கங்கை காண் படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கங்கை காண் படலம்

(பரதன் கங்கையைக் காண்கின்ற படலம் எனப் பொருள்படும். இராமன் கங்கையைச் சென்றடைந்த பகுதி முன்னர் கங்கைப் படலம் எனப் பெற்றது போலவே பரதன் கங்கையைக் காணும் பகுதியும் கங்கை காண் படலம் என்றாயிற்று. இராமன் காடு செல்கிறபோது வழியில் கங்கைக் கரை அடைகிறான் ஆதலின், கங்கைப் படலம் எனப்பெற்றது; ஆனால், பரதனோ இராமனைக் காண வேண்டும் என்னும் காட்சி நோக்கத்தின் முனைப்பில் கங்கையை அடைதலின் கங்கைப் படலம் என்னாது கங்கை காண் படலம் என்றாயிற்று.

பரதன் நடந்து சென்று கங்கைக் கரை அடைகிறான். சேனைகளோடு வரும் பரதனைக் கண்டு குகன் ஐயமுற்றுக் கங்கையின் தென்கரை நின்று தன் சேனைகளுக்குத் தயார் நிலையில் இருக்க அறைகூலிக் கட்டளை இட்டுப் பரதனைக் காண வடகரைக்குத் தனி நாவாயில் வருகிறான். சுமந்திரனால் இராம சகோதரன் குகன் என்பதை அறிந்த பரதனும் ஆர்வத்தோடு அவனை எதிர்நோக்குகிறான். பரதன் நிலை கண்டு திடுக்குற்ற

குகன் ஐயம் நீங்கி ஐயப்பட்டதற்கு அவலப்படுகிறான். பரதனைப் பாராட்டி இராமன் உறைந்த, உறங்கிய இடங்களைக் காட்டி, இலக்குவன் செய்த செயலையும் எடுத்துச் சொல்ல, அது கேட்ட பரதன் பெரிதும் வருந்துகிறான். குகன் ஆணையால் நாவாய்கள் வரப் பரதனும், இளவலும், தாயரும், உடன் வந்தோரும், சேனைகளும் கங்கையின் தென்கரை அடைகிறார்கள். இடையே நாவாயில் தாய்மார்களைப் பரதன் குகனுக்கு அறிமுகப்படுத்தக் குகன் வணங்குகிறான். தென்கரை சேர்ந்து தாயார் பல்லக்கில் வர, நடந்து வரும் பரதனைப் பரத்துவாச முனிவர் வரவேற்கிறார் என்பது வரை உள்ள செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.)

அரசகுமாரனாகப் பிறந்த பரதன் கண்களிலே நீர் புரள, மேனியிலே முனிக் குமாரன் போல், மரவுரி அணி செய்ய, கங்கை கரைக்கு கால்கள் நடைத் தளர வந்து சேர்ந்தான். அவனுடைய அந்தக் கோலத்தைக் கண்ட இயற்கை அன்னையும் கண்ணீர் வடித்து அழுதாள். அனைத்து சேனைகளும் கங்கைக் கரையில் தங்கி களைப்பாறின. பரதனைப் பின் தொடர்ந்து வந்த சேனையில் உள்ள லட்சக்கணக்கான யானைகளின் மதநீர் கங்கை நீருடன் கலந்து, அதன் காரணமாகக் கங்கை நீர் பருக முடியாதபடி ஆனது. மேலும் அந்த சேனையில் இருந்த கோடிக்கணக்கான குதிரைகள் கங்கை ஆற்றில் விழுந்து புரண்டதன் காரணமாக, கங்கையே சேறு நிரம்பிய குளம் போல மாறியது.

அச்சமயத்தில் பரதனின் சேனைகள் கங்கையின் வடகரையில் தங்கி முகாம் இட்டு இருப்பதை, தென்கரையில் இருந்தபடி குகன் கண்டான்." இவ்வளவு பெரிய சேனை இராமபிரானுடன் போர் செய்வதற்காகத் தான் வந்துள்ளதோ?" என குகன் ஐயம் கொண்டான். உடனே அவன் நெஞ்சில் அளவற்ற கோபம் பெருகியது. கண்களில் தீப் பொறி பறந்தது. உடனே தனது சேனையைக் கூட்டினான், பரதன் அழைத்து வந்த சேனையுடன் ஒப்பிடும் போது, குகனின் சேனை ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல தான். ஆனாலும் வெறும் ஐயாயிரம் பேர்கொண்ட குகனின் சேனையில் ஒவ்வொரு வீரனும் பல யானை பலம் கொண்டு இருந்தனர். அவர்களுடைய அரைப் பட்டிகையில் உடைவாள் தொங்கியது. பரதனின் சேனையை கண்ட குகன் பற்களைக் கடித்துக் கொண்டான். குகனுக்கு பரதனின் பெரும் சேனை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

"இந்த சேனை முழுவதும் எனக்கு எலிகள், இவற்றை அழிப்பதற்கு நான் பாம்பாவேன்" என்று கூறிக் கொண்டான் குகன். சேனைகள் சூழ குகன் நின்று கொண்டு இருந்தான். அக்காட்சி தூதர்களுடன் எமன் நிற்பதைப் போன்று இருந்தது.

பின்பு தனது சேனையில் உள்ளவர்களைப் பார்த்து," எனது ஆருயிர் தோழர்களே! மாபெரும் வீரர்களே! அதோ பாருங்கள். வட கரையில் பெரும் சேனை வந்து நிற்கிறது. ஸ்ரீ ராமபிரானை வெல்லும் எண்ணத்துடன் பரதராஜரின் அந்தச் சேனை வந்து இருக்கிறது! அந்தச் சேனை வீர சொர்க்கம் அடைவதற்கும், என் ஆருயிர் நண்பர் இராஜ்ஜியம் பெறவும் இப்போது போர் தொடங்கி உள்ளேன். சம்மதிப்பீர்களாக!" என்றான்.

மீண்டும் அவன் பெருத்த குரலில்," பறைகளை அடியுங்கள்! வழிகளையும், நீரில் இறங்கும் துறைகளையும் எல்லாப் பக்கங்களிலும் அழித்துவிடுங்கள்! குத்துங்கள்! கங்கை ஆற்றின் கரையில் வரும் அவர்களைப் பிடித்துச் சாகும் படி வெட்டிப் போடுங்கள்! அவர்கள் ஆறு கடப்பதற்கு தோணிகள் ஒன்றையும் நீரில் விட்டு ஒட்டாதிருங்கள்!" என்று, தன் சேனையில் உள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.

மேலும் குகன்," அஞ்சனவண்ணன், என் ஆருயிர் நாயகன் ஆளாமல் இருக்கும் படி வஞ்சனையால் அரசு பெற்ற மன்னரும் வந்தாரோ? தீயினும் சிவந்த என் அம்புகள் இவர் மேல் செல்லாதோ? அப்படிச் செல்லாவிட்டால் நாய் குகன் என்று என்னைச் சொல்லாரோ? ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ? வேல நெடும்படைக் கண்டு விலகிடும் வில்வீரனோ நான்? தோழன் என்றென்னை இராமர் சொல்லிய சொல் நன்கு மதிக்கத்தக்க ஒரு சொல் அன்றோ? அந்த நட்பை நான் காக்க வேண்டும். அதற்கு இப்போது தருணம் வந்துவிட்டது. இப்போது நான் இவர்களை விட்டு விட்டால்," எளிய இந்த வேடன் இப்படி மானங் கெட வாழ்வதை விட இறந்திருக்கலாகாதோ?" என்று என்னை உலகத்தவர் பழிக்க மாட்டாரோ? இந்தப் பரதன் இராமபிரானை அண்ணன் என்றும் நினைக்கவில்லை. அவருக்குக் காவலாக பெரும் புலி போல இருக்கும் தம்பி இளையபெருமாளையும் இவன் நினைக்கவில்லை. இவ்விருவகை நினைவும் இந்தப் பரதனுக்கு இல்லாமல் போனாலும் போகட்டும்.

இந்தக் கங்கை ஆற்றைக் கடப்பதற்கு என்னுடைய உதவி தேவை அல்லவா? இவன் என்னை ஒரு பொருளாக மதிப்பதாகவும் தோன்றவில்லையே! இவன் இப்படி அலட்சியமாக இருப்பது, இந்த வேடர்களின் அம்புகள் நம்மை என்ன செய்யும் என்ற இறுமாப்போ? இந்தப் பரதன் இந்தக் காட்டிலும் ஸ்ரீ ராமபிரானை நிறுத்த விடாது அடித்துத் துரத்த வந்திருக்கிறான்! இருக்கட்டும் . இராமபிரான் என்னிடம் இன்னுயிர்த் தோழமை கொண்டுள்ளார். அதனால் நான் இந்த பரதனின் சேனையை உயிருடன் போக விடமாட்டேன்! என்னைக் கடந்து இவர்கள் போக நான் அனுமதிக்கவும் மாட்டேன். என் சகோதரர் இராமபிரான் தவம் புரிய இவன் புவி ஆள விடுவேனோ?" என்று இவ்வாறு எல்லாம் குகன் ஆர்பரித்துக் கொண்டு இருக்க, அவன் தென்கரையில் நின்று இருப்பதைக் கண்ட சுமந்திரர், பரதனின் அருகே வந்து நின்றார். வேந்தே! அதோ, அக்கரையில் எதிரில் தோன்றுகின்றானே, அவன் கங்கையின் இரு கரைகளையும் தனக்கு உரிமையாக உடையவன். கணக்கற்ற மரக்கலங்களை உடையவன். இராமபிரானுக்கு உயிர் தோழன். பெயர் குகன். இராமபிரானிடம் பேரன்பு கொண்டவன். இப்போது நாம் செல்லும் வழிக்கெதிரே வந்து நிற்கின்றான். உயர்ந்த தோள்களையும், மத யானை போன்ற பலத்தையும் கொண்ட இவன், உங்களைக் காணத் தான் வந்துள்ளதாக எண்ணுகிறேன்" என்று அவனைச் சுட்டிக் காட்டி, அவன் வழியில் நிற்பதற்கான காரணத்தையும் பரதனுக்குத் தெரிவித்தார் சுமந்திரர்.

சுமந்திரரது சொல் கேட்ட பரதன், இவ்வளவு இனிய குணம் கொண்ட இராமதாசன் நம்மைத் தேடி வருவது முறையாகாது. எனவே, இராமபிரானின் மகாதாசனான அவனை நாமே சென்று பார்ப்பது தான் முறை, என்று குகனைக் காண பரதனே புறப்பட்டான்.

மறுபுறம் தென்கரையில் நின்றிருந்த குகன், தம்பி சத்ருக்கனுடன் தானுமாக கங்கைக் கரையின் அருகில் வந்து நின்ற பரதனை உற்று நோக்கினான். நோக்கிய அளவில் அவன் மரவுரி தரித்து இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். மீண்டும் குகன் அக்கரையில் இருந்து, அக்கறையுடன் பரதனின் முகம் கண்டான். மரவுரியை ஆடையாக உடுத்தி இருந்த பரதனின் மேனி புழுதி படிந்து இருந்தது. கலை இழந்த சந்திரன் போல பரதனின் முகம் காணப்பட்டது. அம்முகத்தில் துயரத்தின் நிழலைக் கண்டான் குகன். பரதனை அந்தக் கோலத்தில் கண்ட குகனின் வில் நழுவிக் கீழே விழுந்தது. அப்படியே அவன் சிறிது நேரம் கலங்கிச் செயலற்று இருந்தான்.

மீண்டும் சுய உணர்வை அடைந்த குகன்," இந்த பரதன் எனது தலைவனாகிய இராமபிரானைக் கொண்டு இருக்கிறானே! அவன் அருகில் நிற்கும் சத்துருக்கன் இளையபெருமாளை போலக் காட்சி தருகின்றானே. மேலும், இந்தப் பரதன் தவத்திற்கு உரிய வேடத்தை தரித்து இருக்கிறானே. முகத்தில் வேறு எல்லை இல்லாத துன்பம் தாண்டவம் ஆடுகிறதே. இராமபிரான் சென்ற திசையை நோக்கி வேறு வணங்குகிறானே! எம்பெருமானின் தம்பி பிழை செய்வாரா?" என்று சிந்தித்தான். இறுதியில் குகன் தனது இனத்தாரை நோக்கி," இங்கு வந்து இருக்கும் பரதன் குற்றம் செய்யாதவன் போல எனக்குப் படுவதால், நான் மட்டும் தனியே சென்று அவனது மனக் கருத்தை அறிந்து வருகிறேன். நீங்கள் அனைவரும் அதுவரையில் இங்கேயே காத்துக் கொண்டு இருங்கள்!" எனக் கூறினான்.

பின்பு குகன் தான் மாத்திரம் ஒரு மரக் கலத்தில் ஏறிக் கொண்டு பரதன் இருக்கும் வடகரையை நோக்கி வந்தான். பிறகு கரை இறங்கிய குகன் பரதன் அருகில் சென்றான். பிறகு மரியாதை நிமித்தமாக பரதனை வணங்கினான். பரதனோ, குகனும் தன்னைப் போல இராமபிரானின் மீது அன்பு கொண்டவன் என்பதை அறிந்து கொண்டவனாக, குகனை அன்புடன் தழுவிக் கொண்டான்.

பின்னர், அந்த அன்பின் சங்கமத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குகன் பரதன் அவ்விடம் வந்தக் காரணத்தைக் கேட்டான். அதற்கு பரதன் தான் வந்த விவரத்தை குகனிடம் எடுத்துச் சொன்னான். அண்ணன் இராமபிரானை அழைத்துச் செல்லத் தான் பரதன் வந்துள்ளான் என்பதை தெள்ளத் தெளிவாக குகன் ஐயம் இன்றி அறிந்து கொண்டான். தான் பரதனை தவறாக நினைத்ததற்காக மனதிற்குள் மிகவும் வருந்தினான். இராமரின் நற்குணங்களைக் கண்டு முன்பு எப்படி குகனுக்கு அவர் மேல் அன்பு உண்டாயிற்றோ, அப்படியே இப்பொழுது பரதனின் நற்குணங்களைக் கண்டு அவன் மேல் அக்குகனுக்கு அன்பு உண்டாயிற்று. பிறகு, பரதனை பலவாறு புகழ்ந்தான் குகன்.

தன்னைப் புகழ்ந்து உரைத்த குகனிடம், இராமபிரான் முன்பு இங்கு எங்கெல்லாம் தங்கினார் என்று பரதன் கேட்க. குகனும், பரதனுக்கு இராமபிரான் வந்து தங்கிய இடங்களை எல்லாம் காட்டினான். அப்போது பரதன், தன் அண்ணன் இராமன் பள்ளி கொண்ட புற்படுக்கையைக் கண்டான். கண்ட மாத்திரத்தில் மலர் மெத்தையில் படுக்க வேண்டிய அண்ணன் தன்னால் தானே இந்தப் புல் படுக்கையில் படுத்து இருந்தார் என்று நினைத்துக் கதறி அழுதான். அறுசுவை உணவுகளை அரண்மனையில் உண்ண வேண்டிய அண்ணன், தன்னால் தானே இந்தக் கொடிய கானகத்தில் காய் கனிகளை உண்கிறார் என்று நினைத்து வருந்திய பரதனுக்கு அக்கணம் தன்னை மாய்த்துக் கொண்டாலும் தவறில்லை என்ற எண்ணம் தோன்றியது.

பிறகு குகனிடம் லக்ஷ்மணன் எங்கு படுத்து இருந்தான் என்று பரதன் கேட்க. அதற்குக் குகன்," இளையபெருமாள் தூங்கவே இல்லை, அண்ணலும், பிராட்டியும் நித்திரை செய்ய, இரவு முழுவதும் தூங்காமல் அவர்களுக்குக் காவலாக நின்று கொண்டு இருந்தார். கையில் கொண்டிருந்த வில் சிறிதும் தளரவில்லை, அடிக்கடி பெருமூச்சு விட கண்களில் கண்ணீர் வடிய காவல் புரிந்தார்" என்று கூறினான்.

இது கேட்ட பரதன் ஒருபுறம் லக்ஷ்மணனை நினைத்துப் பெருமிதம் கொண்டான், மறுபுறம் இத்தனைக்கும் காரணமான தன்னை மீண்டும் நொந்து கொண்டான். அன்றிரவு பரதன், இராமபிரான் படுத்த அதே புழுதி மண்ணில் படுத்துக் கொண்டான். பொழுது மெல்ல, மெல்ல விடிந்தது. பரதன் எழுந்தான். குகனை அழைத்து," வேடர் தலைவா! நாங்கள் கங்கையைக் கடக்க நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு செய்தால் நாங்கள் இராமபிரானைக் கண்டு அகம் மகிழ்வோம்" என்றான்.

"அப்படியே செய்கிறேன், அண்ணலே" என்று கூறினான் குகன். உடனே தனது இனத்தாரை நோக்கி," நீங்கள் போய் ஒடங்களைக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.உடனே வேடர்கள் குகனின் கட்டளைப்படி மேரு மலை போலவும், குபேரனின் புஷ்பக விமானம் போலவும், பலவடிவங்களில் பல்லாயிரக்கணக்கான நாவாய்களை தென்கரையில் இருந்து கங்கையின் வடகரைக்குக் கொண்டு வந்தார்கள்.

பின்னர் குகன் பரதனை நோக்கி," சக்கரவர்த்திச் செல்வரே! அளவற்ற மரக்கலங்கள் வந்து விட்டன. இனி தங்களின் கருத்து என்ன?" என்று கேட்டான்.

பரதன் " இனி என்ன? அக்கறைக்கு உடனே புறப்பட வேண்டியது தான்" என்று குகனுக்குப் பதில் கூறிவிட்டு, சுமந்திரரை அழைத்து," இச்சேனையை விரைவில் மரக்கலங்களில் ஏற்றி அக்கரையில் சேர்த்துவிடுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அதன்படியே சுமந்திரர் சேனைகளில் எதை, எதை எங்கு எங்கு ஏற்றினால் சரியாக இருக்கும் என்று ஆராய்ந்து அதன் அதன் தகுதிக்கு ஏற்ப முறை பிறழாமல் ஏற்ற, யானைகளும் குதிரைகளும் தேர்களும் காலாட்களும் கொண்ட கணக்கற்ற படைகள் யாவும் நாவாய்களில் ஏறிக் கங்கையைக் கடந்தன.

அப்படி நாவாய்களில் ஏற்ற முடியாமல் போன யானைக் கூட்டங்கள் பிரளய காலத்து மேகங்கள் கடலில் தோய்ந்தது போல கங்கையை நீந்திச் சென்றன. தென் திசையாக யானைகள் நீந்திச் செல்ல, கங்கை நீர் தென் கரையை உடைத்துக் கொண்டு அவற்றுக்கு முன் சென்றது. அது சித்திரக் கூடத்தில் இருந்து இராமபிரானைக் காண கங்கை முந்திச் சென்றது போலிருந்தது.

மேலும் ஆற்றில் சென்ற நாவாய்கள் ஒன்றோடு ஒன்று மோதும் போது, அவைகளில் பயணம் செய்த மங்கையர்கள் அஞ்சி நடுங்கினார்கள். வேடர்கள் ஓடங்களில் இரு பக்கத்திலும் துடுப்புப் போட்டு வேகமாகச் செலுத்தினார்கள். அதனால் எழுந்த நீர்த்துளிகள் பெண்களின் ஆடைகளை முழுவதுமாக நனைத்தன. இவ்வாறு சென்ற படகுகள் அக்கறையை அடைந்து அவர்களை விட்டு விட்டு, மீண்டும் இக்கரையில் உள்ளவர்களை ஏற்றிச் செல்லத் திரும்பி வந்தன. மீண்டும் மீண்டும் அவைகள் சேனைகள் யாவும் கங்கையைக் கடக்க விரைந்து உதவின. இவ்வாறு குகனின் நாவாய்களில் பரதனுடன் வந்த சேனைகள் முழுதும் கங்கையின் தென்கரையில் வந்து சேர்ந்தன. முனிவர்கள் யாவரும் தங்கள் தவ வலிமையால் வான் வழியாகக் கங்கையைக் கடந்தார்கள்.

தன்னைச் சூழ்ந்து வந்த சேனை முழுதும் கங்கையைக் கடந்ததைக் கண்ட பரதன், இறுதியாகத் தானும் ஒரு படகில் ஏறிக் கொண்டான். அவனைத் தொடர்ந்து சத்துருக்கன், மாதேவி கோசலை, கைகேயி, சுமத்திரை, சுமந்திரர், குகன் ஆகியோரும் அதே படகில் ஏறிக் கொண்டார்கள். படகு கங்கையைக் கடக்கத் தொடங்கியது.அப்போது கோசலையைப் பார்த்த குகன் வணங்கி விட்டு, பரதனைப் பார்த்து," வேந்தே! இவர் யார்?" என்று கேட்டான்.

"இவர் தசரத சக்கரவர்த்தியின் மூத்த தேவி, இராமபிரானைப் பெற்று எடுத்தப் புண்ணியவதி. எல்லா செல்வங்களையும் பெற்று இராம பிரானுடன் இனிது வாழ வேண்டிய இவர்கள், நான் பிறந்த காரணத்தால் இன்று துக்கப்பட்டு நொந்து இருக்கிறார்கள் " என்றான் பரதன்.

அது கேட்ட குகன் மிகவும் மனம் வருந்தினான், குகனின் வருத்தத்தை கண்ட கோசலை, அவன் மீது கொண்ட பரிவில் பரதனிடம், குகனைப் பற்றிக் கேட்டாள். பரதன் உடனே குகனைப் பற்றி விரிவாக தனது தாய் கோசலையிடம் விளக்கினான். குகனைப் பற்றி அறிந்து கொண்ட கோசலைக்கு அவன் மீது மிகுந்த பாசம் எழுந்தது. பரதனையும், குகனையும் நோக்கிய கோசலை அவ்விருவரிடத்திலும்," புதல்வர்களே! இனி நீங்கள் துன்பத்தால் வருந்தாதீர்கள். இராம லக்ஷ்மணர்கள் குகன் போன்ற ஒரு தோழனைப் பெறவே கானகம் சென்று உள்ளனர் போலும். இந்தப் பெருவீரன் குகனுடன் சேர்ந்து நீங்கள் ஐந்து பேரும் இந்தப் பரந்த நிலவுலகை நீடூழி காலம் பாதுகாப்பீராக!" என்று வாழ்த்தினாள்.

மாதேவியின் வாழ்த்தை பெற்றுக் கொண்ட குகன், தேவி சுமித்திரயைப் பார்த்து விவரம் கேட்டான். அதற்குப் பரதன்," இளையபெருமாளான லக்ஷ்மணனைப் பெற்ற புகழை உடையவர்கள். இவர்கள் தான்" என்றான். உடனே இது கேட்ட குகன் மகிழ்ந்து சுமித்திரையையும் வணங்கினான் .

பிறகு, கைகேயியைப் பார்த்து யார் என்று குகன் கேட்க, அதற்குப் பரதன்,"துன்பங்களை எல்லாம் உண்டாக்கியவள். பழி வளர்க்கும் செவிலித்தாய். இந்தப் பாவியின் வயிற்றில் பிறந்த காரணத்துக்காக எனக்கும் பழிச் சொல்லை பரிசளித்தவள். இவளது முகத்தை கண்டே நீ இவளை அறியவில்லையோ? சரி வெளிப்படையாகவே உனக்குச் சொல்கிறேன். இவள் தான் தீவினைகளை தொடர்ந்து செய்த கைகேயி" என்றான்.

அது கேட்ட குகன், கைகேயியின் கலங்கிய கண்களை எண்ணி மனம் வருத்தம் கொண்டவனாக அவளையும் தாயாக பாவித்து வணங்கினான்.அச்சமயம் பெட்டை அன்னப் பறவை ஒன்று சிறகில்லாமல் நீந்திக் கரையை அடைந்தது போல, அவர்கள் ஏறிச் சென்ற ஓடமும் தென்கரையைச் சென்று அடைந்தது.

தோணியை விட்டுக் கரையில் இறங்கிய அனைவரும் வெள்ளத்தைச் சொரிந்த கண்களோடு பல காதவழியைக் கால் நடையாகவே கடந்து சென்றார்கள்.அப்படிச் சென்ற அனைவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அம்முனிவர், அவர்களை உவகையுடன் வரவேற்க விரைந்து வந்தார்!