார்க்கத் தவறி விட்டார்கள். காரணம், அது கண் இமைக்கும் நேரத்தில் முடிந்து விட்டது. ஆனால், சபையில் இருந்தோரும், மூவுலகத்தாரும் அந்த வில் ஒடிந்து எழும் பெரும் ஓசையை மட்டும் கேட்டனர். ஆம், சிவ தனுசை எடுத்த ஸ்ரீ ராமர், நாணேற்றும் சமயத்தில் அந்தப் பழமை வாய்ந்த வில் முறிந்து விட்டது. உண்மையில் இதில் ஸ்ரீ ராமரின் தவறு ஒன்றும் இல்லை.
"இது ஜனகர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலன்" என்று தேவர்கள் வானில் இருந்து மலர்களை பொழிந்தனர். மறுகணம், மிதிலை மக்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். நகர் முழுதும் இந்தச் செய்தி பரவி, எங்கும் இனிய பாடல்களும், யாழ் இசையும் ஒலித்தன. ஆடல்,பாடல்கள் என மிதிலை முழுதும் விழாக் கோலம் தான்.
அந்த நகரத்து மக்கள் இராமனைப் பார்த்தார்கள். அவர்களில் சிலர், "இவர் தசரத புதல்வர்" என்றார்கள். சிலர், "தாமரைக் கண்ணன்" என்றார்கள். வேறு சிலர்," செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலே" என்றார்கள். அவருடைய திருமேனியைக் கண்ட சிலர், அதனை "காளமேகம்" என்று கூறினார்கள். "இல்லை, இல்லை காயம் பூவையே அவருடைய திருமேனி ஒத்து இருக்கிறது" என்றனர் சிலர். மற்றும் சிலர், " இவரை மானிடர் என்று கூறும் உலகத்தவர் அறியாமை உடையவரே" என்றனர். மேலும் சிலர், " மிதிலைக்கு இந்த ராஜ குமாரர்களை அழைத்து வந்த விசுவாமித்திரருக்கு நன்றி தெரிவித்து வணங்குங்கள்" என்றனர்.
இது இப்படி இருக்க, சீதையோ அவளது அந்தப்புரத்தில் சிறுத்த இடையையும், கரியநெடுங் கண்களையும் கொண்டு இராமனையே நினைத்து உருக்கிக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கும்,இங்கும் நடந்த அவள், தடாகத்தில் இருந்த தாமரைகளிடம் "குளிர்ந்த நன் மனம் கொண்ட தாமரைக் கொடிகளே! ஒரு பெண்ணின் பிரிவுத் துயரை என்னும் அளவுக்கு பெருந்தன்மை கொண்டதால் தான் நெஞ்சுக்கு இனியவரின் திருமேனி நிறத்தை காட்டுகிறீர்களோ? உங்களில் அவர் அழகைப் பார்த்ததால் நான் மன வாட்டம் தீர்ந்தேன்" என்றாள். அப்போது உருவெளித் தோற்றத்தில் இராம பிரானின் சந்திரமுகம் தோன்றியதைக் கண்டாள் சீதை. அக்கணம் முதல் மீண்டும் புலம்பித் தவித்தாள் சீதை. சீதையின் தோழி, தான் அணிந்த காதணிகளும் ஆபரணங்களும் ஒளி வீச, ஆடையும் கூந்தலும் சரிந்து அவிழ வேகமாக சீதையிடம் ஓடி வந்தாள். வந்தவள், எல்லை இல்லா மகிழ்ச்சி உடன் மங்கள கீதம் பாடினாள். அது கண்ட சீதை அத்தோழியின் மகிழ்ச்சியின் காரணத்தைக் கேட்டாள்.
அப்போது ஸ்ரீ ராமர் சிவ தனுசை பூ போல எடுத்த விதத்தையும், அதனை முறித்த கதையையும் அத்தோழி சீதையிடம் வாய் மொழிந்தாள். தோழியின் வார்த்தைகளை கேட்ட சீதை சிறிது மகிழ்ந்தாள்.ஆனாலும், அவள் மனதுக்குள் சந்தேகப் புயல் வீசத் தொடங்கியது. "நான் கன்னி மாடத்தில் கண்ட அந்த நபர் தான், சிவ தனுசை முறித்த ஸ்ரீ ராமரா?. ஒரு வேளை, அந்த நபர் ஸ்ரீ ராமராக இல்லாமல் இருந்தால், நான் என் உயிரையே விட்டு விடுவேன்" என்று சீதை உறுதி பூண்டாள்.
இது ஒரு புறம் இருக்க, ஜனகர் மனதில் இருந்த துயரம் ராமனால் முடிவு பெற்றது. ஜனகரைப் பொறுத்த மட்டில் ராமன் சிவ தனுசை மட்டும் உடைக்கவில்லை, ஜனகரின் கவலையையும் உடைத்து எறிந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜனக மகாராஜர் விசுவாமித்திரரை நோக்கி," ஐயனே தாங்கள் அழைத்து வந்த ஸ்ரீ ராமனின் திருமணத்தை சீதையுடன் இப்போதே வைத்துக் கொள்ள நான் தயார் தான், இருந்தாலும் எது சரி?" என்று கேட்க.
அதற்கு விசுவாமித்திரர், "ஜனக மகாராஜனே, அது முறை அல்ல. இத்திருமணத்தில் தசரத சக்கரவர்த்தியும் கலந்து கொள்ள வேண்டும். அதுவே முறை.ஆகவே, உடனே நீ, அவருக்கு இவ்விஷயமாய் செய்தி சொல்லி அனுப்பு" என்று கூறி முடித்தார். அது கேட்ட ஜனகர், விசுவாமித்திரர் கூறியபடியே தூதுவர்களை அழைத்து அவர்கள் கைகளில் திருமண மடலைக் கொடுத்து அயோத்திக்கு தசரதரைக் கண்டு கொடுக்கும் படி அனுப்பி வைத்தார்.