
கம்பராமாயணத்தின் சிறப்புகள்

இந்தியாவின் உலகப்புகழ் பெற்ற இதிகாசம் ராமாயணம். ரகு வம்ச அரசனான ராமனின் கதையைக் கூறுவது ராமாயணம் ஆகும். இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் எழுதினர். தமிழ்மொழியில் ராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை சகோதார ஒற்றுமையை, விதியின் வலிமையை நட்பின் மேன்மையை ராமாயணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
ராமாயணத்தில் மக்களின் நல்வாழ்வுக்கு தேவையான நீதிபோதனைகள் அடுக்கடுக்காக குவிந்து கிடக்கின்றன. பிரதமரும் இல்லாமல் அமைச்சரும் இல்லாமல் நாட்டை மக்களே ஆண்டுகொண்டு நல்லாட்சி நடத்துவதுதான் உண்மையான ராமராஜ்யம். இதில் கம்பர் எழுதிய ராமாயணமே மிக சிறப்பானது.
நூலாசிரியர் பற்றி
கம்பர் (கி.பி. 1180-1250) கம்பராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது. கல்வியிற் பெரியர் என்றும், கவிச்சக்ரவர்த்தி என்றும் இவருக்கு சிறப்பு பெயர்கள் உண்டு.
கம்பனின் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் ஆகும். புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும், மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறப்படும் விவரங்கள் அவ்வளவு நம்பகத்தக்கவை அல்ல. திருவொற்றியூரில் சதுரானன பண்டிதருடைய சைவமடத்தில் வள்ளி என்ற தாசியைச் சந்தித்து அவள் மீது கம்பன் காதல் கொண்டானாம். வள்ளியின்பால் கம்பன் கொண்ட காதலையும் அவனைக் காதலிக்கும் மற்றொருத்தியிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததையும் "தமிழ் நாவலர் சரிதை"யில் சில செய்யுள்கள் தெரிவிக்கின்றன. பாண்டியன், காகதிய ருத்திரன் உட்பட்ட தன் காலத்திய அரசர்கள் எல்லோராலும் கம்பன் பாராட்டப் பெற்றான். இவனுடைய பெரும் புகழ்க்கண்டு சோழ அரசனே பொறாமையடைந்து, இவனை கொன்றுவிட சதி செய்ததாகவும், தானே இருந்து அவனைக் கொலை செய்ததாகவும் கட்டுக்கதைகள் உண்டு. இவற்றை சரிபார்க்க ஆதாரங்கள் இல்லை. வென்னைநல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார். இன்று கம்பர் குலம் என்று அழைக்கப்படும் [[உவச்சர்கள்](ஓம் அர்ச்சகர் குலம் -> சாக்த மத அந்தணர்கள்)] குலத்தில் பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர். காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர். கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர். கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர். காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனாகிய ஏகம்பன் தேவாரப் பதிகங்களில் கம்பன் என்றே சுட்டப்படுகிறான். அந்தப் பெயர் இவருக்கும் இடப்பட்டது என்பர்.
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.
"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று. கம்பர் "கவிச்சக்கரவத்தி" என்றும் புகழப்படுகிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.
கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இராமாயணம் தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.
இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. எனவே அவை கம்பனின் படைப்பு அல்ல என்ற கருத்தும் உள்ளது.