உருக்காட்டுப் படலத்தின் பாடல்கள்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
உருக்காட்டுப் படலம்
(அனுமன் தன்னுடையமந்திர சக்தியினால் அரக்கியர்களுக்கு உறக்கத்தை வருவிக்கின்றான். அப்போது பிராட்டி பலவாறு புலம்புகிறாள். என்னைச் சிறையிலிருந்து பெருமான் விடுவிக்கின்ற காலத்தில் யான் என் கற்பை எப்படி மெய்ப்பிப்பேன் என்று மனம் நொந்து தற்கொலை செய்துகொள்ள மாதவிச் சோலைக்குச் செல்கிறாள்.
அங்கு அனுமன்வெளிப்பட்டு, யான் இராமதூதன்; நீ ஐயம் அடையாதே; கூறிய மொழிகளும், கொடுத்த அடையாளமும் உண்டு என்றான். அது கேட்ட பிராட்டி, அவன்பால் நம்பிக்கைகொண்டு வீர! நீ யாவன்? என்றாள். அனுமன் தன் வரலாற்றையும், இராமபிரானின் திருமேனிப் பொலிவையும் விவரிக்கிறான். இவற்றைக் கேட்ட பிராட்டி தழலிலிட்ட மெழுகுபோல் மனம் உருகினாள். அப்போது அனுமன், இராமபிரான் சொல்லியனுப்பிய அடையாள மொழிகளைப் பகர்ந்தான். அடையாளம் கூறிய அனுமன், பெருமான் கொடுத்த திருவாழியைப் பிராட்டியிடம் காண்பி்த்தான். அதைக் கண்ட பிராட்டி பேருணர்வு பெற்றாள். திருவாழியை வாங்கி மார்பில் வைத்துக் கொண்டாள்; சிரத்தில் தாங்கினாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். உணர்ச்சி வயப்பட்ட பிராட்டி அனுமனுக்குச் சிரஞ்சீவிப் பதத்தைத் தருகிறாள். அப்போது அனுமன் பிராட்டியைப் பிரிந்த பிறகு இராமன் உற்ற துன்பத்தையும் அவன் சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டதையும், இராவணனை வென்ற வாலியைக் கொன்றதையும் பிறவற்றையும் விரிவாகச் சொன்னான். அது கேட்ட பிராட்டி இச்சிறு உருவத்தோடு எங்ஙனம் கடல் கடந்தாய் என்று வினவ, அனுமன் தன் பேருருவைக் காட்டுகிறான். அது கண்டு தேவி வியந்தாள். பேருருவை அடக்குக! என்றாள். அனுமன் சிற்றுருக் கொண்டு பணிந்து நின்றான். இவையே இப்படலத்தில் கூறப்படும் செய்திச் சுருக்கம் ஆகும்)
வானுயர்ந்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு சீதாப் பிராட்டியை சந்திக்க ஏற்ற நேரத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அனுமான். ஆனால், வெகு நேரமாகியும் சீதையைக் காவல் காக்கும் அரக்கிகள் தூங்காமல் இருந்ததால்," இனியும் காத்துக் கொண்டு இருப்பது சரியல்ல" என்று எண்ணியபடி தனது மாய வித்தைகள் மூலமாக அந்த அரக்கியர்களை நன்கு உறங்கும் படி செய்தான். அனுமானின் மாய வித்தையால், அனைத்து அரக்கிகளும் செத்தது போல தீடீர் என்று தரையில் விழுந்து உறங்கினார்கள். அது கண்ட சீதை திகைத்தாள். மேலும், அந்த அரக்கியர்கள் உறங்கியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த சீதை இதுவே தான் தற்கொலை செய்து இறக்கத் தக்க சமயம் என்று முடிவுகொண்டாள். அப்போது, கண்களில் கண்ணீர் பெருக வானில் சந்திரனை கண்ட சீதை ," கல்வி கற்காத சந்திரனே! ஒளி மிகுந்த நிலவே! விரைவில் கழியாத இரவே! குறையாமல் பெருகி நிற்கும் அந்தகாரமே! நீங்கள் அனைவரும் கணவரைப் பிரிந்து நிற்கும் என்னை மிக, மிகச் சினம் கொண்டு வருத்துனீர். அது போல, என்னைச் சிறிதும் நினைக்காத வில்லாளியான என் கணவரிடம் சென்று சிறிதும் அவரை வருத்தமாட்டீர்களோ? அப்படி நீங்கள் வருத்துவீர்களானால், அந்தப் பிரிவுத் துயரால் சீக்கிரத்தில் வந்து அவர் என்னைக் காத்து அருள்வார் அல்லவா? " என்று கூறிக் கொண்டாள்.
மீண்டும் சீதை," என் கணவர் வந்து என்னைக் கட்டாயம் மீட்டுச் செல்வார் என்ற ஒரு நம்பிக்கையுடனேயே, இன்னும் நான் உயிருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால், இது வரையில் எனது அந்த நம்பிக்கை வீணானது. மேலும், எனது உடலில் உயிர் இருக்கும் வரையில் எனக்குத் துன்பம் உண்டாகிக் கொண்டு தான் இருக்கும்! ஆகவே, நான் இறப்பது தான் என் துன்பங்களை ஒழித்து எனக்கு நன்மை ஏற்படச் செய்யும்! எனது கணவர் வருவார் என்னை மீட்பார் என்று நான் இன்னும் நம்பிக்கொண்டு இருப்பதில் என்ன பிரயோஜனம் உள்ளது? அப்படியே, ஒரு வேளை, எனது கணவர் இவ்விடம் வந்தாலும், பிற ஆண்கள் என்னை விரும்புவதை அறிந்த பின்பும் கூட அவர் என்னை ஏற்றுக் கொள்வாரோ?' பிறர் வீட்டில் சேர்ந்த மனைவியை மீண்டும் கொண்டு வந்து வைத்துக் கொள்வது தகுதியில்லை' என்று எனது கணவர் நினைத்து, என்னை மீட்டுச் செல்ல நினையாமல் கைவிட்டுவிட்டால்! அய்யோ, எனது நிலை! இப்படிப் பட்ட பெரும் பழி, என்னை ஏன் வந்து சேர்ந்தது?
அத்துடன் அருந்ததி, நளாயனி, சாவித்திரி போன்ற பெண்கள் குலத்தில் பிறந்த நானும் ஒரு பெண் தானோ? கணவரைப் பிரிந்து உயிருடன் வாழ்ந்தவர்கள் என்னொருத்தியைத் தவிர வேறு யார் இருக்கின்றார்கள்? கொடிய இராவணன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நான், உயிருடன் வாழ்வதையும் உலகத்தவர் சரியென்று ஒப்புக் கொள்வார்களோ? எனது கணவர் அப்படியே இலங்கை வந்து தமது வில்லின் வலிமையால் அரக்கர் யாவரையும் கொன்று முடித்து என்னைச் சிறை மீட்கும் நாளில் 'நீ எனது வீட்டுக்கு வரத் தகுதி உடையவள் இல்லை!' என்று சொல்லித் தடுத்தால், அப்போது நான் எனது கற்பின் தன்மையை அவருக்கு எப்படி நிரூபித்துக் காட்டுவேன்? ஆகவே, நான் உயிர் விடுதலே தர்மம் ஆகும்! நான் இறப்பதை தடுப்பவராகிய அரக்கியர்களும் எனது நல்வினைப் பயனால் நன்றாக உறங்கிக் கொண்டு உள்ளார்கள். ஆதலால், இதுவே, நான் உயிர் விடுவதற்கு தக்க சமயம் ஆகும்!" என்று கூறிக் கொண்டாள். அப்படிக் கூறிகொண்ட சீதை, சற்றும் தாமதிக்காமல் தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு உடனே எழுந்தாள். ஒரு மரச்செறிவைச் சென்று சேர்ந்தாள்.
சீதை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த அனுமான், சீதை அந்த மரச்செறிவை சென்று சேர்வதைக் கண்டான். அதனால், அவனது மனம் படபடத்தது. இனியும் தாமதிப்பது தவறு எனக் கருதிய அனுமான்," தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய இராமபிரான் அனுப்பிய தூதுவன் நான்!" என்று சொல்லிய வண்ணம், தான் அமர்ந்து இருந்த மரத்தை விட்டு நீங்கி, சீதையின் முன் சென்று பணிவுடன் கைகூப்பி வணங்கி நின்றான்.
மேலும் சீதையை நோக்கித்," தாயே! தங்களின் அடியவனான நான், இராமபிரானது ஆணையினால் இங்கு வந்து சேர்ந்தேன். எல்லா உலகங்களிலும் தங்களை நன்றாகத் தேடித் பார்பதற்காக அனுப்பப்பட்ட வானர வீரர்கள் எண்ணில் அடங்காதவர்கள்! அவர்களுள் நான் உங்களைக் கண்டது முற்பிறவியில் நான் செய்த தவப்பயனே. மேலும், தாங்கள் இங்கு இருப்பதை ஸ்ரீ ராமர், இதுவரையில் அறியவில்லை. அதனால், தான் அவர் உங்களை மீட்கமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது ராமதூதனான நான் உங்கள் இருப்பிடத்தைப் பற்றி கண்டிப்பாக அவரிடம் திரும்பிப் போய் தெரிவிக்க, அடுத்தகணம், அவரும் இளையபெருமாளும் அவர்களுடன் சேர்ந்து எண்ணற்ற வானர வீரர்களும் உடனே இலங்கையைத் தாக்கத் தொடங்குவார்கள். மேலும், அந்த வானர சேனை பெரும் பலம் கொண்டது, எண்ணிக்கையில் அடங்காதது. அம்மணி! என்னைப் பற்றித் தாங்கள் சந்தேகப் பட வேண்டாம். தங்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அண்ணல் கொடுத்த அடையாளப் பொருள் என்னிடம் இருக்கிறது. பெருமான் உண்மை விளங்கும்படி சொல்லியனுப்பிய அடையாள வார்த்தைகளும் வேறு இருக்கின்றன. அவற்றையெல்லாம் கொண்டு உள்ளங்கை நெல்லிக்கனி போல, என்னைப் பற்றிச் சந்தேகம் இல்லாமல் அறிந்து கொள்வீராக! என்னைப் பற்றி வேறு விதமாகத் தாங்கள் நினைக்க வேண்டாம்!" என்றான்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட சீதை, அவனைப் பார்த்து கருணையும், கோபத்தையும் ஒன்றாகப் பெற்று,' எதிரில் நிற்பவன் அரக்கன் இல்லை! நல்லறிவு புலப்படுத்துகின்ற சொற்களை உடையவனாகவும், தூயவனாகவும், குற்றமற்றவனாகவும் காணப்படுகிறான்! அதனால், இவன் யாராக இருந்தாலும் சரி. முனிவனாகவோ, தேவனாகவோ, அல்லது இப்போது காணப்படுவது போல குரங்குக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும் இருக்கட்டும்! இவனால் ஏற்படுவது தீமையே ஆனாலும் இருக்கட்டும். மனம் இறங்கிச் செய்யும் நன்மையே ஆனாலும் இருக்கட்டும். இங்கு வந்து எனது கணவரின் திருப்பெயரைச் சொல்லி, எனது அறிவை உருகச் செய்து, என் உயிர் போகா வண்ணம் காப்பாற்றித் தந்தான்! இதைக் காட்டிலும் செய்யத் தகுந்த உதவியும் இருக்கின்றதோ?" என்று எண்ணிக் கொண்டாள். மீண்டும் அவனை நன்றாகப் பார்த்து விட்டு," எனது உள்ளம் இவன் விஷயத்தில் இரங்குகிறது. இவன் நிச்சயம் அரக்கன் இல்லை. நல்ல எண்ணத்தையுடைய சொற்களுடன் கண்ணீர் தரையில் சிந்திப் பெருகும் படி, எனது துன்பத்தைப் பார்த்துத் தாங்காமல் அழுத வண்ணம் நிற்கிறான்! ஆகவே இவன், யார் என்று நான் கேட்பதற்குத் தகுந்தவனே!' என்று நினைத்தாள். உடனே அவனைப் பார்த்து," வீரனே! நீ யார்?" என்று கேட்டாள் சீதை.
அப்போது அனுமான் தன்னைப் பற்றியும், சுக்கிரீவனைப் பற்றியும், சுக்கிரீவனுக்கும் -வாலிக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டையும், அதனால் சுக்கிரீவனுக்கு வாலி செய்த தீமையையும், அப்போது என்ன செய்வது என்ற அறியாது இருந்த சுக்கிரீவனுக்கு அமுதம் கிடைத்தது போல இராமபிரானின் நட்பு கிடைத்ததும், அந்த நட்பின் மூலம், ஸ்ரீ ராமரின் துணைகொண்டு வாலியை வதைத்து வானரராஜனாக சுக்கிரீவன் அரியணை ஏறியதும், அதற்கு உபகாரமாக சுக்கிரீவன் சீதையைத் தேட அனைத்து திசைகளிலும் வெள்ளம் என வானர சேனையை அனுப்பியதும், என அனைத்து விவரங்களையும் சீதா பிராட்டியுடன் பகிர்ந்து கொண்டான் அனுமான்.
அத்துடன் சீதா பிராட்டியிடம்," தாயே! தங்கள் இராவணனால் அபகரித்து கொள்ளப் பட்ட தினத்தில் இருந்து , ஸ்ரீ ராமர் வருந்திய வருத்தம் எங்களுக்கும், எங்களை விட இளையபெருமாள் லக்ஷ்மணனுக்கும் தான் அதிகம் தெரியும். அவர் உங்களை நினைக்காத நாள் இல்லை. இராவணன் தங்களைக் கொண்டு சென்ற நாளில், தாங்கள் ருசியமுகப் பருவத்தில் எங்கள் அருகே தங்களின் ஆபரணங்களை எல்லாம் ஒரு துணியில் முடிந்து போட்டதைக் கண்டோம். அவற்றை எடுத்து இராமபிரானிடம் காட்டிய குறிப்பினால், அண்ணல் என்னைத் தனியே அழைத்து சில வார்த்தைகளைச் சொல்லி," நீ தென் திசை நோக்கிச் செல்வாயாக!" என்று எனக்குக் கட்டளை பிறப்பித்தார். நானும் அவ்வாரே உங்களைத் தேடிக் கொண்டு இலங்கை வந்து சேர்ந்தேன். அத்துடன் இராமபிரானின் உயிர் இன்னமும் உடலைவிட்டு நீங்காமல் இருப்பதற்குக் காரணம், அந்த ஆபரணங்களைத் தவிர வேறொன்றும் உண்டோ? தாங்கள் அந்நாளில் கழற்றி எறிந்த ஆபரணங்களே இன்று வரையிலும் தங்களின் தாலியைக் காப்பாற்றின" என்றும் கூறினான்.
வாயுபுத்திரன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சீதை பெரும் மகிழ்ச்சி கொண்டாள்," துன்பத்தில் வாடிப் போன அவள் உடம்பு பூரித்தது. "துன்பம் நீங்கி உயிருடன் நான் வாழும் காலமும் எனக்கு வந்து சேர்ந்ததோ?"என்று வியந்து கூறி ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கினாள். சீதையால் நடந்து கொண்டு இருப்பது எதையுமே நம்ப முடியவில்லை. எல்லாமே அவளுக்கு ஒரு கனவு போலத் தான் தோன்றியது. அனுமன் இவ்வளவு சொல்லியும் கூட அவள் மனதினில் " உண்மையில் வந்திருப்பது என்னவரான ஸ்ரீ இராமபிரானின தூதுவன் தானா?" என்ற எண்ணம் வந்தது. அதனால் மேற்கொண்டு தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்த சீதை அனுமனை நோக்கி," ஐயனே! என்னிடம் தாங்கள் ஸ்ரீ ராமபிரான் உங்களைத் தூது அனுப்பியதாகச் சொன்னீர்களே! அவர் திருமேனியை பற்றி எனக்கு விளக்க முடியுமா?" என்றாள்.
உடனே சீதையின் மனநிலையை உணர்ந்த அனுமான், ஸ்ரீ ராமனின் திவ்ய ஸ்வரூபத்தை சீதையிடம் விளக்கத் தொடங்கினான்," தாயே! பெரிய புலவர்கள், திருவடிக்குத் தாமரை மலரை உவமையாகக் கூறுவது உண்டு. இராமபிரானின் திருவடியை எண்ணி உவமை கூறத் தொடங்கினால், அத்தாமரை மலரை விடத் தாழ்ந்த பொருள் உலகத்தில் ஒன்றும் இல்லை! அதுமட்டும் அல்லாமல், கடலில் தோன்றும் பவழமும், அவருடைய திருவடியின் சிவந்த நிறத்துக்கு முன் குவளைமலர் போன்ற கருமையானதாகும்! கற்பகமரத்தின் சிவந்த அரும்புகளும், கடலில் முளைக்கின்ற பவழக்கொடிகளும் பெருமானுடைய விரல்களுக்கு உவமை ஆகாது. தாயே! சங்குச்சக்கரதாரியாகிய ஆதிஷேசனின் அரவுப் படுக்கையில் துயில் கொண்டருளும் திருமாலையும் வெல்லத்தக்க அம்புகள் தங்கும் அவருடைய அம்பறாத்தூணி அவரது கனைக்கால்களுக்குச் சிறிதும் ஒப்பாகாது! இராமபிரானின் தொடைகள் கருட பகவானின் அழகு நிரம்பிய பிடரியை ஒத்து விளங்குகின்றன! அப்படிப் பட்ட தொடைகளுக்குத் தான் உவமை கூற முடியுமோ? தாமரைப் பூவோடு எல்லா உலகங்களிலும் ஒன்று கூடி உணடாக்கப் பெற்ற அவரது தொப்புள் குழிக்கு உவமையைச் சொல்வோம் என்றால், வலப்பக்கமாக சுழிக்கும் கங்கை நதியின் அழகிய நீர்ச் சுழியும் ஒப்பாகாது இழிந்ததாகப் போய்விடும்.
மேலும் இராமபிரானின் திருக்கை நகங்கள் நரசிங்க அவதாரத்தில் இரணியனின் மார்பைப் பிளந்தபோது அவ்வசுரனின் இரத்தத்தால் சிவந்தன போல, எப்பொழுதும் சிவந்து காணப்படுகின்றன! மலைகள் ஸ்ரீ ராமரின் திருத்தோள்கள் போல நன்கு திரண்டு இருப்பவை இல்லை! ஒளி பெற்றவையும் இல்லை! ஆகையால், அவருடைய திருத்தோல்களுக்கு மலையை உவமையாகக் கூறுவது பொருந்துமோ? அரவுப் படுக்கையில் துயில் கொள்ளும் திருமாலின் இடக்கரத்தில் இருக்கின்ற பாஞ்சஜந்யம் என்ற சங்கு ஒன்று இராமபிரானின் கழுத்துக்கு உவமையாக இருக்க, நாங்கள், சாதாரண சங்கையும், இளம் பாக்கு மரத்தையும் அவரின் திருக்கழுத்துக்கு உவமையாகும் என்று கூறுகின்ற சிற்றரிவுடையோரின் செய்கையை ஏற்றுக் கொள்வோமோ?
மேலும், அண்ணலின் திருமுகம் கமலம் போன்றது என்றால், அவருடைய திருக்கண்களுக்கு அதைவிட வேறு எப்பொருளை உவமையாக எடுத்துக் காட்டுவேன்? வெண்ணிறச் சந்திரனோ களங்கமும், அடிக்கடி குறைந்தும் வளர்ந்தும் ஒரு நிலையில் நில்லாத தன்மையும் உடையவன். ஆகவே, அவருடைய திருமுகத்துக்குக் குளிர்ந்த சந்திரனை உவமை சொல்ல முடியுமோ?
இன்ப துன்பங்களில் எது நேர்ந்த பொழுதும் என்றும் ஒரே நிலையாக இருக்கின்ற இராமபிரானின் கம்பீரமான பெருநடைக்கு, இன்ப துன்பங்களில் ஒரு நிலையில் இல்லாத எருதின் நடையை உவமையாகக் கூறலாமோ? அப்படிக் கூறினால் இராமபிரானின் பெருநடைக்கு ஒப்பாகும் தன்மையுள்ள நடை கொண்ட யானை, தன்னை உவமை கூற வில்லையே என்று பெரிதும் வருந்தும். ஆகையால், இவ்விரண்டையும் அவரின் பெருநடைக்கு உவமையாகக் கூறுவது பொருந்தாது!" என்று சொல்லி முடித்தான்.
அனுமன் தனது கணவரின் திருமேனியைப் பற்றி விவரித்ததைக் கேட்டு, அனலில் போட்ட மெழுகு போலச் சீதை உருகினாள்; தன் வசம் இழந்து தளர்ந்தாள்! அப்போது அனுமான் சீதா தேவியைப் பார்த்து," தாயே! ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி என்னிடம் சொல்லி அனுப்பிய குறிப்புகளும் உண்டு. அடையாளமான வார்த்தைகளும் உள்ளன. அவற்றையும் தாங்கள் கேட்டருள்வீராக!" என்றவன், இராமர் தன்னிடம் சொல்லியனுப்பிய அடையாளக் குறியைப் பற்றியும், அடையாளமொழியைப் பற்றியும் தெரிவித்தான்.
கடைசியில் அனுமன் இராமர் கொடுத்த கணையாழியைச் சீதையிடம் கொடுத்தான். அக்கணையாழியைச் சீதை மிக்க அன்போடும், ஆவலோடும் பெற்றுக் கொண்டாள். அதனைப் பெற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவள், பிறந்த பயனில்லாமல் வீண் காலம் போக்கியவர் பிறந்த பயனைப் பெற்றது போலவும், அறிய பொருளை மறந்தவர் மீண்டும் மறந்த அப்பொருள் நினைவுக்கு வரப் பெற்றது போலவும், இறந்த உயிர் திரும்ப உடலில் வந்து சேரப் பெற்றது போலவும், தான் இழந்த மாணிக்கத்தைத் திரும்பவும் பெற்ற பாம்பு போலவும், இழந்த பழைய செல்வத்தை மீண்டும் பெற்றவர் போலவும், குழந்தை பெற்ற மலடியைப் போலவும், கண்ணில்லாது வருந்தியவர் கண்களைப் பெற்றது போலவும், அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அத்துடன் அவள் மகிழ்ச்சி நிற்கவில்லை. ஸ்ரீ ராமர் கொடுத்து அனுப்பிய அந்தக் கணையாழியை கண்களில் ஒற்றிக் கொண்டாள்; கணவரையே நேரில் கண்டது போல், அதைப் பார்த்துத் தன்னுடைய பெரிய தோள்கள் பூரித்தாள்; மனம் குளிர்ந்தாள்; உண்மையில் கணவரை அடையாததை நினைத்து உடல் மெலிந்தாள்; அதனால் வாடி ஏங்கினாள்; பெருமூச்செறிந்தாள்! அவள் அப்போது அடைந்த நிலையை வார்த்தையால் தான் சொல்ல முடியுமோ? அவள் கண்களில் இருந்து மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது. பேச வார்த்தைகள் இன்றித் தவித்தாள். அந்தக் கணையாழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள், அப்போது சீதையின் பொன்னிறமான மேனியின் நிறத்தை மேலும் பொன்னிறமாக்கியது அந்தக் கணையாழியில் இருந்து வீசிய ஒளி.
ஆனந்தப் பரவசத்தில் மெய் மறந்த சீதா தேவி ஒருவாறு தன்னையும் சுற்றுப் புறத்தையும் உணர்ந்து கொண்டபின் அனுமனை நோக்கி," உத்தமனே! மூவுலகங்களையும் படைத்த பிரமதேவருக்கும் முதல்வராகிய திருமாலின் திரு அவதாரமான பெருமானின் தூதனாய் வந்து எனக்கு உயிர்த் தந்தாய். உனக்கு நான் செய்வதற்கு என்ன கைம்மாறு இருக்கிறது? அருளின் வாழ்வே! எனக்கு இம்மைப் பயனையும், மறுமைப் பயனையும் தந்த செம்மலே! ஒரு துணையுமற்ற என்னுடைய துன்பத்தை நீக்கிய வள்ளலே! நீ வாழ்வாயாக! நான் கற்புடையவள் என்பது உண்மையானால், நீ என்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக!" என்றாள்.
பிறகு சீதை மீண்டும் அனுமனிடம் தனது கண்களில் நீர் வடிய," ஐயனே! நீ கடலைக் கடந்து எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டாள்.
அதற்கு அனுமான்," அம்மணி! இராமபிரானின் தூய திருவடிகளைத் தியானிக்கின்ற ஞானிகள் மாயை என்னும் கடலைத் தாண்டுவது போல், எனது கால்களினால் கரிய இக்கடலை எளிதில் தாண்டி வந்தேன்!" என்றான் அனுமன்.
அதற்கு சீதை," இவ்வளவு சிறிய உருவம் கொண்ட நீ கடலைத் தாண்டி வந்தாய் என்றால், அந்தச் செய்கை நீ செய்த பெரும் தவத்தினால் முடிந்ததோ? இல்லை, ஏதேனும் மந்திர சக்தியின் வலிமையால் உண்டானதோ? இதன் உண்மையை எனக்குக் கூறி அருள்க" என்றாள்.
உடனே அனுமான் அந்தக் கணத்தில், சீதையை நோக்கித் தொழுத வண்ணம் தனது பேருருவத்தைக் அவளுக்குப் பிரதியட்சமாகக் காட்டி நின்றான்!
சீதை அனுமனின் பேருருவத்தைக் கண்டு திகைத்தபடி " இனி அரக்கர்களுக்கு அழிவு நிச்சயம்" என மனதினில் மகிழ்ந்து கூறிக் கொண்டாள். பிறகு மீண்டும் அனுமனைப் பார்த்து," உனது இந்தப் பேருருவத்தைக் கண்டு நான் அஞ்சினேன்! அதனால், உனது பழைய உருவத்தைக் கொள்வாயாக!" என்று வேண்டினாள். சீதையின் வேண்டுதலுக்கு இணங்கி, உடனே அனுமன் தனது சிறிய உருவத்தைக் கொண்டான்!
அப்போது அனுமனிடம்," காற்று போன்ற வேகத்தை உடையவனே! இந்தப் பூமியில் உன்னால் செய்ய முடியாத காரியம் தான் ஒன்று உண்டோ? நீ பூமியை மட்டும் அல்ல சுவர்க்கம் உட்பட அனைத்து உலகத்தையும் ஒரு கைக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டவன். உன்னைப் போன்ற ஒரு மாவீரன் எனது கணவருக்குத் துணையாக இருக்க, இனி நான் ஏன் வருந்த வேண்டும்?" என்று சொல்லி மகிழ்ந்தாள்.
அனுமனும், சீதையின் அந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். பிறகு சீதா தேவியை வணங்கிய படி," ஸ்ரீ ராமரின் படைகளில் உள்ள வானர வீரர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றிலும் என்னைப் போல வல்லவர்கள் தான். மேலும் ஸ்ரீ ராமர் திரட்டிய வானர சேனை எழுபது வெள்ளமாகும்! அச்சேனையில் உள்ள வானர வீரர்கள் அனைவரும் ஒரு கையெடுத்துப் பருகுவதற்கு இக்கடலின் நீர் போதாது! இதுவரையில், இந்த இலங்கை இருக்கும் இடம் எங்களுக்குத் தெரியாமல் இருந்ததால் தான், இந்நகரம் அழியாமல் உள்ளது. இப்போதோ! இலங்கை இருக்கும் இடம் தெரிந்து விட்டது. இனி இந்த நகரம் அழிவது நிச்சயம். வாலியின் தம்பியான சுக்கிரீவன், அவ்வாலியின் புதல்வனான அங்கதன், துமிந்தன், குமுதன், நீலன், இடபன், பனசன், சரபன், ஜாம்பவான், விந்தன்,ஸ்தம்பணன், தூமன், ததிமுகன், சதவலி, எனது தந்தை கேசரி என அனைவரும் பெரும் மாவீரர்கள். இராமபிரானின் அம்பு போலத் தவறாமல் பகைவர்களை கொன்று அழிக்கும் திறமை கொண்டவர்கள். தாயே! அவர்களைப் பார்த்தால், இந்த அரக்கர்கள் எல்லாம் அவர்களின் தொகைக்கு உறையிடவும் காண மாட்டார்கள்! அவ்வானர சேனைக்கு எண்ணிக்கையும் தான் உண்டோ?" என்று இராமபிரான் பெற்ற வானரப் படையின் வலிமையை சீதையிடம் எடுத்து உரைத்தான் அனுமான்.