காட்சிப் படலம்

bookmark

 சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

காட்சிப் படலம்

(அனுமன் பிராட்டியைத் தேடி வந்தபோது, பிராட்டி இருந்த நிலையையும் அவள் எண்ணங்களையும் இப் படலம் விவரிக்கிறது.

பிராட்டி மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்து பிரிவுத் துயரமே பெண்ணுருக் கொண்டாற் போல் விளங்குகிறாள். அவள் என் நிலையைப் பெருமான் உணரவில்லையோ என்று கருதி நெருப்பிற் புக்காற் போன்று வருந்தினாள். பழைய நினைவுகளெல்லாம் பிராட்டியைக் கொல்லாமற் கொல்கிறது. பிராட்டி திரிசடையை நோக்கி, இடப்புறம் துடிக்கின்றது. இனி யாது நிகழும் என்று கேட்கிறாள். திரிசடை எதிர்காலத்தில் இலங்கையில் நிகழும் நிகழ்ச்சியைத் தான் கனவில் கண்டதைக் கூறிப் பிராட்டியைத் தேற்றுகிறாள். இச்சமயத்தில்தான் அனுமன் பிராட்டியின் தவக் கோலத்தைக் கண்டு, பிராட்டியின் மனத்தவத்தை வியந்து, 'அறம் வெல்லும்! பாவம் தோற்கும்!' என்னும் சத்தியத்தை எண்ணிப் பூரிக்கிறான். அப்போது அங்கே இராவணன் அரக்கியர் சூழப் பெருமிதத்துடன் தோன்றுகிறான். இவையே இப்படலத்தில் காணக்கிடைக்கும் செய்திகள் ஆகும்)

அழகிய அந்தப் பூஞ்சோலையை அடைந்த அனுமான், 'இவ்விடத்தில் தான் நிச்சயம் பிராட்டி இருக்க வேண்டும். ஆகவே, இவ்விடத்தில் நான் தேடிப் பார்த்தால் எனது துன்பங்கள் எல்லாம் நீங்கும். அப்படி ஒருவேளை இவ்விடத்தில் பிராட்டி இல்லை என்றால், நான் இந்த இலங்கையை நிச்சயம் பெயர்த்தெடுத்து கடலில் விட்டெரிந்து நானும் அழிந்து போவேன்' என்று எண்ணினான்.

அனுமனின் எண்ணங்கள் இப்படி இருக்க, வாருங்கள் இனி இராவணனால் கடத்தி வரப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் சீதையின் நிலையைக் காண்போம்.

கல்லின் நடுவிலே முளைத்த எப்பொழுதும் தன் மேல் ஒரு துளி நீரும் படாத நல்ல சஞ்சீவி மருந்துச் செடி போல அழகு கெட வாடிய சீதை, தனது மெல்லிய இடை போல மற்ற அவயங்களும் மிகவும் இளைத்தவளாகி, வலிய பல அரக்கிகள் ஆயுதங்கள் ஏந்தி தன்னைச் சூழ்ந்த பயமுறுத்த கண்களில் கண்ணீருடன் இராமன் வருவான் எனக் காத்துக் கொண்டு இருந்தாள்! அந்த நினைவில் மயில் போன்ற சாயலும், குயில் போன்ற குரலும் கொண்ட சீதை தூக்கத்தை மறந்திருந்தாள். வெயிலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குப் போல, உடல் ஒளி குன்றிக் காணப்பட்டாள். புலிக் கூட்டத்தின் நடுவே அகப்பட்ட மானைப் போல செய்வது அறியாது துடித்துக் கொண்டு இருந்தாள். அவ்வப்போது ஸ்ரீ ராமன் இருக்கும் திசையை வணங்கினாள். கீழே விழுந்தாள். வாய் விட்டுப் புலம்பித் தவித்தாள். உடல் மிகவும் வெம்பினாள். அஞ்சினாள். எழுந்தாள். ஏங்கினாள். கலங்கினாள். பரிதவித்தாள். தன்னிலைக்கு இறங்கினாள். சோர்ந்தாள். துன்பத்தால் வருந்தினாள். அவள் கண்கள் சிந்திய அருவி போன்ற கண்ணீரால் அவள் கட்டிய புடவையே ஈரம் ஆனது. ஆனால், துக்கத்தின் காரணமாக அவள் செறிந்த வெப்ப மூச்சால், அந்தக் கணமே அவள் முன்னர் தான் கண்ணீர் கொண்டு நனைத்த புடவை காய்ந்தது. இவற்றையன்றி வேறொன்றையும் செய்யத் தெரியாமல் அவள் துடித்தாள்.

மேலும், மேகத்தையும் அஞ்சனத்தையும் கண்ட போதெல்லாம் ஸ்ரீ ராமபிரானின் திருமேனி நினைவுக்கு வர, அவள் கண்கள் மேலும் தாரை தாரையாக நீரை சுரந்தன. தலைவனும், தலைவியும் பிரிந்தால் அதனால் ஏற்படும் பெரும் துக்கம் ஒரு வடிவம் எடுத்து வந்ததுபோலக் காணப்பட்டாள். ஸ்ரீ ராமன், இராவணன் தன்னைக் கடத்திச் சென்றதால் சூரிய குலத்துக்கே ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க நிச்சயம் வருவார் என நம்பிக்கை கொண்டு அவ்வப்போது எட்டுத் திசைகளையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ஆனால், நாட்கள் கழிய ஸ்ரீ ராமர் அவர் கண்களில் படவில்லை என்பதால் அவளது பெண் மனம் பலவாறாக சிந்திக்கத் தொடங்கியது.

"மாயமானின் பின்னே தொடர்ந்து சென்ற தன் தமையனாரை இளையவர் காணவில்லை போலும்! அப்படிப் பார்த்து இருந்தாலும், உலகத்துயிர்களை எல்லாம் வருத்தி வருகின்ற இராவணன் என்னைக் கவர்ந்து வந்ததை அறியவில்லை போலும்! அறிந்து இருந்தாலும், அவர்கள் இருவரும் கடலின் நடுவே இலங்கை நகரம் உள்ளது என்பதை அறியவில்லை போலும்! என்னை இராவணன் கவர்ந்து வந்த போது அவனுடன் போரிட்ட எனது தந்தைக்கு நிகரான ஜடாயு ஒரு வேளை எனது கணவரிடம் விஷயத்தைக் கூறுவதற்கு முன்னமே இறந்து விட்டாரா? அப்படி நடந்து இருந்தால், பிறகு வேறு யார் எனது நிலையை அவர்களுக்குத் தெரிவிக்கப் போகிறார்? அப்போது அவர்களை நான் காணவே முடியாதா? அய்யோ!

ஒருவேளை, இப்படி இருக்குமோ? இளையபெருமாளை நான் சிறிதும் மதிக்காமல் கூறிய கடும் சொற்களை எனது கணவர் அறிந்து கொண்டாரோ? அதனால் என்னை வெறுத்து ஓதுக்கி விட்டாரோ? முன்னை ஊழ்வினை இவ்வாறு வந்து முடிந்ததோ? அப்படி நடந்து இருந்தால் இனி எனது மணவாளருக்கு உணவிடுபவர் யார்? அவர் வேளைக்கு உண்டாரா? அவரை நாடி வரும் விருந்தினர்களை யார் உபசரிப்பார்?'

ஒருவேளை, இப்படி இருக்குமோ? வஞ்சக அரக்கர்கள் இத்தனை நாட்கள் சீதையை உயிருடன் வைத்திருக்க மாட்டார்கள்; இந்நேரம் சீதையைத் தின்று இருப்பார்கள். அதனால் நாம் அவளைத் தேடிக் கொண்டு போவதில் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை' என்று நினைத்து என்னைத் தேடுவதையே விட்டாரோ? இல்லை, 'தான் பிறந்த சூரிய குலத்துக்கே உள்ள பொறுமை அவருக்கும் ஏற்பட துஷ்ட அரக்கர்களை மன்னித்து விட்டாரோ? ஒரு வேளை, தம்பி பரதன் மீண்டும் இராமபிரானை வந்து அழைக்க அவருடனேயே போய் விட்டாரோ? ஆனால், அவர் வாக்குத் தவறாத உத்தமர் ஆயிற்றே தந்தைக்கு கொடுத்த வாக்கை தனது தலையைக் கொடுத்தாவது நிறைவேற்றும் பண்பு கொண்டவர் ஆயிற்றே! அதனால், அப்படிப் போகக் கூடியவர் அவர் இல்லையே! ஒருவேளை துஷ்ட இராவணன் ஏதேனும் சூழ்ச்சி செய்து அவரைக் கொன்று விட்டானோ? இல்லை, யாரேனும் கொடிய அரக்கர்களுடன் வெகு காலமாகப் போர் புரிந்து கொண்டு இருக்கிறாரோ?" என்றெல்லாம் தனக்குள் புலம்பிக் கொண்டு அழுதாள் சீதை.

பரசுராமனின் வலிய வில்லை வளைத்த இராமரின் வீரச் செயலை எண்ணி உயிர் ஒடுங்கினாள்; காக்கை வடிவமாய் வந்த இந்திரனின் குமாரனாகிய ஜெயந்தன் மேலே அம்பெய்தி, அவனுடைய இரு கண்ணைப் போக்கிய நாள் முதல் எல்லா காக்கைகளுக்கும் ஒரு கண் இல்லாததாகச் செய்த ஸ்ரீ ராமரின் வெற்றியைத் தன் தலைமேல் கொண்டு கொண்டாடினாள்; கொடிய விராதனின் பாவச் செயலைப் போக்கி, அவனுக்குச் சாபவிமோசனம் அருளிய இராமரின் இயல்பை எண்ணி, அறிவு கலங்கி உடல் வருந்தினாள்.

அவ்வாறு ஜானகிதேவி பலவாறு வருந்திக் கொண்டு இருக்கையில், அவளிடத்தில் மிகுந்த அன்பு கொண்ட விபீஷணனின் மகளான திரிசடை என்னும் அரக்கி ஒருத்தியைத் தவிர, அவளுக்குக் காவலாக இருந்த மற்ற அரக்கியர்கள் அனைவரும் நடு இரவு வந்ததால் தூங்கி விட்டார்கள்!

அப்பொழுது லோகமாதாவான பிராட்டி, தனக்குத் தாயைக் காட்டிலும் நல்லவளான திரிசடையை மிக்க அன்புடன் நோக்கி, "திரிசடை! நீ தூய குணமுடையவள். எனது ஆருயிர்த் தோழி. நான் இப்பொழுது சொல்வதைக் கேட்பாயாக. எனக்கு நன்மை உண்டாக விரைந்து வருகின்றதோ? இல்லை, நான் முற்பிறவியில் செய்த பாவத்தின் கொடுமை அதிகமாகி இனியும் எனக்குத் துன்பத்தை உண்டாக்க வருகின்றதோ? எனது புருவமும், கண்ணும், நெற்றியும் இடப்புறமாகத் துடிக்கின்றன. இதனால் எனக்கு இனி வரப்போகின்ற பயனைக் குறித்து நான் ஒன்றும் அறியவில்லை! எனது மணாளர் கௌசிக முனிவருடன் எனது திருமணத்திற்கு முன் வந்த போது இதே போல எனது நெற்றியும், புருவமும், கண்ணும் இடப் புறமாகத் துடித்தன. அப்போது துடித்தது போலவே, இப்போதும் இடப்புறமாகத் துடிக்கிறது. அது போல, இராமபிரானின் பட்டாபிஷேகத்தை எனது மாமனாரான தசரதச் சக்கரவர்த்தி அறிவித்த போது எனது இந்த அவயங்கள் எல்லாம் வலப்புறமாகத் துடித்தன, அதன் படியே நாங்கள் வனவாசம் வந்தோம். மீண்டும், தண்டகாரண்யத்தில், இராவணனின் திட்டம் தெரியாமல், நான் பொன் மானைக் கண்ட போதும், இதே போல எனது புருவம், கண்கள், நெற்றி எல்லாம் வலப்புறமாகத் துடித்தன. அதன்படியே, நான் இராவணனால் கடத்தப்பட்டேன். இப்போது மீண்டும் எனது புருவம், கண்கள், நெற்றி எல்லாம் இடது புறமாகத் துடிக்கின்றன, எனில் ஏதேனும் நன்மை நடக்கப்போகிறதா? எனக்குப் புரியவில்லையே! இந்தக் கொடிய இலங்கையில் எனக்கு சாவதைத் தவிர வேறு என்ன நன்மை நடக்கப் போகிறது?" என்றாள்.

சீதையின் வார்த்தைகளைக் கேட்ட திரிசடை, அவளைப் பார்த்து, "வருந்தாதே மகளே! உனக்கு உண்டான இந்த மங்கலக் குறியால் மிகவும் நன்மை ஏற்படும். உனது கணவரை நீ திரும்பவும் சேர்வது நிச்சயம். அன்றியும் நான் சொல்வதைக் கேட்பாய். உனது திருமேனியின் நிறம் பசுமை கொள்ளும் படியும், உயிர் பிழைக்கும் படியும் பொன்னிற வண்டொன்று மெல்ல வந்து, உனது செவியில் இனிமையாக ஊதிவிட்டு இப்பொழுது சென்றது. இதைப் பற்றிச் சிந்தித்தால், உனது கணவர் அனுப்பிய தூதுவன் ஒருவன் இங்கு வந்து சீக்கிரத்தில் சேர்வான் என்று தெரிகின்றது. ஆகவே, கொடிய இராவணனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் அழிவு நிச்சயம். மேலும், நான் சொல்வதைக் கேட்பாயாக, நீ துக்கத்தின் காரணமாக தூங்குவதில்லை அதனால் உனக்குக் கனவுகளும் வருவதில்லை. ஆனால், நானோ ஒரு கனவைக் கண்டேன். குற்றமற்ற இந்நாட்டில் காணும் கனவுகள் பழுதுபடுவதில்லை! நான் கண்ட கனவில் இராவணன் தனது பத்துத் தலைகளிலும் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு, வலிய பெரிய கழுதைகளும் பேய்களும் பூட்டப்பட்டுள்ள இரதத்தின் மேல் சிவந்த ஆடையை அணிந்தவனாய்த் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். அப்பொழுது, அவனைப் பின் தொடர்ந்து, அவன் பிள்ளைகளும், சுற்றத்தினரும் மற்றுமுள்ள அரக்கர்களும் அந்தத் திசையாகவே சென்றார்கள். அப்படிப் போனவர்கள் திரும்பி வரவே இல்லை. தவறில்லாமல் இந்தக் கனவை நான் கண்டேன். மேலும், அந்தக் கனவில் இராவணன் மூட்டிய ஒமாக்கினிகள் அவிந்தன. இரத்தினமயமான தீபங்கள் ஏற்பட்டுள்ள இராவணனின் அரண்மனை இடி விழுந்து பிளவுபட்டது. பெண் யானைகள் மதமொழுகப் பெற்றன. முரசு வாத்தியங்கள் பிறர் அடிக்காமலேயே இடி போலத் தாமே கொடுமையாக ஒலித்தன. மின்னல் மின்னும் மேகங்கள் இல்லாமலேயே வானில் இடி இடித்தது. விண் மீன்கள் எல்லாம் கருகிக் கீழே உதிர்ந்து விழுந்தன. இரவிலே சூரியன் தோன்றிக் காய் கதிரைப் பொழிந்தான். வீரர்கள் அணிந்த கற்பகமலர் மாலைகள் புலால் நாற்றம் வீசின. இந்த இலங்கையும், இதனைச் சுற்றியுள்ள மதில்களும் எல்லாப் பக்கங்களிலும் தீப்பற்றி எரிந்தன. இங்கே, வானுலகில் இருந்து கொண்டு வரப்பட்டு அமைத்த கற்பகச் சோலைகள் கரிந்து தோன்றின. மங்கலக் கலசங்கள் வாய் விரிந்து உடைந்தன. இருள் விளக்கினைச் சூழ்ந்து மறைந்தது. தோரணங்கள் ஒடிந்தன. யானைகளின் தந்தங்கள் முறிந்தன. தேவ பிராமணர்கள் வேத மந்திரங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்த பூரண கும்பங்களிலுள்ள தூய நீர், கள்ளாக மாறிப் பொங்கிற்று. வானில் எழுந்து பரவிய மேகங்கள், புண்ணில் இருந்து வடியும் இரத்தத்தைக் கொண்டு மழை பெய்தன. மங்கையரின் மங்கலத் தாலிகள் பிறர் அறுத்தெறியாமலேயே தாமே அறுந்து அவர்களின் கொங்கைகள் மேல் விழுந்தன. அத்துடன் இலங்கேஸ்வரனின் தேவியும், மயனின் மகளுமான மண்டோதரியின் பின்னல் அவிழ்ந்து விழுந்தது. மேலும், அது அருகில் இருந்த பெரிய விளக்கின் நெருப்புப் பற்றச் சுறுசுறுவென்று விரைந்து எரிந்தது.

இத்துடன் எனது இன்னொரு கனவில், இரண்டு சிங்கங்கள் புலிக் கூட்டத்தைத் தமக்குத் துணையாகக் கொண்டு, அவைகளுடன் ஒன்று சேர்ந்து வந்து யானைகள் வசிக்கின்ற காட்டைச் சூழ்ந்து கொண்டபின், அந்த யானைகளைக் கொன்று குவித்தன. அந்தக் காட்டில் வருத்தத்துடன் வசித்து வந்த ஒரு மயிலும், அந்தச் சிங்கங்களின் நகரத்தை அடைவதற்கு அவைகளுடன் சென்றது. ஆயிரம் அழகிய விளக்கின் ஒளி பொருந்தும் படி கொளுத்திய ஒரு பெரிய விளக்கை, சிவந்த கையுடைய ஒருத்தி ஏந்திக் கொண்டு இராவணனின் மாளிகையில் இருந்து புறப்பட்டு வீபீஷணனின் மாளிகையை அடைந்தாள். அப்பெண் எனது தந்தையின் மாளிகையை அடைந்த போது, என்னை நீ தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டாய் சீதை. ஆதலால், நானும் அக்கனா முடியாமலே எழுந்துவிட்டேன்!" என்று சொன்னாள்.

உடனே சீதை அக்கனவின் முடிவை அறிய விரும்பினாள். எனவே அவளை நோக்கி, "அன்னையே! மீண்டும் தூங்கி என் பொருட்டு உமது அந்தக் கனவை நிறைவு பெறச் செய்ய முடியுமா?" என்று கூறி கைகளையும் குவித்து வணங்கினாள்.

அதே சமயம் அங்கு வந்து சேர்ந்த அனுமான் பிராட்டியின் இருப்பிடத்தைப் பார்த்தான். சீதையைச் சுற்றித் தூங்கிக் கொண்டு இருந்த கொடிய அரக்கியர்களும் அப்பொழுது விழித்துக் கொண்டார்கள். அவர்கள் எழுந்து நின்று, "நன்மை தராத இத்தூக்கம் நம்மைக் கெடுத்தது!" என்று சொல்லிவிட்டுத், தங்கள் ஆயுதங்களைக் கையில் ஏந்திக் கொண்டு ஒன்று திரண்டார்கள்.

அந்த அரக்கியருள் சிலர் வயிற்றிலே வாயை உடையவர்கள்; வளைந்த நெற்றியின் மத்தியிலே கண்களை உடையவர்கள்; பற்களின் இடையிலே யானைகளும், யாளிகளும், பேய்களும் துயில் கொள்கின்ற மலைக் குகை போன்ற பெரிய ஆழமான வாயை உடையவர்கள். சுருங்கச் சொன்னாள் யாவரும் பார்த்தவுடனேயே அஞ்சும் படியான தோற்றத்தைக் கொண்டவர்கள்; பருத்த மலைகள் எனப் பல முலைகள் தொங்கப் பெற்றவர்கள்; சூலம், வாள், சக்கரம், தோட்டி, தோமரம், காலவேல், கப்பணம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டவர்கள். நஞ்சே ஓர் உருவம் கொண்டு வந்தது போன்ற கரிய மேனியை உடையவர்கள்; யானை, குதிரை, புலி, கரடி, யாளி, பேய், சிங்கம், நரி, நாய் ஆகியவை போன்ற முகம் பெற்றவர்கள்; சிலர், முதுகிலே முகத்தைக் கொண்டவர்கள்; மூன்று விழிகளைக் கொண்டவர்கள்; கொடுமையான செயல்களை துணிந்து செய்பவர்கள்; புகையும் வாயைப் பெற்றவர்கள்; அவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து சீதையைச் சுற்றிக் கொண்டார்கள். தன்னைச் சுற்றிக் கொடிய அரக்கியர்கள் சூழ்ந்ததைக் கண்டு, சீதை மிகவும் வருந்தி வாடினாள்!

அங்கே வந்து ஓர் உயர்ந்த மரத்தின் கிளையின் மேல் ஏறி அமர்ந்திருந்த வாயு குமாரன் அக்காட்சியைக் கண்டான். 'பல அரக்கியர்கள் வேல் முதலான ஆயுதங்களைச் சுமந்து தூக்கத்தை மறந்து கூட்டமாக இங்கே நிற்கின்றார்களே. இதற்கு என்ன காரணம்?' என்று சிந்தித்து, மேலும் அந்த இடத்தை உடனே உற்று நோக்கினான்.

கருமேகத்தைப் பிளந்து கொண்டு தோன்றும் மின்னலைப் போல, அரக்கியர்களின் நடுவே சீதாபிராட்டி இருப்பதை அனுமான் கண்டான்! கண்டவுடனே அவளுடைய மேனியின் வடிவத்தாலும், வற்றாத கண்ணீர் பொழிகின்ற கண்களாலும் அவள் சீதையே என்பதைப் புரிந்து கொண்டான். அதனால் அவன் உள்ளத்திலே மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது. அந்த மகிழ்ச்சியுடன், "அறம் அழியவில்லை. நானும் இனிப் பிழைத்திருப்பேன். பிராட்டியாரைத் தேடி வந்த நான் இப்போது அவர்களைக் கண்டு கொண்டேன். இவர் நிச்சயம் நாம் தேடி வந்த ஜனக நந்தினி தான். ஏனெனில் ஸ்ரீ ராமபிரான் சொல்லிய அடையாளங்கள் அனைத்தும் இந்த தேவிக்குப் பொருந்தி வருகிறது" என்று அனுமான் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். சீதையைக் கண்ட சந்தோஷத்தில் திகைத்தான். கூத்தாடினான். பாடினான்.

அதேசமயத்தில் சீதா தேவியின் பரிதாப நிலையைக் கண்டு பாவி இராவணன் மீதும் கோபம் கொண்டான். "இராவணன் செய்த இந்த ஒரு காரியம் போதும் அவனது உயிரை ஸ்ரீ ராமன் பறிக்க அத்துடன் அவன் குலம் அழிய" என்று மனதிற்குள் இராவணன் செய்த காரியத்தால் வெகுண்ட அனுமான் கூறிக் கொண்டான்.

மேலும் சீதையின் நிலையை கண்ட அனுமான், அவள் தனது கற்பை நெருப்பைப் போல பாவித்து, அந்தக் கொடிய அரக்கர் கூட்டத்தின் நடுவிலும், யாருடைய துணையும் இல்லாமல் அதுநாள் வரையில் காப்பாற்றி வந்ததை நினைத்து, "தருமம் தான் பிராட்டியைக் காத்ததோ? அல்லது இவரின் கற்பே இவரைப் பாதுகாத்ததோ? பிராட்டியைத் தவிர இந்தச் சூழ்நிலையில் யாரால் தான் இப்படிக் கற்புநிலை தவறாமல் இருக்க முடியும்?" என்றெல்லாம் மனதினில் நினைத்துப் பெருமை கொண்டான்.

அப்போது...

பத்துத் தலைகளும், இருபது தோள்களும் விளங்க இலங்கை வேந்தனான இராவணன் பல தரப்பட்ட அழகு மாதர்கள் தன்னைச் சூழ அசோகவனத்தில் வந்து தோன்றினான்!