கரன் வதைப் படலத்தின் பாடல்கள்

bookmark

ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

கரன் வதைப் படலம்

சூர்ப்பணகை கரன் தாள் விழுந்து கதறி முறையிடல்

 இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை,
சொரிந்த சோரியள், கூந்தலள், தூம்பு எனத்
தெரிந்த மூக்கினள், வாயினள், செக்கர்மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள் அரோ.
 
அழுங்கு நாள் இது என்று, அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள்;
முழங்கு மேகம் இடித்த வெந் தீயினால்
புழுங்கு நாகம் எனப் புரண்டாள் அரோ.
 
வாக்கிற்கு ஒக்க, புகை முத்து வாயினான்
நோக்கி, கூசலர், நுன்னை இத் தன்மையை
ஆக்கிப் போனவர் ஆர்கொல்? என்றான்-அவள்
மூக்கின் சோரி முழீஇக் கொண்ட கண்ணினான்.
 
இருவர் மானிடர்; தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்; மன்மதன் மேனியர்;
தரும நீரர்; தயரதன் காதலர்;
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார்.
 
ஒன்றும் நோக்கலர் உன் வலி; ஓங்கு அறன்
நின்று நோக்கி, நிறுத்தும் நினைப்பினார்;
"வென்றி வேற் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும்" என்று உணர் கொள்கையார்.
 
மண்ணில், நோக்க அரு வானினில், மற்றினில்,
எண்ணி நோக்குறின், யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை, என்
கண்ணின் நோக்கி உரைப்ப அருங் காட்சியாள்;
 
கண்டு, "நோக்க அருங் காரிகையாள்தனைக்
கொண்டு போவன், இலங்கையர் கோக்கு" எனா,
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு, அவர்
துண்டம் ஆக்கினர், மூக்கு எனச் சொல்லினாள்.
கரன் கொதித்து எழுதல்
 
 கேட்டனன் உரை; கண்டனன் கண்ணினால்,
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை;
காட்டு எனா, எழுந்தான், எதிர் கண்டவர்
நாட்டம் தீய;-உலகை நடுக்குவான்.
 
 எழுந்து நின்று, உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உக, பொங்குவான்;
"கழிந்து போயினர் மானிடர்" என்னுங்கால்,
அழிந்ததோ இல் அரும் பழி? என்னுமால்.

பதினான்கு வீரர்கள் போரிடச் செல்லுதல்

வருக, தேர்! எனும் மாத்திரை, மாடுளோர்,
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார்
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்,
தருக இப் பணி எம் வயின் தான் என்றார்.
 
சூலம், வாள், மழு தோமரம், சக்கரம்,
கால பாசம், கதை, பொரும் கையினார்;
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார்.
 
 வெம்பு கோபக் கனலர் விலக்கினார்,
நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று எனா,
உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ? என்றார்.
 
நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல்
சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்;
கொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை
வென்று மீளுதிர் மெல்லியலோடு என்றான்.
 
 என்னலோடும், விரும்பி இறைஞ்சினார்;
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என,
அன்னர் பின் படர்வார் என, ஆயினார்;
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார்.

சூர்ப்பணகை அரக்கர்க்கு இராமனைக் காட்டுதல்

 துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமிலப் பாத நினைவில் இருந்த அக்
கமலக் கண்ணனை, கையினில் காட்டினாள்.
 
எற்றுவாம் பிடித்து; ஏந்துதும் என்குநர்,
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர்,
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா,
சுற்றினார்-வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார்.

இராமன் போருக்கு எழுதல்

 ஏத்து வாய்மை இராமன், இளவலை,
காத்தி தையலை என்று, தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்,
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான்.
 
 வாங்கி, வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை
நீங்கி, இவ்வழி நேர்மின், அடா! எனா,
வீங்கு தோளன் மலைதலை மேயினான்.

நால்வரும் வீழ்தல்

மழுவும், வாளும், வயங்கு ஒளி முச் சிகைக்
கழுவும், கால வெந் தீ அன்ன காட்சியார்,
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும்,
தழுவும் வாளிகளால், தலம் சார்த்தினான்.
 
மரங்கள்போல், நெடு வாளொடு தோள் விழ,
உரங்களான் அடர்ந்தார்; உரவோன் விடும்
சரங்கள் ஓடின தைக்க, அரக்கர் தம்
சிரங்கள் ஓடின; தீயவள் ஓடினாள்.

வெங்கரன் வெகுண்டு எழுதல்

ஒளிறு வேல் கரற்கு, உற்றது உணர்த்தினாள்-
குளிறு கோப வெங் கோள் அரிமா அட,
களிறு எலாம் பட, கை தலைமேல் உற,
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள்.
 
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என,
பொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உக,
வெங் கரப் பெயரோன், வெகுண்டான், விடைச்
சங்கரற்கும் தடுப்ப அருந் தன்மையான்.
 
அழை, என் தேர்; எனக்கு ஆங்கு, வெம் போர்ப் படை;
உழையர் ஓடி, ஒரு நொடி ஓங்கல்மேல்,
மழையின், மா முரசு எற்றுதிர், வல் என்றான் -
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான்.

பறை ஒலி கேட்டு நான்கு படையும் எழுதல்

பேரி ஓசை பிறத்தலும், பெட்புறு
மாரி மேகம் வரம்பு இல வந்தென,
தேரின் சேனை திரண்டது; தேவர்தம்
ஊரும், நாகர் உலரும் உலைந்தவே.
 
 போர்ப் பெரும் பணை பொம் என் முழக்கமா,
நீர்த் தரங்கம் நெடுந் தடந் தோள்களா,
ஆர்த்து எழுந்தது-இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங் கடல் கால் கிளர்ந்தென்னவே.
 
காடு துன்றி, விசும்பு கரந்தென
நீடி, எங்கும் நிமிர்ந்த நெடுங் கொடி-
ஓடும் எங்கள் பசி என்று, உவந்து, எழுந்து,
ஆடுகின்ற அலகையின் ஆடவே, 
 
தறியின் நீங்கிய, தாழ் தடக் கைத் துணை,
குறிகொளா, மத வேழக் குழு அனார்,
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. 
 
முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக,
அருள் திரண்ட அருக்கன் தன்மேல், அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே. 
 
தலையில், மாசுணம், தாங்கிய தாரணி
நிலை நிலாது, முதுகை நெளிப்புற,
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம், ஒரு மாடு தொக்கென்னவே. 
 
வல்லியக் குழாங்களோ? மழையின் ஈட்டமோ?
ஒல் இபத் தொகுதியோ? ஓங்கும் ஓங்கலோ?
அல்ல, மற்று அரிகளின் அனிகமோ? என,
பல் பதினாயிரம் படைக் கை வீரரே. 
 
ஆளிகள் பூண்டன, அரிகள் பூண்டன,
மீளிகள் பூண்டன, வேங்கை பூண்டன,
ஞாளிகள் பூண்டன, நரிகள் பூண்டன,
கூளிகள் பூண்டன, குதிரை பூண்டன,
 
ஏற்றுஇனம் ஆர்த்தன, ஏனம் ஆர்த்தன,
காற்றுஇனம் ஆர்த்தன, கழுதை ஆர்த்தன,
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றுஇனம் ஆர்த்தன, பணிலம் ஆர்த்தன. 
 
தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக்
கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு
தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப்
பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. 

அரக்கரின் போர்க் கருவிகள்

மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும்,
எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும்,
முழுக்களும், முசுண்டியும், தண்டும், முத் தலைக்
கழுக்களும், உலக்கையும், காலபாசமும். 
 
குந்தமும், குலிசமும், கோலும், பாலமும்,
அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும்,
வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும், பாசமும். 
 
ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய, சோரியும் தூவும் துன்னிய,-
ஏதிகள் மிடைந்தன,-இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. 

அரக்கர் படையும், படைத் தலைவர்களும்

ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்;
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்;
தீ எரி விழியினர்;-நிருதர் சேனையின்
நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. 
 
ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை; குறித்த அப் படை
ஏறின ஏழினது இரட்டி என்பரால்-
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார். 
 
உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்;
கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும்
வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு
சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார்; 
 
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர்;
கண் அளவிடல் அரு மார்பர்; காலினால்,
மண் அளவிடு நெடு வலத்தர்; வானவர்
எண் அளவிடல் அருஞ் செரு வென்று ஏறினார்.
 
இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை
சிந்தின தெறித்து உக, செறிந்த தோளினார்;
அந்தகன், அடி தொழுது அடங்கும் ஆணையார்;
வெந் தழல் உருவு கொண்டனைய மேனியார்.
 
குலமும், பாசமும், தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும், தறுகணும், எயிறும், தாங்கினார்,
ஆலமும் வெளிது எனும் நிறத்தர்; ஆற்றலால்,
காலனும், காலன் என்று, அயிர்க்கு காட்சியார். 
 
கழலினர்; தாரினர்; கவச மார்பினர்;
நிழலுறு பூணினர்; நெறித்த நெற்றியர்;
அழலுறு குஞ்சியர்; அமரை வேட்டு, உவந்து,
எழலுறு மனத்தினர்; ஒருமை எய்தினார். 
 
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்,
விருப்புறா, முகத்து எதிர் விழிக்கின், வெந்திடும்;
உருப் பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும்,
செருப் பெறாத் தினவுறு சிகரத் தோளினார். 
 
குஞ்சரம், குதிரை, பேய், குரங்கு, கோள் அரி,
வெஞ் சினக் கரடி, நாய், வேங்கை, யாளி என்று,
அஞ்சுற, கனல் புரை மிகத்தர்; ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும்- 
 
எண் கையர்; எழு கையர்; ஏழும் எட்டும் ஆய்
கண் கனல் சொரிதரு முகத்தர்; காலினர்;
வண் கையின் வளைத்து, உயிர் வாரி, வாயின் இட்டு
உண்கையில் உவகையர்; உலப்பு இலார்களும். 
 
இயக்கரின் பறித்தன, அவுணர் இட்டன,
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின,
துய்க்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின,
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின. 
 
கொடி, தழை, கவிகை, வான், தொங்கல், குஞ்சரம்
படியுறு பதாகை, மீ விதானம், பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை
மிடைதலின், உலகு எலாம் வெயில் இழக்கவே. 

படைகள் இராமன் இருப்பிடத்தை அடைதல்

எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்-
மழுவினர்; வாளினர்; வயங்கு சூலத்தர்;
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார். 
 
வில்லினர்; வாளினர்; இதழின்மீது இடும்
பல்லினர்; மேருவைப் பறிக்கும் ஆற்றலர்;
புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்;
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார். 
 
தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர்
கோடணை முரசினம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர், பலரும் சுற்றினர்.
 
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி,
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என,
ஊன்றின தேரினன், உயர்ந்த தோளினன்,
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே. 
 
அசும்புறு மத கரி, புரவி, ஆடகத்
தசும்புறு சயந்தனம், அரக்கர் தாள், தர,
விசும்புறு தூளியால், வெண்மை மேயின-
பசும்பரி, பகலவன், பைம் பொன் தேர் அரோ.
 
வனம் துகள்பட்டன, மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன, கடல்கள் தூர்ந்தன,
இனம் தொகு தூளியால், இசைப்பது என் இனி?-
சினம் தொகு நெடுங் கடற் சேனை செல்லவே. 
 
நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு
மலைமிசை மலை இனம் வருவபோல் மலைத்
தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்-
கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார்.

வந்தது சேனை வெள்ளம், வள்ளியோன் மருங்கு-மாயா
பந்த மா வினையம் மாளப் பற்று அறு பெற்றி யோர்க்கும்
உந்த அரு நிலையது ஆகி, உடன் உறைந்து உயிர்கள் தம்மை
அந்தகர்க்கு அளிக்கும் நோய்போல், அரக்கி முன் ஆக அம்மா! 

 

தூரியக் குரலின், வானின் முகிற் கணம் துணுக்கம்கொள்ள;
வார் சிலை ஒலியின், அஞ்சி, உரும் எலாம், மறுக்கம்கொள்ள;
ஆர்கலி, ஆர்ப்பின், உட்கி அசைவுற; அரக்கர் சேனை,
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே

 

வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த, வழியில் யாண்டும்
ஓய்வில, நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின, உலைந்த கண்ண,
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய, சென்று,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற-புள்ளொடு விலங்கும் அம்மா! 

 

தூளியின் படலை வந்து தொடர்வுற, மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப, கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும், சேனை மேல்வந்தது உளது என்று உன்னா, 

 

இராமன் போருக்கு எழுதல்

 

மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன்,
பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன்
நில்; நின்று காண்டி, யான் செய் நிலை என, விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான். 

 

நெறி கொள் மா தவர்க்கு, முன்னே நேர்ந்தனென்; "நிருதர் ஆவி
பறிக்குவென் யானே" என்னும் பழமொழி பழுதுறாமே,
வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே! வேண்டினேன் யான்,
குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென்; இக் குழுவை என்னா. 

 

மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி, கரு நிறக் கமலக்கண்ணன்,
சரம் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்தான்; தள்ளா
உரம் படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஆர்த்தான்.

 

போர் செய்ய தனக்கு அருள இராமனை இலக்குவன் வேண்டல்

 

மீள அருஞ் செருவில், விண்ணும் மண்ணும் என்மேல் வந்தாலும்,
நாள் உலந்து அழியும் அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னே?
ஆளியின் துப்பினாய்! இவ் அமர் எனக்கு அருளிநின்று, என்
தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தி என்றான்.

 

இலக்குவன் வேண்டுகோளை இராமன் மறுத்து, போர் செய்யச் செல்லல்

 

என்றனன் இளைய வீரன்; இசைந்திலன் இராமன், ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணரக் கொண்டான்;
அன்றியும், அண்ணல் ஆணை மறுக்கிலன்; அங்கை கூப்பி-
நின்றவன், இருந்து கண்ணீர் நிலன் உறப் புலர்கின்றாள்பால். 

 

குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர,
தழையுறு சாலைநின்றும், தனிச் சிலை தரித்த மேரு,
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண,
முழையின்நின்று எழுந்து செல்லும் மடங்கலின், முனிந்து, சென்றான். 

 

சூர்ப்பணகை இராமனை சுட்டுதல்

 

தோன்றிய தோன்றல்தன்னைச் சுட்டினள் காட்டி, சொன்னாள்-
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெந் தீ இது என்ன,
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்-
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன், இகல் இராமன் என்றே. 

 

கரன் தானே மோதுவதாகக் கூறுதல்

 

கண்டனன், கனகத் தேர்மேல், கதிரவன் கலங்கி நீங்க,
விண்டனன் நின்ற, வென்றிக் கரன் எனும் விலங்கல் தோளான்;
மண்டு அமர் யானே செய்து, இம் மானிடன் வலியை நீக்கி,
கொண்டனென் வாகை என்று, படைஞரைக் குறித்துச் சொன்னான். 

 

"மானிடன் ஒருவன்; வந்த வலி கெழு சேனைக்கு, அம்மா!
கான் இடம் இல்லை" என்னும் கட்டுரை கலந்த காலை,
யானுடை வென்றி என் ஆம்? யாவரும் கண்டு நிற்றிர்;
ஊனுடை இவனை, யானே, உண்குவென் உயிரை என்றான். 

 

தீய நிமித்தம் கண்ட அகம்பன் அறிவுரை

 

அவ் உரை கேட்டு வந்தான், அகம்பன் என்று அமைந்த கல்விச்
செவ்வியான் ஒருவன்; ஐய; செப்புவேன்! செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே; வீரரில் ஆண்மை வீர!
இவ் வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று, இயம்பலுற்றான். 

 

குருதி மா மழை சொரிந்தன, மேகங்கள் குமுறி;
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது; பாராய்-
கருது வீர!-நின் கொடிமிசைக் காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன, புலம்புவ, நிலம் படப் புரள்வ

 

வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன; தூங்கி
மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி,
ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; 

 

பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும். 

 

இனைய ஆதலின், "மானிடன் ஒருவன்" என்று, இவனை
நினையலாவது ஒன்று அன்று அது;-நீதியோய்!-நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்;
புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை எனப் புகன்றான். 

 

உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச்
சிரித்து, நன்று நம் சேவகம்! தேவரைத் தேய
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி
இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ? என்றான். 

 

என்னும் மாத்திரத்து, எறி படை இடி எனா இடியா
மன்னர் மன்னவன் மதலையை, வளைந்தன-வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை, முனிந்தன வேழம்
துன்னினாலென, சுடு சினத்து அரக்கர் தம் தொகுதி.

 

இராமனின் அம்பால் படை எல்லாம் அழிதல்

 

வளைந்த காலையில், வளைந்தது, அவ் இராமன் கை வரி வில்;
விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும்; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன; புகர் முகப் பூட்கை
உளைந்த, மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன

 

சூலம் அற்றன; அற்றன சுடர் மழு; தொகை வாள்
மூலம் அற்றன; அற்றன முரண் தண்டு; பிண்டி
பாலம் அற்றன; அற்றன பகழி; வெம் பகு வாய்
வேலும் அற்றன; அற்றன வில்லொடு பல்லம். 

 

தொடி துணிந்தன தோளொடு; தோமரம் துணிந்த;
அடி துணிந்தன கட களிறு; அச்சோடு, நெடுந் தேர்,
கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன; குல மா
முடி துணிந்தன; துணிந்தன, முளையோடு முசலம். 

 

கருவி மாவொடு, கார் மதக் கைம்மலைக் கணத்து ஊடு-
உருவி மாதிரத்து ஓடின, சுடு சரம்; உதிரம்
அருவி மாலையின் தேங்கினது; அவனியில் அரக்கர்
திருஇல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். 

 

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், கோடி, என்று உணரா
துன்று பத்திய, இராகவன் சுடு சரம் துரப்ப,
சென்று, பத்திரத் தலையின மலை திரண்டென்ன,
கொன்று, பத்தியில் குவித்தன பிணப் பெருங் குன்றம்.

 

காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ,
சூடு கொண்டன எனத் தொடர் குருதி மீத் தோன்ற,
ஆடுகின்ற அறுகுறை; அயில் அம்பு, விண்மேல்
ஓடுகின்றன, உயிரையும் தொடர்வன ஒத்த. 

 

கைகள் வாளொடு களம்பட, கழுத்து அற, கவச
மெய்கள் போழ்பட, தாள் விழ, வெருவிட, நிருதர்
செய்ய மாத் தலை சிந்திட, திசை உறச் சென்ற-
தையலார் நெடு விழி எனக் கொடியன கரங்கள். 

 

மாரி ஆக்கிய வடிக் கணை, வரை புரை நிருதர்
பேர் யாக்கையின் பெருங் கரை வயின் தொறும் பிறங்க,
ஏரி ஆக்கின; ஆறுகள் இயற்றின; நிறையச்
சோரி ஆக்கின; போக்கின; வனம் எனும் தொன்மை. 

 

அலை மிதந்தன குருதியின் பெருங் கடல், அரக்கர்
தலை மிதந்தன; நெடுந் தடி மிதந்தன; தடக் கைம்-
மலை மிதந்தன; வாம் பரி மிதந்தன; வயப் போர்ச்
சிலை மிதந்தன; மிதந்தன; கொடி நெடுந் தேர்கள்.

 

ஆய காலையில், அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர்,
தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள்,
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம்
தூய தாரைகள் சொரிவன ஆம் என, சொரிந்தார். 

சொரிந்த பல் படை துணிபட, துணிபட, சரத்தால்
அரிந்து போந்தன சிந்திட, திசை திசை அகற்றி,
நெரிந்து பார்மகள் நெளிவுற, வனம் முற்றும் நிறைய,
விரிந்த செம் மயிர்க் கருந் தலை மலை என வீழ்ந்தான். 

கவந்த பந்தங்கள் களித்தன, குளித்த கைம்மலைகள்,
சிவந்த பாய்ந்த வெங் குருதியில், திருகிய சினத்தால்
நிவந்த வெந் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி,
உவந்த, வன் கழுது; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர். 

மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர்,
கருடன் அஞ்சுறு, கண் மணி காகமும் கவர்ந்த;
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ?
அருள் தரும் திறத்து அறல் அன்றி, வலியது உண்டாமோ? 

பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா, வெயில் அயில் ஆம் என விழியா,-
கல் ஆர் மழை, கண மா முகில் கடை நாள், விழுவனபோல்,
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார், வினை செய்தார். 

எறிந்தார் என, எய்தார் என, நினைந்தார் என, எறிய
அறிந்தார் என, அறியாவகை, அயில் வாளியின் அறுத்தான்;
செறிந்தாரையும், பிரிந்தாரையும், செறுத்தாரையும், சினத்தால்
மறிந்தாரையும், வலித்தாரையும், மடித்தான் -சிலை பிடித்தான். 

கேடகத் தடக் கைய, கிரியின் தோற்றத்த,
ஆடகக் கவசத்த, கவந்தம் ஆடுவ-
பாடகத்து அரம்பையர் மருள, பல்வித
நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே.

கவரி வெண் குடை எனும் நுரைய; கைம்மலைச்
சுவரன; கவந்தம் ஆழ் சுழிய; தண் துறை
பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய;
உவரியைப் புதுக்கின-உதிர-ஆறுஅரோ.

ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு, அரக்கர்தம் ஆவி
தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச் சரம் சிரம் துமித்த;
காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த; வஞ்சகர் இதயமும் பிளந்தன; பல்லம். 

 

தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா,
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன், அளப்ப அரும் பெரு வலி அரக்கர்
கூடி நின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான்.

 

ஆர்த்து எழுந்தனர் வானவர்; அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன, குருதியின் பெரு நதி; இராமன்
தூர்த்த செஞ் சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து
போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புரட்டின, புவியில் 

ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்; அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை, குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீய எனத் திரியும் கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே. 

 

பத்துடன் ஆறு எனப் பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து அவன் அருள் உற்றுளார். 

சண்ட வெங் கடுங் கணை தடிய, தாம், சில
திண் திறல் வளை எயிற்று அரக்கர், தேவர் ஆய்,
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்
கண்டனர், தம் உடல்-கவந்த நாடகம். 
 
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்-
தூய வெங் கடுங் கணை துணித்த தங்கள் தோள்,
பேய் ஒருதலை கொள, பிணங்கி, வாய்விடா
நாய் ஒருதலை கொள-நகையுற்றார், சிலர். 
 
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார்
நிருதர் தம் பெரும் படை நெடிது; நின்றவன்
ஒருவன் என்று, உள்ளத்தில் உலைவுற்றார், சிலர். 
 
கைக் களிறு அன்னவன் பகழி, கண்டகர்
மெய்க் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின-
மைக் கரு மனத்து ஒரு வஞ்சன், மாண்பு இலன்,
பொய்க் கரி கூறிய கொடுஞ் சொல் போலவே.
 
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மைபோல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து, வள்ளல்தான்
செஞ் சரத் தூய்மையால், தேவர் ஆக்கினான். 
 
வலம் கொள் போர், மானிடன் வலிந்து கொன்றமை,
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம்கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின,
இலங்கையின் உற்ற, அக் குருதி ஆறு அரோ. 
 
திரிசிரா இரு சிரம் இழத்தல்
சூழ்ந்த தார் நெடும் படை, பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின், புரளப் பொங்கினான்,
தாழ்ந்திலன் முத் தலைத் தலைவன், சோரியின்
ஆழ்ந்த தேர், அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான்.
 
ஊன்றிய தேரினன் உருமின் வெங் கணை,
வான் தொடர் மழை என, வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத் தரும மன்னவன்
தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான். 
 
தூவிய சரம் எலாம், துணிய, வெங் கணை
ஏவினன் இராமனும்; ஏவி, ஏழ்-இரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து,
ஆவி, வெம் பாகனை, அழித்து மாற்றினான்
 
அன்றியும், அக் கணத்து, அமரர் ஆர்த்து எழ,
பொன் தெரி வடிம்புடைப் பொரு இல் வாளியால்,
வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து, இரண்டையும் உருட்டினான் அரோ. 
 
முத்தலைவன் அத்தலை ஒரு தலையுடன் பொருதல்
தேர் அழிந்து, அவ் வழி, திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும், மறம் பிழைத்திலன்;
வார் அழிந்து உமிழ் சிலை, வான நாட்டுழிக்
கார் இழிந்தாலென, கணை வழங்கினான். 
 
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர, மீமிசைக்
காற்று இடை அழித்தென, கார்முகத்தையும்
மாற்ற அரும் பகழியால், அறுத்து மாற்றினான். 
 
வில் இழந்தனன் என்னினும், விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன்; இழந்திலன் வெங் கதம், இடிக்கும்
சொல் இழந்திலன்; தோள் வலி இழந்திலன்; சொரியும்
கல் இழந்திலன்; இழந்திலன் கறங்கு எனத் திரிதல்.
 
ஆள் இரண்டு-நூறு உள என, அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெஞ் செரு முயல்வானை,
தாள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் தடிந்து,
தோள் இரண்டையும் இரண்டு வெங் கணைகளால் துணித்தான். 
 
நிருதர் சேனை
 
அற்ற தாளொடு தோளிலன், அயில் எயிறு இலங்க,
பொற்றை மா முழைப் புலாலுடை வாயினின், புகுந்து
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன்; பரிவான்,
கொற்ற வார் சரத்து, ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான். 
 
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும், செறிந்த
நிருதர் ஓடினர், தூடனன் விலக்கவும் நில்லார்;-
பருதி வாளினர், கேடகத் தடக் கையர், பரந்த
குருதி நீரிடை, வார் கழல் கொழுங் குடர் தொடக்க. 
 
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப,
பணத்தின்மேல் நிலம் குழியுற, கால் கொடு பதைப்பார்
நிணத்தின்மேல் விழுந்து அழுந்தினர் சிலர்; சிலர் நிவந்த
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர், உயிர் கொடு பிழைப்பார். 
 
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட,
ஓய்ந்துளார் சிலர்; உலந்தனர் உதிர நீர் ஆற்றில்
பாய்ந்து, கால் பறித்து அழுந்தினர் சிலர்; சிலர் பயத்தால்
நீந்தினார், நெடுங் குருதி அம் கடல் புக்கு நிலையார்.
 
மண்டி ஓடினார் சிலர், நெடுங் கட கரி வயிற்றுப்
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்,
தொண்டை நீங்கிய கவந்தத்தை, துணைவ! நீ எம்மைக்
"கண்டிலேன்" எனப் புகல் என, கை தலைக் கொள்வார். 
 
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்,
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டாலென, அழிவார்;
உச்ச வீரன் கைச் சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவத்
தச்சு நின்றன கண்டனர், அவ் வழித் தவிர்ந்தார்.

தூடணன் வீர உரை கூறல்

அனையர் ஆகிய அரக்கரை, "ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின்" என்னா,
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என, நின்றே,
துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான். 
 
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூசார்;
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அருந் துணை ஆமோ? 
 
பூ அராவு வேல் புரந்தரனோடுதான், பொன்றா
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர்? நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்றறிந்துளிரோ? மனம் திகைத்தீர்! 
 
இங்கு ஓர் மானிடற்கு, இத்தனை வீரர்கள், இடைந்தீர்;
உம் கை வாளொடு போய் விழுந்து, ஊர் புகலுற்றீர்;
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்புறு கொழுங் கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ? நலம் நுகர்வீர்! 
 
செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும், வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ, தட மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ, குல மங்கையர்க்கு? அம்மா! 
 
ஏக்கம் இங்கு இதன்மேலும் உண்டோ ? இகல் மனிதன்
ஆக்கும் வெஞ் சமத்து, ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்க அரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி, நும் முதுகொடும் போம் பழி முயன்றீர்.
 
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ?-வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீர வாட் கையீர்!-எங்ஙனம் வாழ்திரோ? விளம்பீர். 

தூடணனை இராமன் எதிர்த்தல்

என்று, தானும், தன் எறி கடற் சேனையும், இறை, நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ் சிலை வலி என நேராச்
சென்று தாக்கினன், தேவரும் மருள்கொண்டு திகைத்தார்;
நன்று! காத்தி என்று, இராமனும் எதிர் செல நடந்தான். 
 
ஊடு அறுப்புண்ட, மொய்படை; கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட, குஞ்சரம்; கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட, கால் இயல் தேர்; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட, துரகம். 
 
துருவி ஓடின, உயிர் நிலை, சுடு சுரம், துரந்த;
கருவி ஓடின, கச்சையும் கவசமும் கழல;
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக;
உருவி ஓடின, கேடகத் தட்டொடும் உடலம்.