ஒரு கை ஓசை கேட்குதா!

ஒரு கை ஓசை கேட்குதா!

bookmark

ஜப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு இருந்தார். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட. ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் தத்துவம் பயில வந்தான்.

  அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ. உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா? - இதுதான் அந்த சோதனை.

  அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை ஓசையை கேட்க அவன் காத்திருந்தான்…. வாரக் கணக்கில் அல்ல… மாதக் கணக்கில் அல்ல.. ஆண்டுக் கணக்கில். ஆண்டுகள் மூன்று முழுசாய் ஓடின!

  ஒரு இரவில், சுவோவிடம் வந்தான் மாணவன். என்னால் உங்கள் சோதனையில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவமானம், தர்மசங்கடத்தைச் சுமந்தபடி என் தீவுக்குச் செல்கிறேன்... என்றான்.

  தம்பி.. அவசரப்படாதே.. இன்னும் ஒரு வாரம் எடுத்துக் கொள். நன்றாக தியானம் செய்.. என்றார் சுவோ.

  ஒரு வாரம் கழிந்தது. மாணவனுக்கு ஒரு கை ஓசை கேட்கவே இல்லை. மீண்டும் சுவோவிடம் வந்தான். அவர் இன்னும் ஒரு வாரம் முயற்சி பண்ணுப்பா என்றார். ஆனால் அவன் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை.

  மேலும் ஒரு வாரம் கெடு கொடுத்தார் சுவோ. அப்போதும் விடை கிடைக்கவில்லை மாணவனுக்கு. மிகுந்த ஏமாற்றமும் சோர்வாகவும் வந்த மாணவன், போதும் குருவே, நான் போகிறேன், என்றான்.

  சரி, ஒரு ஐந்து நாள் மட்டும் இருந்து பார்த்துவிட்டுப் போ என்றார் சுவோ. அந்த ஐந்து நாட்களில் அவனால் எதையும் உணர முடியவில்லை. மீண்டும் சுவோவிடம் வந்து உதட்டைப் பிதுக்கினான்.

  இந்த முறை சுவோ இப்படிச் சொன்னார். சரி, கடைசியாக மூன்று தினங்கள். இந்த மூன்று தினங்களில் உன்னால் இந்த சோதனைக்கான விடையைக் காண முடியாவிட்டால், செத்துப் போ, என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

  மாணவன் தன் அறைக்குத் திரும்பினான். இரண்டாம் நாள் வந்தான்.. குருவே.. ஒரு கை ஓசை கேட்டது… நான் தேடி வந்தது கிடைத்தது, என்றான்.