கலன் காண் படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

கலன் காண் படலம்

(சுக்கிரீவன் சீதையின் அணிகலன்களைக் காட்ட இராமன் அவற்றைக் கண்டு வருந்துவதை இப்படலம் கூறுகிறது. இராமன் சோலையில் இருக்கச் சுக்கிரீவன் சீதை நிலத்திலிட்ட அணிகல முடிப்பை இராமனிடம் காட்டினான். அணிகலன்களைக் கண்ட இராமன் மகிழ்ச்சியும் துயரமும் மாறிமாறி எழ ஒருநிலைப்படாது தளர்ந்தான். சுக்கிரீவன் ஆறுதல் மொழி பல கூறித் தேற்றினான். தன்னை நம்பியவளின் துயர்போக்க இயலாமையைக் கூறி இராமன் வருந்தினான். அந்நிலையில் அனுமன் இராமனை நோக்கி வாலியைக் கொன்று, சுக்கிரீவனை அரசனாக்கிப் படை பெருக்கி, எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் சீதையைத் தேடச் செய்வதே ஏற்றதெனக் கூற, அனைவரும் அக்கருத்தை ஏற்று வாலி இருக்கும் இடத்திற்குச் சென்றனர். இதுவே இப்படலத்தில் கூறப்படும் செய்திகள்)

இராமபிரானிடம் சொல்வதற்கு ஒன்று உண்டு என்று கூறிய சுக்கிரீவன் அதனைச் சொல்லத் தொடங்கி, "ஒரு காலத்தில் நாங்கள் இங்கே கூடி இருந்த சமயத்தில், இராவணன் இந்த வழியாக ஒரு பெண் அரசியைக் கொண்டு சென்றான். அப்பெண் அரசி தங்கள் மனைவியான சீதையோ? என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இராவணன் அப்பெண்ணை கவர்ந்து செல்லும் போது, அப்பெண் இந்தக் காடுகளின் வழியைக் கண்டு துன்பத்துடன் அபயம் கேட்டுக் கதறினாள். அழுதாள். அவள் தனது கணவருக்கு இராவணன் தன்னைக் கொண்டு செல்லும் வழியை அறிவிக்க எண்ணித் தானோ என்னமோ தான் அணிந்து இருந்த ஆபரணங்கள் சிலவற்றை ஒரு மூட்டையில் கட்டிக் கீழே போட்டாள். அந்தப் பெண் இராவணனின் பறக்கும் தேரில் இருந்து போட்ட ஆபரண மூட்டையை நாங்கள் பூமியில் விழும் முன்னமே, கைகளில் தாங்கினோம். அந்த அணிகல முடிப்பை அப்படியே பத்திரமாக வைத்து உள்ளோம். இப்போது அதனைத் தங்களுக்கு காட்டுகிறோம். தாங்கள் அதனைப் பார்த்து அவை பிராட்டியினுடையவையா? இல்லையா? என்பதைக் கூறி அறிவீராக!" என்று கூறினான். பிறகு அந்த ஆபரணங்களை பத்திரமாக எடுத்து வந்து ஸ்ரீ ராமனிடம் காட்டினான் சுக்கிரீவன்.

சுக்கிரீவனால் காட்டப்பட்ட அந்த அணிகலன்கள் சீதை உடையது தான் எனக் கண்டார் ஸ்ரீ ராமபிரான். அந்த ஆபரணங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது கண்கள் கண்ணீர்க் குளமாக மாறியது, என்றாலும்,மீண்ட உயிரைத் தரும் அமிர்த சஞ்சீவியைப் போல, அந்த ஆபரணங்களைப் பார்த்ததால் அவர் மனம் வெகு நாட்களுக்குப் பின் ஏதோ சீதையையே நேரில் கண்டது போல (அந்த ஆபரணங்களைக் கண்டு) மனம் மகிழ்ந்தார்.

சிதையை இழந்த பிரிவால் இராமபிரானை விட்டுப் பிரிந்து போய் இருந்த சிந்திக்கும் திறன், இப்போது அந்த நகைகளால் மீண்டும் தன்னிடம் திரும்ப வந்து விட்டதாகவே கருதினார் ஸ்ரீ ராமர், எனினும் அந்தக் கணத்தில் இருந்து சீதையை நினைத்து மீண்டும் வருந்தத் தொடங்கினார்.

இராமபிரான் சீதையை எண்ணி, உடம்பில் மிகுந்த தாபம் அடைந்தார். அந்தத் தாபம் உடம்பில் விஷம் போல மிகுதியாக வளர, அவர் மூர்ச்சை அடைந்து கீழே சாய்ந்தார். அவர் மயங்கிச் சாய்வதைக் கண்டதும், பக்கத்தில் இருந்த சுக்கிரீவன் உடனே ஓடிச் சென்று அவரை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்தான்.

அந்த ஆபரணங்களைக் கண்ட மாத்திரத்தில் இருந்து இராமபிரானுக்கு ஏற்பட்ட துன்பத்தை சுக்கிரீவனால் மேலும் பார்க்க முடியவில்லை. அதனால், "அந்த ஆபரணங்களை இராமபிரான் கண்டு இவ்வளவு துக்கம் அடைவார் என்று முன்னமே தெரிந்து இருந்தால். நான் அதனைக் கொண்டு வந்து இருக்க மாட்டேனே. இப்போது இராம பிரானை வருந்தச் செய்த பாவியாக மாறிவிட்டேனே" என்று சொல்லி வருந்தினான்.

பிறகு இராமபிரானை மயக்கத்தில் இருந்து நினைவுக்கு கொண்டு வந்த சுக்கிரீவன், இராமபிரானிடம்,"ஸ்ரீ ராம! வருந்தாதீர்கள் சுக்கிரீவனாகிய நான் உட்பட ஹனுமான், நலன், நீலன் போன்ற அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். அத்துடன் வானர சேனையும் உங்களுடன் உள்ளது.அந்த இராவணன் எங்கு மறைந்து இருந்தாலும் என்னுடன் சேர்ந்து அனைத்து வானர சேனைகளும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்போம்.மேலும், சுக்கிரீவனாகிய நான், அன்னை போன்ற சீதையை கவர்ந்து சென்ற அந்த இராவணனின் பத்து தலைகளையும் வெட்டி எறிவேன். பிறகு அவன் கவர்ந்து சென்ற பிராட்டியை பத்திரமாக மீண்டும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்.மேலும் தாங்கள் இங்கு இருந்த படியே அடியவனாகிய நான் தங்களுக்குச் செய்யும் அந்தச் சிறிய ஏவல் தொழிலைக் காண்பீராக!" என்று கூறினான்.

மேலும் தொடர்ந்த சுக்கிரீவன் ஸ்ரீ ராமனிடம்,"தாங்களோ பெரும் வீரர். இவ்வாறு துக்கப்படுவது உங்களுக்கு சிறப்போ?. நாம் அனைவரும் இணைந்து பிராட்டியை மீட்போம்" என்று மீண்டும் அறுதல் கூறி இராமபிரானை தேற்றினான்.

சுக்கிரீவனின் வார்த்தைகளைக் கேட்ட இராமபிரான் கொஞ்சம் அறுதல் அடைந்தார். இருந்தாலும் "சீதைக்கு என் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்து இருந்தால், அவள் தனது ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி பூமியில் எறிந்து இருப்பாள். நான் எப்படியும் வருவேன், அவளை மீட்பேன் அவ்வாறு அவளை நான் மீட்க புறப்பட்டு வரும் போது பாதை மாறி நான் வேறு பாதை வழியே சென்று விடக் கூடாது என்று அல்லவா? அவள் இவ்வாறு செய்து உள்ளாள். நானோ, அவளது நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் இது வரையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயலையும் செய்யாமல் திவ்ய அஸ்த்திரங்களையும், வில்லையும் வைத்துக் இருக்கிறேனே என்று எனது மனம் சஞ்சலம் அடைகிறது சுக்கிரீவா. எப்படிப் பட்ட வம்சம் எனது வம்சம், எனது வம்சத்தில் பிறந்த பகீரதன் அந்த கங்கையையே பூமிக்குக் கொண்டு வந்தவர். மற்றொரு வம்சத்தவரான மான்தாதா ஆட்சிக் காலத்தில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு குடி கொண்டு இருந்தது. எனது தந்தை தசரதரோ, தேவர்களுக்கே தேவாசுர யுத்தத்தில் உதவி செய்தவர். இப்படிப் பட்ட வம்சத்தில் பிறந்த நானோ கயவன் ஒருவன் சீதையை அபகரித்துச் சென்று விட்டான் என்று தெரிந்தும் அமைதியாக உட்கார்ந்து உள்ளேனே!" என்று தனது இயலாமையை மீண்டும் கூறிக் கொண்டார்.

அது கேட்ட சுக்கிரீவன், ஸ்ரீ ராமருக்கு இனி அறுதல் சொல்லவது எப்படி என்று அனுமனைப் பார்த்தார்.அப்போது சொல்லின் செல்வன், வாயு புத்திரன் அனுமான் இராமபிரானை முன் வந்து வணங்கி தனது கருத்துக்களை முன் வைக்கத் தொடங்கினார்,"அண்ணலே! முதலில் வானர சேனையை ஒன்று திரட்டி ஒரு கொடியின் கீழ் கொண்டு வந்தால் தான். நம்மால் சீதாதேவியைத் தேடும் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். சீதாதேவி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தால் தான் நாம் அவர்களை மீட்டுக் கொண்டு வர முடியும். ஆக, உட்பூசலால் சிதைந்து கிடக்கும் வானர சேனைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு வாலி விரைவில் மரணத்தை தழுவ வேண்டும். சுக்கிரீவன்,அவன் இடத்தில் கிஷ்கிந்தையின் அரசனாக அமர வேண்டும்.அப்போது தான் அனைத்து வானர வீரர்களும் அவனது கட்டளைக்கு செவி சாய்ப்பர், உடனே சீதா தேவியைத் தேடப் புறப்படுவர். முழு வானர சேனையும் திரண்டு தேடினால் இந்த உலகத்தையே சலித்து அன்னை சீதையை எளிதில் தேடிக் கண்டு பிடித்து விடலாம். மொத்தத்தில், நீங்கள் சீதையை மீட்க நினைத்தால் உடனே வாலியைக் கொல்லப் புறப்படுங்கள். இது தவிர வேறு மார்க்கம் என்றும் இல்லை, அதை விடுத்து நாம் நமக்குள் புலம்பிக் கொள்ளுதலும் பயன் தராது" என்று கூறி முடித்தான் ஹனுமான்.

சுக்கிரீவன் உட்பட அனைத்து வானரர்களும் அனுமனின் கூற்றை ஆமோதிக்க. இராமபிரானும் இதற்கு உடன்பட்டார். பிறகு, அந்த ருசியமூக பர்வதத்தில் இருந்து அனைத்து வானர வீரர்களும் கிளம்பினர். காடு, மலைகள், நீர் நிலைகள் என அனைத்தையும் தாண்டினர். அந்தக் கடினமான பாதையைக் கடந்து பத்து யோசனை தூரம் கடந்து சென்று, மாவீரன் வாலி வாழும் பொன்மயமான கிஷ்கிந்தையை வானர வீரர்கள் ஒரு வழியாக அடைந்தனர். கிஷ்கிந்தையை அடைந்ததும், அவர்களுக்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.