
உலாவியற் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
உலாவியற் படலம்
(இராமன் தேர் ஏறி வீதி உலா வருவதைக் கூறும் பகுதி இது. இராமனைக் கண்டு மகிழ மிதிலை நரகத்து மகளிர் மொய்க்கின்றனர். பெண்களாய்ப் பிறந்ததன் பயன் எய்த முந்துவார் போல் பல பருவ மகளிரும் ஆன்ம நாயகனைக் கண்டு களிக்க முந்தினர். யாவர் கண்களிலும் இராமனே இருந்தான். மகளிர் நெருக்கத்தால் உதிர்ந்த பொன்னும் மணிகளுமாய் வீதிகள் மின்னின. இராமன் வடிவினை முழுதும் கண்டார் யாவரும் இலர்; சீதை பெற்ற தவப் பயனை எண்ணி எண்ணி மகளிர் வியந்தார்கள். இத்தனை மகளிர் விழியம்புகளையும் ஏறெடுத்தும் நோக்காது இராமன், மண்டபம் அடைந்து விசுவாமித்திரன் ஏவிய ஆசனத்தில் அமர்ந்தான். அறஞ்செய் காவற்கு அயோத்தியில் தோன்றிய இராமனின் தந்தை தயரதனும் மண்டபம் அடைந்தான். மகளிர் பல்லாண்டிசை பாடினர். அனைவரும் ஜனக மன்னனின் அன்பினில் திளைத்தனர்.)
மலரை நாடி வண்டுகள் விரைந்து வருவது போல, அந்த நகரத்துப் பெண்கள் இராமனைக் காண வேண்டும் என்ற ஆசையால், சிலம்போசை எழ விரைந்து தெருப்பக்கம் வந்து நின்றார்கள். இராமனை ஒரு முறையாவது கண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடோடி வந்து வாசற்படியில் நின்ற சில பெண்கள், அந்தப் பரபரப்பில் தங்கள் கூந்தல் அவில்வதையும், பட்டாடை நெகிழ்வதையும், மார்புக் கச்சையின் முடிச்சு அவிழ்வதையும் கூட கவனிக்கத் தவறி விட்டனர். மிக்க தாகம் கொண்டவரின் முன்பாக இனிய பானம் ஒன்றை வைத்தால், தாகம் எடுத்தவருக்கு எவ்வாறு அந்த பானத்தின் மீது அதிக விருப்பம் உண்டாகுமோ, அவ்வாறே ராமனை எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று அந்த நகரத்துப் பெண்களுக்கு விருப்பம் உண்டானது.
சில பெண்கள், இராமன் அவர்கள் வீதியை இன்னும் சில நாழிகையில் நெருங்குகிறார் என்ற செய்தி கிடைத்த உடனேயே, அவர்கள் வீட்டினுள் செய்ய வேண்டிய காரியங்களை மனோ வேகத்துடன் செய்து முடித்து இராமனைக் காண அவர்கள் தெருவின் பக்கம் வந்து நின்றனர். அங்கு ஏற்கனவே பல பெண்கள் கூடி இருந்தனர், அவ்வாறெல்லாம் வந்து நின்ற பெண்களைப் பார்க்கும் போது வெல்லப் பானையில் ஈக்கள் மொய்ப்பதை ஞாபகப் படுத்தியது. இராமரின் தோற்றம் கண்ட அந்த நகரத்துப் பெண்கள் பல நிலைகளை அடைந்தார்கள்.
இராமபிரானைக் கண்டதும் ஒருத்திக் காதல் கொண்டாள். அவளது கண் பார்வையில் இருந்து இராமபிரான் மறைந்த சில வினாடிகளில், மிகுந்த சோர்வை அடைந்தாள் அப்பெண். அக்காரணத்தால், அவளுடைய ஆடை தளர்ந்து விழுந்தது. உடம்பின் மெலிவால் கை வளையல்கள் கழன்றன. அவளது மனத்துயர் காரணமாக, அவளது உடம்பில் ஒளி மங்கி, அழகும் குறைந்தது. அடுத்த கணம் பெண்மைக்கு உரிய குணங்கள் எல்லாம் மறைந்தன. மனதில் ஒரு வித வெறுப்பு கிளம்பியதால் நகைகளைக் கூட கழற்றி எறிந்தாள் அப்பெண். சில கணங்கள் பைத்தியம் பிடித்த படி சிரித்தாள் அவள். சில கணம்,"அபலையாகிய என்னை இராம பிரான் துன்பத்துக்கு ஆளாக்கி விட்டானே" என்றும் புலம்பித் தவித்தாள்.
இன்னும் சில பெண்கள் ஸ்ரீ ராமரின் அங்கங்களில் எதைக் கண்டார்களோ, அந்த அங்கத்திலேயே மனம் லயித்து நின்றார்கள். இராமர், அவர்கள் கண்களை விட்டு விலகிய பிறகும் கூட, அதே நிலையில் தான் அப்பெண்கள் கண் கொட்டாமல் காணப்பட்டனர். சில பெண்கள் இராமபிரானை கண்ட மாத்திரத்திலேயே காதல் கொண்டார்கள், அதன் காரணமாக அவர்களுடைய உடல் வியர்த்தது, உயிர் நிலை குலைந்தது. மொத்தத்தில், அந்த நகரத்தில் இராமனின் அழகைக் கண்டு காம நோய் கொள்ளாத பெண்களே அப்போது இல்லை எனலாம்.
பவனி முடித்த ராமர் வஷிஸ்டரும், விசுவாமித்திரரும் அமர்ந்து இருந்த மாளிகைக்குள் தம்பியருடன் நுழைந்தார். பின்னர் அந்த குரு மார்களை, தம்பியர் சூழ வணங்கி, அவர்களது ஆசிர்வாதத்தைப் பெற்றார். பின்னர் குரு மார்களின் விருப்பப்படி, அருகில் இருந்த பொன் ஆசனத்தில் தம்பியர் அருகில் நிற்க அமர்ந்தார். அந்நேரம் தசரத சக்கரவர்த்தியும் உள்ளே நுழைந்து குரு மார்களின் ஆசிகளைப் பெற்ற பின், தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு அனைத்து தேசத்து அரசர்களும் தங்களது ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
தசரத சக்கரவர்தி பணிப் பெண்கள் சாமரம் வீச, மிதிலையின் இளம் பெண்கள் பல்லாண்டு பாட அமர்ந்து இருந்தார். மறுபுறம் ஜனக மாமன்னர் வந்தவர்கள் அனைவரையும் எந்தக் குறையும் இல்லாதபடி வரவேற்று உபசரித்துக் கொண்டு இருந்தார்