ஒற்றுக் கேள்விப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
ஒற்றுக் கேள்விப் படலம்
தாங்கள் அமைத்த சேதுவை வானர வீரர்கள் ஸ்ரீ இராமரிடம் காட்டினர். அதன் வழியாக இலங்கைக்குக் கடல் கடந்து சென்று படைகளுடன் இலங்கையில் ஒரு இடத்தில் தங்கிய இராமபிரான் படை வீடு அமைக்கப் பணித்தான். நளன் படைவீடுகளைப் பாங்குற அமைத்தான். படை வீட்டில் ஒற்றறிய வந்த இராவணனின் ஒற்றர்கள் விபீஷணனால் பிடிபட்டனர். இராமன் அபயம் அளித்து உண்மையை உரைக்குமாறு கூற, அவர்கள் உண்மையை ஒப்பினர்.
'தேவியை விடுத்தால் இராவணன் ஆவியுண்டு என அறைக எனக் கூறி ஒற்றர்களைப் பெருமான் விடுவித்தருள, அவர்கள் இலங்கை திரும்பினர். இலங்கையில் அப்போது மந்திராலோசனைக் கூட்டம் நிகழ்கிறது. மனிதர் மிக நெருங்கி வந்துவிட்டனர். துணியும் காரியம் பற்றி இராவணன் கேட்க, மாலியவான் அறம் உரைக்கின்றான். அப்போது, ஒற்றர்கள் நுழைந்து, வானரப் படையின் பெருமையையும், இராமபிரானின் ஆற்றலையும் கருணையையும், அவன் உரைத்த சூளுரையினையும் தெளிய உரைத்தனர்.
மீண்டும் மாலியவான் இராமன் வந்துள்ள அவதார நோக்கினையும், அறங்காக்க உள்ளதையும் எடுத்துரைத்தான். அத்தனை வார்த்தைகளும் விழலுக்கு நீராய் வீணாகிப்
போயின. இதுபோல மேற்கண்ட செய்திகளே இப்படலத்தில் காணப்பெறுகின்றன)
"கடலில் அணை கட்டி முடிக்கப்பட்டது!" என்று சுக்கிரீவன் முதலியோர் தன்னிடம் கூறக் கேட்டதும், இராமபிரான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அந்த நல்ல செய்தியைக் கூறிய அவர்களை மார்போடு சேர்த்துத் தழுவிக் கொண்டார். பிறகு சுக்கிரீவனுடன் சேதுவைக் காண விரும்பி புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு சேதுவை அடைந்த இராமபிரான் அதனை நன்கு நோக்கினார். அச்சமயம், சீதையே தனக்கு எதிரில் நிற்பது போலப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அணையை நேர்த்தியாகக் கட்டிய நளனை அவரால் புகழாமல் இருக்க முடியவில்லை.
"பிரமனே கட்டினாலும் இந்த அணையைக் கட்டி முடிப்பதற்கு மிகப் பலநாள் செல்லுமே. அப்படிப் பட்ட இந்தப் பெரிய அணையை மூன்று நாட்களில் எப்படி இந்த நளன் கட்டி முடித்தானோ? இக்கடலின் ஆழத்தைச் சொல்லுதலும் இயலுமோ? அப்படியும் இந்தக் கடலில் நளன் வெகு விரைவில் அணை கட்டி முடித்தானே! இக்கடல் ஏழு கடல்களுக்கு அப்பாலும் நீண்டதாக இருந்தாலும், இவன் அந்த ஏழு கடல்களையும் விரைவில் அடைத்து அங்கும் செல்லும்படி அணைகட்டுவான்!" என்று வியப்புடன் இராமபிரான் மனம் மகிழ்ந்து கூறினார்.
பின்பு, நளனை மிக்க அருளோடும் அன்போடும் ஸ்ரீ இராமர் தழுவிக் கொண்டார். முன்பு, வருண தேவனால் தனக்கு அன்புடன் அளிக்கப்பட மணியாரத்தையும் மற்றும் பொன் அணிகலன்களையும் இராமர் நளனுக்குக் கொடுத்து மகிழ்ந்தார். " இனி நிச்சயம் நாம் வெற்றிக் கனியை வெகு விரைவில் பறிக்கப் போகிறோம்" என்று கூறிவிட்டு இராமர் படையுடன் செல்ல விரைந்தார்.
வானர சேனையும் இலங்கையை நோக்கிப் புறப்பட்டது. படையின் முன்னணியில் விபீஷணன் சென்றான். மாருதி படையின் பின்னணியில் சென்றான். நடுவில் இராமபிரான் தமது தம்பி பின்னே தம்மைத் தொடர முன்னே நடந்தார்! காவேரி நதி போல உயர்ந்த சேது அணையின் வழியாக வானர சேனைகள் ஒருசேர விரைந்து சென்றன. படைக்கலங்களைச் சுமந்து சென்ற வானர வீரர்கள், குறிஞ்சி முதலாகிய நிலத்தில் உள்ள உணவுப் பொருள்களைப் பெருங்குவியலாக கொண்டு எதையும் விடாமல் சுமந்த வண்ணம் கடலில் கலக்கச் செல்லும் காவேரி போல் விளங்கினார்கள்! மேலும், முன்னே நெருங்கிச் சென்ற வானரர்களைத் தாண்டிச் செல்ல இடமில்லாமையாலும், நீரில் போக முடியாமையாலும் தவித்த வானரர்களை, மற்ற வானர்களில் சிலர் தம் கைகளில் ஏந்திக் கரை சேர்த்தார்கள். அப்படிக் கரை சேர்த்த வானரர்களுக்கு ஓர் எல்லை இல்லை.
இராமபிரான் அப்படிச் செல்கையில் அவர் மேனியைச் சூரியக் கதிர்கள் தீண்டாமலிருக்க, இலைகள் தழைத்து நிழல் தரும் படியான குளிர்ந்த சிறந்த சந்தன மரங்களையும், குங்கும மரங்களையும் பறித்தெடுத்து குடையாக அவருக்குப் பிடித்துச் சென்றார்கள் வானர வீரர்கள் பலர். மற்றும் படைத்தலைவர்கள் இராமபிரானின் திருமேனி வாட்டமடையாமலிருக்க, மலர்களைக் கொண்ட மரங்களை முறித்து, அவற்றில் சேர்க்கக் கூடியவற்றை ஒன்று சேர்த்துச் சாமரை போல் வீசிச் சென்றார்கள்.
ஸ்ரீ இராமர் தமது மனதினில்," அசோக வனத்தில் சீதை என்ன பாடு படுகிறாளோ? இனி அவளை எப்படியும் மீட்டு விடவேண்டும்" என்ற எண்ணத்துடன், சீதையின் நினைவிலேயே இலங்கையை தனது படைகளுடன் சென்று சேர்ந்தார். அவ்வாறு இலங்கையை சென்று அடைந்த இராமபிரான் அந்நகரத்தின் புறத்தே ஒரு குன்றில் தமது தம்பியுடனும் துணைவர்களுடனும் தங்கினார். அப்போது தமது பக்கத்தில் நின்றிருந்த நளனை இனிதாகப் பார்த்து ஸ்ரீ இராமர்," நலனே ! நீ நீலன் உதவியுடன் நமது படைகள் தங்குவதற்காக விரைந்து படை வீடு அமைப்பாய்!" என்று கட்டளை பிறப்பித்தார்.
நளன் உடனே பெருமானின் பாதங்களில் விழுந்து விடை பெற்றுச் சென்றான். வானரர்களின் துணை கொண்டு, பெரிய எண்ணில் அடங்காத பாசறைகளை அமைத்தான். இராமபிரான் தங்குவதற்கு அவருக்கென்றே அழகுடன் கூடிய மிகவும் நேர்த்தியான ஒரு பர்ண சாலையை அமைத்தான். இவ்வாறாக ஸ்ரீ இராமரின் கட்டளையை நல்ல முறையில் நிறைவேற்றினான்.
நளன் இவ்வாறாக பாசறைகளையும் பர்ணசாலையையும் கட்டி முடித்ததும், இராமபிரானை வாழ்த்தி வணங்கிவிட்டு வானரத் துணைவர்கள் யாவரும் தமக்குரிய பாசறைக்குள் சென்றார்கள். இராமபிரான் தமக்குரிய பர்ண சாலைக்குச் சென்றார். அப்போது சூரியனும் அது கண்டு மகிழ்ந்து ஸ்ரீ இராமரை தமது கிரணங்களால் வணங்கி விட்டு விடை பெற்றுச் சென்றான்.
சூரியன் மறைந்து சில கணங்களில் பிறைச் சந்திரன் வானில் தோன்ற, அவனது தண்கதிர்கள் சீதையைப் பிரிந்து உறக்கத்தின் சுகத்தையும் மறந்து விட்டவரான இராமபிரானின் அழகிய தோள்களிலே படிந்தன. அக்காட்சி மயில் போய் விட்டது என்ற காரணத்தால் மரகத மழையின் மீது வெண்ணிற கொடிய பாம்புக் குட்டி மெல்ல ஊர்வதைப் போன்று இருந்தது.
இலங்கை நகரத்துக்கு அருகில் வந்து விட்டதால் ஸ்ரீ இராமருக்கு சீதையின் நினைவு அதிகம் தோன்றியது. அத்துடன் நிலவின் குளிர்ந்த கதிர்கள் வேறு ஸ்ரீ இராமனின் தோள்களில் பட்டு அவரது நினைப்பை மிகவும் அதிகரித்தது. அதனால் அந்தக் குளிரிலும் அவரது உடல் மிகவும் வியர்த்தபடி வருந்தினார்.
அதேசமயம்...
இராவணனால் ஏவப்பட்ட ஒற்றர்களான இரண்டு அரக்கர்கள், வானரர் வடிவங் கொண்டு, இராமபிரானின் சேனையளவை நோக்கிய வண்ணம் வானரப் பாசறைகளில் சுற்றிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை விபீஷணன் பார்த்து விட்டான். உடனே விபீஷணன் அவர்களை தப்பிச் செல்லாதவாறு பிடித்துக் கொண்டான். பாற்கடலில் ஒரு நீர்த்துளி சேர்ந்ததாயினும் அதனைப் பிரித்து எடுக்கவல்ல அன்னப் பறவை போல், விபீஷணன் அப்பெருஞ் சேனையின் நடுவே வானர வடிவம் கொண்டு திரிந்த அரக்கர்களைப் பிரித்து அறிந்து கொண்டான்!
அந்த இராவணனின் ஒற்றர்களான சுகசாரணர் என்ற அந்த இரட்டையர்களைப் பிடித்துக் கொண்ட விபீஷணன், மாணைக் கொடிகளால் கட்டி அடித்து துவம்சம் செய்தபடி, ரத்தம் ஒழுக, ஒழுக இழுத்து வந்து ஸ்ரீ இராமர் முன்னாள் நிறுத்தினான்.
அது கண்ட ஸ்ரீ இராமர், விபீஷணனை நோக்கி," விபீஷணா! இவர்கள் செய்த தீங்கு தான் என்ன? நீ இவ்வாறு அடித்து உள்ளாய் என்றால் இவர்கள் ஏதேனும் பெரிய தவறை செய்து விட்டார்களா?" என்றார். பிறகு அந்த ஒற்றர்களைக் கட்டி இருந்த மாணைக் கொடியை விபிஷணனை கொண்டே அவிழ்க்கச் சொன்னார். அவ்வாரே செய்தான் விபீஷணன்.
உடனே விபீஷணன்," ஐயனே! இவர்கள் உண்மையில் வானர வீரர்கள் இல்லை. இராவணின் இரட்டை ஒற்றர்களான சுகசாரணர் குரங்கு வடிவம் எடுத்து நமது வானரப் படையின் வலிமையை வேவு பார்த்து இராவணனிடம் அது பற்றி கூறத் தான் கள்ளத் தனமாக இங்கு வந்து உள்ளனர்" என்றான்.
விபீஷணன் அவ்வாறு கூறக் கேட்டதும் இராவணின் அந்த ஒற்றர்கள் தீடீர் என்று ஒரு உபாயம் செய்தனர். இராமரைப் பார்த்து," ஐயனே! நாங்கள் வானரர்களே! இந்த விபீஷணனை நம்பாதீர்கள். இவன் தமது தமயனுக்கு உதவி செய்யத் தான் நம்முடன் சேர்ந்து உள்ளான். அவ்வப் போது, இங்கு நடப்பதை எல்லாம் தனது அண்ணனுக்கு தகவல் சொல்லி வருகிறான். அதனை நாங்கள் கண்டு பிடித்து விட்டோம். அதனால், தான் இவ்வாறு ஒரு பழியை எங்கள் மீது சுமத்தி உள்ளான்" என்று கூறி முடித்தார்கள்.
அது கேட்ட விபீஷணன் அவர்களைப் பார்த்து," அப்படியா! உங்கள் கள்ளத்தனத்தை இப்போதே அம்பலம் ஆக்குகிறேன். பாருங்கள்!" என்று கோபத்துடன் கூறிவிட்டு, அவன் ஒரு மந்திரத்தை மனத்தினில் ஜபித்தான்.
மறுகணத்தில் பாதரசம் தோய்க்கப் பெற்ற வெள்ளி அப்பாதரசம் நீங்கித் தன் பழைய நிலையைப் பெற்றது போல், விபீஷணனின் மந்திரவலிமையால் சுகசாரணர் வானரர் வடிவம் நீங்கித் தமது சுய வடிவான அரக்க வடிவத்தைப் பெற்றார்கள். தமது பழைய தன்மையைப் பெற்ற அரக்கர்கள் இருவரும் பெரும் தோற்றத்துடன் அஞ்சி வெலவெலத்து நின்றார்கள்.
சுக சாரணர்களை உண்மை வடிவத்துடன் கண்டார் இராமர். அவர்களின் அச்சத்தைக் கண்டு இராமர் முத்துப் போல வெண்ணிறமான புன்சிரிப்பை உதிர்த்தார். பிறகு அவர்களை நோக்கி," ஒற்றர்களே! அஞ்ச வேண்டாம்! நீங்கள் இங்கு வந்ததன் காரணம் என்ன? உண்மையை உள்ளபடி சொல்லுங்கள்" என்றார்.
அதற்கு அந்த ஒற்றர்கள் இராமபிரானை வணங்கி, என்ன சொல்வது என்று அறியாமல் வாய் குழற," ஐயனே! உலகத்தாயான பிராட்டியாரே தன்னைக் கொல்கின்ற நோய் என்று அறியாத இராவணன், எங்களை ஒற்றறிந்து வரும் படி இங்கு அனுப்பினான். நாங்களும் அவ்வாறே, எங்கள் தீவினையால் குரங்கு வடிவம் கொண்டு இங்கு ஒற்றறிய வந்தோம்!" என்று சொன்னார்கள்.
இராவணனின் ஒற்றர்களின் பேச்சைக் கேட்ட இராமபிரான் அவர்களிடம்," யாம் இலங்கையின் அரசாட்சியை இராவணனின் தம்பியான இந்த விபீஷணனுக்குக் கொடுத்து விட்டோம் என்று இராவணனிடம் போய் சொல்லுங்கள். அத்துடன் கடல் கடந்து வானர சேனை இலங்கையை அடைந்தது என்றும், ஒரு வேளை இராவணன் மனம் திருந்தி செய்த தவறுக்காக வருந்தி சீதையை என்னிடம் தக்க மரியாதையுடன் ஒப்படைத்தால் நான் அவனை மன்னிக்கவும் தயாராக இருப்பதாகவும், இல்லையேல் விளைவுகள் பெரும் பயங்கரமாக இருக்கும் என்றும் இராவணன் அவனது குலத்துடன் அழிவது சகல நிச்சயம் என்றும் போய் உங்கள் அரசனிடம் சொல்லுங்கள். இப்போதைக்கு நான் உங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை. பிழைத்துப் போங்கள்" என்றார்.
அந்தக் கணத்தில்," தப்பித்தோம். பிழைத்தோம்!" என்று சொல்லிக் கொண்டு, சுகசாரணர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். அவ்வாறு தப்பியவர்கள் இராவணனின் இலங்கையை அடைந்தார்கள். அச்சமயம் இராவணன் தனது அரண்மனையின் மேல் மாடத்தில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தான். அவனது மனதிலோ, 'இராமன் என்னும் அந்த அற்ப மனிதன் எங்கே சீதை இருக்கும் இடம் அறியப் போகிறான்? அப்படியே அறிந்தாலும் கடல் தாண்டி அவனால் இந்த இலங்கைக்கு வரத் தான் இயலுமா?' என்றெல்லாம் நினைத்தோம். ஆனால், இப்போதோ அவன் இலங்கையை கண்டு பிடித்தது மட்டும் அல்ல பெரும் படையுடன் வந்தல்லவா இறங்கியுள்ளான்!" என்று சிந்தித்த படியே மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தான்.
பிறகு தனது மந்திரிகளிடம் இது பற்றி விவாதிக்கத் தொடங்கினான்," இராமன் என்னும் அந்த அற்ப மனிதன் எனக்கு நேற்று வரை ஒரு பொருட்டள்ள. ஆனால், இன்றோ தேவர்களும் வர அஞ்சும் இலங்கை மண்ணில் பெரும் படைகளுடன் வந்து இறங்கி நமது கண்களுக்கு முன்பாகவே பாசறை அமைத்து உள்ளான். ஆனால், நம்மால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. நாம் வேவு பார்க்க அனுப்பிய ஒற்றர்களும் இதுவரையில் வரவில்லை. நாமும் கையால் ஆகாதவர்கள் போல அமர்ந்து இருக்கிறோம். நல்ல வேடிக்கை தான்! சரி போனது, போகட்டும் இனி நாம் செய்ய வேண்டிய செயல் தான் என்ன?" என்றான்.
அவன் அப்படிக் கேட்டவுடன் இராவணனின் கேள்விக்குப் பதில் சொல்ல முன் வந்தான், அவனது தாய்ப்பாட்டனான மாலியவான். அவன் இராவணனை நோக்கி," இலங்கேஸ்வரா! அந்த இராமன் நீ நினைப்பது போல சாதாரண மனிதன் அல்ல. ஊழித்தீ போன்ற இராமனது அம்புகளால் வருண தேவனே பயம் கொண்டு காட்சி அளித்தான். கடலின் மீது சேது அமைக்கும் திட்டத்தைத் தந்தான். அதன் படியே இராமனும் சேது அமைத்தான். பெரும் கடலில் மீது சேது அமைப்பது சாதாரண மனிதன் செய்யும் காரியமா? அதனால், இராமன் கடலைச் சுட்ட வகையைக் கண்டும், கடலில் சேது அமைத்த வேகத்தையும் கொண்டு சொல்கிறேன், அவன் எல்லோரும் கூறுவது போல நிச்சயம் அந்த விஷ்ணுவின் அவதாரம் தான். அவனிடம் நமக்குப் பொல்லாப்பு வேண்டாம். அதனால், நாம் சீதையை அவனிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு மன்னிப்புக் கேட்போம். இது தவிர மற்ற அனைத்து உபாயங்களும் வீண் தான்" என்றான்.
தனது தாய் கேகசியைப் பெற்ற பாட்டனான மாலியவான் அவ்வாறு கூறியதைக் கேட்டதும் இராவணன் பெரும் கோபம் கொண்டான். அந்தக் கோபத்துடன் ," நன்றாயிருக்கிறது...! நன்றாயிருக்கிறது...! நமது ஆலோசனை மிக நன்றாக இருக்கிறது! நீயும் விபீஷணனுடன் போய்ச் சேர்ந்து வாழ்க!" என்று கடிந்து கூறினான். அது கேட்ட மாலியவான் " இனி இவனுக்கு நாம் உபதேசம் செய்வது வீணான செயல்" என்று தனக்குள் கூறிக் கொண்டான். பிறகு அமைதியாக மாலியவான் இராவணனை விட்டுச் சற்றே விலகிச் சென்றான்.
அப்போது இராவணனின் சேனைத் தளபதி எழுந்து மாலியவானைப் பார்த்து ," வானரர்கள் இத்தனை பேரும் சேர்ந்து பெரும் மலையை கடலில் வீசியது என்பது மிகவும் சாதாரண விஷயம். எங்கள் அரசர் இலங்கேஸ்வரர், தனி ஒருவராக பெரும்
கைலாய மலையயே ஆட்டி வைத்தவர். அதனால், அவர் தான் பெரும் வீரர். அவரின் முன்னாள் வானர வீரர்களும், அந்த இரு மனிதர்களும் எம்மாத்திரம் " என்றான்.
அது கேட்ட இராவணன் மகிழ்ந்தான். அப்போது வாயிற் காவலன் விரைந்து உள்ளே வந்து இராவணனை வணங்கி," ஒற்றர்கள் வந்து இருக்கின்றார்கள்!" என்றான்.
"சரி அவர்களை உள்ளே வரச் சொல்!" என்று கட்டளை பிறப்பித்தான் இராவணன்.
பிறகு வாயிற் காவலன் ஒற்றர்களை இராவணனின் ஆணைப்படி அனுமதிக்க, அவர்களும் இராவணனை அடைந்தார்கள். இராவணனைக் கண்ட சுகசாரணர் என்னும் அவனது நம்பிக்கைக்குரிய அந்த ஒற்றர்கள் இருவரும் அவனை வணங்கி," ஐயனே! உமது அடியவராகிய நாங்கள் அந்த நீண்ட வானர சேனை முழுவதையும் காண முயன்றோம். ஆனால், அதற்குள் தங்கள் தம்பியான விபீஷணனிடம் சிக்கிக் கொண்டோம். அவர் எங்களை அடித்து அந்த இரமானிடம் கொண்டு போய் விட்டார். அப்போது அந்த இராமன் எங்களை விடிவித்து, எங்களிடம் சில செய்திகளைச் சொல்லி, தங்களிடம் கூறுமாறு சொன்னான். அது யாதெனில், தான் பெரும் வானரப்படையுடன் இலங்கையை கடல் கடந்து அடைந்து விட்டதாகவும், மேலும் விபீஷணனை இலங்கையின் அரசனாக அறிவித்து விட்டதாகவும். அதனால் போர் சீக்கிரம் நடக்கும் என்றும் அதில் தாங்கள், தங்கள் பரிவாரங்களுடன் அழிக்கப் படுவீர்கள் என்றும் சொன்னான். ஒரு வேளை, தாங்கள் இதில் இருந்து பிழைக்க எண்ணினால், உடனே சீதையை தக்க மரியாதையுடன் தன்னிடம் சேர்க்குமாறும் இராமன் கூறினான்" என்று இராமன் கூறிய செய்தியை தெரிவித்து இராவணனனிடம் இருந்து விடை பெற்று அவனை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள் அந்த ஒற்றர்கள்.